search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Turkey"

  • முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர், இரண்டிலும் சுவீடன் பங்கேற்கவில்லை
  • சில தினங்களுக்கு முன் சுவீடன் நேட்டோவில் அங்கத்தினராவதை துருக்கி ஆதரித்தது

  இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்கா தலைமையில் 31 உலக நாடுகள் ஒருமித்து உருவாக்கிய அமைப்பு நேட்டோ (NATO) எனும் வட அட்லான்டிக் கூட்டமைப்பு.

  இக்கூட்டணியில் உள்ள ஒரு நாட்டின் மீது வேறொரு நாடு தாக்குதல் நடத்தினால், அது 31 நாடுகளையும் தாக்குவதற்கு சமமாக கருதப்பட்டு பதிலடி கொடுக்கப்படும்.

  முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர், இரண்டிலும் சுவீடன் பங்கேற்கவில்லை.

  பெரும்பாலான உலக நாடுகளின் போர்களிலும் சுவீடன் பங்கேற்காமல் நடுநிலை வகித்து வந்தது.

  இந்நிலையில், 2022ல் தனது அண்டை நாடான உக்ரைனை ரஷியா "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பினராக சேர சுவீடன் முடிவெடுத்தது.

  2022ல், பின்லாந்து (Finland) மற்றும் சுவீடன் ஆகியவை நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்தன.

  பின்லாந்தின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது.

  ஆனால், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) மற்றும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பான் (Viktor Orban) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடனின் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.

  சில தினங்களுக்கு முன் சுவீடன் நேட்டோவில் அங்கத்தினராவதை துருக்கியும் ஆதரித்தது.


  இதைத் தொடர்ந்து துருக்கிக்கு $23 பில்லியன் மதிப்பிற்கு எஃப்-16 ரக ராணுவ போர் விமானங்களை தர முன்வந்துள்ளதாக அமெரிக்க பாராளுமன்றத்திடம் அமெரிக்க அரசு தெரிவித்தது.

  இதில் 40 புதிய எஃப்-16 ரக போர் விமானங்களும், தற்போது துருக்கியிடம் உள்ள 79 எஃப்-16 விமானங்களை மேம்படுத்துவதற்கான அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் அடங்கும்.

  விமானங்களை வழங்குவதை விரைவாக செய்து முடிக்கும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

  • இஸ்ரேல் போரினால் காசாவில் 23 ஆயிரத்திற்கும் மேல் உயிர் இழந்துள்ளனர்
  • சமநிலை இல்லாத போர்க்களத்தில் ஏமனை தாக்குகிறார்கள் என்றார் எர்டோகன்

  கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.

  எதிர்பாராத இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதி எடுத்து, அன்றிலிருந்தே அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் ஒரு போரை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

  சுமார் 23 ஆயிரம் உயிர்களை பலி வாங்கி 100-வது நாளை நெருங்கும் இப்போரில் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆதரவு தருகின்றன.

  ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், ஏமன், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.

  கடந்த 2023 அக்டோபர் 19 அன்று, ஹமாஸ் அமைப்பினரை ஆதரித்தும், இஸ்ரேலை எதிர்த்தும், ஏமன் நாட்டின் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் செங்கடல் (Red Sea) பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை வான்வழியாகவும், கடல் வழியாகவும் தாக்க தொடங்கினர்.

  அப்பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் போர்கப்பல்களை அங்கு நிலைநிறுத்தி உள்ளன.

  இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, ஏமன் நாட்டின் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வான்வழி தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

  ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக கருதாத துருக்கி, ஏமன் தாக்குதலுக்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

  துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) இது குறித்து கூறியதாவது:

  ஏமனுக்கும் அமெரிக்க-இங்கிலாந்து படைகளுக்கும் இருப்பது ஒரு சமநிலை இல்லாத போர்க்களம். அளவுக்கு அதிகமாக ஏமன் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் தாக்குதல் நடத்துகின்றன. செங்கடல் பகுதியை "ரத்த கடல்" (sea of blood) போல் மாற்றி விட முயல்கின்றன. ஆனால், தங்களை காத்து கொண்டு, தங்கள் முழு சக்தியையும் திரட்டி, இதற்கு ஹவுதி அமைப்பினர் தக்க பதிலடி அளிப்பார்கள்.

  இவ்வாறு எர்டோகன் தெரிவித்துள்ளார்.

  • 80 வருடங்களில் துருக்கியை தாக்கிய கடுமையான நிலநடுக்கம் என ஐ.நா. தெரிவித்தது
  • "ஆபரேஷன் தோஸ்த்" எனும் பெயரில் துருக்கி மற்றும் சிரியாவிற்கு இந்தியா உதவியது

  தென்கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் எல்லைகளை கொண்ட நாடு, துருக்கி.

  துருக்கியில் பிப்ரவரி 6 அன்று, ரிக்டர் அளவுகோலில் 7.8 என பசார்சிக் (Pazarcik) மாவட்டத்தில் ஒரு நில நடுக்கம் தாக்கியது. அந்நாட்டில் 80 வருடங்களில் நிகழ்ந்த நில நடுக்கங்களில் இதுவே அதிகமானது என ஐ.நா. சபை தெரிவித்தது.

  மீண்டும் அதே தினம், எல்பிஸ்டான் (Elbistan) மாவட்டத்தில் 7.6 அளவில் மற்றுமொரு நில அதிர்வு தாக்கியது. இந்த நிலநடுக்கம் கடுமையாக இருந்ததால், இதன் தாக்கம் அண்டையில் சிரியா மற்றும் லெபனான் நாடுகளிலும் உணரப்பட்டது.

  மூன்றாவது முறையாக கோக்ஸன் (Goksun) மாவட்டத்தில் 6.0 எனும் அளவில் தாக்கியது.

  இந்த தொடர் நில நடுக்கங்களால் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

  இந்திய அரசு துருக்கிக்கு வேண்டிய உதவிகளை செய்வதாக உறுதியளித்தது. நிவாரண பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் 7 கோடி மதிப்புள்ள உபகரணங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை "ஆபரேஷன் தோஸ்த்" எனும் நடவடிக்கையில் துருக்கிக்கும் சிரியாவிற்கும் இந்தியா அனுப்பி வைத்தது.

  • ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
  • பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

  துருக்கியில் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி அன்று அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.

  துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின. 

  இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியாவிலும் எதிரொலித்தது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.

  இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

  இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அந்த இருநாடுகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின. அதன்படி இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் இரு நாடுகளையும் சேர்ந்த மீட்பு குழுக்களுடன் இணைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். 

  இதன்பலனாக நிலநடுக்கம் ஏற்பட்ட பல நாட்களுக்கு பிறகும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஏராளமானோர் மீட்கப்பட்டனர்.

  நிலநடுக்கத்தால், சுமார் 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 60,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2023-ம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில், அதி பயங்கர சம்பவமாக துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கருதப்படுகிறது.

  • ஐ.நா. பொது சபையின் 78-வது அமர்வு நியூயார்க் நகரில் நடைபெறுகிறது
  • பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்று கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்தது

  ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் கொள்கைகளை வகுக்கும் முக்கிய அங்கம், பொது சபை (General Assembly). ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் உறுப்பினர் நாடுகளுக்கான சந்திப்புக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இச்சபையின் கூட்டம் நடைபெறும்.

  இதன் 78-வது அமர்வு இம்மாதம் 5 அன்று தொடங்கியது. இது இம்மாதம் 26 வரை நடைபெறும். நேற்று தொடங்கி வரும் 23 வரையிலும், பிறகு இரண்டு நாட்கள் கழித்து 26 அன்றும், பல்வேறு பிரச்சனை குறித்து உறுப்பினர் நாடுகள் கலந்து கொள்ளும் விவாதங்கள் நடைபெறும்.

  இதில் உறுப்பினர் நாடான துருக்கியின் சார்பில் அதன் அதிபர் ரிசெப் டாயிப் எர்டோகன் கலந்து கொண்டார்.

  "பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் துருக்கி வழங்க தயாராக உள்ளது." என விவாதத்தில் பேசிய போது அவர் தெரிவித்தார்.

  கடந்த வருடம் நடைபெற்ற பொது சபை சந்திப்பிலும் எர்டோகன் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.

  "பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்று கொள்ள வேண்டும்" என பதிலளித்து அதற்கு அப்பொழுதே இந்தியா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் துருக்கி இந்த சிக்கலை கிளப்பியிருப்பதால், இந்தியாவின் நகர்வை அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.

  • 10 வருடங்களுக்கு முன் மார்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்
  • ஆபத்துக்களை குறித்து குறைந்தளவே தகவல்களை மருத்துவமனை தந்திருக்கிறது

  பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் மெலிஸா கெர் எனும் 31-வயது பெண். இவர் சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக தனது மார்பகத்தை பெரிதாக்கி கொள்ள ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

  சமீபத்தில் இவருக்கு தனது உடலின் முதுகெலும்பிற்கு கீழே உள்ள பின்புற பகுதிகளில் தசைகள் குறைவாக இருப்பதாக தோன்றியதால், இப்பகுதியை அழகுப்படுத்த மருத்துவ வழிமுறைக்கான தகவல்களை தேடினார்.

  இதற்காக துருக்கி நாட்டில் பிரேசிலியன் பட் லிஃப்ட் (Brazilian butt lift surgery) எனப்படும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதை தெரிந்து கொண்டார். நுணுக்கமான இம்முறையில் உடலின் சதை மிகுந்த பாகங்களிலிருந்து சதை துணுக்குகள் எடுக்கப்பட்டு, சதை குறைந்த பகுதிகளில் ஊசி மூலம் உட்செலுத்தப்படும். பிறகு சில நாட்கள் மாத்திரை, மருந்து மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

  துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ளது மெடிக்கானா கடிக்கோய் மருத்துவமனை (Medicana Kadikoy Hospital). இங்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறித்து அறிந்த கெர், அம்மருத்துவமனையை தொடர்பு கொண்டார். அறுவை சிகிச்சை குறித்து லேசான பதற்றம் அவருக்கு ஏற்பட்டதால், இதற்கு முன்பாக அதே சிகிச்சையை செய்து கொண்டவர்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்க கோரினார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அனுப்பவில்லை.

  இருப்பினும், கெர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்ததால், அவர் துருக்கி சென்றார். அங்கு அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை முடிந்ததும், கெர் அம்மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

  இங்கிலாந்தில், இது குறித்த விசாரணையில் அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சையில் உள்ள ஆபத்துக்கள் குறித்து குறைவான தகவல்களே துருக்கி மருத்துவமனையால் தரப்பட்டிருக்கிறது என தெரிய வந்துள்ளது.

  அயல்நாடுகளில் அறுவை சிகிச்சைக்கான வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் இது குறித்து அங்கு சென்று அழகுக்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பும் மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இங்கிலாந்தின் சுகாதார மந்திரிக்கு கடிதம் எழுதப்போவதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

  • ஐஎஸ்ஐஎஸ் தலைவரை தேடும் பணிகளில் துருக்கி புலனாய்வு துறை ஈடுபட்டு வந்தது.
  • பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இந்த பகுதியில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது.

  ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹூசைன் அல் குரேஷியை துருக்கி புலனாய்வு படைகள் கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி புலனாய்வு படைகள் நேற்று நடத்திய சிறப்பு தேடுதல் வேட்டையின் போது கொல்லப்பட்டான் என்று எர்டோகன் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

  நீண்ட காலமாக ஐஎஸ்ஐஎஸ் தலைவரை தேடும் பணிகளில் துருக்கி புலனாய்வு துறை ஈடுபட்டு வந்துள்ளது. சிரியாவின் வடக்கில் உள்ள ஜாந்தாரிஸ் எனும் நகரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் துருக்கி கிளர்ச்சி பிரிவுகள் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இந்த பகுதியில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

   

  சனிக்கிழமை நள்ளிரவு துவங்கிய மோதல் ஞாயிற்று கிழமை வரை தொடர்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற மோதலின் இறுதியில் பயங்கர வெடிப்பு சத்தத்தை கேட்டோம் என்று அந்த பகுதியில் வசிக்கும் உள்ளூர்வாசி தெரிவித்துள்ளார். தாக்குதலை தொடர்ந்து பொது மக்கள் இந்த பகுதிக்குள் நுழையாமல் இருக்க பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐஎஸ்ஐஎஸ் முன்னாள் தலைவர் சிரியாவின் தெற்கு பகுதியில் கொல்லப்பட்டதை அடுத்து அல் குரேஷி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

  • வருகிற மே மாதம 14-ந் தேதி அதிபர் பதவிக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது.
  • தேர்தலில் தனக்கு வெற்றி கிடைக்கும் என எர்டோகன் நம்பிக்கையுடன் உள்ளார்.

  அங்காரா:

  துருக்கியில் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

  இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. 45 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்து விட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காயம் அடைந்தனர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து உள்ளனர்.

  நில நடுக்கத்தில் இருந்து அந்த நாடு இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த சூழ்நிலையில் அந்த நாடு பொது தேர்தலை சந்திக்க இருக்கிறது.

  வருகிற மே மாதம் 14-ந் தேதி அதிபர் பதவிக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் இப்போது தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக நிலநடுக்கத்தால் பெரிதும் உருக்குலைந்த 10 மாகாணங்களில் இந்த பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

  இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் தயீப் எர்டோகன் மீண்டும் வெல்வாரா? என்ற கேள்விக்குறி உள்ளது. ஏனென்றால் நிலநடுக்கத்தின்போது அவர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் செல்லவில்லை என்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

  கடந்த தேர்தலின்போது அவர் 55 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல பாராளுமன்ற தேர்தலிலும் அவரது கட்சிக்கு அதே அளவு வெற்றி கிடைத்தது.

  ஆனால் இம்முறை நில நடுக்கம் நடந்து 3 மாதத்தில் பொது தேர்தல் வருகிறது. இதனால் இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிபர் தேர்தலில் தயீப் எர்டோகன் மறுபடியும் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தனக்கு வெற்றி கிடைக்கும் என எர்டோகன் நம்பிக்கையுடன் உள்ளார்.

  நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு பதில் புதிதாக சிறந்த கட்டிடங்களை கட்டி கொடுக்க இருப்பதாக எர்டோகன் தெரிவித்து உள்ளார்.

  • கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவித்து வருகின்றனர்.
  • முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது.

  நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்பி வைக்கிறது.

  நிலநடுக்கத்தால் சிதையுண்டு கிடக்கும் துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துச் செல்கிறது. குடியிருந்த வீடுகள் எல்லாம் குப்பையாக கிடக்க கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவிக்கும் சூழல் நிலவுகிறது.

  பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் கேரவன்களை கத்தார் அரசு அனுப்புகிறது. உலககோப்பை கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் தங்குவதற்கு சுற்றுசூழல் மாசுபடாத வகையில் கண்டெய்னர்களில் சொகுசு கேரவன்களை உருவாக்கியிருந்தது.

  இப்போது, முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது

  • நில நடுக்கத்தால் இரு நாடுகளும் பெறும் துயரத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.
  • துருக்கியில் நில நடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

  அங்காரா:

  துருக்கி-சிரியாவில் கடந்த 5-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் தரை மட்டமான ஆயிரக்கணக்கான வீடு, கட்டிட இடி பாடுகளில் தொடர்ந்து மீட்கும்பணி நடந்து வருகிறது.

  இந்த நில நடுக்கத்தால் இரு நாடுகளும் பெறும் துயரத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. கட்டிட இடி பாடுகளில் இருந்து பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியது. இதில் துருக்கியில் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

  இடிபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.

  பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில் கட்டிட இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். 100 மணி நேரத்துக்கு பிறகு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் வெளியே கொண்டு வந்தனர். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

  இந்த நிலையில் துருக்கியில் 128 மணி நேரத்துக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து 2 மாத பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

  துருக்கியில் ஹடாய் நகரில் கட்டிட இடிபாடுகளை அகற்றிய போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே மீட்புக் குழுவினர் குழந்தையை மீட்க இடிபாடுகளை வேகமாக அகற்றினர். சில வீரர்கள் இடிபாடுகளுக்குள் சென்று பார்த்தனர்.

  பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை 128 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடனே குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அந்த குழந்தை பிறந்து 2 மாதங்களே ஆகிறது. அந்த குழந்தையை மீட்டப்போது, அங்கிருந்த மீட்புக்குழுவினர், பொது மக்கள் கைகளை தட்டி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

  அக்குழந்தை தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் 128 மணி நேரம் தாக்குப்பிடித்து அக்குழந்தை இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  அதே போல் 5 நாட்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து 2 வயது சிறுமி, கர்ப்பிணி பெண், 70 வயது மூதாட்டி ஆகியோரும் உயிருடன் மீட்கப்பட்டனர். காசியான்டெப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதற்கிடையே துருக்கியில் நில நடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

  அடுத்து மூன்று நாட்களுக்கு கைது நடவடிக்கை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருட்டு அல்லது கடத்தலில் ஈடுபடும் நபர்கள் அரசின் உறுதியான கரங்களில் இருந்து தப்ப முடியாது என்று துருக்கி பிரதமர் எர்டோகன் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

  சிரியாவில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. அங்கும் இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. மேலும் இடிபாடுகளில் மீட்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

  நில நடுக்கம் பாதித்த துருக்கி, சிரியா மக்களுக்கு 3 மாதங்களுக்கு அவசர கால விசாக்களை வழங்கு வதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை மந்திரி நான்சி டீசர் கூறும்போது, "நில நடுக்கம் பாதித்த பகுதிகளில் இருந்து தங்களது நெருங்கிய உறவினர்களை ஜெர்மனிக்கு அழைத்து வர துருக்கி, சிரியா மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக விசா கெடுபிடி, அரசு விதிகள் ஆகியவை இருக்காது. இது அவசர கால உதவி" என்றார்.

  இந்திய பேரிடர் நிவாரண படையினர் துருக்கியில் மீட்புபடையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நிவாரண பொருட்கள் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது.

  இதற்கிடையே இந்தியா, நிவாரண பொருட்கள் அடங்கிய 7-வது விமானத்தை துருக்கிக்கு அனுப்பியது. அதிலிருந்து மருந்துகள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்களை துருக்கி அரசு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.