என் மலர்
நீங்கள் தேடியது "இஸ்ரேல் படை"
- இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்து வான்வெளியை மூடுவதாக துருக்கி தெரிவித்தது.
- இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்திற்கு வருவதற்கு கடந்த வாரம் தடை விதித்தது.
அங்காரா:
இஸ்ரேல்-காசா இடையிலான போர் தொடங்கியது முதலே துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு மோசமடைந்து வருகிறது.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வரை இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக கடந்த ஆண்டு மே மாதம் துருக்கி கூறியது.
இந்நிலையில், இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி முற்றிலும் துண்டிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடன் கூறுகையில், இஸ்ரேலுடனான அனைத்து பொருளாதார மற்றும் வணிக உறவுகளையும் துண்டித்து, இஸ்ரேலிய விமானங்களுக்கு அதன் வான்வெளியை துருக்கி மூடும் என தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றத்தின் அமர்வில் பேசிய அவர், காசா, லெபனான், ஏமன், சிரியா, ஈரான் மீதான இஸ்ரேலின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச ஒழுங்கை மீறும் ஒரு பயங்கரவாத அரசு மனநிலையின் தெளிவான அறிகுறி என தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த வாரம் இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்திற்கு வருவதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
- ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக ஈரானின் அணு நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறி, மாறி தாக்குதல்களை தொடுத்தன. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையம் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை போர் விமானங்கள் மூலம் வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மேலும் 2 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதற்கிடையே இஸ்ரேல்-ஈரான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்களில் சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அமெரிக்க தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டம் சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று வெளியான தகவல் தவறானது. இந்த அறிக்கைகள் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களில் ஒன்றை குறைப்பதற்கான ஒரு முயற்சியாகும். ஏனென்றால் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டது என்றார்.
மேலும் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறும்போது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது, ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்ற அறிக்கைகள் முற்றிலும் தவறானது. இது துணிச் லான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும்" டிரம்பின் தலைமையை குறைத்து மதிப்பிடுவதும் நோக்கமாகக் கொண்டவை.
நீங்கள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை அவர்களின் இலக்குகளில் சரியாகப் போடும்போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு முழுமையான அழிவு ஏற்பட்டது என்றார்.
- சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும்.
- காசாவிற்கு முழுமையாக உதவியை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்த நிலையில் உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2-ம் கட்ட போர் நிறுத்த பேச்சின் போது, இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் தரப்பு மறுத்தது. இதனால் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகியவை திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், காசாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சகிக்க முடியாதது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசாங்கம் இந்த மோசமான நடவடிக்கைகளைத் தொடரும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம்.
இஸ்ரேல் தனது ராணுவத் தாக்குதலை நிறுத்தி, மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் இஸ்ரேலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம். பொதுமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவியை இஸ்ரேல் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும். இஸ்ரேல் உடனடியாக காசாவிற்கு முழுமையாக உதவியை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மனிதாபிமான உதவிகளை, காசாவிற்குள் முழுமையாக அனுமதிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
- கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது.
- சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஏமன்:
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் படையினர் 7 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து அவர்கள் தாக்கி வருகிறார்கள். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்கினார்கள்.
மேலும் அரபிக்கடல் பகுதியிலும் அமெரிக்க நாட்டு கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
- இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம்.
- இது முழுமையான போர் பிரகடனம் என ஹிஸ்புல்லா தெரிவித்தது.
ஜெருசலேம்:
லெபனானில் பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்துச் சிதறிய சம்பவங்களில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும் இது முழுமையான போர் பிரகடனம் என்றும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, வடக்கு இஸ்ரேலிய பகுதிகள்மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவி பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலின் விமான படைத்தளங்கள் குறிவைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.
இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படைத்தளபதி இப்ராகிம் அகில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
1983-ம் ஆண்டு பெய்ரூட்டின் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தி 63 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான இப்ராகிம் அகில் குறித்த தகவலுக்கு 7 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா பரிசாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
- சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்.
டமாஸ்கஸ்:
சிரியாவில் அதிபராக இருந்த பஷார் அல்-அசாத்தின் அரசாங்க படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழு அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில் தலைநகர் டமாஸ்கஸ் உள்பட முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதையடுத்து அசாத்தின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து நாட்டைவிட்டு தப்பி சென்ற அசாத் ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதற்கிடையே சிரியாவில் அதிபர் அசாத் அரசு கவிழ்ந்ததை இஸ்ரேல் வரவேற்று உள்ளது. அதேவேளையில் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களிடம் கிடைத்தால் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதி சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
100-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. அசாத் ஆட்சியின் ராணுவ திறன்களை அழிக்க இஸ்ரேல் தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
இதன்மூலம் ராணுவ ஆயுதங்களை கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்று இஸ்ரேல் கருதுகிறது.
இந்த தாக்குதலில் பார்சா அறிவியல் ஆய்வு மையம் உள்பட பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக, மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தார்.
இதற்கிடையே சிரியாவில் அசாத் ஆட்சி கவிழ்ந்த பிறகு அங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. அதிகார மாற்றம் தொடர்பாக சிரியா பிரதமரை கிளர்ச்சியாளர்கள் குழு தலைவர் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.






