search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaza Strip"

    • பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டாலும், பலர் ஹமாஸ் வசம் உள்ளனர்
    • பெய்ரூட்டில் ஹமாஸின் முக்கிய தலைவர் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார்

    கடந்த 2022 அக்டோபர் 7 அன்று, பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1200க்கு மேற்பட்டவர்களை கொன்று, சுமார் 240 பேர்களை பணயக்கைதிகளாக கொண்டு சென்றது.

    இதற்கு பதிலடியாக, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்த இஸ்ரேல், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள் நிறைந்திருக்கும் பகுதியான பாலஸ்தீன காசா மீது போர் தொடுத்தது.

    85 நாட்களை கடந்து நடைபெறும் இப்போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட பல நாடுகள் முயற்சித்தாலும், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதில் தீவிரமாக உள்ளது.

    பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டாலும் பலர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர்.

    கடந்த செவ்வாய் அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவரான சலே அல் அரவ்ரி (Saleh al-Arouri) மற்றும் பல தலைவர்கள் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டது என நம்பப்படுகிறது.

    இதனால், கத்தார் மற்றும் எகிப்து மூலம் இஸ்ரேலுடன் முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஹமாஸ் விலகி விட்டது.

    இப்பின்னணியில், கத்தார் பிரதமர் மொஹமத் பின் அப்துல்ரஹ்மான் அல் தனி (Mohammed bin Abdulrahman Al Thani), நேற்று தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பணய கைதிகளின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அவர்களிடம், "பணய கைதிகளின் குடும்பத்தினரின் துன்பத்தை புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், பெய்ரூட் நகர தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது கடினமாக உள்ளது" என அல் தனி தெரிவித்தார்.

    • ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் போர் தொடங்கியது
    • 75 நாட்களை கடந்து தீவிரமாக இப்போர் நடைபெற்று வருகிறது

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சுமார் 3000 பேர் தரை, வான் மற்றும் கடல் வழியாக இஸ்ரேல் எல்லை பகுதிகளில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்தனர். அந்த பயங்கரவாதிகள் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்களை நடத்தி கொடூரமாக கொன்றனர். மேலும், சுமார் 240 பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து அவர்கள் நிறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது.

    போர் நிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் அழைப்பு விடுத்தும் இஸ்ரேல் சம்மதிக்கவில்லை.

    75 நாட்களை கடந்து தீவிரமாக தொடர்ந்து நடைபெறும் இப்போரில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, அங்கு மருத்துவமனைகள் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன.


    இப்போர் விரைவில் முடிவுக்கு வராவிட்டால் உலக போராக மாறும் அபாயம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

    • காசா பகுதியில் இஸ்ரேல் குடியமர்வு நிகழ்த்துவதாக குற்றம் சாட்டப்பட்டது
    • அமெரிக்கா, கனடா உட்பட 7 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்துள்ளன

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி கூறியுள்ள இஸ்ரேல் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசா பகுதியில் பெரும்பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.

    காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஆக்ரமித்து குடியமர்வை செயல்படுத்த முயல்வதாக சில உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதை தொடர்ந்து ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    கிழக்கு ஜெருசலேம் மற்றும் சிரியாவின் கோலன் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை, இந்த தீர்மானம் கண்டனம் செய்தது.

    தீர்மானத்தை ஆதரித்த 145 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த கண்டன தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.

    அமெரிக்கா, கனடா, ஹங்கேரி, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா மற்றும் நவ்ரு உட்பட 7 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். 18 உறுப்பினர் நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

    காசாவில் அமைதி ஏற்பட வேண்டும் என சில தினங்களுக்கு முன்பாக ஐ.நா. சபையில் ஜோர்டான் கொண்டு வந்திருந்த ஒரு தீர்மானத்தை இந்தியா ஏற்று கொள்ளாததால் கலந்து கொள்ளவில்லை. ஹமாஸ் அமைப்பினரின் பயங்கரவாத செயல்களை அத்தீர்மானம் கண்டிக்கவில்லை என இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரஷிய விமான நிலைய சம்பவம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
    • ஹமாஸ் கட்டுப்பாட்டில் காசா இருக்க கூடாது என்றார் வால்டர்ஸ்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் 23-வது நாளாக தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, ரஷியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் டஜெஸ்டான் (Dagestan) பகுதியில் உள்ள விமான நிலையத்தில், இஸ்ரேலில் இருந்து வந்த விமானத்திலிருந்து இறங்கி கொண்டிருந்த பயணிகளில் யூதர்களை தேடி சென்ற ஒரு கும்பல், அவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தியது. பாஸ்போர்ட் விவரங்களை சரிபார்த்து பயணிகளில் யூதர்கள் உள்ளனரா என அந்த கும்பல் தேடிய வீடியோ காட்சிகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து ரஷியாவில் உள்ள தன் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த ரஷியாவை இஸ்ரேல் கோரியுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கான இங்கிலாந்தின் தூதர் சைமன் வால்டர்ஸ் (Simon Walters), ராணுவ வானொலிக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காசா பகுதி ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது. இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸை இஸ்ரேல் வெல்ல வேண்டும். ஆனால், இஸ்ரேல் போரில் கடைபிடிக்க வேண்டிய மரபுகளை மீறக்கூடாது. உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் மீது தாக்குதல் நடைபெறுவது கவலை அளிக்க கூடிய விஷயம். யூத-எதிர்ப்பு குறித்து இங்கிலாந்து மிகவும் வருந்துகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், போரை நிறுத்த கோரியும் நடக்கும் போராட்டங்களில் யூதர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பபட்டது நல்லதல்ல. இங்கிலாந்தில் உள்ள யூதர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து இங்கிலாந்து தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை
    • காந்தியின் கோட்பாடுகளே அரசியல் அமைப்பின் அடித்தளம் என்றார் பிரியங்கா

    கடந்த அக்டோபர் 7 முதல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் காசாவில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

    இந்நிலையில், ஐ.நா. கூட்டமைப்பின் பொதுச்சபையில் (UNGA) நேற்று முன் தினம் ஜோர்டான், "காசாவில் நிலையான அமைதிக்கு வழிவகுக்க உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசியமான தேவைகளும் தங்கு தடையற்று கிடைக்க வேண்டும்," என்றும் கோரிக்கை வைத்து ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது.

    ஜோர்டானின் தீர்மானத்திற்கு ஐ.நா. உறுப்பினர் நாடுகளில் 120 நாடுகள் ஆதரவும், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன.

    இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

    "இஸ்ரேல் மீது அக்டோபர் 7 அன்று நடைபெற்ற ஹமாஸ் தாக்குதல் அதிர்ச்சிகரமானது. ஆனால், அது குறித்து தீர்மானத்தில் வாசகங்கள் இடம் பெறவில்லை. பொதுமக்கள் காசாவில் கொல்லப்படுவதும் கவலையளிக்கும் செயல். இதனால் இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்தது" என இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து ஐ.நா. சபைக்கான இந்திய துணை நிரந்தர தூதர் யோஜ்னா படேல் (Yojna Patel) தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் (INC) பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கண்டித்துள்ளார்.

    அவர் இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:

    'தன் கண்ணை பிடுங்கியவனின் கண்ணை பிடுங்க வேண்டும் எனும் எண்ணமும், செயலும், உலக மக்கள் அனைவரையும் குருடர்களாக்கி விடும்' என தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியிருந்தார். அகிம்சையும், உண்மையுமே நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளம். உணவு, குடிநீர், மருந்து, தொலைத்தொடர்பு, மின்சாரம் அனைத்தும் காசா பொது மக்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மிகுந்த துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஜோர்டானின் போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தில் பங்கேற்காததன் மூலம் நம் நாடு எந்த உயர்ந்த எண்ணங்களை தாங்கி பல காலங்களாக நிலை நிற்கிறதோ அவை அனைத்திற்கும் எதிரான நிலைப்பாட்டை இப்போது இந்தியா எடுத்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான முடிவு. இந்த முடிவிற்காக ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன்.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.

    • இத்தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக தெரிகிறது
    • தற்போதைய தொழில்நுட்பத்தில் அனைத்து விவரங்களும் பதிவாகி விடுகின்றன

    பாலஸ்தீன காசா பகுதியில் உள்ள ஹமாஸ் (Hamas) அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்துள்ள இஸ்ரேலிய ராணுவ படை (IDF) பாலஸ்தீனத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், காசா பகுதியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட ஒரு ராக்கெட் தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெர்ரஸ் (Antonio Guterres) உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இத்தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என கூறி அதற்கு ஆதாரமாக பல வீடியோ காட்சிகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் உள்ள இஸ்ரேலுக்கான தூதர் நவோர் கிலன் (Naor Gilon) இது குறித்து தெரிவித்ததாவது:

    அல் அஹ்லி மருத்துவமனை மீது பாலஸ்தீன ஐ.ஜே (Palestinian Islamic Jihad) அமைப்பினர் ராக்கெட் ஏவி நடத்திய தாக்குதல் இது. அவர்கள் எங்கள் நாட்டினை குறி வைத்தனர்; ஆனால் எங்கள் குழந்தைகளை கொல்ல நினைத்தவர்கள் தங்கள் நாட்டு குழந்தைகளை கொன்று விட்டனர். உலகில் இன்னும் சிலர் அவர்களை ஆதரித்து வருவது துரதிர்ஷ்டவசமானது. தற்போதைய தொழில்நுட்ப உலகில் அனைத்து விவரங்களும் பதிவாகி விடும். இந்த ராக்கெட் தாக்குதல் குறித்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மக்களை கேடயமாக பயன்படுத்தி சுரங்கங்களில் ஒளிந்து கொண்டு தாக்குதல் நடத்தும் ஹமாஸ் அமைப்பினர் துணிச்சலுடன் வெளியே வந்து எங்களுடன் போரிட வேண்டும்.

    இவ்வாறு நவோர் கிலன் தெரிவித்தார்.

    • இஸ்ரேல் ஹமாஸ் போர் 4-வது நாளாக தீவிரமடைந்து வருகிறது
    • காசா டெல்லியின் பரப்பளவில் 25 சதவீதம் மட்டுமே இருக்கும்

    "ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட்" (Operation Al-Aqsa Flood) என்ற பெயரில் ஒரே நேரத்தில் 5000க்கும் அதிகமான ராக்கெட்டுகளை ஏவியும், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் மூலமாகவும் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக சிறை பிடித்தது.

    ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் 4-வது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பிற்கு ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே உள்ள 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட பகுதி காசா (Gaza). ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா, இந்திய தலைநகர் டெல்லியின் பரப்பளவில் 25 சதவீதம் இருக்கும். இங்கு சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

    காசாவில் இரண்டு இடங்களில் மட்டுமே எல்லையை கடக்கும் இடங்கள் உள்ளன. இரண்டு திசைகளில் இஸ்ரேலும், ஒரு திசையில் எகிப்தும், மற்றொரு திசையில் மத்திய தரைகடலும் காசாவை சூழ்ந்துள்ளது. அங்கிருந்து உள்ளேயும் வெளியேயும் மக்கள் செல்வதை இஸ்ரேல் தீவிரமாக கண்காணிக்கிறது.

    ஆனால் நிலம், நீர் மற்றும் வான்வழியை மட்டுமே இஸ்ரேல் கண்காணிப்பதால், அதை தாண்டி பூமிக்கடியில் சுரங்கம் அமைத்து அவ்வழியில் ராணுவ ஆயுதங்களும், தளவாடங்களும் காசாவிற்குள் கொண்டு வரப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

    ஆயுத கடத்தலில் ஈடுபடுபவர்கள் மத்திய தரை கடல் பகுதியின் கரையோரங்களில் சுரங்கங்கள் அமைத்து இஸ்ரேல் கண்காணிப்பை தாண்டி காசாவிற்கு உள்ளே கொண்டு சென்றுள்ளனர். ஈரான் நாட்டில் உருவாக்கப்பட்ட ஃபாஹர்-3 (Fajr-3) ஃபாஹர்-5 (Fajr-5) ராக்கெட்டுகள் மற்றும் எம்-302 ராக்கெட்டுகள், ஈரானிலிருந்தும் சிரியாவிலிருந்தும் இந்த சுரங்க பாதைகள் வழியே கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

    இது மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறும் போது அமெரிக்கா தான் பயன்படுத்திய ஆயுதங்களை அங்கேயே விட்டுச்சென்றது. அவை அந்நாட்டின் தலிபான் அமைப்பினரின் உதவியுடன் ஹமாஸிற்கு  இதே வழியாக வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

    • அஹ்மத் யாசின் மற்றும் அப்தெல் அஜிஸ் அல்-ரன்டிஸ்ஸி என்பவர்களால் துவங்கப்பட்டது
    • இஸ்ரேலை ஒரு நாடாக ஹமாஸ் அங்கீகரிக்க மறுத்தது

    வான்வழி தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள, இஸ்ரேல் "இரும்பு குவிமாடம்" (Iron Dome) எனும் அதி நவீன கட்டமைப்பை உருவாக்கியிருந்தது.

    ஆனால் நேற்று காலை, பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இதனை ஊடுருவி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் அதிகமான ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. இது மட்டுமின்றி வான், தரை மற்றும் கடல் வழியே தனது அமைப்பாளர்களை கொண்டு இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையை தாண்டி இஸ்ரேலுக்குள் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது ஹமாஸ்.

    உலகெங்கும் இந்த அமைப்பின் பின்னணியை குறித்து பெரிதும் விவாதிக்கின்றனர்.

    1987ல் எகிப்திய இஸ்லாமிய சகோதரத்துவம் (Egyptian Muslim Brotherhood) எனும் அமைப்பை சேர்ந்த அஹ்மத் யாசின் (Ahmed Yassin) மற்றும் அப்தெல் அஜிஸ் அல்-ரன்டிஸ்ஸி (Abdel Aziz Al-Rantissi) ஆகியவர்களால் துவங்கப்பட்டது ஹமாஸ் அமைப்பு. ஹமாஸ் என்றால் "தணியாத அதீத ஆர்வம்" (zeal) என பொருள்படும்.

    இஸ்ரேல், மேற்கு கரை மற்றும் காசா முனை (Gaza Strip) பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரே நாட்டை உருவாக்குவதையே லட்சியமாக கொண்டது ஹமாஸ்.

    1990களில் பாலஸ்தீனின் முன்னாள் அதிபர் யாசர் அராஃப்த் துவக்கிய ஃபடாஹ் (Fatah) எனும் இஸ்ரேலுக்கு எதிரான அமைப்பு, 2004ல் அராஃபத்தின் மறைவிற்கு பிறகு பலமிழக்க தொடங்கியது. அதற்கு பிறகு பாலஸ்தீனத்தில் ஹமாஸிற்கு மக்கள் ஆதரவும், குறிப்பாக இளைஞர்கள் ஆதரவும் கூடியது.

    இந்த அமைப்பினருக்கு தவா (Dawah) எனும் கலாசார பிரிவும், இஜ்ஜத் தின் அல்-கஸ்ஸாம் (Izzat Din al-Qassam) எனும் ராணுவ பிரிவும் உள்ளது. ஹமாஸிற்கு ஈரான், சிரியா மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் ஆதரவும் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலும் பாலஸ்தீனத்திலும் ஹமாஸ் அமைப்பிற்கு பெரும் ஆதரவு உள்ளது. ஈரான், சிரியா, ஏமன், கத்தார் மற்றும் ஜோர்டான் உட்பட பல நாடுகள் ஆதரவளிக்கிறது.

    ஆனால், எகிப்து, மொராக்கோ மற்றும் சவுதி அரேபியா ஹமாஸை ஆதரவிக்கவில்லை. மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, எகிப்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மறுத்து, ஆயுத போராட்டத்தை ஊக்குவிக்கும் ஹமாஸிற்கும், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை மூலமாக சிக்கலை தீர்த்து கொள்ள விரும்பும் ஃபடாஹ் அமைப்பிற்குமிடையே சித்தாந்த மோதல்கள் நடைபெறுகிறது.

    2021-22க்கான பாலஸ்தீனியத்தின் உள்நாட்டு தேர்தலில் ஹமாஸ் பங்கேற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

    தங்கள் மீதான நேற்றைய தாக்குதலுக்கு பதில் தாக்குதலில் தீவிரமாக இறங்கியுள்ள இஸ்ரேல், ஹமாஸை முற்றிலுமாக ஒழித்து விட உறுதியுடன் போரிட்டு வருகிறது. நீண்டகாலமாக செயல்பட்டு வந்த இந்த பயங்கரவாத அமைப்பின் முடிவு, இந்த போரின் இறுதியில் தெரிந்து விடும்.

    • ஹமாஸ் தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்
    • இஸ்ரேலின் பதிலடியில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்

    யூத மதத்தினருக்கான உலகின் ஒரே நாடான இஸ்ரேலுக்கும் அதன் அண்டையில் உள்ள பாலஸ்தீனத்திற்கும் பல வருடங்களாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. அவ்வப்போது இரு தரப்பினரும் பரஸ்பர ராணுவ தாக்குதல்களில் ஈடுபடுவதும் பிறகு சில மாதங்கள் தாக்குதல் நிறுத்தம் நடைபெறுவதும் வழக்கம். இஸ்ரேலுக்கெதிராக பாலஸ்தீனத்தில் பல பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    நேற்று காலை, பாலஸ்தீனித்தின் ஹமாஸ் உள்ளிட்ட பல பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேலின் பல பகுதிகளில் வான், தரை, மற்றும் கடல் வழியாக ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது. எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இத்தாக்குதலால் இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்; 1800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

    "ஹமாஸ் அமைப்பு தனது செயலுக்கான விலையை கொடுக்க போகிறது" என எச்சரித்த இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்திருக்கிறது.

    இஸ்ரேலில் சனிக்கிழமையன்று நடைபெற்றதை போன்ற சம்பவம், இனி எப்போதும் நடைபெறாதவாறு பார்த்து கொள்ளப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தன் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்தார்.

    இந்நிலையில், இரு நாட்டிற்கும் இடையே உள்ள காசா முனை (Gaza Strip) பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படை நடத்திய பதிலடி தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டவர்கள் பிணைக்கைதிகளாக உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ படை தெரிவித்திருக்கிறது.

    மேலும் பல போராளிகளின் மறைவிடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அங்கு இஸ்ரேலிய படையினர் இல்லாத நகரமே இல்லை எனுமளவிற்கு எதிர்தாக்குதலை தீவிரமாக்கியுள்ளது இஸ்ரேல்.

    பயங்கரவாதிகளின் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்க கூடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×