என் மலர்
இந்தியா

அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ போனில் அழைத்து புகழ்ந்த பிரதமர் மோடி!
- வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் குறித்தும் ஆலோசித்தோம்.
- இது பிரதமர் நெதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்தார்.
இதை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டது. மற்ற பரிந்துரைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இருதரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில், இரண்டு வருட கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, காசாவிற்குள் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் மற்றும் உதவி நுழைவுக்கான ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்தியஸ்தர்கள் தெரிவித்ததாக எகிப்திய அரசு தொடர்பான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைதி ஒப்பந்தத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். அதிபர் டிரம்ப்-ஐ தொலைபேசியில் அழைத்து மோடி பாராட்டி உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "எனது நண்பர் அதிபர் டிரம்பிடம் பேசினேன். வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதித் திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தினேன். மேலும், வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் குறித்தும் ஆலோசித்தோம். வரும் வாரங்களில் இருவரும் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "அதிபர் டிரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பிரதமர் நெதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்.
பணயக்கைதிகள் விடுதலையும், காசா மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட மனிதாபிமான உதவிகளும் அவர்களுக்கு நிம்மதியைத் தரும் என்றும், நீடித்த அமைதிக்கு வழி வகுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






