search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    குடிநீர் வேண்டுமா? வாய்ப்பே இல்லை: பிடிபட்ட தன் நாட்டவர்களை விடுவிக்க இஸ்ரேல் அதிரடி
    X

    "குடிநீர் வேண்டுமா? வாய்ப்பே இல்லை": பிடிபட்ட தன் நாட்டவர்களை விடுவிக்க இஸ்ரேல் அதிரடி

    • ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது
    • 150 இஸ்ரேலியர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை

    கடந்த சனிக்கிழமை காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பல இஸ்ரேலியர்கள் இதில் உயிரிழந்தனர். மேலும் பல இஸ்ரேலியர்களை பணய கைதிகளாக ஹமாஸ் கொண்டு சென்றது.

    இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி, இஸ்ரேல் அதை சேர்ந்தவர்களை காசா பகுதியில் தேடி தேடி வேட்டையாடி வருகிறது.

    இஸ்ரேல் அறிவித்திருக்கும் இந்த போர் 6-வது நாளாக இன்றும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியின் மீது இஸ்ரேல் வான்வழியாக தொடர்ந்து குண்டு மழையை பொழிவதால் அப்பகுதியில் பல வீடுகள் சேதமடைந்தன. பலர் அண்டையில் உள்ள அரபு நாடுகளுக்கு அகதிகளாக செல்ல தொடங்கி விட்டனர்.

    காசாவில் பல லட்சம் மக்களுக்கு வீடு, மின்சாரம், எரிபொருள், குடிநீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இஸ்ரேல் துண்டித்து விட்டது. குண்டு வீச்சில் காயமடைந்தவர்களால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு அவசர தேவைகள் சென்றடைய வழித்தடத்தை அமைத்து தரவும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தடை விதிக்க வேண்டாம் என்றும் இஸ்ரேலுக்கு சில மனிதாபிமான அமைப்புகள் கோரிக்கை வைத்தன.

    இதற்கு இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விட்டது.

    "காசாவிற்கு மனிதாபிமான உதவிகளா? எங்கள் நாட்டவர்களை ஹமாஸ் விடுவிக்காத வரை காசாவில் எந்த மின்சார சுவிட்சும் வேலை செய்யாது; எந்த குடிநீர் குழாயும் திறக்கப்பட மாட்டாது; எந்த எரிபொருள் வாகனமும் உள்ளே நுழைய முடியாது. மனிதாபிமானமாக நடந்து கொள்பவர்களிடம்தான் மனிதாபிமானத்தை காட்ட முடியும். தார்மீக கடமைகளை எங்களுக்கு எவரும் கற்று தர வேண்டாம்" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz) உறுதியாக கூறியுள்ளார்.

    ஹமாஸ் அமைப்பால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் சுமார் 150 இஸ்ரேலியர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை.

    பாலஸ்தீன பகுதியின் ஒரே மின்சார உற்பத்தி நிலையம் நேற்று எரிபொருள் இல்லாததால் முடங்கியது.

    Next Story
    ×