search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN By polls"

    மு.க.ஸ்டாலினால் எந்த காலத்திலும் முதல்-அமைச்சராக வர முடியாது என்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
    செய்துங்கநல்லூர்:

    ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 2-வது கட்டமாக பிரசாரம் செய்தார். வல்லநாடு பகுதியில் திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்தினார். 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினார். ஆட்சியாளர்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஜெயலலிதா நல்லாட்சி நடத்தியதால், 20 கிலோ இலவச அரிசி வழங்கினார். 16 லட்சம் குடிசைகளில் ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு 2023-ம் ஆண்டுக்குள் தரமான வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்தினார்.

    ஏழை, எளிய மக்கள் 60 லட்சம் பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழகம் விளங்கி கொண்டு இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு ரூ. 3 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு தமிழகம் அமைதிப்பூங்காவாக விளங்கி வருகிறது. இந்த தேர்தல் யாரால் வந்தது, நம்மிடம் இருந்து சென்ற துரோகியால் வந்தது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற தீராத ஆசையில் உள்ளார். அவர் முதல்-அமைச்சராக எந்த காலத்திலும் வர முடியாது. அ.தி.மு.க. இந்த தேர்தலில் காணாமல் போய்விடும் என்று கூறுகிறார். அ.தி.மு.க. மிகப்பெரிய ஆலமரம். இதில் 1 கோடி தொண்டர்கள் உள்ளனர். கருணாநிதியால் முடியாதது, உங்களால் முடியவே முடியாது. தி.மு.க. ஆட்சியில் கொலை, நிலஅபகரிப்பு நடந்தது. அந்த நிலத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீட்டு மக்களிடம் தந்தார். மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியாத அரசாக தி.மு.க. அரசு இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு மின்மிகை மாநிலமாக மாற்றினார். தற்போது 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன், கூட்டணி வைத்து இருப்பதாக ஒருவர் கூறுகிறார். இந்த கட்சியில் இருந்து வசதி வாய்ப்பை பெருக்கி கொண்டவர்கள் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க போகிறார்களாம். அது எந்த காலத்திலும் முடியாது. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து தனிக்கட்சி கண்டவர்கள், சாதிக் கட்சி கண்டவர்கள் யாரும் வாழ்ந்ததாக, உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. இது தொண்டர்கள் இயக்கம். தி.மு.க.வில் ஒரு தொண்டன் முதல்-அமைச்சராக வர முடியுமா? முடியாது. அ.தி.மு.க. வில்தான் ஒரு தொண்டன் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக வர முடியும். ஒரு தொண்டர் பழனிசாமி முதல்-அமைச்சராக உள்ளார்.

    தி.மு.க.வை எதிர்த்துதான் அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. நமக்கு ஒரே எதிரி தி.மு.க.தான். யார் ஆட்சியில் நல்ல மக்கள் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் கொண்டு வந்தார்கள், தொழில் வளர்ச்சி, விவசாயம் பெருகியது என்பதை பார்த்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற வரலாற்றை உருவாக்கி தாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தெய்வச்செயல்புரம், முடிவைத்தானேந்தல் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
    அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் இர.ரமேஷ் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்தநிலையில் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் அகர வரிசைப்படி 5-வது இடத்தில் இருந்தது.

    தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளர் பட்டியலில் அவரது பெயரின் முதல் எழுத்தான ‘இ’ நீக்கப்பட்டு ரமேஷ் என்று குறிப்பிட்டு 9-வது இடத்தில் இடம் பெற்றிருந்தது.

    இதனை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கும், அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் கடந்த 4-ந்தேதி ரமேஷ் மனு அளித்திருந்தார். ஆனால் அந்த மனு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் வேட்பாளர் பட்டியலில் அகர வரிசைப்படி சரியான இடமான 5-வது இடத்தை தனக்கு கொடுக்குமாறு வலியுறுத்தி, தேர்தல் நடத்தும் அலுவலகமான, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வேட்பாளர் ரமேசை தேர்தல் நடத்தும் அலுவலரான மீனாட்சியிடம் அழைத்து சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ரமேஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சுயேச்சை வேட்பாளர் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை ஒட்டப்பிடாரம் தொகுதியில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். #TNByPolls #DMK #Kanimozhi
    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அவர்கள் வீதிவீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும் துரைமுருகனும் பிரசாரம் மேற்கொண்டார்.

    கோப்புப்படம்

    இந்நிலையில் தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலை தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் நேற்று ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் வீதிவீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.

    இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி 2-வது வார்டு பகுதிகளான அன்னை இந்திராநகர் பிள்ளையார் கோவில் முன்பு பிரசாரத்தை தொடங்கினார். பின்பு அய்யப்பன்நகர், விஸ்வபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது கனிமொழி எம்.பி. அனைத்து வீதிகளிலும் நடந்தே சென்றார். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக சென்று ஆதரவு திரட்டினார்.

    இன்று மாலை தூத்துக்குடி ஒன்றியம் சோரீஸ்புரம், அந்தோணியார்புரம், மறவன்மடம், சிலுக்கன்பட்டி, கீழகூட்டுடன்காடு, புதுக்கோட்டை, செந்தியம்பலம், கட்டாலங்குளம், புதூர், முடிவைத்தானேந்தல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    நாளை மறுநாள் (11-ந் தேதி) ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய பகுதிகளிலும், 13-ந்தேதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய பகுதிகளிலும், 15-ந்தேதி தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளிலும் கனிமொழி எம்.பி. தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். #TNByPolls #DMK #Kanimozhi

    சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார். #TNByPolls #PChidambaram
    சென்னை:

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார்.

    சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து கருமத்தம்பட்டியில் இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து வேலாயுதம்பாளையத்தில் நாளை (10-ந்தேதி) மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுகூட்டம் நடக்கிறது. இதிலும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். #TNByPolls #PChidambaram
    திருப்பரங்குன்றம் தொகுதியில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா கூறினார்.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1670 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்தலை முன்னிட்டு நகரில் 18 இடங்களிலும், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 27 இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகளுடன் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் 297 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நகரில் உள்ள 47 வாக்குச்சாவடிகளும், தொகுதியில் உள்ள 134 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக மத்திய-மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக 3600 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    கூட்டத்தில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட போலீஸ் சூப்பிரண் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அ.ம.மு.க. ஆட்சி டி.டி.வி.தினகரன் தலைமையில் அமைக்கப்படும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #AMMK #Thangatamilselvan
    திருப்பரங்குன்றம்:

    அ.ம.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திருப்பரங்குன்றத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாரணாசியில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தபோது வாக்கு எந்திரம் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதோ என்று சந்தேகித்து கேள்வி எழுப்பினோம்.

    தற்போது தேனியில் 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்திருப்பது குறித்து கலெக்டர், இது இயல்பான நிகழ்வு மட்டுமே என்று கூறியதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு வருகிறோம்.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அமைந்த ஜானகி அம்மாளின் ஆட்சியை கலைத்தனர்.

    தற்போது எடப்பாடி ஆட்சியை கலைப்பதற்கு அனைத்து கட்சியினரும் கரம் நீட்டுவது இயல்பானது.

    இதனை கூட்டணி சேர்ந்து இருப்பது என்று கூறுவது தவறு. கலகத்தில் பிறப்பதுதான் நீதி. கலங்காதே... மயங்காதே... என்று எம்.ஜி.ஆரே கூறியுள்ளார்.

    சாமானியர்கள் முதற்கொண்டு இதுவரையில் எங்களிடம் ஆர்வமாக 22 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சி கலைக்கப்படுமாயின் நிச்சயமாக பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்களித்து இருப்போம் என்று உற்சாகமாக தெரிவித்து வருகின்றனர்.

    வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆட்சி கலைக்கப்படும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அ.ம.மு.க. ஆட்சி டி.டி.வி.தினகரன் தலைமையில் அமைக்கப்படும்.

    எடப்பாடி பழனிசாமி அரசு 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததும் நிச்சயமாக மெஜாரிட்டியை காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் தள்ளப்படும். அப்போது ஆட்சியை கலைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும், உதிரிக் கட்சிகளும் இயல்பாகவே கை கொடுப்பது தான் நிதர்சனமான உண்மை. அதற்கு கூட்டணி என்ற பெயர் இல்லை.

    ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. மிக மோசமான நிர்வாகம் மற்றும் பா.ஜ.க.வின் அடிமையாகவே செயல்பட்டு வருகின்றன. வருகிற 23-ந் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்.

    23-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு 22 தொகுதிகளிலும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி தோற்ற பின் நம்பிக்கை தீர்மானம் ஆளுநரிடம் கூற வேண்டும். யாராக இருப்பினும் எங்களது நிலைப்பாடு, எடப்பாடி தலைமைக்கு எதிரானதாக இருக்கும்.

    அ.தி.மு.க. 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஆட்சியை தொடரட்டும். ஆனால் எப்படி 22 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது?

    அ.தி.மு.க.வின் சகாப்தம் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பே இல்லை.

    அண்ணா பாதையில் மறப்போம் மன்னிப்போம் என்ற நிலை இருந்தால் மக்கள் ஒரு நாள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் மறக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #AMMK #Thangatamilselvan
    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்தார். #TNByPolls #DMK #MKStalin
    கரூர்:

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்தார். கரூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கிய அவர் இன்று காலை அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட தவுட்டுப்பாளையம் பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது புகளூர் வெற்றிலை விவசாயிகள் சங்க அலுவலகத்திற்குள் சென்ற அவர் வெற்றிலை சாகுபடி குறித்தும், குறைகளையும் கேட்டறிந்தார். முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியம், விவசாயிகள் சங்க செயலாளர் ராமசாமி ஆகியோர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.

    குறிப்பாக டி.என்.பி.எல். ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் வெற்றிலை விவசாயத்தை பெரிதும் பாதித்து வருகிறது. காவிரியின் நீர்மட்டமும் குறைந்துவிட்டது. 5 டி.எம்.சி. தண்ணீர் வந்தால் கூட கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வருவதில்லை. இந்த நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைப்பதோடு வாய்க்கால் பராமரிப்பை முறையாக மேற்கொண்டு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர். மேலும் தி.மு.க. ஆட்சியின்போது விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதுபோல், மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர். நதி நீரேற்று பாசனத்திற்கும் வழி செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் வருகிற 23-ந்தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. பொறுப்பேற்றதும் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார்.

    தவுட்டுப்பாளையம் பகுதியில் பிரசாரம் செய்த மு.க. ஸ்டாலின் ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சிய காட்சி.

    இதைத்தொடர்ந்து அங்குள்ள கடை வீதிகள், தெருக்களில் நடந்தே சென்ற மு.க. ஸ்டாலினை பொது மக்கள் கைகுலுக்கி வரவேற்று, செல்பி எடுத்துக்கொண்டனர். வீட்டு வாசலில் வரவேற்க திரண்டிருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்து விரைவில் அவை நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்து சென்றார்.

    இன்று (புதன்கிழமை) மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதியில் 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொள்கிறார். மாலை 5 மணிக்கு அரவக்குறிச்சி ஒன்றியம் நாகம்பள்ளி ஊராட்சியிலும், 5.30 மணிக்கு வேலம் பாடி ஊராட்சியிலும், 6 மணிக்கு இனுங்கனூர் ஊராட்சியிலும், 6.30 மணிக்கு பள்ளப்பட்டி பேரூராட்சியிலும் பிரசாரம் செய்கிறார். இரவு 7 மணிக்கு ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் தனது பிரசாரத்தை முடிக்கிறார்.

    தனது முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்யும் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டு செல்கிறார். இரண்டாம் கட்ட பிரசாரத்தை மீண்டும் வருகிற 14-ந்தேதி ஒட்டப்பிடாரத்தில் தொடங்குகிறார். 15-ந்தேதி திருப்பரங்குன்றத்திலும், 16-ந்தேதி சூலூரிலும் பிரசாரம் செய்யும் அவர் 17-ந் தேதி அரவக்குறிச்சியில் நிறைவு செய்கிறார்.  #TNByPolls #DMK #MKStalin
    அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNCM #Edappadipalaniswami #ADMK
    சேலம்:

    தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலி இடங்களாக உள்ளன.

    இதில் 18 தொகுதிகளுக்கு நேற்று பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று சேலம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்:- பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் ஆர்வமுடன் அதிக அளவில் வந்து வாக்களித்து இருக்கிறார்கள்.

    அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

    கடந்த ஆண்டு தேர்தலில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் 77 சதவீதம் வாக்கு பதிவானது. இந்த தடவை 77.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கூடுதலாக வாக்கு பதிவாகி இருக்கிறது.



    இன்றைக்கு அம்மா அரசு சிறப்பாக பணியாற்றிய காரணத்தினாலே சேலம் தொகுதியில் கூடுதலான வாக்குகள் பதிவாகி இருக்கின்றது.

    கே:- ஓட்டுப்பதிவின் போது போதிய அளவில் பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளதே?

    ப:- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டப்படிதான் நடக்க வேண்டும். ஏற்கனவே என்னென்ன வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து உள்ளதோ, அந்த வழித்தடங்களில் பஸ்கள் வழக்கம் போல் சென்று கொண்டு தான் இருக்கின்றன.

    தேர்தல் நடத்தை விதி காரணமாக உடனடியாக கூடுதலாக பஸ்களை இயக்க இயலாது. இது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

    தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் அரசாங்கம் முழுவதுமே சென்று விடுகிறது. நிறைய இடங்களில் கூடுதலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும் மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கும் வி‌ஷயத்தில் தேர்தல் நடத்தை விதி குறுக்கிட்டதால் இதில் அமைச்சர்களும் தலையிட முடியாது, மத்தியிலும் யாரும் தலையிட முடியாது. அதிகாரிகள் மட்டத்தில் தான் இதை செயல்படுத்த முடியும்.

    தொடர்ந்து விடுமுறை தினங்கள் வந்ததால் முக்கிய நகரங்களில் இருந்து அதிகமான பேர் தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்ய நேரிட்டது. இந்த சூழ்நிலையில்தான் இடர்பாடு ஏற்பட்டு இருக்கின்றது. விரைவில் இது சரி செய்யப்பட்டு விடும்.

    கே:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வருகின்ற தேர்தலில் தொடருமா?

    ப:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடருவதற்கு முழு வாய்ப்பு இருக்கிறது.

    கே:- சேலம் மாவட்டத்தில் நேற்று வீசிய சூறைக்காற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

    ப:- சூறை காற்றால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பிறகு தான் தெரியும். கோடை மழை என்பதால் இதை பற்றி உறுதியாக பேச முடியாது.

    நாளை தலைமை செயலகம் சென்றபிறகு, நான் இது தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்வேன். பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNCM #Edappadipalaniswami #ADMK
    ×