search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு- முதல்வர் பழனிசாமி பேட்டி
    X

    4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு- முதல்வர் பழனிசாமி பேட்டி

    அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNCM #Edappadipalaniswami #ADMK
    சேலம்:

    தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலி இடங்களாக உள்ளன.

    இதில் 18 தொகுதிகளுக்கு நேற்று பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று சேலம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்:- பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் ஆர்வமுடன் அதிக அளவில் வந்து வாக்களித்து இருக்கிறார்கள்.

    அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

    கடந்த ஆண்டு தேர்தலில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் 77 சதவீதம் வாக்கு பதிவானது. இந்த தடவை 77.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கூடுதலாக வாக்கு பதிவாகி இருக்கிறது.



    இன்றைக்கு அம்மா அரசு சிறப்பாக பணியாற்றிய காரணத்தினாலே சேலம் தொகுதியில் கூடுதலான வாக்குகள் பதிவாகி இருக்கின்றது.

    கே:- ஓட்டுப்பதிவின் போது போதிய அளவில் பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளதே?

    ப:- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டப்படிதான் நடக்க வேண்டும். ஏற்கனவே என்னென்ன வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து உள்ளதோ, அந்த வழித்தடங்களில் பஸ்கள் வழக்கம் போல் சென்று கொண்டு தான் இருக்கின்றன.

    தேர்தல் நடத்தை விதி காரணமாக உடனடியாக கூடுதலாக பஸ்களை இயக்க இயலாது. இது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

    தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் அரசாங்கம் முழுவதுமே சென்று விடுகிறது. நிறைய இடங்களில் கூடுதலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும் மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கும் வி‌ஷயத்தில் தேர்தல் நடத்தை விதி குறுக்கிட்டதால் இதில் அமைச்சர்களும் தலையிட முடியாது, மத்தியிலும் யாரும் தலையிட முடியாது. அதிகாரிகள் மட்டத்தில் தான் இதை செயல்படுத்த முடியும்.

    தொடர்ந்து விடுமுறை தினங்கள் வந்ததால் முக்கிய நகரங்களில் இருந்து அதிகமான பேர் தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்ய நேரிட்டது. இந்த சூழ்நிலையில்தான் இடர்பாடு ஏற்பட்டு இருக்கின்றது. விரைவில் இது சரி செய்யப்பட்டு விடும்.

    கே:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வருகின்ற தேர்தலில் தொடருமா?

    ப:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடருவதற்கு முழு வாய்ப்பு இருக்கிறது.

    கே:- சேலம் மாவட்டத்தில் நேற்று வீசிய சூறைக்காற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

    ப:- சூறை காற்றால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பிறகு தான் தெரியும். கோடை மழை என்பதால் இதை பற்றி உறுதியாக பேச முடியாது.

    நாளை தலைமை செயலகம் சென்றபிறகு, நான் இது தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்வேன். பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNCM #Edappadipalaniswami #ADMK
    Next Story
    ×