search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ottapidaram Constituency"

    அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஓட்டு போட்டு விட்டு திரும்பிய 2 பேர் திடீரென இறந்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 49). தி.மு.க. கிளை செயலாளர். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னிலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை வாக்களித்து விட்டு சக்திவேல் வெளியே வந்தார்.

    அப்போது திடீரென அவர் நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக சக்திவேலை ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 60), கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் சிலோன் காலனி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட சென்றார்.

    அவர் ஓட்டுப்போட்டு விட்டு வெளியே வந்தார். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்றபோது, திடீரென மாடசாமி மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆனால் அதற்குள் மாடசாமி பரிதாபமாக இறந்து விட்டார்.
    சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி கடந்த சில நாட்களாக நடந்து வரும் அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
    சென்னை:

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    கடந்த ஏப்ரல் 22-ந்தேதி முதல் 29-ந்தேதிவரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2-ந்தேதி வெளியிடப்பட்டது. 4 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செர்வம் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.



    தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் சூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து பொது மக்களிடம் குறை கேட்டார்.

    அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் அனல் பறக்கும் பிரசாரம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. அதன் பிறகு தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்.

    தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் குறித்து விவரங்கள் நாளை மாலை தெரிவிக்கப்படும்.
    தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை ஒட்டப்பிடாரம் தொகுதியில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். #TNByPolls #DMK #Kanimozhi
    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அவர்கள் வீதிவீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும் துரைமுருகனும் பிரசாரம் மேற்கொண்டார்.

    கோப்புப்படம்

    இந்நிலையில் தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலை தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் நேற்று ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் வீதிவீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.

    இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி 2-வது வார்டு பகுதிகளான அன்னை இந்திராநகர் பிள்ளையார் கோவில் முன்பு பிரசாரத்தை தொடங்கினார். பின்பு அய்யப்பன்நகர், விஸ்வபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது கனிமொழி எம்.பி. அனைத்து வீதிகளிலும் நடந்தே சென்றார். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக சென்று ஆதரவு திரட்டினார்.

    இன்று மாலை தூத்துக்குடி ஒன்றியம் சோரீஸ்புரம், அந்தோணியார்புரம், மறவன்மடம், சிலுக்கன்பட்டி, கீழகூட்டுடன்காடு, புதுக்கோட்டை, செந்தியம்பலம், கட்டாலங்குளம், புதூர், முடிவைத்தானேந்தல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    நாளை மறுநாள் (11-ந் தேதி) ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய பகுதிகளிலும், 13-ந்தேதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய பகுதிகளிலும், 15-ந்தேதி தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளிலும் கனிமொழி எம்.பி. தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். #TNByPolls #DMK #Kanimozhi

    ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் பிரசாரம் செய்கிறார். #TNAssemblyElection #MKStalin
    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கி நேற்று (29-ந்தேதி) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.

    ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் மோகன், தி.மு.க. வேட்பாளர் சண்முகையா, அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தரராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யா மற்றும் சுயேட்சைகள் உள்பட 37 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 28 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. ஓட்டப்பிடாரம் தொகுதியை பொறுத்தவரை 5 முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 19 நாட்கள் மட்டுமே இருப்பதால் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை நாளை (1-ந்தேதி) தொடங்குகிறார். தனது கட்சி சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து அவர் தொகுதி முழுவதும் திறந்த வேனில் சென்று மக்களை நேரடியாக சந்தித்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    இதற்காக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.



    பின்பு அவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். மே தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நாளை (1-ந்தேதி) காலை பேரணி மற்றும் நினைவேந்தல் கூட்டம் நடக்கிறது. பேரணி தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவில் தொடங்கி வி.வி.டி. சிக்னல் வழியாக சிதம்பரம் நகர் பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு வந்து சேருகிறது.

    இந்த பேரணியில் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். பின்பு நடக்கும் நினைவேந்தல் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    பின்னர் நாளை மாலை ஓட்டப்பிடாரம் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் திறந்த வேனில் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். தூத்துக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்க சந்திப்பில் மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின் மாலை 6 மணிக்கு மாப்பிள்ளையூரணியிலும், இரவு 7 மணிக்கு தருவைகுளத்திலும், 7.30 மணிக்கு புதியம்புத்தூரிலும், 8 மணிக்கு ஓட்டப்பிடாரத்திலும் பிரசாரம் செய்கிறார்.

    மறுநாள் (2-ந்தேதி) காலை 8.30 மணிக்கு ஸ்பிக்நகர் குடியிருப்போர் நலச்சங்க சந்திப்பில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். அன்று மாலை 5 மணிக்கு கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, தங்கம்மாள்புரம், கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளிலும், இரவு 7.30 மணிக்கு முடிவைத் தானேந்தல் கிராமத்திலும் பிரசாரம் செய்கிறார்.

    ஓட்டப்பிடாரம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்வதால் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மு.க.ஸ்டாலினை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளதால் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. #TNAssemblyElection #MKStalin

    ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டு விட்டதால், அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Ottapidaram #EC
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.சுந்தர்ராஜ் போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.

    அந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சுந்தர்ராஜ் 493 வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியை தோற்கடித்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், “ஒட்டப்பிடாரம் தொகுதி வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்தது.

    இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் கடந்த ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியில் சேர்ந்தார். இதன் காரணமாக அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    அதை சென்னை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு உறுதி செய்தது. இதையடுத்து ஒட்டப்பிடாரம் தொகுதி காலியிடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

    மொத்தம் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் 18 தொகுதிகளும் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டன. கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் ஏற்கனவே காலியிடங்களாக இருந்தன.

    இதற்கிடையே ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் சிக்கி தண்டனை பெற்றதால் அவர் பதவி இழந்து ஓசூர் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. எனவே தமிழக சட்டசபையில் 21 தொகுதி இடங்களில் காலியிடங்களாக இருந்தன. இந்த 21 தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறி ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. மற்ற 18 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 18-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    3 தொகுதி தேர்தல் நடத்தாததற்கு தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 3 தொகுதிகளிலும் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், “வழக்குகளை வாபஸ் பெற்றால் தேர்தல் நடத்த தயார்” என்று அறிவித்தனர்.

    இதை ஏற்று திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்த டாக்டர் சரவணன் தனது வழக்கை வாபஸ் பெற்றார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் நடத்தப்படுமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



    அதுபோல ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தான் தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் பெறுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அவரது வழக்கு நேற்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வழக்கை வாபஸ் பெறுவதாக” கிருஷ்ணசாமி மனு செய்தார்.

    அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை அவர் தள்ளுபடி செய்தார்.

    கோர்ட்டின் இந்த உத்தரவு நகலை உடனடியாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும்படியும் ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டு விட்டதால் அங்கு தேர்தலை எந்த தடையும் இல்லை. எனவே ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலை வேறு தேதியில் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Ottapidaram  #EC
    ×