search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவுட்டுப்பாளையம் பகுதியில் இன்று காலை விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி குறைகளை மு.க.ஸ்டாலின் கேட்டறிந்த காட்சி.
    X
    தவுட்டுப்பாளையம் பகுதியில் இன்று காலை விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி குறைகளை மு.க.ஸ்டாலின் கேட்டறிந்த காட்சி.

    அரவக்குறிச்சி தொகுதியில் வீதி, வீதியாக பிரசாரம்- விவசாயிகளிடம் குறை கேட்ட மு.க.ஸ்டாலின்

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்தார். #TNByPolls #DMK #MKStalin
    கரூர்:

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்தார். கரூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கிய அவர் இன்று காலை அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட தவுட்டுப்பாளையம் பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது புகளூர் வெற்றிலை விவசாயிகள் சங்க அலுவலகத்திற்குள் சென்ற அவர் வெற்றிலை சாகுபடி குறித்தும், குறைகளையும் கேட்டறிந்தார். முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியம், விவசாயிகள் சங்க செயலாளர் ராமசாமி ஆகியோர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.

    குறிப்பாக டி.என்.பி.எல். ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் வெற்றிலை விவசாயத்தை பெரிதும் பாதித்து வருகிறது. காவிரியின் நீர்மட்டமும் குறைந்துவிட்டது. 5 டி.எம்.சி. தண்ணீர் வந்தால் கூட கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வருவதில்லை. இந்த நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைப்பதோடு வாய்க்கால் பராமரிப்பை முறையாக மேற்கொண்டு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர். மேலும் தி.மு.க. ஆட்சியின்போது விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதுபோல், மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர். நதி நீரேற்று பாசனத்திற்கும் வழி செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் வருகிற 23-ந்தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. பொறுப்பேற்றதும் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார்.

    தவுட்டுப்பாளையம் பகுதியில் பிரசாரம் செய்த மு.க. ஸ்டாலின் ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சிய காட்சி.

    இதைத்தொடர்ந்து அங்குள்ள கடை வீதிகள், தெருக்களில் நடந்தே சென்ற மு.க. ஸ்டாலினை பொது மக்கள் கைகுலுக்கி வரவேற்று, செல்பி எடுத்துக்கொண்டனர். வீட்டு வாசலில் வரவேற்க திரண்டிருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்து விரைவில் அவை நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்து சென்றார்.

    இன்று (புதன்கிழமை) மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதியில் 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொள்கிறார். மாலை 5 மணிக்கு அரவக்குறிச்சி ஒன்றியம் நாகம்பள்ளி ஊராட்சியிலும், 5.30 மணிக்கு வேலம் பாடி ஊராட்சியிலும், 6 மணிக்கு இனுங்கனூர் ஊராட்சியிலும், 6.30 மணிக்கு பள்ளப்பட்டி பேரூராட்சியிலும் பிரசாரம் செய்கிறார். இரவு 7 மணிக்கு ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் தனது பிரசாரத்தை முடிக்கிறார்.

    தனது முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்யும் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டு செல்கிறார். இரண்டாம் கட்ட பிரசாரத்தை மீண்டும் வருகிற 14-ந்தேதி ஒட்டப்பிடாரத்தில் தொடங்குகிறார். 15-ந்தேதி திருப்பரங்குன்றத்திலும், 16-ந்தேதி சூலூரிலும் பிரசாரம் செய்யும் அவர் 17-ந் தேதி அரவக்குறிச்சியில் நிறைவு செய்கிறார்.  #TNByPolls #DMK #MKStalin
    Next Story
    ×