search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resign"

    விவசாயிகளுக்காக மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் அம்பரீஷ் என்று சுமலதா ஆவேசமாக கூறியுள்ளார். #Sumalatha #MandyaConstituency
    பெங்களூரு :

    நடிகை சுமலதா, மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று மாண்டியா கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மஞ்சுஸ்ரீயிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் நடிகர் தர்ஷன், யஷ் உள்பட கன்னட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பிறகு மாண்டியா சில்வர் ஜூப்ளி பூங்காவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகை சுமலதா கலந்துகொண்டு பேசியதாவது:-

    நான் இன்று (அதாவது நேற்று) வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் எனது கணவர் மாண்டியாவுக்கு செய்ய வேண்டிய பணிகளில் இன்னும் சிலவற்றை விட்டுச் சென்றுள்ளார். அது என்ன என்பது எனக்கு தெரியும்.

    அந்த பணிகளையும், அம்பரீசின் கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் இங்கு வெற்றி பெற்றுவிட்டால், வெளிநாட்டுக்கு சென்றுவிடுவேன் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

    நான் ஏற்கனவே எல்லா நாடுகளுக்கும் சென்று வந்துவிட்டேன். நான் கன்னடம் உள்பட 5 மொழி படங்களில் நடித்துள்ளேன். எனக்கு அதில் இருந்து போதுமான அளவுக்கு புகழ் கிடைத்துள்ளது. அதனால் அரசியலுக்கு வந்து தான் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

    மாண்டியா மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். நான் மாண்டியாவில் கிராமம், கிராமமாக சென்று மக்களிடம் கருத்துகளை கேட்டேன். அவர்கள், நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். அதை ஏற்று நான், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினேன்.

    மக்களின் விருப்பப்படி நான் மாண்டியா தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு கேட்டேன். ஆனால் கூட்டணி தர்மத்தை பின்பற்ற வேண்டும், டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர்.

    அதனால் நான் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளேன். இன்று (நேற்று) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். நான் யார் என்று கேட்கிறார்கள். நான் அம்பரீசின் மனைவி. இந்த மண்ணின் மகள், மருமகள். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, என்னை பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தன. எனக்கு அவமானங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. நீங்களே (மக்கள்) பதில் சொல்லுங்கள்.



    என் முன்னால் இமயமலை அளவுக்கு பெரிய சவால் உள்ளது. அந்த சவாலை உங்களின் ஆதரவுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை இந்த தொகுதியில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    அம்பரீஷ் இந்த தொகுதிக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். மாண்டியா மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தது அவர் தான். பள்ளி கட்டிடங்களை கட்டி கொடுத்தார். கிராமங்களில் சமுதாய கூடங்களை கட்டினார். இப்படி பல்வேறு பணிகளை செய்துள்ளார். கிராமங்களுக்கு சென்று மக்களிடம் கேட்டால் அவர்கள் சொல்கிறார்கள்.

    வேறு தொகுதியில் டிக்கெட் தருவதாகவும், எம்.எல்.சி. பதவி, மந்திரி பதவி தருவதாக என்னிடம் கூறினர். மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று கூறினர். பதவி ஆசை இருந்திருந்தால், அதை ஏற்றுக்கொண்டு போய் இருப்பேன். இங்கு போட்டியிட்டு இருக்கமாட்டேன். மாண்டியா தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன் உள்ளது. அதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.

    எனக்கு மிரட்டல் விடுத்தனர். எங்கள் ஆதரவாளர்களை மிரட்டுகிறார்கள். உங்களின் அன்புக்கு முன்னால் அது எடுபடாது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் இந்த தொகுதி மக்களின் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பேன். விவசாயிகளின் பிரச்சினைகளை பற்றி பேசுவேன்.

    நடிகர்கள் தர்ஷன், யஷ் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதையும் விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் எனது குழந்தைகளை போன்றவர்கள். ஒரு தாய்க்கு ஆதரவாக குழந்தைகள் பிரசாரம் செய்வது தவறா?. உங்கள் (குமாரசாமி) மகனுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்யவில்லையா?.

    அம்பரீஷ் விவசாயிகளுக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். விவசாயிகள் கஷ்டத்தில் இருந்தபோது, மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார்.

    இவ்வாறு சுமலதா பேசினார்.

    இதில் சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர் தர்ஷன், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட கன்னட திரைத்துறையினர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். #Sumalatha #MandyaConstituency 
    பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மத்திய பிரதேச பெண் கவர்னர் ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர். #AnandibenPatel
    போபால்:

    மத்தியபிரதேச மாநில கவர்னராக ஆனந்திபென் படேல் பதவி வகிக்கிறார். இவர் விந்தியா பகுதியில் 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது ரேவா மாவட்டத்தில் உள்ள குர்க் பகுதியில் சூரிய ஒளி மின்சார திட்டத்தை பார்வையிட்டார். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது சூரிய ஒளி மின்சார திட்டத்தில் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைதொடர்ந்து வேலைவாய்ப்பு கேட்கும் இளைஞர்களின் பெயர்களை குறித்துக்கொள்ளும் படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு கிராம மக்களை நோக்கி திரும்பிய ஆனந்திபென் படேல், ‘‘எதிர்காலத்தில் நீங்கள் இத்தகைய நல்ல திட்டங்களை பெற வேண்டும் என்றால் பிரதமர் மோடியை மறந்துவிடாதீர்கள் அவரை கவனத்தில் கொள்ளுங்கள்’’ என்றார். அப்போது அவருடன் பா.ஜனதா தலைவர்கள் ராஜேந்திர சுக்லா (சிவராஜ் சவுகான் அரசியல் மந்திரியாக இருந்தவர்) மற்றும் கே.பி. திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதற்கிடையே அவரது இந்த சர்ச்சை பேச்சு 2.30 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக வெளியாகியது.

    இதை பார்த்த காங்கிரசார் படேல் கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அவர் அரசியல் சட்ட விதிகளுக்குட்பட்ட கவர்னர் பதவியில் இருக்கிறார் எனவே அவர் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்க கூடாது.

    அவர் பா.ஜனதா ஊழியராக விரும்பினால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பாராளுமற தேர்தல் பொறுப்பாளர் ஷோபா ஓஜா தெரிவித்துள்ளார்.

    ஷோபா ஓஜா

    ஆனந்திபென் படேல் இத்தகைய சர்ச்சை கருத்தை பேசுவது முதல் முறையல்ல, கடந்த ஆண்டு ஏப்ரலில் பா.ஜனதா கட்சி தொண்டர்களிடம் பேசும்போது மக்களிடம் ஓட்டு வாங்குவது குறித்து ஆலோசனை வழங்கினார். மக்களிடம் இருந்து ஓட்டுகளை பெற வீடு வீடாக சென்று குழந்தைகளை சந்திக்க வேண்டும். அதுவே ஓட்டுகளை பெறும் வழியாகும் என்றார்.

    சட்டசபை தேர்தலின் போது நடைபெற்ற விழாவில் பேசிய அவர் விவசாய கடன் குறித்த கருத்துக்களை பா.ஜனதாவிற்கு ஆதரவாக வெளியிட்டார். அது அவரது உரையில் இடம் பெறாதவை. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    பிரதமர் ஆனதும் குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி பதவி விலகினார். அவருக்கு பதிலாக ஆனந்திபென் படேல் முதல்- மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #AnandibenPatel
    சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார். #China #CanadaAmbassador #JohnMcCallum
    ஒட்டாவா:

    சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகளும், அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கடந்த மாதம் 1-ந் தேதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார்.

    அதனை தொடர்ந்து சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் ஜஸ்டின் டிரிடியு கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்து ஜஸ்டின் டிரிடியு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “நான் ஜான் மெக்கலமை பதவி விலகும்படி கேட்டு கொண்டேன். அவரின் ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஹூவாய் நிறுவன தலைமை அதிகாரி மெங்வான்ஜவ் கைது விவகாரம் தவறானது என்று விமர்சித்த ஜான் மெக்கலம், அடுத்த நாளே தான் தவறாக பேசிவிட்டதாக கூறியதோடு, தனது பேச்சு குழப்பத்தை விளைவித்ததற்காக மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கது. 
    அலோக் வர்மா ராஜினாமா குறித்து பேசிய மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு சி.பி.ஐ.யை துஷ்பிரயோகம் செய்கிறது என கண்டனம் தெரிவித்தார். #AlokVarma #MamataBanerjee #BJP
    கொல்கத்தா:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தால், அவர் மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றார்.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நியமனக்குழு ஆலோசனை கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவானது. மேலும், அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.



    இதற்கிடையே, மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். 

    இந்நிலையில், அலோக் வர்மா ராஜினாமா குறித்து பேசிய மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு சி.பி.ஐ.யை துஷ்பிரயோகம் செய்கிறது என கண்டனம் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, மம்தா வெளியிட்டுள்ள செய்தியில், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளை சீர்குலைத்து வருகின்றன. தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ அமைப்பை பாஜக அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். #AlokVarma #MamataBanerjee #BJP
    மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த 3 மந்திரிகள் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்கள். #AsomGanaParishad #CitizenshipBill
    கவுகாத்தி:

    அசாமில் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது.



    இதைத்தொடர்ந்து நேற்று அம்மாநில அரசில் மந்திரிகளாக இருந்த அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த அதுல் போரா, கேசவ் மஹந்தா, பானிபூஷன் சவுத்ரி ஆகியோர் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்கள். முதல்-மந்திரியிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். #AsomGanaParishad #CitizenshipBill

    பா.ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ள மாநில நிர்வாகிகள் 4 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். #Sabarimala #BJP #CPIM
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பா.ஜனதா கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது கேரள அரசு தலைமை செயலகம் முன்பு அந்த கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

    பா.ஜனதா கட்சி நடத்தும் போராட்டம் காரணமாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



    இந்த நிலையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 4 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளனர். தாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

    பா.ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளான கிருஷ்ணகுமார், ஜெயக்குமார், சுரேந்திரன், சுகுமாரன் ஆகியோர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை பிரச்சினை மூலம் பா.ஜனதா கட்சி கேரள மக்களிடம் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இதன் மூலம் அரசியல் லாபம் பெற அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக மாநில கமிட்டி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நிறைவேற்றும் எந்திரமாக பா.ஜனதா கட்சி செயல்படுவது கண்டனத்துக்குரியது.

    விளிம்பு நிலை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முற்போக்கு சிந்தனை உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற கட்சியில் இணைந்து செயல்பட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர். #Sabarimala #BJP #CPIM

    ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். #RBIGovernor #UrjitPatelresigns
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா முடிவை தேர்வு செய்ததாகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக பதவி வகித்ததை பெருமிதமாக நினைப்பதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.



    தனது பதவி காலத்தில் ரிசர்வ் வங்கி அடைந்த பல்வேறு ஏற்றங்களுக்கு காரணமாக இருந்து ஒத்துழைப்பு தந்த அதிகாரிகளையும், நிர்வாகிகளையும், கடுமையாக உழைத்த இதர பணியாளர்களையும் தனது ராஜினாமா கடிதத்தில் நினைவுகூர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளார். #RBIGovernor #UrjitPatelresigns
    பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் இருந்து இந்திய அதிகாரி நீரஜ் அரோரா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். #WhatsApp #NeerajArora #Resign
    நியூயார்க்:

    பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் துணை நிறுவனம் ‘வாட்ஸ் அப்’ தகவல் பரிமாற்ற சேவை நிறுவனம். ‘பேஸ்புக்’ போன்றே ‘வாட்ஸ் அப்’பும் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த ‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நீரஜ் அரோரா. இந்தியர். டெல்லி ஐ.ஐ.டி.யில் படித்து பட்டம் பெற்றவர்.

    இவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு முதல் ‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். 2014-ம் ஆண்டு, அந்த நிறுவனத்தை ‘பேஸ்புக்’ நிறுவனம் கையகப்படுத்திய பின்னரும் தொடர்ந்து வந்தார்.  இந்த நிலையில அவர் திடீரென பதவி விலகுகிறார்.



    இதுபற்றி அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், “ வாட்ஸ் அப் நிறுவனத்தில் ஜான் கோம், பிரையன் ஆக்டன் (வாட்ஸ் அப் இணை நிறுவனர்கள்) ஆகியோரால் நான் கொண்டு வரப்பட்டு 7 ஆண்டுகள் ஆகி விட்டன என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது. நகர்ந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. இனி வரக்கூடிய ஆண்டுகளிலும் வாட்ஸ் அப் எளிமையான, பாதுகாப்பான, நம்பகமான தகவல் தொடர்பு தளமாக செயல்படும் என்று நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

    ‘வாட்ஸ் அப்’ குரூப் மூலமாக தவறான தகவல்களை அனுப்புவது சர்வதேச பிரச்சினையாகி வருகிறது. இந்த சவாலான நேரத்தில் நீரஜ் அரோரா பதவி விலகுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், நீரஜ் அரோரா ‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு வரக்கூடும் என பேச்சு அடிபட்டது. ஆனால் அந்தப் பதவி கிறிஸ் டேனியல்ஸ் என்பவருக்கு கிடைத்தது.  #WhatsApp #NeerajArora #Resign
    ஆன்-லைன் வர்த்தகத்தில் புகழ் பெற்ற ‘பிளிப்கார்ட்’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து பின்னி பன்சால் விலகி உள்ளார். #Flipkart #CEO #BinnyBansal #Resign
    புதுடெல்லி:

    பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 2007-ம் ஆண்டு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமாக ‘பிளிப்கார்ட்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இது ஆன்-லைன் வர்த்தகம் என்று சொல்லப்படுகிற இணையவழி வர்த்தகத்தில் புகழ் பெற்றது.

    சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தை அமெரிக்க ஆன்-லைன் சந்தையில் கொடிகட்டிப் பறக்கிற ‘வால்மார்ட்‘ நிறுவனம் வாங்கியது.



    இந்த நிலையில் திடீரென ‘பிளிப்கார்ட்’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து பின்னி பன்சால் விலகி உள்ளார். உடனடியாக அவரது ராஜினாமா அமலுக்கு வந்துள்ளது.

    இதுபற்றி வால்மார்ட் விடுத்துள்ள அறிக்கையில், “பின்னி பன்சால் மீது தனிப்பட்ட தவறான நடத்தை புகார்கள் எழுந்தன. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் மீதான புகார்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஒட்டுமொத்த விவகாரமும் கவனத்தை சிதறடித்து விடும் என கருதி அவர் விலகி உள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

    பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Online #Flipkart #CEO #BinnyBansal #Resign
    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து போக்குவரத்துதுறை ராஜாங்க மந்திரி ஜோ ஜான்சன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். #UKMinister #JoJohnson #Resign
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவை இங்கிலாந்து நாடு எடுத்துள்ளது. 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான முறையான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து போக்குவரத்துதுறை ராஜாங்க மந்திரி ஜோ ஜான்சன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ஏற்கனவே இந்த விவகாரத்தில் பதவி விலகிய வெளியுறவு மந்திரி போரீஸ் ஜான்சனின் சகோதரர்தான் இந்த ஜோ ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சகோதரர் பதவி விலகி இருப்பதை போரீஸ் ஜான்சன் வரவேற்றுள்ளார்.

    ஜோ ஜான்சன் பதவி விலகி இருப்பது பிரதமர் தெரசா மேயுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
    மத்திய அரசுடனான மோதல் போக்கினால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. #RBIGovernor #UrjitPatel #Resign
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. கடந்த வாரம் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் வி. ஆச்சார்யா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மத்திய அரசு விளையாட நினைத்தால், அது பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.



    இதற்கு பதிலடி தருகிற வகையில், டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசினார். அப்போது அவர், ரிசர்வ் வங்கியை கடுமையாக சாடினார்.

    குறிப்பாக, “2008-ம் ஆண்டு தொடங்கி 2014-ம் ஆண்டு வரையில் கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு வங்கிகள் கண்மூடித்தனமாக கடன் களை வழங்குமாறு (ரிசர்வ் வங்கியால்) கூறப்பட்டன. அப்போதைய மத்திய அரசு மற்றொரு பக்கம், வங்கிகள் இன்னொரு பக்கம் பார்த்துக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையில் இருந்த ரிசர்வ் வங்கி அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது? அவர்கள் உண்மையை கம்பளியின் கீழ் வைத்து மறைத்து விட்டார்கள்” என்று சாடினார்.

    இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 7-ஐ பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சட்டப்பிரிவானது, பொது நலனை கருத்தில் கொண்டு, சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி, உத்தரவுகளை பிறப்பிக்க வழி வகுத்துள்ளது.

    இப்படி மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்தால், அதை ஏற்று செயல்படுத்துவதை விட ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலக முடிவு எடுத்து விடுவார் என தகவல்கள் கூறுகின்றன.

    இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில் அவர், “தகவல்கள் வெளியானபடி, ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 7-ஐ மத்திய அரசு நடைமுறைப்படுத்தி, இதுவரை இல்லாத வகையில் சில உத்தரவுகளை ரிசர்வ் வங்கிக்கு பிறப்பித்துள்ளது. இன்று (நேற்று) இன்னும் சில மோசமான செய்திகள் வரக்கூடும் என பயப்படுகிறேன். 1991 அல்லது 1997 அல்லது 2008 அல்லது 2013 ஆண்டுகளில் நாங்கள் ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 7-ஐ நடைமுறைப்படுத்தவில்லை. இப்போது அதை பயன்படுத்த என்ன அவசியம் ஏற்பட்டது? பொருளாதாரம் பற்றி உண்மைகளை மத்திய அரசு மறைத்து வருகிறது, இது வேதனை அளிப்பதாக அமைந்துள்ளது” என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 7-ன் கீழ், ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளனவா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ரிசர்வ் வங்கி சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு, மத்திய வங்கிக்கு (ரிசர்வ் வங்கிக்கு) அவசியமான, ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்னாட்சி தேவை. இந்தியாவில் இருந்த அரசுகள், இதை வளர்த்து வந்துள்ளன. மதித்து வந்துள்ளன.

    மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தங்கள் செயல்பாட்டில் பொதுநலன் கருதியும், இந்திய பொருளாதார தேவைகளின் அடிப்படையிலும் வழிநடத்தப்பட வேண்டும்.

    இந்த நோக்கத்துக்காக, பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே அவ்வப்போது ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.

    இந்த ஆலோசனைகள் குறித்து இதுவரை பகிரங்கமாக தெரிவித்தது கிடையாது. இறுதி முடிவுகள் மட்டுமே தெரியப்படுத்தப்படுகின்றன. இந்த ஆலோசனைகள் மூலம் மத்திய அரசு பிரச்சினைகளை அளவிடுகிறது. அதன்பேரில் சாத்தியமாகக் கூடிய தீர்வுகளை எடுக்குமாறு கூறுகிறது. அதை அரசு தொடரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 7-ஐ பயன்படுத்தி, கடந்த சில வாரங்களில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு 3 தனித்தனி கடிதங்கள் எழுதி இருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.   #RBIGovernor #UrjitPatel #Resign
    பாலியல் புகாரில் சிக்கிய மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தது உண்மைக்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #Metoo #MJAkbar #Congress
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். 
     
    அந்த வகையில், மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜ.க.வில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். 

    அவர் மீதான புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.
     
    அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் சமீபத்தில் டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையே, நேற்று மாலை தனது மந்திரி பதவியை எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.



    இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பரின் ராஜினாமா, உண்மைக்கு கிடைத்த வெற்றியாகும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கருத்து தெரிவித்துள்ளார். #Metoo #MJAkbar #Congress
    ×