search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration shop"

    • தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.
    • பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கி வருகிறார்கள்.

    இதில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு விண்ணப்பம் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம் அடுக்குமாடி வீடுகளுக்கு ஏறி இறங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூச்சு வாங்கி தவித்து வருகிறார்கள். சென்னையில் பெரும்பாக்கம், கண்ணகி நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, திருமங்கலம், முகப்பேர், வண்ணாரப் பேட்டை, அயனாவரம், கொரட்டூர், அம்பத்தூர், ஆலந்தூர், குரோம்பேட்டை, நொச்சிக் குப்பம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் அதிகம் உள்ளன.

    இங்கு பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களை கீழே வரச் சொல்லி விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில் தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.

    எங்களால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ச்சியாக ஏறி இறங்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது.

    இதனால் வீடுகளில் இருப்பவர்களை கீழே வரவழைத்து விண்ணப்பம் கொடுக்கிறோம். பூட்டி இருக்கிற வீடுகளில் கொடுக்க முடியவில்லை.

    காலை முதல் இரவு வரை விண்ணப்பம் கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறோம். ஆனாலும் இன்னும் முழுமையாக கொடுத்து முடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

    சென்னையில் 17 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் உதவியு டன் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • 3 நாட்களில் வாங்காதவர்களுக்கு ரேசன் கடைகளில் கொடுக்க முடிவு.
    • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சலுகை இல்லை.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

    நடப்பு ஆண்டில் 1 கோடி பெண்களுக்கு உதவி தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் வீடு வீடாக நேற்று முதல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் தகுதியானவர்களுக்கு வழங்கும் வகையில் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் வழியாக மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் வழங்கப்படுகிறது.

    சென்னையில் 2 கட்டமாக படிவங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்கள் நாளைக்குள் (சனிக்கிழமை) கொடுத்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு வேளை விடுபட்டவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையும் வழங்கப்படலாம்.

    24-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அவரவருக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரத்திற்கு சென்று சமர்பிக்க வேண்டும்.

    படிவங்களை பூர்த்தி செய்ய இயலாதவர்களுக்கு முகாம்களில் உதவி செய்ய தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய பணி மாலை 5 மணி வரை நடந்தது.

    தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 2¼ கோடி பேர் பயன்பெற்று வருகிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சலுகை இல்லை.

    மேலும் ஆண்டிற்கு 2.5 லட்சம் வருமானத்திற்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் இது தவிர ஏற்கனவே பிற திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உதவி தொகை பெறுபவர்களும் மகளிர் உரிமைத் தொகையை பெற முடியாது.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இன்று 2-வது நாளாக படிவங்கள் வழங்கப்படுகின்றன. நாளைக்குள் 90 சதவீதம் பேருக்கு படிவங்கள் சென்றடையும் வகையில் ஊழியர்கள் முனைப்புடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    படிவம் பெற முடியாமல், விடுபட்டு போனால் கூட பயப்பட தேவையில்லை. ரேசன் கார்டை நியாய விலை கடைகளுக்கு நேரில் கொண்டு சென்றால் கூட படிவங்கள் வழங்கப்படும். படிவங்கள் வழங்குவதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் வடக்கு, மத்தியம், தெற்கு என 3 மண்டலங்களாக பிரித்து இந்த பணிகள் நடைபெறுகின்றன. சென்னையில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மகளிர் உரிமை தொகை பெற தகுதி உடையவர்களாக இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் படிவங்களை வழங்கி, பெறுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 1.5 லட்சம் பேருக்கு நேற்று படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    • பென்னகர் மேட்டுகாலனி பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
    • இரண்டு மாதத்திற்கு முன்புதான் இந்த பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

    ராணிப்பேட்டை :

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பென்னகர் மேட்டுகாலனி பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இரண்டு மாதத்திற்கு முன்புதான் இந்த பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பருப்பு மக்கி கட்டியாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் எங்களுக்கு இந்த பருப்பு வேண்டாம், அடுத்த மாதம் சேர்த்து வழங்குங்கள் என கேட்டனர்.

    இதனால் ரேஷன் கடை விற்பனையாளருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரேஷன் கடை விற்பனையாளர், எங்களுக்கு இந்த பருப்புதான் வந்துள்ளது. அதைத்தான் கொடுக்க முடியும் என்று கூறினார்.

    ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான பருப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • ரேசன்கடைகளில் தக்காளியை விற்பதால் மக்களுக்கு பயன் இல்லை.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச்செய லாளராக எடப்பாடி பழனி சாமி தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்தது. இதையடுத்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலை மையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்

    பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை வலிமையான இயக்கமாக நடத்தி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால் இதுவரை மக்களுக்கு பயன்படக்கூடிய எந்த திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்ற வில்லை. மதுரை மக்களுக்கு எந்த அடிப்படை திட்டங் களையும் கொண்டு வராமல் கலைஞர் பெயரிலான நூலகத்தை மட்டுமே தந்துள்ளனர்.

    மக்களுக்கு போதிய சாலை வசதி இல்லை. அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. விலைவாசி தற்போது அதி கரித்துவிட்டது. காய்கறிகள் மளிகை பொருட்கள் தினந்தோறும் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரேஷன் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்க போவதாக கூறுகிறார்கள். ரேஷன் கடையில் தக்காளியை விற்பதால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை .

    தக்காளி அழுகும் தன்மை கொண்டதால் விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படு வார்கள்.

    மேலும் நகரும் கடைகள் மூலம் காய்கறிகள், தக்காளியை விற்பனை செய்தால் மட்டுமே மக்கள் பயனடைவார்கள். இதனை அரசு கவனத்தில் கொண்டு நகரும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும் .

    அமைச்சர் செந்தில் பாலாஜியை சுதந்திர போராட்ட தியாகி போல தி.மு.க.வினர் போற்று கிறார்கள். ஊழல் செய்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும். ஆனால் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தேவை யில்லாமல் மத்திய அரசை விமர்சிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • மலிவு விலையில் தக்காளி விற்பதால் கூட்டுறவு சங்கங்களுக்கு கிலோவிற்கு ரூ.20 நஷ்டம் ஏற்படுகிறது.
    • கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடு செய்கிறது.

    சென்னை:

    தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் வசித்து வரும் மக்கள் இந்த விலை உயர்வால் பாதிக்காத வகையில் பண்ணை பசுமை கடைகள் மூலமாகவும், 82 ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் ரேஷன் கடைகளில் மட்டும் தற்போது தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.100, ரூ.120 வரை விற்கப்பட்டாலும் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.

    நேற்று ஒரேநாளில் 5 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் குறைந்த அளவில் தான் தக்காளி வினியோகிக்கப்படுகிறது. இதனால் உடனே விற்று தீர்ந்துவிடுகிறது. 50 சதவீத விலை குறைவாக தக்காளி விற்கப்படுவதால் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வரிசையில் காத்து நின்று வாங்கி செல்கின்றனர்.

    நேற்று முதல் விற்பனை தாமதமாக தொடங்கினாலும் இன்று காலை 9 மணி முதல் தக்காளி விற்பனை தொடங்கியது.

    டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் மூலம் சென்னையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 100-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் இருந்த போதிலும் குறிப்பிட்ட பகுதியில் ரேஷன் கடைகளில் மட்டுமே தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் கூட்டம் அலைமோதுகிறது. எந்த பகுதியில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஒருவருக்கு ஒருவர் கேட்டு அறிந்துகொண்டதால் இன்று காலையிலேயே ரேஷன் கடைகள் முன்பு கூடத்தொடங்கினர். எல்லா ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்தால் தான் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். ஏதோ ஒரு சில கடைகளில் மட்டும் விற்பதால் அந்த பகுதிகளுக்கு பெண்கள் நடந்து சென்று வாங்க முடியவில்லை. ஏழை-நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதற்கிடையில் மலிவு விலையில் தக்காளி விற்பதால் கூட்டுறவு சங்கங்களுக்கு கிலோவிற்கு ரூ.20 நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு கிலோ தக்காளி அடக்க விலை ரூ.83 ஆகிறது. ஆனால் அரசு ரூ.60-க்கு விற்க முடிவு செய்தது.

    இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடு செய்கிறது. அரசு நஷ்டத்தை தாங்கி அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தினால் நல்லது. சாமான்ய மக்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.

    சென்னை:

    தக்காளி விலை கிலோ ரூ.130 வரை உயர்ந்து விட்டதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.

    வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என 3 ஆக பிரித்து மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் சில ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் அளவில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

    • பெரம்பலூரில் 2 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.
    • விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட விளாமுத்தூர் சாலையில் உள்ள இளங்கோநகர் மற்றும் வடக்குமாதவி சாலையில் உள்ள கிரசண்ட் நகர் ஆகிய பகுதிகளில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் இயங்கும் வகையில், 1,728 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையிலும் புதிதாக முழு நேரமும் இயங்கும் வகையில் 2 ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டன. இந்த கடைகளின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். புதிய ரேஷன் கடைகளை பிரபாகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூருக்கு ரூ.108 கோடி மதிப்பில் காவிரி குடிநீர் வழங்கும் பிரத்யேக திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளிலும் சாலை மேம்பாடு செய்வதற்கு ரூ.1 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, சாலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நகராட்சி விரிவாக்க பகுதிகளில் சாலை மேம்பாடு செய்வதற்கு ரூ.2 கோடி கூடுதலாக நிதி கேட்கப்பட்டுள்ளது, என்றார். விழாவில் நகர்மன்ற தலைவர் அம்பிகாராஜேந்திரன், துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், வார்டு கவுன்சிலர் சஹர்பானு, கூட்டுறவு துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) அரப்பலி, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
    • எஸ்வி., புரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டது.

    உடுமலை,ஜூன்.22-

    உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் எஸ்வி., புரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட திமுக., செயலாளர் இல .பத்மநாபன் முன்னிலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு ,ஒன்றிய செயலாளர் தங்கராஜ் ,ஒன்றிய குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர் சங்கரன், ஐக்கிய கம்யூனிஸ்ட் மூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் ,கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    • அரியலூர் நியாய விலைக்கடைகளில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை தொடங்கபட்டது
    • விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் கூட்டுறவு நியாய விலைக்கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், இது பற்றி அவர் கூறும்போது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 465 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் நகர்ப்பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் வரவேற்பினைப் பொறுத்து கிராமபுறங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, துணைப்பதிவாளர் அறப்பளி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் துரை மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 9.6 லட்சம் ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
    • புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் சயைல் கூடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள சுகந்தலை பஞ்சாயத்து வெள்ளக்கோவில் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 9.6 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் கட்டுமான பணி நேற்று தொடங்கியது. பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரேஷன் கடை கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அங்கமங்கலம் பஞ்சாயத்து குரும்பூர் முஸ்லிம் தெருவில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை பணியை தொடங்கி வைத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 21.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் சயைல் கூடத்தையும் திறந்து வைத்தார்.

    இதில் தூத்துக்குடி மாவட்ட திட்ட இயக்குநர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராஜ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர், அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வை ஒன்றிய செயலாளர்கள் நவீன்குமார், சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் ரகுராம், நாலுமாவடி பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜேஷ், புறையூர் வெல்பேர் டிரஸ்ட் நிறுவனர் நாசர் மற்றும் குரும்பூர் ஜமாத்தார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • போலீசார் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரையில் ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் கடத்தப்படுவதாக குடிமை பொருள் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் போலீசார் திடீர் சோதனை களை நடத்தி வருகின்றனர்.

    இதன் மூலம் ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படும் வாகனங்களை பறிமுதல் செய்தும் நட வடிக்கை எடுத்து வரு கின்றனர்.

    இந்த நிலையில் மதுரை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் மாரி முத்து, ராமச்சந்திரன் ஆகியோர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்தனர்.

    ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் எடை அளவு ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    • கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
    • ஆலூத்து பாளையத்திற்கு சரிவர பஸ் வசதி இல்லை என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி ஆலூத்துபாளையத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்து, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் எம்.எல்.ஏ.,திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம்,மற்றும் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், முன்னாள் நகராட்சி தலைவர் பி.ஏ. சேகர், வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன், துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் உதயகுமார், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரேஷன் கடை திறப்பு விழா முடிந்ததும் செல்வராஜ் எம்.எல்.ஏ.,விடம் ஆலூத்து பாளையத்திற்கு சரிவர பஸ் வசதி இல்லை என்றுகோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.

    ×