search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் தினமும் ரேஷன் கடைகளில் 5 ஆயிரம் கிலோ தக்காளி மட்டும் விற்பனை
    X

    சென்னையில் தினமும் ரேஷன் கடைகளில் 5 ஆயிரம் கிலோ தக்காளி மட்டும் விற்பனை

    • மலிவு விலையில் தக்காளி விற்பதால் கூட்டுறவு சங்கங்களுக்கு கிலோவிற்கு ரூ.20 நஷ்டம் ஏற்படுகிறது.
    • கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடு செய்கிறது.

    சென்னை:

    தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் வசித்து வரும் மக்கள் இந்த விலை உயர்வால் பாதிக்காத வகையில் பண்ணை பசுமை கடைகள் மூலமாகவும், 82 ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் ரேஷன் கடைகளில் மட்டும் தற்போது தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.100, ரூ.120 வரை விற்கப்பட்டாலும் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.

    நேற்று ஒரேநாளில் 5 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் குறைந்த அளவில் தான் தக்காளி வினியோகிக்கப்படுகிறது. இதனால் உடனே விற்று தீர்ந்துவிடுகிறது. 50 சதவீத விலை குறைவாக தக்காளி விற்கப்படுவதால் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வரிசையில் காத்து நின்று வாங்கி செல்கின்றனர்.

    நேற்று முதல் விற்பனை தாமதமாக தொடங்கினாலும் இன்று காலை 9 மணி முதல் தக்காளி விற்பனை தொடங்கியது.

    டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் மூலம் சென்னையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 100-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் இருந்த போதிலும் குறிப்பிட்ட பகுதியில் ரேஷன் கடைகளில் மட்டுமே தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் கூட்டம் அலைமோதுகிறது. எந்த பகுதியில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஒருவருக்கு ஒருவர் கேட்டு அறிந்துகொண்டதால் இன்று காலையிலேயே ரேஷன் கடைகள் முன்பு கூடத்தொடங்கினர். எல்லா ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்தால் தான் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். ஏதோ ஒரு சில கடைகளில் மட்டும் விற்பதால் அந்த பகுதிகளுக்கு பெண்கள் நடந்து சென்று வாங்க முடியவில்லை. ஏழை-நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதற்கிடையில் மலிவு விலையில் தக்காளி விற்பதால் கூட்டுறவு சங்கங்களுக்கு கிலோவிற்கு ரூ.20 நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு கிலோ தக்காளி அடக்க விலை ரூ.83 ஆகிறது. ஆனால் அரசு ரூ.60-க்கு விற்க முடிவு செய்தது.

    இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடு செய்கிறது. அரசு நஷ்டத்தை தாங்கி அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தினால் நல்லது. சாமான்ய மக்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×