search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public fear"

    • விருதுநகரில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் அந்த வழியாக செல்வோரை விரட்டிச்சென்று கடிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் பெரியகிணற்று தெருவில் வெறிநாய் கடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட னர். நாள்தோறும் விருதுநகரில் நாய் கடிக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருவில் விளையாடும் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடையம் அருகே உள்ளது பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் அடிக்கடி கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து மனிதர்களை தாக்கி வருகிறது.
    • வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்தறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ளது பெத்தான்பிள்ளை குடியிருப்பு. இப்பகுதியில் அடிக்கடி கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து மனிதர்களை தாக்கி வருகிறது.

    கரடி தாக்கியது

    மேலும் ஆடுகள் மற்றும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. கடந்த 6-ந்தேதி பெத்தான்பிள்ளை குடியிருப்பில் புகுந்த கரடி ஒன்று அவ்வழியாக சென்ற ஒரு வியாபாரியை தாக்கியது. அதனை தடுக்க சென்ற மேலும் 2 பேரையும் கடித்து தாக்கியது.

    பலத்த காயமடைந்த அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அது நேற்று திடீரென இறந்தது. பின்னர் அது களக்காடு அடர்வனப்பகுதியான செங்கல்தேரியில் எரிக்கப்பட்டது.

    மீண்டும் நடமாட்டம்

    இந்நிலையில் பெத்தான்பிள்ளை குடியிருப்பை சேர்ந்த ஒருவர் நேற்று பணிக்கு சென்றுள்ளார். அப்போது கடந்த 6-ந்தேதி கரடி நின்ற அதே இடத்தில் மீண்டும் ஒரு கரடி நின்றுள்ளது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் பொது மக்களிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்தறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிர்ச்சி

    ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு 3 பேரை கரடி கடித்து குதறிய நிலையில் மீண்டும் கரடி நடமாட்டம் உள்ளதை அறிந்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கருத்தபிள்ளையூர், சிவசைலம், பெத்தான் பிள்ளை குடியிருப்பு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மாணவ-மாணவிகள் ஆழ்வார்கு றிச்சி உள்ளிட்ட பகுதியில் படித்து வருகின்றனர்.

    மாணவர்கள் தயக்கம்

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரடி புகுந்த சம்பவத்தால் அச்சம் காரணமாக கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு சில மாணவர்கள் செல்லாமல் இருந்தனர். இந்நிலையில் இன்று 3-வது நாளாக அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.

    இது தொடர்பாக அப்பகு தியினர் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் நாங்கள் பதட்டத்துடனே வாழ்ந்து வருகிறோம். எனவே இதற்கு நிரந்த தீர்வு காண வேண்டும். எங்கள் பகுதியில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தி கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கூறினர்.

    கரடி நடமாட்டம் குறித்து அம்பை வனக்கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறு கையில், பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஒரு முதியவர் கரடியை பார்த்ததாக கூறுகிறார். இதனால் அந்த பகுதியில் கரடி வராமல் இருப்பதற்காக வாகன டயர்களை எரிக்க வனத்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

    மேலும் 24 மணி நேரமும் தலா 10 பேர் கொண்ட 2 குழுக்கள் அங்கு சுழற்சி முறையில் ரோந்து சென்று வருகின்றனர். கரடி நடமாட்டம் இருப்பது உறுதியானால் உடனடியாக அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தேவையான மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

    • ரூ. 64 ஆயிரம் செல்போன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு பறந்துவிட்டனர்.
    • சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்ன சேலத்தில்கடந்த 15-ந் தேதி அன்று மகேஸ்வரி என்ற மூதாட்டியிடம் ரூ. 64 ஆயிரம் செல்போன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு பறந்துவிட்டனர். இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆன நிலையில் இதே சின்னசேலம் பகுதியை சேர்ந்த கோவைக்கண்ணி மூதாட்டி கழுத்தில் தாலிச் சங்கிலியை திருடி சென்றனர்.

    இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார். தொடர்ந்து திருட்டு சம்பவம் சின்னசேலம் பகுதியில் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் தீபாவளி பண்டிகை நெருங்கவதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்ல அச்சத்தில் உள்ளனர். எனவே சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் காலை மாலை ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வங்கி பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது
    • வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது.

    அவிநாசி :

    அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது. பகல் மற்றும் இரவு நேரத்தில் சாலையில் சுற்றி திரிவதோடு, நடத்து செல்லும் குழந்தைகளை துரத்துதல், மோ ட்டார் சைக்கிள்களில் செல்வோரை கடிக்க துரத்துதல் போன்ற செயல்களில் நாய்கள் ஈடுபடுகின்றன.இது குறித்து காமராஜ் நகரை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது. அருகில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்கே நாய்கள் எங்காவது சுற்றி கொண்டிருக்கின்றதா என்று பார்த்து விட்டு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் ரோட்டில் அங்கும் இங்கும் ஓடுவதால் எந்த சமயத்தில் என்ன நடக்குமே என்ற அச்சமே அதிகரிக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ரோட்டில் வந்து நிற்க முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், நாய்களை பிடித்து அதற்கு கருத்தடை ஊசி போட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றனர்.

    • அருப்புகோட்டையில் பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • தொடரும் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    அருப்புகோட்டை

    அருப்புகோட்டையில் மீண்டும் பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது

    பத்திரம் சவுண்டு செட்டியார் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி நேற்று அதிகாலை சிவகாசியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.

    சரவண குமார் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே உள்ள ஜன்னலில் சாவியை வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் வந்து வீட்டை திறந்து உள்ளே சென்று தூங்கி உள்ளார். மாலையில் அவரது மனைவி முருகேஸ்வரி வீட்டிற்கு வந்தார். வீட்டில் உள்ள பீரோவை திறந்து உள்ளார். அப்போது மிளகாய் பொடி வாடை அடித்துள்ளது.

    மேலும் சேலைகளுக்குள் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் அருப்புக்கோட்டை பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர் .

    தமிழக அரசு உடனடியாக காவல்துறையை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அருப்புகோட்டையில் சில மாதங்களாக தொடர் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எம்.டி.ஆர். நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் இரட்டை கொலை, கோபாலபுரத்தில் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம், காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் சந்தேக மரணம், பூட்டிய வீட்டில் அடுத்தடுத்து கொள்ளை, இப்படி தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    • தற்போது குற்றவாளிகளை விசாரணைக்கு வைத்து விசாரிக்க கூடாது என போலீஸ் உயரதிகாரிகள் கடும் நிர்ப்பந்தம் விதித்துள்ளனர்.
    • முக்கிய அரசு அலுவலகம் உள்ள பகுதியில் அருகாமையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டில் ஸ்ரீ நாகம்மாள் ஆலயம் உள்ளது. நேற்று வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை கோவில் முன்பக்கம் கேட் உடைந்து, உண்டியல் உடைந்து திறந்திருந்தது. இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் சப்-ஜெயில் சாலையில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவில் முன்பக்கம் கேட் உடைந்து உண்டியல் உடைத்து திறந்திருந்தது. மேலும் கடலூர் புதுப்பாளையம் கங்கை அம்மன் கோவில் உண்டியல் உடைந்து திறந்திருந்தன. இதனை இன்று காலை பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலில் உடைந்திருந்த உண்டியலை பார்வையிட்டனர். மேலும் மூன்று கோவிலில் சுமார் 21/2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மையப் பகுதியான மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் மற்றும் சப்ஜெயில் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் தொடர்ந்து செல்லும் நிலையில் மர்ம ஆசாமிகள் துணிந்து கோவில் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணம் திருடி சென்றுள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் திருட முயற்சித்த போது அலாரம் ஒலித்ததால் மர்ம ஆசாமிகள் தப்பி சென்றனர். இதேபோல் கடலூர் மாவட்டம் முழு வதும் பல்வேறு இடங்க ளில் கோவில் உண்டியல் களில் உடைத்து கொள்ளையடிப்பது வழக்கமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 சம்பவங்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை நடந்தது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தின் தலைநகர பகுதியான கடலூர் நகரத்தின் மிக முக்கிய பகுதியாக இருந்து வரும் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் போன்ற பகுதிகளில் கொள்ளையர்கள் கோவில் உண்டியலில் உடைத்து திருடி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது மட்டுமின்றி நேற்று நள்ளிரவு நடந்த கொள்ளை சம்பவம் அருகே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்ற வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகம் உள்ள பகுதியில் அருகாமையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதற்கும், செல்வதற்கும் சற்று அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது மட்டும் இன்றி போலீசாரிடம் தொடர் கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பது ஏன் என கேட்டபோது, தமிழகத்தில் தற்போது குற்றவாளிகளை விசாரணைக்கு வைத்து விசாரிக்க கூடாது என போலீஸ் உயரதிகாரிகள் கடும் நிர்ப்பந்தம் விதித்துள்ளனர். இதன் மூலம் ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், புதிதாக ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து உரிய முறை யில் விசாரணை நடத்தி னால் மட்டுமே எதிர்வர் காலங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடை பெறாமல் முழுமையாக தடுக்க முடியும்.

    ஆனால் தற்போது சந்தேகத்தின் பேரில் குற்றவாளிகளை பிடிப்பதற்கோ மற்றும் பிடித்து விசாரிப்பதற்கோ உரிய அனுமதி இல்லாததால் உடனுக்குடன் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய முடியாமல் உள்ளது. மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் என கூறினார். இதன் காரணமாக பொது மக்களின் அடிப்படை செயல்படுதல் முழுவதும் பாதிப்படைய நிலையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். மேலும் போலீஸ் உயரதிகாரிகள் மேலோட்டமாக எந்த செயல்பாடுகளையும் யூகித்து உத்தரவு பிறப்பிக்காமல் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தடுப்பதற்கு போதுமான அளவில் போலீசார் விசாரிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   

    • சாரப்பாம்பை கண்டு பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர்.
    • பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    உடுமலை :

    உடுமலை நேதாஜி மைதானம் நுழைவாயில் எதிரில் உள்ள காலியிடம் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காளியம்மன் கோவில் பகுதியில் திடீரென நடமாடிய ஒற்றை சாரப்பாம்பை கண்டு பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் இந்த பகுதியில் கோவில் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் .எனவே புதர்பகுதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாஞ்சூர் ரவுண்டானா பனங்குடி இடையே உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
    • சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாகூரில் இருந்து மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பனங்குடி ஊராட்சி பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் சேர்ந்த மக்கள் அன்றாடம் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர நாகூர்-நன்னிலம் சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் வாஞ்சூர் ரவுண்டானா பனங்குடி இடையே உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல் எதிரே புதுமனை தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்து மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
    • வாகனங்களில் வந்து விழுவதும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதும், என தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

     பல்லடம்:

    பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் பெருகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்களில் வந்து விழுவதும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதும், என தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பழனி அருகே ஒரே நாளில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    பழனி:

    பழனி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் சுல்தான். இவருக்கு 3 மனைவிகள். 3-வது மனைவியின் மகன்கள் தாஜூதீன் (வயது45), கமருதீன் (40), ஜாகீர்உசேன் (38). தாஜூதீன் ஆயக்குடியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    மற்ற 2 பேரும் வேலைக்கு செல்லாமல் பூர்வீக சொத்தை அனுபவித்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. முதல் மனைவியின் மகன் ஜாபர் அலி. இவர் கமருதீன் மற்றும் ஜாகீர்உசேனிடம் சொத்தை பிரித்து தரக்கோரி சமரசம் பேசி உள்ளார்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த 2 பேரும் நேற்று இரவு உன்னால்தான் இந்த பிரச்சினை என்று தாஜூதீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாஜூதீனை சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தாஜூதீன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜாகீர்உசேன், கமருதீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    பழனி அடிவாரம் அருகே உள்ள மருத்துவ நகரை சேர்ந்தவர் சங்கர் (30). இவர் அமரப்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று இரவு திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது காரில் வந்த 3 மர்ம நபர்கள் சங்கரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டி.எஸ்.பி. விவேகானந்தன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை பழிக்கு பழியாக நடந்தது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாலசமுத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சிறைக்கு சென்ற சங்கர் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார்.

    இதனை அறிந்த மர்ம கும்பல் அவரை பழிக்கு பழியாக வெட்டி கொன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரே நாளில் 2 கொலைகள் நடந்துள்ளது பழனி பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    கஜா புயலால் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தை உயிர்பலி ஏற்படும் முன் மின்வாரியம் சரிசெய்து அச்சத்தை போக்கிட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaCyclone
    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், பள்ளியஅக்ரஹாரம் மின்பகிர்மான வட்டம், கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டூர் கிராமத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த இரு மின் கம்பங்கள் தெருவோரம் உள்ள வீடுகள் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் எந்த நேரத்திலும் மின் கம்பம் வீட்டின் மீது சாய்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வசித்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    குண்டூர் கிராமத்தில் உள்ள 3 மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருந்தன. அவை தற்போது வீசிய கஜா புயலால் மேலும் சாய்ந்து விட்டது. எந்த நேரத்திலும் வீட்டின் மீது விழுந்தது விடும் அபாயம் உள்ளது இதனால் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறோம். வெண்ணுகுடி, எடக்குடி உதாரமங்களம் உள்பட பல கிராமத்திற்கு செல்லும் முக்கிய சாலையோரம் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளதால் இந்த சாலையில் செல்லும் கிராம மக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    உயிர்பலி ஏற்படும் முன் மின்வாரியம் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்து அச்சத்தை போக்கிட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaCyclone

    ஆத்தூர் தாலுகாவில் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறாததால் சுமார் 1500 ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    ஆத்தூர்:

    தமிழகம் முழுவதும் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 10-ல் இருந்து 15 ஆயிரம் வரை ரேசன் கார்டுகளில் பிழை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சில இடங்களில் குடும்ப தலைவர் படத்திற்கு பதிலாக சாமி படங்கள், நடிகர் நடிகைகள் படம் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால், இப்பிரச்னையை கம்ப்யூட்டர் பதிவேற்றத்தில் ஏற்பட்ட பிழை என அதிகாரிகள் சமாளித்தனர். ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நுற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு, இதுவரை ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வினியோகிக்கப்படவில்லை.

    புதிதாய் விண்ணப்பித்த பலரும், பல ஆண்டுகளாக தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து வருகின்றனர். அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை என்ற புகார் கூறுகின்றனர்.

    ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். பிழை இருந்தாலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை பொது மக்களுக்கு வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கான பணிகளிலும் சுணக்கம் நீடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 14 மாதங்களுக்கு மேலாக, இது குறித்து பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இ-சேவை மையங்களிலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறவில்லை. எனவே சுமார் 1500 ரேசன் கார்டுதாரர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக ரேசன் பொருட்கள் வாங்கவில்லை. இதன் காரணமாக தங்கள் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை உடனே பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×