search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police man"

    முதல் மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி தஞ்சை பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ஏட்டு மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும், கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அந்த பெண் அஜித்குமாரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து முதல் மனைவியை விவாகரத்து செய்ய போவதாக கூறி அஜித்குமார் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சை ஜெபமாலை புரத்தை சேர்ந்த கோகிலா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் கோகிலாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அவர் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே அஜித்குமார் தனது முதல் மனைவியிடம் சமரசம் பேசி அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கோகிலா மற்றும் அவரது உறவினர்கள் அஜித்குமாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு அஜித்குமார் முதல் மனைவியுடனும் சேர்ந்து வாழ்வேன் என்று கூறியுள்ளார்.

    இதுபற்றி 2-வது மனைவி கோகிலா வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் அஜித்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்து விடுவேன் என்று தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீரில் காவல்நிலையத்தின் மீது எதிர்பாராவிதமாக பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார். #JammuKashmir #MillitantAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு படையினரும் உரிய பதிலடி கொடுத்துவரும் நிலையில், தொடர்ந்து அத்துமீறல்களையும், தாக்குதல்களையும் பயங்கரவாதிகள் நடத்தி வருகின்றனர்.

    இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவாட்டத்தில் உள்ள காவல்நிலையத்தை திடீரென சுற்றி வளைத்த பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். அப்போது அவர்களை எதிர்த்து போராடிய சகிப் மிர் என்ற காவல்துறை அதிகாரி பலத்த காயமடைந்தார்.

    இதையடுத்து, பாதுகாப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். படுகாயமடைந்த காவலர் சகிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தற்போது, அந்த பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MillitantAttack
    கோவை அருகே குடி போதையில் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி சாந்திமேட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வெங்கடேஷ்குமார் (வயது 26). இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு 8.30 மணியளவில் வெங்கடேஷ் குமார் வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். சாந்திமேடு அருகே சென்ற போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்கள் குடி போதையில் சத்தம் போட்டு கொண்டு இருந்தனர். இதனை பார்த்த வெங்கடேஷ்குமார் சத்தம் போடக்கூடாது என 3 பேரையும் எச்சரித்து அனுப்பினார்.

    பின்னர் வெங்கடேஷ் குமார் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பரை சந்தித்து பேசி விட்டு இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த அந்த 3 வாலிபர்களில் ஒருவர் காரில் இருந்து இறங்கி ஓடி வந்து தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் வெங்டேஷ்குமாரை வெட்டினார்.

    இதில் இடது கை, கழுத்து பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். பின்னர் அந்த 3 வாலிபர்களும் காரில் தப்பிச் சென்றனர்.

    வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிய வெங்கடேஷ்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து வெங்கடேஷ்குமார் பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போலீஸ் காரரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற 3 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மீதிருந்த அளவு கடந்த அன்பு காரணமாக போலீஸ்காரர் அவருக்கு கோவில் கட்டியுள்ளார். #TelanganaCM #ChandrashekarRao
    நகரி:

    நல்கொண்டா மாவட்டம் நிதிமனூரு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசலு. சாட்டப்பல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    இவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் தீவிர ஆதரவாளர். இந்த நிலையில் சந்திரசேகர் ராவ் மீதிருந்த அளவு கடந்த அன்பு காரணமாக அவருக்கு கோவில் கட்ட சீனிவாசலு முடிவு செய்தார்.

    இதுபற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தனது சொந்த ஊரான நிதிமனூரு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சந்திரசேகர் ராவுக்கு கோவில் கட்டும் பணியை தொடங்கினார்.

    இக்கோவிலை ரூ.2 லட்சம் செலவில் கட்டி முடித்தார். அதில் சந்திரசேகர் ராவின் மார்பளவு சிலையை வைத்துள்ளார். இக்கோவிலை முதல்வர் சந்திரசேகர் ராவ் திறக்க வேண்டும் என்று சீனிவாசலு கோரிக்கை விடுத்து இருந்தார்.

    சந்திரசேகர் ராவ் தனது கிராமத்துக்கு வரும்போது கோவிலின் திறப்பு விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். #TelanganaCM  #ChandrashekarRao
    தாராபுரம் அருகே பல்வேறு வழக்கு உள்ளதால் அச்சம் அடைந்த போலீஸ்காரர் அரளி விதை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாராபுரம்:

    பழனி ஆயக்குடியை சேர்ந்தவர் ரங்கநாயகம். இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்.

    இதற்கு முன்பு ரங்கநாயகம் உடுமலையில் வேலை பார்த்தார். அப்போது அவர் விசாரணை கைதியை கடுமையாக தாக்கியதாக வழக்கு உள்ளது. இதேபோல் குண்டடம் பகுதியில் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கு உள்ளது. இதனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தவிர போலீஸ்காரர் ரங்கநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜூடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    விசாரணை முடிவில் தனது வேலை பறிபோகும் என்று ரங்கநாயகம் அச்சமடைந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று அரளி விதையை அரைத்து குடித்தார். இதில் மயங்கிய அவரை உறவினர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருமங்கலம் அருகே வாகன சோதனையின்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் போலீஸ்காரர்களை தாக்க முயன்ற சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பேரையூர்:

    மோட்டார் சைக்கிளை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்போரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து போலீசார் இதை மட்டுமே பணியாக நினைத்து தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில போலீசாரின் விரும்பாதகாத செயல்களால் பொதுமக்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

    திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், முதன்மை காவலர் அழகர்சாமி மற்றும் போலீசார் எலியார்பத்தி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பாரபத்தியை சேர்ந்த முத்தையா மகன்கள் முருகன் (வயது38), மணி ஆகியோரை போலீசார் மறித்தனர். பின்னர் ஹெல்மெட் அணியாதது குறித்தும், ஆவணங்கள் குறித்தும் போலீசார் கேட்டதாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீஸ்காரர்களை தாக்க முயன்றதாக கூடக்கோவில் போலீசில் சகோதரர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகனையும், அவரது தம்பி மணியையும் கைது செய்தனர்.

    போக்குவரத்து போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் காரர் வெங்கடேஷ் (வயது 33). இவர், ஈ.சி.ஆர். சாலை கொக்கு பார்க் சிக்னலில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது சாரம் அன்னை தெரசா நகரை சேர்ந்த சார்லஸ் (44). கொக்கு பார்க் சாலை ஒருவழிப்பாதையில் வந்தார். அவரை வெங்கடேஷ் மறித்து இது ஒரு வழிபாதை, இந்த வழியாக வரக்கூடாது என்று கூறினார்.

    ஆனால், சார்லஸ் அப்படித்தான் வருவேன் என்றார். உடனே வெங்கடேஷ் சாவியை எடுத்துக்கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் அழைத்து சென்றார்.

    அவர் இது குறித்து விசாரணை நடத்தி அவருக்கு ரூ.100 அபராதம் விதித்தார். சார்லஸ் சாவியையும், அபராதத்துக்கான ரசீதையும் வாங்கிக்கொண்டு மறுபடியும் ஒருவழிப்பாதையில் சென்றார்.

    இதை வெங்கடேஷ் தடுத்தார். இதனால் தகாத வார்த்தையால் சார்லஸ் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் வெங்கடேஷ் காலில் சார்லஸ் மோட்டார் சைக்கிளை ஏற்றியதில் அவர் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து வெங்கடேஷ் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வடிவழகன் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சார்லசை தேடி வருகிறார்கள்.

    இதேபோல் வில்லியனூர் போலீசாருக்கு புதுவை கண்ட்ரோல் அறையில் இருந்து ஒரு தகவல் வந்தது.

    அதில், ஒதியம்பட்டு ரோடு கணுவாப்பேட்டை பகுதியில் வாலிபர்கள் ஒரு கும்பலாக கூடி இருப்பதாக தகவல் கொடுத்தனர். உடனடியாக வில்லியனூர் போலீஸ்காரர் புருஷோத்தமன் அப்பகுதிக்கு சென்று வாலிபர்களை கலைந்து செல்லும்படி கூறினார்.

    அதில், செங்கதிர் செல்வன் என்பவர் புருஷோத்தமனை தகாத வார்த்தையால் திட்டி சட்டையை கிழித்து விடுவதாக கூறினார்.

    இதுகுறித்து அவர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குடிபோதையில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய 3 என்ஜினீயர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூர் தெற்கு நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). இவர் தேவன்குடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று ஏட்டு விஜயகுமார், அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் குடிபோதையில் வந்தனர். அவர்கள் திடீரென ஏட்டு விஜயகுமார் மீது மோதுவது போல் வந்ததால் அவர் விலகி சென்றார்.

    பின்னர் இதுபற்றி கேட்டபோது 3 வாலிபர்களுக்கும், ஏட்டுவுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் திடீரென அருகே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ஏட்டு விஜயகுமாரை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது விஜயகுமாரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    காயமடைந்த ஏட்டு விஜயகுமார், மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றிய புகாரின் பேரில் வடுவூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் ஏட்டுவை தாக்கியது மாளிகைமேட்டை சேர்ந்த சரண்ராஜ் (வயது 26), விஜயகுமார் (27) மற்றும் காரகோட்டை மேலகாட்டை சேர்ந்த அருள்பிரசாத் (26) என்று தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் என்ஜினீயரிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்ததும் தெரியவந்தது. பிறகு அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போலீஸ்சாரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார் (வயது 31).

    இவர் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    திருவெண்ணைநல்லூர் பேரங்கியூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீஸ்காரர் செந்தில்குமார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்.

    அந்த மோட்டார் சைக்கிளில் லாரிக்கு பயன் படுத்தப்படும் பேட்டரி ஒன்று இருந்தது. இதைப் பார்த்த செந்தில்குமார், இந்த பேட்டரி யாருக்கு உள்ளது? எங்கேயும் திருடி வருகிறீர்களா? உங்கள் ஊர் என்ன? என்று கேட்டார்.

    அதற்கு அந்த 3 பேரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீஸ்காரர் செந்தில்குமார் அந்த 3 பேரையும் விசாரணை நடத்த போலீஸ் நிலையம் வருமாறு அழைத்தார்.

    ஆனால், அதற்கு அவர்கள் மறுத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    அதில் ஒருவர் தனது கையில் இருந்த கத்தியால் செந்தில்குமாரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்த நிலையில் அவர் கீழே சாய்ந்தார். உடனே அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீஸ்காரர் செந்தில்குமாரை மீட்டு முண்டியம்பாக்கம் மருத் துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் போலீஸ்காரர் செந்தில்குமாரை தாக்கியவர்கள் பேரங்கியூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ், ராமச்சந்திரன் ஆகியோர் என்று தெரியவந்தது.

    இதையடுத்து பாலகிருஷ்ணனையும், ஜெயப்பிரகாசையும் போலீசார் கைது செய்தனர். ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த ரத்ததான முகாமில் ஆயுதப்படை போலீசார், பயிற்சி போலீசார் என மொத்தம் 152 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் ரத்ததானம் வழங்கும் முகாம் தர்மபுரி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜ், அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுரபி, ரத்தவங்கி டாக்டர் அறிவழகன், போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் ஆயுதப்படை போலீசார், பயிற்சி போலீசார் என மொத்தம் 152 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள். ரத்ததானம் வழங்குவதன் அவசியம் குறித்து இந்த முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
    சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
    மணிகண்டம்:

    திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி அடைக்கலமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன் அலெக்ஸ் (வயது 29). இவர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார். இவருக்கு மெட்டில்டா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று முன்தினம் காலையில் பணிக்கு சென்ற ஜான்சன் அலெக்ஸ் மாலை 6 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் மனைவிக்கு போன் செய்து ராம்ஜிநகர் அருகே உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்து விடுவதாக கூறியுள்ளார்.

    அதன்படி நண்பரை பார்த்துவிட்டு ராம்ஜிநகரில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மணிகண்டம் போலீஸ் நிலையம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் உள்ள தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மணிகண்டம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஜான்சன் அலெக்ஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை பொன்மலைப்பட்டியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஜான்சன் அலெக்சின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    நள்ளிரவில் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்த போலீஸ் ஏட்டுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவரை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    தூத்துக்குடி:

    கோவில்பட்டி புதூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியுகவரதன் (வயது47). தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் இவர் நேற்று நள்ளிரவு டூவி புரம் 5-வது தெரு பகுதியில் சென்றார்.

    அப்போது அங்குள்ள ஒருவரது வீட்டிற்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபடி இருந்துள்ளார். இதனை அந்த வீட்டின் உரிமையாளர் கவனித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரும், அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து போலீஸ் ஏட்டு கலியுகவரதனை கையும், களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    முதலில் அவர் ஏட்டு என்பது பொதுமக்களுக்கு தெரியாது. பின்பு தர்ம அடி கொடுத்த போது கலியுக வரதன் தான் போலீஸ் ஏட்டு என்பதை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    நள்ளிரவில் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்தது குறித்து ஏட்டு கலியுகவரதன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×