search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy Procurement Station"

    • அரியலூர் மாவட்டத்தில் மேலும் 9 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கபட உள்ளது
    • வரும் 6-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால்,விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கரீப் கேஎம்எஸ் 2022-2023 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு 4 ஆம் கட்டமாக அரியலூர் வட்டத்தில் மஞ்சமேடு, தூத்தூர், கள்ளுர், முடிகொண்டான், திருவெங்கனூர், திருமானூர், கரைவெட்டி, குந்தபுரம் மற்றும் செந்துறை வட்டத்தில், படைவெட்டிகுடிகாடு, ஆகிய 9 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் வரும் 6-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • வியாழக்கிழமைதோறும் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறுகிறது.
    • விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஏலத்தில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

     வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது.இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமைேதாறும் தேங்காய் பருப்பும், வியாழக்கிழமைதோறும் சூரியகாந்தி விதை ஏலமும் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையமும் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கரூர், திருச்சி, தஞ்சாவூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இதில் வெள்ளகோவில், மூலனூர், காங்கயம், முத்தூர், கொடுமுடி, ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஏலத்தில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    தற்போது நெல் அறுவடை காலம் என்பதால் திருப்பூர் கலெக்டர் எஸ்.வினீத் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு திடீரென நேரில் வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து எவ்வாறு இந்த நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது என்பதை தொழிலாளர்களிடம் கேட்டறிந்து நெல் சுத்தம் செய்வது, எடை போடுவது, மூடை போடுவதை செய்து காண்–பிக்க சொல்லி நேரில் பார்த்து விவரம் கேட்டறிந்தார். அப்போது ஒழுங்குமுறைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள், போலீசார் உடன் இருந்தனர்.

    • கறம்பக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கபட்டது
    • விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கறம்ப விடுதி ஊராட்சியில் உள்ள சொக்கம்பேட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.விடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. சின்னதுரை சொக்கம்பேட்டை பட்டவன் கோவில் திடலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி திறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த பகுதியிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனும்மான முத்துகிருஷ்ணன், கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மங்களா கோவில் பரமசிவம், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஜினி இளங்கோவன், சங்கன் விடுதி தங்கராசு, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


    • நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • குடவாசல் பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கு 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்

    திருவாரூர்: 

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கு 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் விவசாயிகள் சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். தனியார் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு அறுவடை செய்ய ரூ.3 ஆயிரம் வசூல் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் வேளாண்மை பொறியியல் துறைக்கு ஆலோசனை வழங்கி போதிய அளவு அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

    அதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திருவாரூர் மாவட்டத்தில் உடனடியாக திறந்து விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை காலதாமதம் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் என கலெக்டருக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்காசி வடக்கு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி அமைச்சர் சக்கரபாணியிடம் ராஜா எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
    • 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைத்ததற்காக அமைச்சருக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவ நல்லூர், புளியங்குடி, திருவேங்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் மிகப் பிரதான தொழிலாகும். இங்கு அனைத்து பகுதிகளிலும் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

    தற்போது நெல் உற்பத்தி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், தென்காசி வடக்கு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்துக் கொடுத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதை வலியுறுத்தி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் தனது தொகுதியில் 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைத்ததற்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார். மேலும் ராஜா எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சக்கரபாணி விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.

    • சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • கலெக்டர் ஆகாஷ், தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த நிலையில் சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தருவதாக பழனி நாடார் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரிடம் உறுதி அளித்திருந்தார்.

    இந்த நிலையில் தென்காசி கலெக்டர் ஆகாஷ், பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் வீ.கே.புதூர் தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அதேபோல் சுரண்டையில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது மண்டல நிலைய வட்டார அலுவலர் முருகன்,வருவாய் அலுவலர் கண்ணன்,கிராம நிர்வாக அலுவலர் ராஜ லட்சுமி,நில அளவையர் பஷீர் அகமது, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மேலச்செவல் பேரூராட்சி பகுதியில் கண்ணன் என்ற விவசாயி சமீபத்தில் நெல் அறுவடை செய்துள்ளார்.
    • கிராமத்தின் நிர்வாக அதிகாரி அடங்கல் ஆவணத்தை விரைவாக கொடுக்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக புகார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் மேலச்செவல் பேரூராட்சி பகுதியில் தேசமாணிக்கம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்ற விவசாயி சமீபத்தில் நெல் அறுவடை செய்துள்ளார்.

    அடங்கல் ஆவணம் தாமதம்

    அதனை அப்பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக அவருக்கு அடங்கல் ஆவணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராமத்தின் நிர்வாக அதிகாரி அடங்கல் ஆவணத்தை விரைவாக கொடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டதாகவும், அதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அந்த விவசாயி கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பே அடங்கல் வாங்குவதற்காக எங்களது வயல் பட்டாவை கொடுத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். அதன்பின்னர் வருவாய் ஆய்வாளரிடம் நான் அளித்த புகாரை அறிந்து, தற்போது அடங்கல் ஆவணம் தயார் செய்து கொடுத்துள்ளார்.

    நெல் மூட்டைகள்

    தற்போது நெல் கொள்முதல் நிலையத்தில் அடங்கல் ஆவணம் சமர்ப்பித்துள்ளேன். அவர்களது நடைமுறைகள் முடிக்க 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் எனது நெல் மூட்டைகள் முளைத்துவிட்டன. நேற்று பாதிமூட்டைகளை மட்டுமே நெல்லை கொள்முதல் செய்தனர். அதற்குள் மழை வந்து மீதமுள்ள மூட்டைகளை நனைத்துவிட்டது.

    இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காலதாமதம் ஏற்பட்டு நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.

    • ஈரப்பதம் குறித்து அறிந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்
    • இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், உடன் சென்று இது தொடர்பான விவரங்களை மத்திய குழுவினரிடம் விவரமாக எடுத்துரைத்தார்

    திருச்சி:

    தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஜெங்கமராஜபுரம், ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தின் தற்போதைய நிலையை உயர்த்தி கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய குழு கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தது.

    இதில் அரசின் உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் துணை இயக்குனர் கான் தலைமையிலான குழுவினர் யூனூஸ் (தொழில்நுட்பம்), இந்திய உணவுக் கழகத்தின் உதவி பொது மேலாளர் குணால் குமார், கணேசன் (தரக் கட்டுப்பாடு),

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதல் நிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில் ஆகியோர் இன்று (17.10.22) நேரில் பார்வையிட்டனர்.அப்போது கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளிடமும், அலுவலர்களிடமும் கேட்டறிந்தனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், உடன் சென்று இது தொடர்பான விவரங்களை மத்திய குழுவினரிடம் விவரமாக எடுத்துரைத்தார்.உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.




    • அரசு விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதலை தொடங்குவதன் மூலமாக விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கின்றது.
    • இந்த கொள்முதல் நிலையத்தின் மூலமாக 250-ல் இருந்து 300 விவசாயிகள் பயனடைவார்கள்.

    தென்காசி:

    செங்கோட்டையை அடுத்த புளியரை பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    செங்கோட்டை வட்டாரம் புளியரையில் 290 ஹெக்டேரில் கார் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. அரசு விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதலை தொடங்குவதன் மூலமாக விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கின்றது.

    சிறிய ரக நெல்லுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.21.60 பைசாவுக்கும் பெரிய ரகத்துக்கு ஒரு கிலோவிற்கு ரூ.20.15 பைசாவுக்கும் அரசு கொள்முதல் செய்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக பணி நடைபெற்று வருகிறது.

    புளியரையில் தொடங்கப்பட்ட இந்த கொள்முதல் நிலையத்தின் மூலமாக 250-ல் இருந்து 300 விவசாயிகள் பயனடை வார்கள். 1900மெட்ரிக் டன் நெல் கொள்முதல் எதிர்பார்க்கப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு வருவதற்கு முன்னதாக, விவசாயிகள் தங்களுடைய கிராம நிர்வாக அலுவலரின் சான்று பெற்று கொள்முதல் நிலையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலர்களிடம் இணையத்தில் பதிவு செய்து அதனை கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் ஏற்கப்பட்ட உடன் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நெல் கொள்முதல் நிலையத்திற்கு அனுமதிக்கப்படும்.

    நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு கூடுதலாக இல்லாமல் இருக்க வேண்டும். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை அவரவர் வங்கிக் கணக்கில் கொள்முதல் செய்த 2அல்லது 3 நாட்களுக் குள்ளாக செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகா னந்தம் , செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் ராஜேஷ், நிர்வாக அலுவலர்கள் கற்பகவல்லி, வெங்கடேஷ், செங்கோட்டை வட்டாட்சியர் கந்தசாமி , வேளாண்மை அலுவலர் சிவமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பீவி, புளியரை ஊராட்சி மன்ற தலைவர் அழகிய திருச்சிற்றம்பலம், துணைத் தலைவர் லட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் திருமலை செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்புராஜ் ,விவசாய சங்க தலைவர் செல்லத்துரை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற உள்ளது.
    • கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடம், எஸ்.கே.புதூர் கூட்டுறவு சங்க கட்டிடம் ஆகிய இடங்களில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை (சனிக்கிழமை) முதல் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற உள்ளது.

    விவசாயிகள் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து, நெல் விற்பனை செய்ய வசதியாக கொள்முதல் பருவம் 2022-23-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக நெல் விற்பனை செய்யும் நாள், நேரம் ஆகியவை தெரிவிக்கப்படும். சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 160-க்கும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 115-க்கும் விற்பனைசெய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட மண்டல மேலாளர் அலுவலகத்தை 94437 32309 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • குறை தீர்வு கூட்டம் நடந்தது

    அரக்கோணம்:

    அரக்கோணம், நெமிலி உள்ளடக்கிய அரக்கோணம் வருவாய் கோட்ட விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் கோட்டாட்சியர் பாத்திமா தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் பாஸ்கரன், தாசில்தார்கள் பழனி ராஜன், ரவி, பேரூராட்சி செயலாளர் மனோகரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

    தற்போது நெல் கொள்முதல் நிலையங்களை அரசு தனியார் விட இருப்பதாக அறிவிக்க ப்பட்டுள்ளது. தனியாருக்கு விட்டால் அவர்களிடம் நெல்லை அளித்தால் எங்களுக்கு பணம் வருமா, மேலும் அவர்கள் சரியான எடையுடன் சரியான தரத்துடன் நெல்லை விவசாயிகளிடம் மட்டுமே வாங்குவார்கள் என்பது என்ன நிச்சயம்.

    நெல் கொள்முதல் நிலையம்

    இதனால் நெல் வணிகர்கள் ஊக்குவிக்கப்பட்டு அவர்களின் நெல் வாங்கப்படும் நிலை நீடிக்கும். எனவே நெல் கொள்முதல் நிலையத்தை தனியாருக்கு விடக்கூடாது என்றார். அரக்கோணத்தில் உள்ள வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் கிடங்கு நகரில் இருந்து தொலைவில் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு செல்ல பாதை வசதி இல்லை.

    இந்த அலுவலகத்திற்குச் செல்லும் வழிகளை சீரமைத்து சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அது மட்டும் இல்லாமல் வேளாண் அலுவலகம் செல்லும் வழி என்பதற்கான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

    கொசுத்தலை ஆற்றில் இலுப்பை தண்டலம் கிராமத்தில் கட்டப்பட்ட தடுப்பணை பணி பாதியில் நிற்கிறது. இதனால் அப்பகுதிக்கு வர வேண்டிய நீர் வராமல் அங்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    தண்டலம் கிராமப் பகுதியில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிக அளவில் உள்ளது.

    இது சம்பந்தமாக வனத் துறையினர் காட்டுப் பண்றிகளை நுழைய விடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பாமக உழவர் பேரியக்க தலைவர் திருமால், பாமக மாநில மாணவச் சங்க செயலாளர் பிரபு ஆகியோர் பேசியதாவது:-

    தங்களது பகுதியில் ஆடுகள், கோழிகள் அதிக அளவில் திருடு போகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் பொதுமக்களாகிய நாங்களே 5 பேர் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளோம். தற்போதும் திருட்டு தொடர்ந்து நடைபெறுகிறது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அரக்கோணத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட துணை தலைவர் ரமேஷ் பேசுகையில் வேலூர் கிராமத்து ஏரியிலிருந்து மதகு மூலம் வெளியேறும் நீர் வெளியேறும் வழி தூர்வாரப்படாததால் ஒரே பக்கமாக செல்கிறது.

    இதனால் நீர் செல்லும் பக்கத்தில் அதிக தண்ணீர் வரத்தால் 250 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியாமல் சூழல் உள்ளது. எதிர்பக்கம் 250 ஏக்கர் நிலம் நீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் காய்ந்து கிடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கள்ளிப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    டி.என்.பாளையம்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் இவ்வாண்டு பருவத்தி ற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியின் போது டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன், கோபிசெட்டிபாளையம் தாசில்தார் ஆசியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஈரோடு மண்டல மேலாளர் வி.சி.முருகேசன், துணை மேலாளர் தரக்கட்டுப்பாடு பி.மனோகரன், டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன்,

    கள்ளிப்பட்டி நெல் கொள்முதல் அலுவலர் டி.மோகனசுந்தரம், கொண்டையம் பாளையம் ஊராட்சி தலைவர் மரகதம் பாலு, அரக்கன் கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பகவதியண்ணன், செயலாளர் முருகேஷ் சஞ்சிவ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×