search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேரன்மகாதேவி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள் - அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக புகார்
    X

    மழையில் நனைந்துள்ள நெல் மூட்டைகள்.

    சேரன்மகாதேவி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள் - அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக புகார்

    • மேலச்செவல் பேரூராட்சி பகுதியில் கண்ணன் என்ற விவசாயி சமீபத்தில் நெல் அறுவடை செய்துள்ளார்.
    • கிராமத்தின் நிர்வாக அதிகாரி அடங்கல் ஆவணத்தை விரைவாக கொடுக்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக புகார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் மேலச்செவல் பேரூராட்சி பகுதியில் தேசமாணிக்கம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்ற விவசாயி சமீபத்தில் நெல் அறுவடை செய்துள்ளார்.

    அடங்கல் ஆவணம் தாமதம்

    அதனை அப்பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக அவருக்கு அடங்கல் ஆவணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராமத்தின் நிர்வாக அதிகாரி அடங்கல் ஆவணத்தை விரைவாக கொடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டதாகவும், அதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அந்த விவசாயி கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பே அடங்கல் வாங்குவதற்காக எங்களது வயல் பட்டாவை கொடுத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். அதன்பின்னர் வருவாய் ஆய்வாளரிடம் நான் அளித்த புகாரை அறிந்து, தற்போது அடங்கல் ஆவணம் தயார் செய்து கொடுத்துள்ளார்.

    நெல் மூட்டைகள்

    தற்போது நெல் கொள்முதல் நிலையத்தில் அடங்கல் ஆவணம் சமர்ப்பித்துள்ளேன். அவர்களது நடைமுறைகள் முடிக்க 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் எனது நெல் மூட்டைகள் முளைத்துவிட்டன. நேற்று பாதிமூட்டைகளை மட்டுமே நெல்லை கொள்முதல் செய்தனர். அதற்குள் மழை வந்து மீதமுள்ள மூட்டைகளை நனைத்துவிட்டது.

    இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காலதாமதம் ஏற்பட்டு நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.

    Next Story
    ×