search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "one nation one election"

    • காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது.
    • இதில் முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் பங்கேற்றார்.

    ஐதராபாத்:

    காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டி உறுப்பினர்களின் முதல் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். இது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்.

    இதைச் செயல்படுத்தக் குறைந்தது 5 அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற பா.ஜ.க.வில் போதிய அளவில் எம்.பி.க்கள் இல்லை. இது அவர்களுக்கும் நன்கு தெரியும்.

    இருப்பினும், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மாயையை முன்வைத்து உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.

    • ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு 8 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
    • குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு 8 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல், மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன் தேர்தலை அறிவிக்க முடியும்
    • குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். இதுதான் எங்கள் பணி

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தலைவர் ராஜிவ் குமார் இன்று மத்திய பிரதேசம் சென்றுள்ளார்.

    மத்திய பிரதேசம் சென்றுள்ள அவர் தேர்தல் குறித்து கூறுகையில் ''அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளின்படி நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதுதான் எங்களது பணி. பாராளுமன்ற பதவிக்காலம் ஐந்தாண்டு. நாங்கள் ஆறு மாதத்திற்கு முன் தேர்தலை அறிவிக்க முடியும். அதேபோன்றுதான் சட்டமன்ற தேர்தலுக்கும். சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

    • ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பா.ஜனதாவின் எண்ணமாக உள்ளது
    • இதுகுறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு அமைப்பு

    ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு 8 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல், மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த குழுவின் அதிகாரப்பூர்வ முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அரசமைப்புச் சட்ட திருத்தங்களுக்கு மாநிலப் பேரவைகளில் ஒப்புதல் பெறுவது அவசியமா? என்பதை ஆராய்ந்து பரிந்துரைத்தல்.
    • ஒரே நேர தேர்தல்களின் நிலையான சுழற்சியை பாதுகாக்கும் அம்சங்களைப் பரிந்துரைத்தல்.

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறைக்கான சாத்தியக் கூறு குறித்து ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு கடந்த 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அறிவித்திருந்த நிலையில், குழு உறுப்பினர்கள் மற்றும் அதன் பணிகள் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், குழுவின் தலைவராக செயல்படுவார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் தலைமைச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட உள்ளனர்.

    இக்குழு கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார். குழுவின் செயலராக சட்ட விவகாரங்கள் துறை செயலாளர் நிதின் சந்திரா பணியாற்ற உள்ளார்.

    ராம்நாத் தலைமையிலான உயர்நிலைக்குழு மேற்கொள்ள இருக்கும் பணிகளின் விவரங்களும் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.

    மக்களவை, மாநிலப் பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய கட்டமைப்பை கருத்தில் கொண்டு, அதில் மேற் கொள்ள வேண்டிய திருத்தங்கள், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம், இதர சட்டங்கள் மற்றும் விதிகளில் செய்ய வேண்டிய திருத்தங்களை ஆய்வு செய்து பரிந்துரைத்தல்.

    இத்தகைய அரசமைப்புச் சட்ட திருத்தங்களுக்கு மாநிலப் பேரவைகளில் ஒப்புதல் பெறுவது அவசியமா? என்பதை ஆராய்ந்து பரிந்துரைத்தல். தொங்கு பேரவை, நம்பிகையில்லாத் தீர்மானம் நிறைவேற்றம் போன்ற தருணங்களுக்கான தீர்வுகளை ஆய்வு செய்து பரிந்துரைத்தல்.

    ஒரே நேர தேர்தல்களுக்கான கட்டங்கள், கால வரம்பு தொடர்பான செயல்முறையைப் பரிந்துரைத்தல், ஒரே நேர தேர்தல்களின் நிலையான சுழற்சியை பாதுகாக்கும் அம்சங்களைப் பரிந்துரைத்தல்.

    தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி போன்ற சாதனங்கள், மனிதவளம் குறித்து ஆராய்தல். ஒரே நேர தேர்தல்களுக்கான பொதுவான வாக்காளர் பட்டியல் பயன்பாடு குறித்து வழி முறைகளை ஆராய்தல்.

    ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு உடனடியாக செயல்பாட்டை தொடங்குவதோடு, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறியும்.

    கூடிய விரைவில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும். இக்குழுவின் தலைமை அலுவலகம் புது டெல்லியில் செயல்படும் என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த முடயுமா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.
    • இந்த குழுவின் தலைவராக முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த குழுவுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக ராம் நாத் கோவிந்த் எட்டு பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார். இதில் மத்திய மந்திரி அமித் அஷா, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே. சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி ஆகியோர் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த குழு இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க.வின் ஊழல் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதை வரவேற்கிறேன்.
    • நடிகை விஜயலட்சுமி 11 வருடமாக ஒரே குற்றச்சாட்டை கூறி வருகிறார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமற்றது. அதனால் எந்த பயனும் இல்லை. இது ஒரே நாடா?. உணவு , பழக்கவழக்கம், கலாச்சாரம் மாறுபடும்போது எப்படி தேசத்தை ஒன்றாக்க முடியும். தேர்தல் செலவை மிச்சப்படுத்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள். ஒவ்வொரு இடைத்தேர்தல் வரும் போதும் பொதுவான தேர்தல் நடத்தப்படுமா?.

    ஓட்டுக்கு காசு கொடுப்பதை நிறுத்தினால் போதும் தேர்தல் செலவு குறையும். முதலில் காவிரியில் தண்ணீர் பெற்று தாருங்கள். பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பார்க்கலாம்.

    தி.மு.க.வின் ஊழல் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதை வரவேற்கிறேன். அ.தி.மு.க. சொத்து பட்டியலையும் வெளியிடுங்கள். கர்நாடகா ஊழல் குறித்தும் வெளியிடுங்கள். கர்நாடகாவில் தானே அவர் காவல் துறையில் பணியாற்றினார். அங்கேயே பா.ஜ.க., தலைவராக வேண்டியது தானே. கர்நாடகாவில் அவர் சிங்கம். இங்கே அசிங்கம்.

    உயர்நீதிமன்றம் உண்மையை பேசி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. தன்னாட்சி அமைப்புக்கள் என நாம் நம்பி வருகிறோம். அது நமது அறியாமை.

    காமராஜர் கொண்டு வந்த திட்டம் மதிய உணவு திட்டம். 50 ஆண்டு மாறி மாறி ஆட்சி செய்து இப்போது தான் பிள்ளைகள் பட்டினி தெரிகிறதா?. திருடனுக்கு திருடன் பாதுகாப்பு. அதனால் தான் நம்மை ஒதுக்க முயல்கின்றனர். நடிகை விஜயலட்சுமி 11 வருடமாக ஒரே குற்றச்சாட்டை கூறி வருகிறார். அதற்காக பயப்படும் ஆள் நான் இல்லை. தேர்தல் வருவதால் என் மீது வீண்பழி சுமத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவுகளை கணிசமாக குறைக்க முடியும் என்று கருதப்பட்டது.
    • இந்திய அரசியலமைப்பு மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள முக்கிய துறைகள் ஒரே நிர்வாக அமைப்பின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தீவிரமாக உள்ளது.

    இதற்காக ஏற்கனவே பல்வேறு துறைகளில் மத்திய அரசு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் முறையை மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக கடந்த ஆண்டு முதல் அடிக்கடி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பெரும்பாலான மாநில கட்சிகள் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்தியாவில் அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 1967-ம் ஆண்டு வரை பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே காலகட்டத்தில்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் சில மாநிலங்களில் ஆட்சி கலைப்பு மற்றும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழ்ப்பு போன்றவை காரணமாக சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் பாராளுமன்றத்துக்கு ஒரு தடவையும், மாநில சட்டசபைகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் சட்டசபை காலம் முடிவடைவதை பொருத்தும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனி தேர்தல் நடத்தும் போது அதிக செலவு ஏற்படுவதாக கூறப்பட்டது. நிர்வாக ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்து இருக்கின்றன. இதேபோல மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கும்போதும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

    பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் இந்த செலவுகளை கணிசமாக குறைக்க முடியும் என்று கருதப்பட்டது. இதையடுத்து இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது பற்றி மத்திய அரசு கடந்த சில மாதங்களாக ஆலோசித்து வந்தது.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய அரசு இந்த விவகாரத்தில் அதிரடியாக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    இந்த குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையிலான குழுவினர் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்வார்கள்.

    இந்த ஆய்வுகளில் தெரியவரும் கருத்துக்களை தொகுத்து மத்திய அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் இன்று 2-வது நாளாக கூடி முக்கிய முடிவுகளை அறிவிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    ஆனால் அவர்களது சிந்தனையை திசை திருப்பும் வகையில் மத்திய அரசின் இன்றைய நடவடிக்கை அமைந்துள்ளது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக கம்யூனிஸ்டு கட்சியினர் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

    இந்திய அரசியலமைப்பு மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தேர்தல் நடத்துவதில் கடும் குளறுபடிகள் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து உள்ளன.

    குறிப்பாக ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதாக இருந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது முக்கியமாகும். இதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளன.

    ஆனால் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடக்கும்போது இதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, இடது சாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

    • 1951-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது.
    • அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற மக்களவையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

    சென்னை:

    பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

    இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி தங்களது கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி, தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. தரப்பு கருத்தை கடிதமாக சட்ட ஆணையத்துக்கு அளித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    தி.மு.க. எம்.பி. வில்சன் இதுதொடர்பான கடிதத்தை டெல்லியில் உள்ள சட்ட ஆணையத்தில் நேரடியாக அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    1951-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன்பின்பு சில மாநிலங்களில் ஆட்சிக்காலம் முடியும் முன்பே அரசு கலைக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த இயலவில்லை.

    6, 7, 9, 11, 12 மற்றும் 13-வது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தொடர்ந்து ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்த முடியாமல் போனது.

    அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற மக்களவையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தை சுட்டிக்காட்டி கவர்னரும் ஆட்சியை கலைக்கலாம்.

    ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியை கலைக்க முடியாது.

    பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தல் நடத்துவது அடுத்தாண்டு சாத்தியமில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார். #OneNationOneElection #ECI
    புதுடெல்லி:

    மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்துவதற்கு பாஜக உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஆதரவாக உள்ளது. தேர்தல் செலவுகள், மனிதவளம் ஆகியவை ஒரே தேர்தல் முறையில் குறையும் என இந்த திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகள் கூறுகின்றன.

    ஆனால், மத்தியில் ஆட்சி கவிழும் பட்சத்தில் அனைத்து மாநில சட்டசபைகளையும் கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்துவீர்களா? என இந்த திட்டத்தை எதிர்பவர்கள் குரல் கொடுக்கின்றனர். திமுக, திரினாமுல், சிவசேனா, இடதுசாரிகள் என முக்கிய கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை எதிர்க்கின்றன.

    இந்நிலையில், அடுத்தாண்டு பாராளுமன்றத்தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா என தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சாத்தியமில்லை என பதிலளித்தார். முறையான சட்ட வரைவு இல்லாமல் தேர்தல் நடத்த முடியாது என அவர் கூறினார்.
    பாராளுமன்றம் - மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள பாஜக இனி, அமெரிக்கா, ரஷியாவுடன் சேர்ந்து இந்தியாவுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தலாம் என சிவசேனா கிண்டல் செய்துள்ளது. #OneNationOnePoll #Shivsena #BJP
    மும்பை:

    மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்துவதற்கு பாஜக உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஆதரவாக உள்ளது. தேர்தல் செலவுகள், மனிதவளம் ஆகியவை ஒரே தேர்தல் முறையில் குறையும் என இந்த திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகள் கூறுகின்றன.

    ஆனால், மத்தியில் ஆட்சி கவிழும் பட்சத்தில் அனைத்து மாநில சட்டசபைகளையும் கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்துவீர்களா? என இந்த திட்டத்தை எதிர்பவர்கள் குரல் கொடுக்கின்றனர். திமுக, திரினாமுல், சிவசேனா, இடதுசாரிகள் என முக்கிய கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை எதிர்க்கின்றன.

    இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று சட்ட கமிஷன் சென்று, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பாஜக ஆதரவாக இருப்பதாக தெரிவித்து கடிதம் அளித்தார். 

    இந்நிலையில், அமித் ஷாவின் கடிதம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், “அவர்கள் (பாஜக) பாராளுமன்றம் - அனைத்து மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தல் நடத்தலாம். இல்லையெனில், அமெரிக்கா, ரஷியாவுடன் சேர்ந்து இந்தியாவுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தலாம். பாஜக தலைவர்களின் தலையில் இருந்து என்ன வெளிவரும் என யாருக்கும் தெரியாது?” என கூறியுள்ளார்.
    பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகியவற்றுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடக்கலாம் என்று மேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் இல.கணேசன் எம்.பி. கூறினார். #OneNationOneElection
    மேலூர்:

    மதுரை மாவட்டம், மேலூரில் இன்று பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட இல. கணேசன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகியவற்றுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடக்கலாம். அதற்கான கட்சிப்பணிகளை மேலூரில் இருந்து தொடங்கி உள்ளோம்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என டி.டி.வி தினகரன் கருத்து கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே அமித்ஷா ஊழல்வாதிகளுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்து விட்டார்.

    காவிரி பிரச்சனைக்காக போராடியவர்கள் இன்று யாரேனும் வயல்வெளியில் இறங்கி விவசாய பணிகளை செய்தார்களா? என்பது தான் தற்போதைய கேள்வி.

    பொய் வதந்தி மூலம் குழந்தை திருட வந்ததாக, சில அப்பாவி மக்கள் தற்போது கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இது இந்த தேசத்தின் மீது குற்றச்சாட்டை பரப்ப வேண்டும் என்று சிலர் செய்யும் பிரசாரம் ஆகும்.


    ஸ்டெர்லைட் ஆலை மூலம் அந்தப்பகுதி மாசடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது.

    இதேபோல சேலம் தோல் தொழிற்சாலை, திருப்பூர் உள்ளிட்ட சாயப்பட்டறை செயல்படும் பகுதிகளிலும் நிலத்தடி தண்ணீர் மாசடைந்தது உண்மை. இதனை ஆய்வு செய்ய வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவம் போல், சேலம் பகுதியில் நடைபெறாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி நீர் கடலில் கலந்து வீணாவதை அரசு தடுக்க வேண்டும். இதற்காக தஞ்சை பகுதிகளிலுள்ள ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

    கவர்னர் பதவி என்பது திரையரங்கில் உள்ள தீ தடுப்பு வாளி போன்றது. கவர்னர் ஆய்வை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. பொது மக்கள் ஆதரிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan  #OneNationOneElection
    ×