search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nanjil sampath"

    ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் எல்.கே.ஜி. படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #LKG #RJBalaji #PriyaAnand
    ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்.கே.ஜி. நடப்பு அரசியலை கிண்டல் செய்து உருவாகும் இந்த படத்தில் அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. 

    தரமான சம்பவம் 1 என்று குறிப்பிட்டு ஆர்.ஜே. பாலாஜி போஸ்டர் ஒன்றை நேற்று வெளியிட்டார். இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள படம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நினைவுபடுத்துவது போல் அமைந்ததால் அ.தி.மு.க. வினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகி பிரவீன் குமார் டுவிட்டரில் ‘எல்.கே.ஜி’ படம் ரிலீசானால் பாலாஜியின் கட் அவுட்டுக்கு செருப்பு அபிஷேகம் பண்ணப்போவதாக தெரிவித்தார். இந்த டுவீட்டை பார்த்த ஆர்.ஜே. பாலாஜி ’இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா அண்டாவாக செருப்பு அபிஷேகம் செய்யுங்கள்’ என்று பதில் அளித்தார்.


    இதற்கிடையே சிம்பு ரசிகர்கள் ஆர்.ஜே. பாலாஜியை, அ.தி.மு.க. 
    நிர்வாகியை மட்டும் கிண்டல் செய்யுங்கள். தேவை இல்லாமல் எங்கள் அண்ணன் சிம்புவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    லியோன் ஜேம்ஸ் இசையில் முதல் பாடல் குடியரஜ தினத்தன்று ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #LKG #RJBalaji #PriyaAnand

    தன் பக்கம் இருக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்து கொள்ளும் முயற்சியில் தினகரன் வெற்றி பெறுவார் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். #NanjilSampath #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறார். அவரது நம்பிக்கை நிறைவேற எனது வாழ்த்துக்கள். 18 பேரையும் தற்காத்து கொள்ளும் கடமை தினகரனுக்கு உள்ளது.

    ஏனெனில் அவர்களில் 7 பேர் தங்கள் பக்கம் இருப்பதாக பொறுப்பில் இருக்கும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியது பதிவாகியிருக்கிறது. எனவே கோடிக்கணக்கில் பேரம் பேசும் செயல்களை செய்வதற்கு ஆளும் கட்சியினர் தயங்க மாட்டார்கள்.

    இந்த காரணத்தால் தன் பக்கம் இருக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்து கொள்ள தினகரன் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளது தவறில்லை. இந்த முயற்சியில் தினகரன் வெற்றி பெறுவார்.


    தமிழக முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டவுடனேயே அவர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

    சபரிமலை போராட்டம் திணிக்கப்பட்ட போராட்டம். இதை வைத்துக் கொண்டு கரைசேர முடியாத சில கட்சிகள் மலிவான அரசியலை நடத்துவது தான் கேரள அரசியலில் நடக்கிற தப்பாட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார். #NanjilSampath #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    கமலுடன் காங்கிரஸ் இணைந்தால் கல்லறைக்கு செல்வதற்கு சமம் என்று ஆரணியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். #KamalHaasan #Congress #NanjilSampath
    ஆரணி:

    ஆரணியில் நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார் உள்ளது. முதல்-அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகியிருக்க வேண்டும்.

    சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பெண்களே போராடுவது ஆச்சரியமாக இருக்கிறது.

    ‘மீ டு’ விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். ‘மீ டு’வை இன்று பலர் எல்லை தாண்டி கையில் எடுப்பது வேதனையளிக்கிறது. ‘மீ டு’வை மிஸ்யூஸ் மற்றும் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.


    கமலுடன் காங்கிரஸ் இணைந்தால் கல்லறைக்கு செல்வதற்கு சமமாகிவிடும். கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது.

    தி.மு.க.வுடன் இருந்தால் தான் காங்கிரசுக்கு பலன் கிடைக்கும். கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் தற்கொலை செய்து கொள்வதை போல் தமிழகத்தில் காங்கிரசின் நிலைமை மாறி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.   #KamalHaasan #Congress #NanjilSampath
    அழகிரியை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து, அவ்வாறு சேர்த்துக் கொண்டால் தி.மு.க. வலிவும், பொலிவும் பெறும் என்பதும் எனது எண்ணம் என்று நாஞ்சில் சம்பத் கூறினார். #NanjilSampath #MKAlagiri #DMK
    நாகர்கோவில்:

    கட்சி அரசியலில் இருந்து விலகி இருக்கும் நாஞ்சில் சம்பத், அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

    தி.மு.க. தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதையடுத்து சென்னையில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர், இன்று மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. என்ற இயக்கத்தில் அரை நூற்றாண்டு காலம் தலைவராக இருந்து வழி நடத்திய கருணாநிதி மறைவுக்கு பின் அந்த இயக்கத்தின் புதிய தலைவராக மு.க. ஸ்டாலின் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிளை கழக நிர்வாகி முதல் உயர்மட்ட நிர்வாகி வரை அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை தலைவர் பதவியில் அமர்த்தி உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் வரலாற்று பாதையில் கால வெள்ளத்தால் கரைந்து போகாத கட்சி தி.மு.க.

    அதன் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பது சாலச் சிறந்தது. தலைமை பொறுப்புக்கு தகுதியானவர் மு.க. ஸ்டாலின். திராவிட இயக்கம் நிலைத்து நிற்க வேண்டும் என்று கருதியும், திராவிட இயக்கத்தின் பிரசாரகன் என்ற முறையிலும் சென்னையில் நேற்று மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.



    மு.க. ஸ்டாலினும், மு.க. அழகிரியும் ஒரு தாய் பெற்ற புதல்வர்கள். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

    மு.க. அழகிரியை பொறுத்தமட்டில் அவர், தி.மு.க.வில் இருந்தபோது தென்மண்டல அமைப்புச் செயலாளராக பணியாற்றினார். மத்திய மந்திரியாக பொறுப்பு வகித்தார். கட்சி தொண்டர்களுடன் நெருங்கி பழகியவர். இப்போது தி.மு.க.வில் அவர் இல்லை. அவரை தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவ்வாறு சேர்த்துக் கொண்டால் தி.மு.க. வலிவும், பொலிவும் பெறும் என்பதும் எனது எண்ணம். ஆனால் முடிவு எடுக்க வேண்டியது மு.க. ஸ்டாலின் கையில் உள்ளது.

    திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடந்தபோது கருணாநிதி அங்கு முழுமையாக பிரசாரத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தார். அதன் பிறகும் அங்குள்ள மக்கள் அவரை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தனர். இப்போதும் தேர்தல் நடந்தால் அங்கு தி.மு.க.தான் வெற்றி பெறும்.

    அழகிரி போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா? என்பதை விட தி.மு.க. சார்பில் யார் போட்டியிட்டா லும் அவர்தான் வெற்றி பெறுவார் என்பது உறுதி.

    திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வுக்கு கை கொடுக்கும் தொகுதி. ஆனால் இப்போது அங்கு தேர்தல் நடந்தால் அதன் வெற்றி திருத்தணி மலையில் எதிரொலிக்கும் வகையில் அமையும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியானால் அது ஆளும் அரசுக்கு எதிராக இருக்கும் என்பதுதான் எனது எண்ணம். அவ்வாறு நடந்தால் இந்த ஆட்சி நீடிக்குமா? என்பதை தினகரன்தான் முடிவு செய்ய வேண்டும்.

    முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்தபோது முதல்-அமைச்சர் தெரிவித்த கருத்து சரியல்ல. ஒரு மனிதனுக்கு காய்ச்சல் ஏற்படுவதுபோல மதகு உடைந்ததை ஒப்பிட்டு கூறி உள்ளார். இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

    நேற்று நான், திருவாரூர் சென்றிருந்தேன். அங்கு நாகப்பட்டினம் முத்தமிழ் மன்றத்தில் நடந்த கலைஞருக்கான இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று பேசினேன். நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் நான், பயணம் செய்தபோது பயிர் நிலங்கள் பாளம், பாளமாக வெடித்து கிடப்பதை கண்டேன்.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் தண்ணீர் இல்லை. கால்வாய்களும் வறண்டு கிடந்தன. ஆனால் கொள்ளிடத்தில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலுக்கு வீணாகச் சென்றது. வெள்ளத்தை சேமிக்க தெரியாத ஆட்சி நடக்கிறது. இதனால் மக்கள் கோபத்தில் உள்ளனர். இது மட்டுமல்ல, இந்த ஆட்சிக்காலத்தில் நடந்த நீட் பிரச்சினை, ஸ்டெர்லைட் விவகாரம் போன்றவற்றில் அரசின் அணுகுமுறையும், நடவடிக்கையும் சரியில்லை.

    அ.தி.மு.க. ஒருங்கிணைந்த பிறகும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், மதுசூதனனுக்கும் ஒருங்கிணைப்பு இல்லை. இவர்கள் இருவரும் ஜெயலலிதா இருந்தபோதே ஏழாம் பொருத்தமாக இருந்தனர். இப்போதும் அப்படியே இருக்கிறார்கள்.

    மதுசூதனை ஒரு பெரிய மனிதர் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார். அ.தி.மு.க.வில் இப்போது கட்டுப்பாடு இல்லை. தடி எடுத்தவர்கள் அனைவரும் தண்டல்காரர்களாக இருக்கிறார்கள். இதனால் மக்களின் கோபம் அவர்கள் மேல் திரும்பி உள்ளது.

    இப்போது நான், கட்சி அரசியலில் இல்லை. இதனால் எனக்கு வருவாய் வரத்து குறைந்துள்ளது. என்றாலும் நான், நிம்மதியாக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #NanjilSampath #MKAlagiri #DMK
    திரையுலகத்தினர் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்றும் அப்படி கனவு காண்பவர்களுக்கு தன்னுடைய அனுதாபங்களை தெரிவிப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். #NajilSampath
    திருவாரூர்:

    திருவாரூரில் நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டி.டி.வி.தினகரன் அணியில் நான் இணைய போவதாக வந்துள்ள தகவல் பொய்யானது. அரசியலை விட்டு வெகுதூரம் வந்து விட்டேன். இனி எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். அழகிரி தி.மு.க.வின் தென் மண்டல செயலாளராக பணியாற்றி உள்ளார். தொண்டர்களுடன் நெருக்கமாக இருந்து பெயர் சொல்லி அழைக்க கூடியவராக இருந்துள்ளார். எனவே கட்சியில் அழகிரியை இணைத்தால் தி.மு.க. வலுப்பெறும் அந்த முடிவு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் தான் இருக்கிறது.

    தமிழகத்தில் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை ஊழல் புதைந்து கிடக்கிறது. இதனை தடுத்தாக வேண்டும் என்பதை விட இந்த அநியாயத்திற்கு முடிவு கட்ட வேண்டும். அதை யார் செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    விஷால் புதிய இயக்கம் தொடங்கியுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நடிகர்கள் கட்சி தொடங்கியிருப்பது இடைத்தேர்தலில் வெட்ட வெளிச்சமாகி விடும். திரையுலகத்தினர் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. திரையுலகை சேர்ந்தவர்கள், தமிழக அரசியலில் காலூன்ற முடியாது. அப்படி கனவு காண்பவர்களுக்கு என்னுடைய அனுதாபங்கள் என்றார்.

    நடிகர்கள் கட்சி தொடங்குவதால் திராவிட கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், காடு, நிலம், காற்று, நீர் இருக்கும் வரை திராவிடம் இருக்கும். வேறு எந்த இயக்கத்திற்கும் இங்கு இடம் இல்லை என்றார். #NajilSampath
    பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாஞ்சில் சம்பத் கடலூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி தினகரன் அணி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் அவர் கடலூர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை நாஞ்சில் சம்பத் கடலூர் வந்தார். கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 7-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இந்த வழக்கில் நாஞ்சில் சம்பத் சார்பாக வக்கீல் திருமார்பன் ஆஜரானார். அதன் பின்னர் நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி தினகரன் அணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் தினகரன் தலைமையை ஏற்று இருந்த காலத்தில் பேசினேன்.

    இந்த பொதுக்கூட்டம் நடந்து முடிந்து 8 மாதம் முடிந்த நிலையில் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாக கூறி கடலூர் நீதிமன்றத்தில் இருந்து எனக்கு சம்மன் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானேன். நான் பொது வாழ்வில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்துவிட்டேன். தற்போது இலக்கிய மேடை, பொது நிகழ்ச்சி மற்றும் மாணவர்களை சந்தித்து பேசி வருகிறேன்.

    மேலும் பொது வாழ்வில் இருந்தும், அரசியல் வாழ்க்கையில் இருந்தும் விலகுகிறேன் என்று அறிவித்த பிறகு இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதின் பேரில் அரசு வக்கீல் மூலம் அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

    பொதுவாழ்வில் இருப்பவர்கள் தன் மீது வரும் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாவிட்டால் பொது வாழ்வில் இருந்து விலகிவிட வேண்டும். இதுபோல் அவதூறு வழக்கு போடக்கூடாது.

    மேலும் என் மீது 49 அவதூறு வழக்குகள் உள்ளன. ஆனால் பொதுவாக அவதூறு வழக்கில் இதுவரை தண்டனை யாரும் பெற்றதாக எனக்கு தெரியவில்லை. 6 மாதம் கழித்து இந்த வழக்கு போட்டிருப்பது ஆட்சியாளர்களின் கேலிக் கூத்தாக தெரிகிறது.

    பொது வாழ்வில் இருந்து நான் விலகிய பிறகு என்னை தண்டிக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

    இதுமட்டுமன்றி இந்த வழக்கில் முதல்-அமைச்சரோ, துணை முதல்- அமைச்சர் ஆஜராக கூடாது என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நடக்க வேண்டுமானால் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

    இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரை கூண்டில் ஏற்றுவது தவிர வேறு வழியில்லை. விரைவில் நீதிமன்ற கூண்டில் அவர்கள் ஏறும் காலம் வரும். முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் வருங்காலங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தி.மு.க. தலைவர் கருணாநிதி மருத்துவ அதிசயம் என்றும் அவர் விரைவில் குணமடைவார் என்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Karunanidhi #KauveryHospital #Vaiko
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி (வயது 94), வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.

    அவ்வகையில், இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு மருத்துவ அதிசயம். வாழ்நாளெல்லாம் தமிழர் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் பல சக்திகளை எதிர்த்து போராடியிருக்கிறார். அடக்குமுறைகள் மற்றும் எதேச்சதிகாரத்தை எதிர்த்து போராடியிருக்கிறார். பலமுறை சிறைவாசம் கண்டிருக்கிறார். இப்போது எமனோடு போராடுகிறார். எமனையும் ஜெயித்து மீண்டு வருவார்’ என குறிப்பிட்டார்.


    இதேபோல் நாஞ்சில் சம்பத் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் கூறும்போது, தமிழகத்தின் கடைசி நம்பிக்கை கருணாநிதி, அவர் மீண்டு வர வேண்டும் என்றார். ஒரே நேரத்தில் கவி அரசனாகவும், புவியரசனாகவும் ஜொலித்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,  இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், திரைப்பட இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.  #DMKLeader #Karunanidhi #KauveryHospital #Vaiko
    அரசியலை விட்டு விலகிய நான், ம.தி.மு.க.வில் மீண்டும் சேர மாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
    நாகர்கோவில்:

    அ.தி.மு.க.வில் தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத், தினகரன் புதிய கட்சி தொடங்கியதும், கட்சியை விட்டு விலகினார்.

    அதன் பிறகு அரசியல் துறவறம் மேற்கொள்வதாகவும், தமிழ் இலக்கிய மேடைகளில் மட்டுமே பேசுவேன் என்று நாஞ்சில் சம்பத் கூறினார். ஆனால் அவர், தமிழக அரசியல் பற்றியும், அமைச்சர்களின் பேச்சு குறித்தும் அவ்வப்போது, கருத்து தெரிவித்து வந்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் புகழ்ந்து பேசினார்.

    இந்த நிலையில் வைகோவை ஒரு இலக்கிய விழாவில் நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து நாஞ்சில் சம்பத் ம.தி.மு.க.வில் சேரப்போவதாக மீண்டும் தகவல் பரவியது.



    சென்னையில் வைகோவை நாஞ்சில் சம்பத் ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், இதற்காக இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வைகோ வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்பட்டது.

    இதுபற்றி நாஞ்சில் சம்பத்திடம் மாலைமலர் நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    நான், கட்சி அரசியலை விட்டு விலகி விட்டேன். தத்துவ அரசியலில் இருந்து விலகவில்லை. இனம், மொழி சார்ந்த திராவிட இயக்கத்தின் பார்வையில் என் மனதில் பட்டதை சொல்வதில் ஒரு போதும் நான், தயக்கம் காட்டியது இல்லை.

    அந்த அடிப்படையில் சில கருத்துக்களை தெரிவித்து வந்தேன். அதனை காரணம் காட்டி நான், அரசியலில் சேரப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

    தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசியபோது, முதல்வரை ஸ்டெர்லைட் நாயகன் என்று கூறினார். இதை என்னால் ஏற்க முடியவில்லை. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் தொடக்கம் முதல் ஆர்வம் காட்டியவர் வைகோ.

    22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அவர் போராடி வருகிறார். எனவேதான் உண்மையான ஸ்டெர்லைட் நாயகன் வைகோதான் என்று என் மனதில் பட்டதை தெரிவித்தேன். இதை காரணம் காட்டி நான் ம.தி.மு.க.வில் சேரப்போவதாக கூறினார்கள். அதற்கும் மறுப்பு தெரிவித்தேன்.

    அதன் பிறகு சென்னையில் நடந்த இலக்கிய விழாவில் நான், வைகோவை சந்தித்தேன். அவருடன் நலம் விசாரித்து பேசினேன். அவரும் என்னுடன் இயல்பாக பேசினார். அது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்தது. இதைப் பார்த்தவர்கள் மீண்டும் நான் ம.தி.மு.க.வில் சேரப் போவதாக கூறினார்கள்.

    இப்போது வைகோவை அவரது வீட்டில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் பரப்பி உள்ளனர். நான், வைகோவை சந்திக்கவும் இல்லை. இதற்காக மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டிற்கு போகவும் இல்லை. அரசியலை விட்டு விலகிய நான், ம.தி.மு.க.வில் மீண்டும் சேர மாட்டேன்.

    வைகோ எடுக்கும் முயற்சிகள், அரசியலில் அவர் மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இப்போது நான், தந்தி டி.வி.யில் பயணங்கள் என்ற தொடரில் பேசி வருகிறேன். வாரந்தோறும் சனி, ஞாயிறு தினங்களில் இந்த தொடர் வெளியாகிறது. பொது வழியில் இலக்கிய ரீதியில் பயணம் மேற்கொள்ள நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

    எந்த காரணங்களுக்காகவும் நான், அரசியல் பாதைக்கு திரும்பப்போவதில்லை. இலக்கிய பாதையில் தான் என் பயணம் தொடரும்.

    நடிகர் கமல்ஹாசன் பகுத்தறிவு எண்ணங்கள் கொண்டவர். மதச்சார்பின்மை தத்துவங்களில் நம்பிக்கை கொண்டவர். அந்த வரிசையில் அவர், மதச்சார்பற்ற கட்சிகளையும், அதன் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் அவர், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து இருக்கலாம். அவரது கருத்தும், சிந்தனையும் பொது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? என்பது போக போக தெரியும்.

    கமல்ஹாசனை போல கட்சி தொடங்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்தை பா.ஜனதா கட்சியின் முகமாகவே பார்க்கிறேன்.

    இப்போதைய அ.தி.மு.க. அரசு மக்களுக்கு எதிரான அரசாக செயல்படுகிறது. தூத்துக்குடி போராட்டத்தில் இந்த அரசு எடுத்த நடவடிக்கையால் மக்கள் இந்த ஆட்சி மீது கோபத்தில் உள்ளனர்.

    தூத்துக்குடிக்கு சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் பிருந்தாகரத் மீதும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதும் இந்த அரசு வழக்குப் பதிவு செய்தது. இதனை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. கோர்ட்டின் உத்தரவு இந்த ஆட்சிக்கு கிடைத்த அவமானம். இந்த அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்.

    டி.டி.வி. தினகரன் தொடங்கிய கட்சியை அவர்தான் தூக்கி சுமக்கிறார்.

    இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.
    பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி - ப்ரியா ஆனந்த் நடிக்கவிருக்கும் அரசியல் படத்தில், நாஞ்சில் சம்பத்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #LKG #RJBalaji #NanjilSampath
    ம.தி.மு.க.வில் பேச்சாளராகவும் வைகோவுக்கு நெருக்கமாகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத்.

    பின்னர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். பேச்சாளராகவும் துணை கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்து வந்தார்.

    ஜெயலலிதா இவருக்கு இன்னோவா கார் பரிசளித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை கடுமையாக விமர்சித்தவர் பின்னர் அவரிடமே தஞ்சம் ஆனார்.

    தினகரனின் ஆதரவாளராக தொடர்ந்து பயணித்த நாஞ்சில் சம்பத் தினகரன் கட்சி தொடங்கும்போது கட்சி பெயரில் திராவிடம் இல்லை என்று அவரை விட்டு வெளியேறினார்.



    அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நாஞ்சில் சம்பத் சினிமாவில் நடிக்கிறார். காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசியலை கிண்டல் செய்யும் படம் ஒன்றில் நடிக்கிறார்.

    எல்.கே.ஜி. என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க பிரபு என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். பிரியா ஆனந்த் கதாநாயகி. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு தந்தையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.

    நிஜ வாழ்க்கையில் அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் படத்திலும் அரசியல்வாதியாகவே வருகிறார். நடப்பு அரசியலை முழுக்க முழுக்க கிண்டல் செய்யும் படமாக தயாராகிறது எல்.கே.ஜி.



    நாஞ்சில் சம்பத்துக்கு இதற்கு முன்பே சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. பெரிய இயக்குனர்கள் அழைத்த போதே அரிதாரம் பூச மாட்டேன் என்று சொல்லி மறுத்தவர் அரசியலை விட்டு விலகிய பின் சினிமாவில் நடிக்க சம்மதித்துள்ளார். #LKG #RJBalaji #NanjilSampath

    ×