search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mukkombu Dam"

    திருச்சி முக்கொம்பு அணை உடைந்ததற்கு பராமரிப்பு இல்லாததே காரணமாகும். தமிழக அரசு அனைத்து அணைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். #MukkombuDam #Vaiko
    நெல்லை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரள வெள்ளப் பாதிப்பிற்கு தமிழக மக்கள் பேருதவி செய்துள்ளனர். தமிழர்களின் மனிதநேயம் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக உள்ளது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு ம.தி.மு.க. சார்பாக ரூ.10 லட்சம் திரட்டி வழங்க இருக்கிறோம். திருச்சி முக்கொம்பு அணை உடைந்ததற்கு பராமரிப்பு இல்லாததே காரணமாகும். தமிழக அரசு அனைத்து அணைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும். ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் அணை கட்ட அறிவித்துள்ளனர். ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்த போது திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

    ஈரோட்டில் செப்டம்பர் 15-ந்தேதி ம.தி.மு.க. சார்பாக மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக 2 மாதத்திற்கு முன்பே சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் தி.மு.க. கட்சி கூட்டத்தை கூட்டி பல முடிவுகள் எடுக்க இருப்பதால் ம.தி.மு.க. மாநாட்டிற்கு வர முடியாத நிலை இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.



    வருகிற 28-ந்தேதி நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்படலாம். ம.தி.மு.க. மாநாட்டில் கருணாநிதி படம் திறக்கப்படுகிறது.

    இதனை துரைமுருகன் திறந்து வைக்கிறார். மாநாட்டில் பினாங்கு துணை முதல்-அமைச்சர் ராமசாமி, தி.க. தலைவர் கி.வீரமணி, காஷ்மீர் முன்னாள் முதல்-அமைச்சர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், யஷ்வன்சின்கா மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த மாநாடு ம.தி.மு.க.வினருக்கு உந்துதலை ஏற்படுத்தும். திராவிட இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு வைகோ பதில் அளித்தார்:-

    கே: கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுமா?

    ப: பெரிய தலைவர்களுக்கு புகழஞ்சலி நடக்கும் கூட்டத்தில் இதுபோல் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. கருணாநிதிக்கு அளிக்கும் புகழஞ்சலி அரசியல் எல்லைகளை கடந்தது. இது ஆரோக்கியமான அரசியல் ஆகும். எனவே இதை வேறு விதமாக பார்க்கக்கூடாது.

    கே: அ.தி.மு.க.வை கூட்டத்திற்கு அழைக்கவில்லையே?

    ப: கடற்கரையில் அண்ணா சமாதியில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க கோரிக்கை விடுத்தபோது அவர்கள் அதை உதாசனப்படுத்தினார்கள். பின்னர் நீதிமன்றத்தை அணுகி தங்களுக்கான உரிமைகளை பெற்றனர். இது தமிழக மக்கள் மனதிலேயே காயத்தை ஏற்படுத்தியது.

    இதனால் அ.தி.மு.க.வை அழைக்காமல் இருந்திருக்கலாம்.

    கே: கேரள வெள்ளம் ஏற்பட்டதற்கு தமிழகம் தான் காரணம் என்று கேரள முதல்வர் கூறியுள்ளாரே?

    ப: கேரளாவில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகுதான் முல்லை பெரியாறு அணை நிரம்பியது. மற்ற அணைகள் திறக்கப்பட்ட பிறகே முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டது. அதுவும் அணையில் இருந்து 1½ டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது. எனவே கேரள வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணை திறப்பு காரணம் அல்ல.

    மழை வெள்ளத்தில் துன்பப்படும் இந்த நேரத்தில் இதை பெரிதுபடுத்த வேண்டாம். கேரள வெள்ளத்தில் நம்மால் பாதிப்பு ஏற்படவில்லை.

    கே: ஜெயலலிதா மறைந்தபோது அ.தி.மு.க. பிரச்சினை ஏற்பட்டது போல், கருணாநிதி மரணத்தை தொடர்ந்து தி.மு.க.வில் பிரச்சினை ஏற்படுவது போல் உள்ளதே?

    ப: தி.மு.க. மிகவும் கவனமாக செல்கிறது. அங்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MukkombuDam #Vaiko
    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் இடிந்த மதகுகள் இருந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணிகளில் 300 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #Mokkumbudam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் இடிந்ததை தொடர்ந்து நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை பார்வையிட்டார். தற்காலிகமாக இடிந்த 9 மதகுகளுக்கு பதில் அதே இடத்தில் ரூ.95 லட்சத்தில் தற்காலிக தடுப்பணை கட்டவும், பழைய அணையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ரூ.410 கோடியில் புதிய கொள்ளிடம் அணை கட்டவும் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் பொதுப் பணித்துறை அதிகாரிகள், நிபுணர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் முதலமைச்சரிடம் தாக்கல் செய்கிறார்கள். அதன் பிறகு டெண்டர் விடப்பட்டு புதிய அணை கட்டும் பணிகள் தொடங்கும் என கூறப்படுகி றது.

    இதற்கிடையே இடிந்த மதகுகள் இருந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணிகளில் பொதுப்பணித் துறையினர் இன்று 2-வது நாளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மதகு இடிந்த பகுதியில் 3 மீட்டர் அகலத்தில் 110 மீட்டர் நீளத்திற்கு 5 ஆயிரம் சவுக்குகள் கட்டப்பட்டு 1 லட்சம் மணல் மூட்டைகள் சுவர் போன்று அமைக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி முக்கொம்பில் இடுப்பளவு தண்ணீரில் நின்று தடுப்பணை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.



    இதற்காக 300 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 ஊழியர்கள் சாக்குகளில் மணல்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 பேர் அவற்றை சுமந்து அணைகட்டும் பகுதிக்கு கொண்டு செல்லும் பணியிலும் மற்ற 100 ஊழியர்கள் தடுப்பணை கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டவுடன் அவை வெள்ளத்தில் பாதிப்படையாமல் இருக்க அதன் பக்கவாட்டில் கான்கிரீட் மூலம் சுவர் எழுப்புவதா? அல்லது பெரிய பாறாங்கற்கள் நிரப்பி அவை சரியாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்வதா? என அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

    இந்த பணிகளை 4 நாட்களுக்குள் முடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதால் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி புதன்கிழமைக்குள் தற்காலிக தடுப்பணை சீரமைப்பு பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது.

    தற்போது மேட்டூர் அணையில் இருந்து திருச்சி காவிரி ஆற்றிற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. அணை மதகு பகுதியில் இடுப்பளவு தண்ணீர் உள்ளது. அதில் இறங்கி தொழிலாளர்கள் தடுப்பணை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் தற்போது மழை இல்லை நேற்று திருச்சியில் மாலை முதல் இரவு வரை மழை பெய்தது. இது தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை அச்சப்படுத்தியது. ஆனால் லேசான தூரலுடன் மழை நின்று விட்டது. இருப்பினும் வரும் நாட்களில் மழை இல்லாதிருந்தால் தான் தடுப்பணை சீரமைப்பு பணிகள் பிரச்சனை இருக்காது திட்டமிட்டபடி பணிகள் நடைபெறும்.  #Mokkumbudam
    முக்கொம்பு அணை உடைப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #MukkombuDam
    நெல்லை:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டப் படிப்பில் பகுதி நேர ஆய்வாளராக சேர்ந்து ஆய்வுகளை செய்து வந்தார். நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு 180 குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக இஸ்லாம் மதத்தை தழுவினர். அது தொடர்பாக ஆய்வு நடத்தி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்தார். அதற்கான வாய்மொழித் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த வாய்மொழித் தேர்வை திருமாவளன் நிறைவு செய்ததையடுத்து அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

    முன்னதாக திருமாவளவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. முக்கொம்பு அணை உடைபட்டது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக அளவில் விடுதலை சிறுத்தை கட்சி வருகிற ஆகஸ்ட் 31‍-ந் தேதிவரை பனை விதைகள் விதைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் எங்கள் கட்சி சார்பில் கேரள மக்களுக்கு 10 லட்சம் நிதி, 15 லட்சத்தில் நிவாரண பொருட்களும் 2 நாட்களில் வழங்க இருக்கிறோம். கேரளாவிற்கு மத்திய அரசு வழங்கி உள்ள நிதி போதாது.

    கேரள முதல்வர் கேட்டுக் கொண்டபடி ரூ.3 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அரபு நாடு தொகையை வாங்க கூடாது என்பது தவறானது. மதவாத அடிப்படையில் அணுகாமல் மனிதநேய அடிப்படையில் மத்திய அரசு அணுக வேண்டும். அனைத்து கட்சி தலைவராலும் மதிக்க கூடிய முதுபெரும் தலைவர் கலைஞர். அவரது இறப்புக்கு பா.ஜ.க. தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த அடிப்படையில் இரங்கல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். தி.மு.க. தரப்பில் அ.தி.மு.க.வை அழைக்கவில்லை. அழைத்திருந்தாலும் தவறில்லை.



    தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவ‌து வரவேற்கத்தக்கது பாராட்டுக்குரியது. தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடுபிடிக்கத்தான் செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #MukkombuDam

    முக்கொம்பு மேலணை மதகு உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MukkombuDam #Vaiko

    கும்பகோணம்:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கும்பகோணத்தில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-

    தமிழக அரசு நீர் மேலாண்மை கடமையை முறையாக செய்யவில்லை. மேலும் தொடர்ந்து நடந்த ஆற்று மணல் கொள்ளையாலும் பராமரிப்பு பணிகளை சரிவர செய்யாததாலும், 182 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்து விட்டன. இதற்கு தமிழக அரசின் பொறுப்பற்ற போக்கு தான் காரணம்.

    கடந்த 2014-ம் ஆண்டில் கொள்ளிடத்தில் ரூ.410 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்படும் என்று அப்போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.


    குதிரை ஓடிய பிறகு லாயத்தை கட்டி என்ன பயன்? அதுபோல் தான் முக்கொம்பு மேலணை உடைந்த பிறகு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என கூறுவது சரியில்லை.

    அணையில் ஓட்டை விழுந்துள்ளது என தகவல் வந்த போதே அதை முறையாக பராமரிப்பு பணி செய்திருந்தால் உடைப்பு ஏற்பட்டு இருக்காது.

    நமது முன்னோர்கள் சேமித்த இயற்கை வளம் மணல். மணலை கொள்ளையடித்தால் எதிர்க்கால சந்ததியினரின் வாழ்க்கையில் சீரழிவு ஏற்படும். முக்கொம்பு மேலணை உடைப்புக்கு மணல் கொள்ளைதான் காரணம்.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    முக்கொம்பு மேலணை உடைந்த விதம் குறித்து தமிழக முதல்வரிடம் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. #MukkombuDam
    திருச்சி:

    பொதுப்பணித்துறையினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

    வரலாறு காணாத வகையில் வெள்ளம் வந்த சூழலிலும், 1924-ம் ஆண்டு, 1977, 2005, 2013-ம் ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களிலும் கொள்ளிடத்தில் 1.75 கனஅடியும், காவிரியில் 67ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேலும் கர்நாடக அணைகளில் இப்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உபரி நீர் திறந்து விடப்பட்ட சூழலில் கொள்ளிடத்தில் 2.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைகளிலும் மேட்டூர் அணையில் இருந்து 177 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கொம்பு மேலணை ஸ்திரத்தன்மையுடனேயே இருந்து வந்துள்ளது.

    6 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட தூண்களுடன் 45 மதகுகுள் கொண்ட இந்த அணை வழியாகவே கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.



    காவிரியில் அதிகமாக வெள்ளம் வந்தாலும் முக்கொம்பு வந்தவுடன் மேலணை, கீழணை என இரு பகுதியாக இருப்பதால், இயல்பாகவே காவிரியில் தான் அதிக அளவு தண்ணீர் செல்லும். ஏனெனில் கொள்ளிடத்தை விட 2 அடிக்கு மேல் கீழே உள்ளது காவிரி. எனவே முதலில் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுக்கும்.

    மேலணையில் மேல் பகுதியில் 1846-ல்தான் பாதை அமைத்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அதிகளவு தண்ணீர் வந்த சூழலிலும் உடையாத மதகுகள் 22-ந்தேதி இரவு கொள்ளிடத்தில் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையிலும், அதன் தொடர்ச்சியாக 33 ஆயிரம் என அதிகரித்த நிலையிலும் உடைந்துள்ளது. 630 மீட்டர் நீளமுள்ள ரெகுலேட்டரில் 110 மீட்டர் தொலைவுக்கு உடைந்து விழுந்துள்ளது. மதகில் ஏற்பட்ட பழுது காரணமாக உடைந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    இருப்பினும் பாதிப்புக்கான காரணம் குறித்து தொழில் நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் இறுதியிலேயே பாலம் விழுந்தமைக்கான காரணங்கள் தெரியவரும். உடைந்த மதகுகளை புனரமைக்கும் வகையில் தற்காலிக தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 2015-ம் ஆண்டு கொள்ளிடம் அணையை உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.10 கோடியில் புனரமைப்பு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது மதகின் கீழ் பகுதியில் இருந்த ஓட்டைகள் மற்றும் மணல் அடைப்புகள் போன்றவை பழுதுபார்த்து சீரமைக்கப்பட்டது. இந்த பணியின் ஒரு பகுதியாக 45 மதகுகளிலும் தலா 1.5 குதிரை சக்தி திறன் கொண்ட மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டன. இந்த மோட்டார்கள் பொருத்தப்பட்ட பின்னர் மனித ஆற்றல் மூலம் மதகுகள் ஏற்றி இறக்கப்படவில்லை. மாறாக மின்சார மோட்டார் மூலமாக மட்டுமே தானியங்கி முறையில் இயக்கப்பட்டன.

    மின்சார மோட்டாரை ‘ஆன்’ செய்யும் போது ஒருவித அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வின் காரணமாக கூட மதகின் அடிப்பகுதி நாளடைவில் பலவீனமாகி சேதம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. #MukkombuDam
    திருச்சி முக்கொம்பில் வெள்ளப்பெருக்கினால் மதகுகள் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #MukkombuDam #EdappadiPalaniswami #NewGateway
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி காவிரி முக்கொம்பு அணையில் கொள்ளிடம் பிரியும் பகுதியில் உள்ள 9 ‌ஷட்டர் மதகுகள் உடைந்துள்ளது. அதனை தற்காலிகமாக சீரமைப்பதற்காக துரிதமாக, வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களில் அந்த சீரமைப்பு பணிகள் நிறைவடையும்.

    கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி அணை உடையவில்லை சட்டர் பழுதானது. அது சரி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியை பொறுத்தவரை அதிகமான கழிவு நீர் டேமிற்குள் வந்துள்ளது. அதனால் ஏற்பட்ட அரிப்பினால் சட்டர்களில் பழுது ஏற்பட்டது. அதை மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.



    1836-ல் கட்டப்பட்ட பழமையான கதவணை கிட்டத்தட்ட 182 ஆண்டுகள் முன் கட்டப்பட்டுள்ளது. முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. கடந்த 1924, 1977, 2005 மற்றும் 2013-ல் வெள்ளம் வந்த போது, இந்த கொள்ளிடம் ஆற்றின் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது 5, 6 நாட்கள் தான் மேலணை வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    ஆனால் தற்போது முதற்கட்டமாக 8 நாட்கள் அதிக அளவிலான நீர் வெளியேறியது. அதற்கு பிறகு 2-ம் கட்டமாக 12 நாட்கள் தொடர்ந்து அதிக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதன் அழுத்தத்தினால் தற்போது இந்த அணை உடைந்துள்ளது.

    ஆண்டுதோறும் அணைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. திடீரென ஏற்படும் உடல் நலக்குறைவு போன்றது தான் இந்த உடைப்பு. இது தற்காலிகமாக ஏற்பட்ட விபத்து. இதற்கான பொறியியல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மேலணையில் இருந்து 100 மீட்டர் தள்ளி புதிய கதவணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முழுமையாக இரண்டு பக்கங்களிலும் காவிரி தவிர்த்து கொள்ளிடத்தில் மட்டும் அணை கட்டப்படும்.

    இந்த அணை ரூ.325 கோடியிலும், தெற்கு பகுதியில் உள்ள அய்யன் வாய்க்கால் அணை ரூ.85 கோடியிலும் சேர்த்து மொத்தம் ரூ.410 கோடியில் இரண்டு புதிய கதவணைகள் கட்டப்படும்.

    இந்த பணிகள் 15 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என பொறியியல் குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இதற்கான பணிகள் வேகமாகவும், துரிதமாகவும் தொடங்கப்படும்.

    இதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு அது சரிசெய்யப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். கதவணை எந்த விதத்தில் கட்டப்படும் என்று நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும். இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது.

    காவிரி கொள்ளிடத்தை விட இரண்டு அடி தாழ்வாக உள்ளது. இப்போது 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் போய்க்கொண்டிருக்கிறது. இதில் ஒன்றரை மீட்டர் தடுப்பு ஏற்படுத்துகிறார்கள். மணல் மூட்டையை வைத்து தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர், கபினி அணையில் இருந்து வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. மேட்டூருக்கு வரும் தண்ணீரானது 15 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

    அணையில் மதகுகள் உடைந்ததற்கு மணல் குவாரிகள் காரணம் அல்ல. மணல் குவாரிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. குறிப்பிட்ட தூரத்திற்கு தொலைவில்தான் மணல் குவாரிகள் இருக்கிறது. வரைமுறைக்கு உட்பட்டுதான் மணல் அள்ளப்பட்டுள்ளது. எல்லா ஆட்சிகளிலும் இப்படித்தான் மணல் அள்ளப்பட்டுள்ளது. அ.தி. மு.க. ஆட்சியில் மட்டும் தான் அள்ளப்படுகிறது என்பது தவறான கருத்து.

    இந்த மணல் அள்ளுவது படிப்படியாக குறைக்கப்படும். அதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. மணலின் செயல்பாட்டை படிப்படியாக குறைக்கும் வகையில் எம்.சாண்ட் மணல் பயன்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முக்கொம்பில் பலமிழந்த நிலையில் மேலும் பல மதகுகள் உடையும் அபாயம் இருந்ததால் முக்கொம்பு சுற்றுலா தளம் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே மேலணை மதகுகள் உடைந்த பாலம் துண்டானதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் சுமார் 50 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். #MukkombuDam #EdappadiPalaniswami #NewGateway
    முக்கொம்பு மேலணை 9 ஷட்டர்கள் நேற்றிரவு உடைந்ததால் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. இந்த முக்கொம்பு மேலணை கடந்த 6 மாதத்திற்கு முன்பே அதன் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது. #mukkombudam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு மேலணை 9 ஷட்டர்கள் நேற்றிரவு உடைந்து முழு பாலமும் தண்ணீருக்குள் விழுந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. 

    இந்த முக்கொம்பு மேலணை கடந்த 6 மாதத்திற்கு முன்பே அதன் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பே அணையின் 8-வது மதகின் இரும்பு சங்கிலி உடைந்து தொங்கியது. மதகை திறக்க பயன்படுத்தும் இந்த சங்கிலி உடைந்ததால் மதகை திறந்து அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அதிகாரிகள் சங்கிலியை மாற்றி மதகை சீரமைத்தனர். 

    அப்போதே அனைத்து மதகுகளையும் சீரமைத்திருந்தால் இந்த ஆபத்து ஏற்பட்டிருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர். #mukkombudam
    இடிந்த பகுதிகளை அகற்றிவிட்டு முக்கொம்பில் புதிய அணை கட்டவேண்டும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். #ayyakannu #mukkombu
    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்ததால் புள்ளம்பாடி, பெருவளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகள் முற்றிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அணையின் மதகுகள் உடைந்ததால் பாதிப்பில்லை என்று அதிகாரிகள் கூறுவது தவறு.

    லால்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படும். 182 ஆண்டுகள் பழமையான அணையை முறையாக பராமரிக்காததே மதகுகள் உடைய காரணமாகும். கொள்ளிடம் பழைய பாலத்தை ஆய்வு செய்து புதிய பாலம் ஏற்கனவே கட்டியிருக்க வேண்டும்.

    வாய்க்கால் சீரமைப்பு, ஆறுகள் இணைப்பு, புதிய தடுப்பணைகள் கட்டுதல், மேலணை கட்டுதல் என விவசாயிகள் சங்கம் சார்பில் அரசை பல்வேறு கால கட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். ஆனால் தமிழக அரசு அதனை பரிசீலித்து கவனிக்காமல் விட்டதே இதுபோன்ற நிகழ்வுக்கு காரணம்.

    ஜெயலலிதாஆட்சிக்காலத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்  காலத்தில்  கட்டப்பட்டிருந்த பழைய இரும்பு பாலத்தின் தூர்ந்து போன, பலவீன மடைந்த நிலையை கருத்தில் கொண்டு அதன் அருகிலேயே நேப்பியர் பாலம் வடிவில் புதிய பாலத்தை கட்டினார். அதேபோல் முக்கொம்பு பாலத்தையும் தற்போதைய தமிழக அரசு புதிதாக கட்டியிருக்க வேண்டும். எனவே இனியும் மெத்தன போக்கை காட்டாமல் மேட்டூர் அணையை போன்று சாதக, பாதகங்களை பரிசீலித்து முக்கொம்புவில் புதிய பாலத்தை கட்டவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ayyakannu #mukkombu
    முக்கொம்பு அணை, கொள்ளிடம் பாலம் உடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MukkombuDam #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்து அணைக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு திருச்சி- கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் செல்லும் சாலையை பயன்படுத்த முடியாத மோசமான நிலை உருவாகியிருக்கிறது.

    கொள்ளிடம் பாலம், தற்போது முக்கொம்பு மேலணை என்று ஒவ்வொன்றாக உடைந்து வருவது அணைகள் பாதுகாப்பு வி‌ஷயத்தில் அ.தி.மு.க அரசின் அக்கறையின்மையையும், அலட்சியத்தையும் காட்டுகிறது.



    அணைகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கிச் செலவிடுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அ.தி.மு.க அரசு, இந்த அணைகளின் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து கணித்திடத் தவறியது ஏன்? அணை சீரமைப்புப் பணிகளின் கீழ் முக்கொம்பு அணை மற்றும் கொள்ளிடம் பாலத்தின் தூண்களை முன் கூட்டியே சீரமைக்கத் தவறிய அ.தி.மு.க அரசே இந்த பாதிப்புகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண் டும்.

    ஆகவே, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அணைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கையாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்திட வேண்டும் எனவும், அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட சீரமைப்புப் பணிகளை இனியும் தாமதப்படுத்தாமல், மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் கருத்து வருமாறு:-

    கடந்த ஏப்ரலில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 சதவீதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 10-15 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

    மக்களை வெகுவாக பாதிக்கும் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MukkombuDam #MKStalin

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை விமானம் மூலம் திருச்சி சென்று முக்கொம்பில் உடைந்த கொள்ளிடம் ஆற்று பாலத்தை பார்வையிடுகிறார். #MukkombuDam #EdappadiPalaniswami
    சென்னை:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆறு கரை புரண்டு ஓடி வரும்போது அதன் வேகத்தை குறைப்பதற்காக கட்டப்பட்டுள்ள முக்கொம்பு அணையில் உள்ள 45 மதகுகளின் வழியாகத்தான் வெள்ள காலங்களில் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    182 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையில் உடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் உள்ள 6-ம் எண்ணில் இருந்து 13-ம் எண் மதகு வரை உள்ள 8 மதகுகள் திடீரென இடிந்தன. இதனால் அணைக்கட்டும், பாலத்தின் மேல் பகுதியும் அப்படியே ஆற்றுக்குள் இடிந்து விழுந்தன.

    இடிந்து விழுந்த மதகுகளின் வழியாக மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற மதகுகளில் தண்ணீர் திறந்து விடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு மதகு (14-வது மதகு) இடிந்து விழுந்தது.



    முக்கொம்பு அணையில் அணைக்கட்டுடன் கூடிய பாலத்தின் அகலம் 3 மீட்டர் ஆகும். அணைக்கட்டில் உள்ள பாலத்தின் வழியாக கார்கள் மற்றும் வேன்கள் செல்ல முடியும். திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் சாலையை அடைவதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் கரூர் சாலை பகுதியில் இருந்து திருச்சி-சேலம் சாலை வாத்தலை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் முக்கொம்பு சென்று உடைந்த கொள்ளிடம் ஆற்று பாலத்தை பார்வையிடுகிறார்.  

    முக்கொம்பில் கொள்ளிடம் பாலத்தில் உடைந்த பகுதியில் இன்று சீரமைப்பு பணிகள் தொடங்கின. இந்த பணி ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத எந்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர். #MukkombuDam #EdappadiPalaniswami

    திருச்சி முக்கொம்பு அணையின் 8 மதகுகள் நேற்று இரவு உடைந்து தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், இன்று மேலும் ஒரு மதகு உடைந்தது. #MukkombuDam
    திருச்சி:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆறு கரை புரண்டு ஓடி வரும்போது அதன் வேகத்தை குறைப்பதற்காக கட்டப்பட்டுள்ள முக்கொம்பு அணையில் உள்ள 45 மதகுகளின் வழியாகத்தான் வெள்ள காலங்களில் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    182 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையில் உடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் உள்ள 6-ம் எண்ணில் இருந்து 13-ம் எண் மதகு வரை உள்ள 8 மதகுகள் திடீரென இடிந்தன. இதனால் அணைக்கட்டும், பாலத்தின் மேல் பகுதியும் அப்படியே ஆற்றுக்குள் இடிந்து விழுந்தன.

    இடிந்து விழுந்த மதகுகளின் வழியாக மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற மதகுகளில் தண்ணீர் திறந்து விடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு மதகு (14-வது மதகு) இடிந்து விழுந்தது.



    முக்கொம்பு அணையில் அணைக்கட்டுடன் கூடிய பாலத்தின் அகலம் 3 மீட்டர் ஆகும். அணைக்கட்டில் உள்ள பாலத்தின் வழியாக கார்கள் மற்றும் வேன்கள் செல்ல முடியும். திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் சாலையை அடைவதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் கரூர் சாலை பகுதியில் இருந்து திருச்சி-சேலம் சாலை வாத்தலை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. #MukkombuDam
    முக்கொம்பு அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. #Mukkombudam
    திருச்சி:

    கர்நாடகத்தில் தொடரும் கன மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியாறு மூலம் மேட்டூர் அணைக்கு வந்தடைந்த தண்ணீரால் அடுத்தடுத்து அணை 2 முறை நிரம்பியது.

    இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அகண்ட காவிரி என்று அழைக்கப்படும் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தண்ணீர் தொட்டு கரைபுரண்டு செல்கிறது.

    தொடர்ந்து அந்த தண்ணீர் நேற்று கரூர் மாவட்டத்தை வந்தடைந்தது. இதனால் ஆற்றில் உள்ள நீரேற்று நிலையங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் 1 லட்சத்து 56 ஆயிரம் கன அடி தண்ணீருடன், பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் 50 ஆயிரம் கனஅடி நீர் ஈரோடு அருகே காவிரியில் கலக்கிறது.

    அதேபோல் திருப்பூரில் உள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒன்று சேர்ந்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் கலக்கிறது. இதன்மூலம் மாயனூர் கதவணைக்கு 2 லட்சத்து 28 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வரத்து உள்ளது. அங்கிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்கால்களிலும் 3 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    முக்கொம்பு மேலணைக்கு தண்ணீர் வரத்து ஒரு லட்சத்து 97 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதில் காவிரி ஆற்றில் 50 ஆயிரத்து 146 கனஅடியும், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. கிளை வாய்க்கால்களில் 2 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    திருச்சி காவிரி ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்ற காட்சி

    2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கம்பரசம்பேட்டை தடுப்பணை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கொள்ளிடத்தை பொறுத்தவரை ஒரு லட்சம் கனஅடியை தாண்டி தண்ணீர் செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அங்கிருந்து 1 லட்சத்து 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் முழுவதுமாக கடலில் சென்று கலக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு கீழணையில் இருந்த இவ்வளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும்.  #Mukkombudam
    ×