search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கொம்பு மேலணையில் உடைப்பு - முதல்வரிடம் பொதுப்பணித்துறை அறிக்கை
    X

    முக்கொம்பு மேலணையில் உடைப்பு - முதல்வரிடம் பொதுப்பணித்துறை அறிக்கை

    முக்கொம்பு மேலணை உடைந்த விதம் குறித்து தமிழக முதல்வரிடம் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. #MukkombuDam
    திருச்சி:

    பொதுப்பணித்துறையினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

    வரலாறு காணாத வகையில் வெள்ளம் வந்த சூழலிலும், 1924-ம் ஆண்டு, 1977, 2005, 2013-ம் ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களிலும் கொள்ளிடத்தில் 1.75 கனஅடியும், காவிரியில் 67ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேலும் கர்நாடக அணைகளில் இப்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உபரி நீர் திறந்து விடப்பட்ட சூழலில் கொள்ளிடத்தில் 2.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைகளிலும் மேட்டூர் அணையில் இருந்து 177 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கொம்பு மேலணை ஸ்திரத்தன்மையுடனேயே இருந்து வந்துள்ளது.

    6 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட தூண்களுடன் 45 மதகுகுள் கொண்ட இந்த அணை வழியாகவே கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.



    காவிரியில் அதிகமாக வெள்ளம் வந்தாலும் முக்கொம்பு வந்தவுடன் மேலணை, கீழணை என இரு பகுதியாக இருப்பதால், இயல்பாகவே காவிரியில் தான் அதிக அளவு தண்ணீர் செல்லும். ஏனெனில் கொள்ளிடத்தை விட 2 அடிக்கு மேல் கீழே உள்ளது காவிரி. எனவே முதலில் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுக்கும்.

    மேலணையில் மேல் பகுதியில் 1846-ல்தான் பாதை அமைத்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அதிகளவு தண்ணீர் வந்த சூழலிலும் உடையாத மதகுகள் 22-ந்தேதி இரவு கொள்ளிடத்தில் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையிலும், அதன் தொடர்ச்சியாக 33 ஆயிரம் என அதிகரித்த நிலையிலும் உடைந்துள்ளது. 630 மீட்டர் நீளமுள்ள ரெகுலேட்டரில் 110 மீட்டர் தொலைவுக்கு உடைந்து விழுந்துள்ளது. மதகில் ஏற்பட்ட பழுது காரணமாக உடைந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    இருப்பினும் பாதிப்புக்கான காரணம் குறித்து தொழில் நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் இறுதியிலேயே பாலம் விழுந்தமைக்கான காரணங்கள் தெரியவரும். உடைந்த மதகுகளை புனரமைக்கும் வகையில் தற்காலிக தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 2015-ம் ஆண்டு கொள்ளிடம் அணையை உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.10 கோடியில் புனரமைப்பு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது மதகின் கீழ் பகுதியில் இருந்த ஓட்டைகள் மற்றும் மணல் அடைப்புகள் போன்றவை பழுதுபார்த்து சீரமைக்கப்பட்டது. இந்த பணியின் ஒரு பகுதியாக 45 மதகுகளிலும் தலா 1.5 குதிரை சக்தி திறன் கொண்ட மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டன. இந்த மோட்டார்கள் பொருத்தப்பட்ட பின்னர் மனித ஆற்றல் மூலம் மதகுகள் ஏற்றி இறக்கப்படவில்லை. மாறாக மின்சார மோட்டார் மூலமாக மட்டுமே தானியங்கி முறையில் இயக்கப்பட்டன.

    மின்சார மோட்டாரை ‘ஆன்’ செய்யும் போது ஒருவித அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வின் காரணமாக கூட மதகின் அடிப்பகுதி நாளடைவில் பலவீனமாகி சேதம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. #MukkombuDam
    Next Story
    ×