search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கொம்பு அணை உடைந்ததற்கு பராமரிப்பு இல்லாததே காரணம் - வைகோ
    X

    முக்கொம்பு அணை உடைந்ததற்கு பராமரிப்பு இல்லாததே காரணம் - வைகோ

    திருச்சி முக்கொம்பு அணை உடைந்ததற்கு பராமரிப்பு இல்லாததே காரணமாகும். தமிழக அரசு அனைத்து அணைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். #MukkombuDam #Vaiko
    நெல்லை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரள வெள்ளப் பாதிப்பிற்கு தமிழக மக்கள் பேருதவி செய்துள்ளனர். தமிழர்களின் மனிதநேயம் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக உள்ளது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு ம.தி.மு.க. சார்பாக ரூ.10 லட்சம் திரட்டி வழங்க இருக்கிறோம். திருச்சி முக்கொம்பு அணை உடைந்ததற்கு பராமரிப்பு இல்லாததே காரணமாகும். தமிழக அரசு அனைத்து அணைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும். ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் அணை கட்ட அறிவித்துள்ளனர். ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்த போது திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

    ஈரோட்டில் செப்டம்பர் 15-ந்தேதி ம.தி.மு.க. சார்பாக மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக 2 மாதத்திற்கு முன்பே சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் தி.மு.க. கட்சி கூட்டத்தை கூட்டி பல முடிவுகள் எடுக்க இருப்பதால் ம.தி.மு.க. மாநாட்டிற்கு வர முடியாத நிலை இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.



    வருகிற 28-ந்தேதி நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்படலாம். ம.தி.மு.க. மாநாட்டில் கருணாநிதி படம் திறக்கப்படுகிறது.

    இதனை துரைமுருகன் திறந்து வைக்கிறார். மாநாட்டில் பினாங்கு துணை முதல்-அமைச்சர் ராமசாமி, தி.க. தலைவர் கி.வீரமணி, காஷ்மீர் முன்னாள் முதல்-அமைச்சர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், யஷ்வன்சின்கா மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த மாநாடு ம.தி.மு.க.வினருக்கு உந்துதலை ஏற்படுத்தும். திராவிட இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு வைகோ பதில் அளித்தார்:-

    கே: கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுமா?

    ப: பெரிய தலைவர்களுக்கு புகழஞ்சலி நடக்கும் கூட்டத்தில் இதுபோல் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. கருணாநிதிக்கு அளிக்கும் புகழஞ்சலி அரசியல் எல்லைகளை கடந்தது. இது ஆரோக்கியமான அரசியல் ஆகும். எனவே இதை வேறு விதமாக பார்க்கக்கூடாது.

    கே: அ.தி.மு.க.வை கூட்டத்திற்கு அழைக்கவில்லையே?

    ப: கடற்கரையில் அண்ணா சமாதியில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க கோரிக்கை விடுத்தபோது அவர்கள் அதை உதாசனப்படுத்தினார்கள். பின்னர் நீதிமன்றத்தை அணுகி தங்களுக்கான உரிமைகளை பெற்றனர். இது தமிழக மக்கள் மனதிலேயே காயத்தை ஏற்படுத்தியது.

    இதனால் அ.தி.மு.க.வை அழைக்காமல் இருந்திருக்கலாம்.

    கே: கேரள வெள்ளம் ஏற்பட்டதற்கு தமிழகம் தான் காரணம் என்று கேரள முதல்வர் கூறியுள்ளாரே?

    ப: கேரளாவில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகுதான் முல்லை பெரியாறு அணை நிரம்பியது. மற்ற அணைகள் திறக்கப்பட்ட பிறகே முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டது. அதுவும் அணையில் இருந்து 1½ டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது. எனவே கேரள வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணை திறப்பு காரணம் அல்ல.

    மழை வெள்ளத்தில் துன்பப்படும் இந்த நேரத்தில் இதை பெரிதுபடுத்த வேண்டாம். கேரள வெள்ளத்தில் நம்மால் பாதிப்பு ஏற்படவில்லை.

    கே: ஜெயலலிதா மறைந்தபோது அ.தி.மு.க. பிரச்சினை ஏற்பட்டது போல், கருணாநிதி மரணத்தை தொடர்ந்து தி.மு.க.வில் பிரச்சினை ஏற்படுவது போல் உள்ளதே?

    ப: தி.மு.க. மிகவும் கவனமாக செல்கிறது. அங்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MukkombuDam #Vaiko
    Next Story
    ×