search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணி நடைபெற்று வரும் காட்சி.
    X
    மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணி நடைபெற்று வரும் காட்சி.

    முக்கொம்பு தற்காலிக தடுப்பணை கட்டும் பணியில் 300 ஊழியர்கள்

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் இடிந்த மதகுகள் இருந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணிகளில் 300 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #Mokkumbudam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் இடிந்ததை தொடர்ந்து நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை பார்வையிட்டார். தற்காலிகமாக இடிந்த 9 மதகுகளுக்கு பதில் அதே இடத்தில் ரூ.95 லட்சத்தில் தற்காலிக தடுப்பணை கட்டவும், பழைய அணையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ரூ.410 கோடியில் புதிய கொள்ளிடம் அணை கட்டவும் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் பொதுப் பணித்துறை அதிகாரிகள், நிபுணர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் முதலமைச்சரிடம் தாக்கல் செய்கிறார்கள். அதன் பிறகு டெண்டர் விடப்பட்டு புதிய அணை கட்டும் பணிகள் தொடங்கும் என கூறப்படுகி றது.

    இதற்கிடையே இடிந்த மதகுகள் இருந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணிகளில் பொதுப்பணித் துறையினர் இன்று 2-வது நாளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மதகு இடிந்த பகுதியில் 3 மீட்டர் அகலத்தில் 110 மீட்டர் நீளத்திற்கு 5 ஆயிரம் சவுக்குகள் கட்டப்பட்டு 1 லட்சம் மணல் மூட்டைகள் சுவர் போன்று அமைக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி முக்கொம்பில் இடுப்பளவு தண்ணீரில் நின்று தடுப்பணை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.



    இதற்காக 300 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 ஊழியர்கள் சாக்குகளில் மணல்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 பேர் அவற்றை சுமந்து அணைகட்டும் பகுதிக்கு கொண்டு செல்லும் பணியிலும் மற்ற 100 ஊழியர்கள் தடுப்பணை கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டவுடன் அவை வெள்ளத்தில் பாதிப்படையாமல் இருக்க அதன் பக்கவாட்டில் கான்கிரீட் மூலம் சுவர் எழுப்புவதா? அல்லது பெரிய பாறாங்கற்கள் நிரப்பி அவை சரியாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்வதா? என அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

    இந்த பணிகளை 4 நாட்களுக்குள் முடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதால் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி புதன்கிழமைக்குள் தற்காலிக தடுப்பணை சீரமைப்பு பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது.

    தற்போது மேட்டூர் அணையில் இருந்து திருச்சி காவிரி ஆற்றிற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. அணை மதகு பகுதியில் இடுப்பளவு தண்ணீர் உள்ளது. அதில் இறங்கி தொழிலாளர்கள் தடுப்பணை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் தற்போது மழை இல்லை நேற்று திருச்சியில் மாலை முதல் இரவு வரை மழை பெய்தது. இது தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை அச்சப்படுத்தியது. ஆனால் லேசான தூரலுடன் மழை நின்று விட்டது. இருப்பினும் வரும் நாட்களில் மழை இல்லாதிருந்தால் தான் தடுப்பணை சீரமைப்பு பணிகள் பிரச்சனை இருக்காது திட்டமிட்டபடி பணிகள் நடைபெறும்.  #Mokkumbudam
    Next Story
    ×