search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Azhagiri"

    செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதி பேரணி குறித்து திருச்சியில் அழகிரி ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
    திருச்சி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு செப்டம்பர் 5-ந் தேதி அமைதி பேரணி நடத்தப்படும் என்றும், அந்த பேரணியில் கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் தன் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபித்து காட்டுவேன் என்றும் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி கூறினார். இதையடுத்து நேற்று மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்தநிலையில் திருச்சியில் அழகிரியின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர முன்னாள் தி.மு.க. பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் சங்கர்கணேஷ், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறுகையில், "வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அழகிரியை கட்சியில் சேர்த்து அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் தலைவர் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைபெறும் பேரணியில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் பங்கேற்பது என முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார். 
    சென்னையில் 5-ந்தேதி நடைபெற உள்ள அமைதி பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மு.க. அழகிரி தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். #MKAzhagiri #Karunanidhi
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வில் முக்கிய பதவி கேட்டு முன்னாள் மத்திய மந்திரியும், தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளருமான மு.க. அழகிரி திடீர் போர்க்கொடி தூக்கி வருகிறார். கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க. அழகிரி, தந்தை கூறும் போது எனது மனக்குமுறல்களை வெளியிடுவேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 5-ந் தேதி சென்னை திருவல்லிக் கேணியில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க. அழகிரி ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி செல்கிறார். இதில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடம் மு.க. அழகிரி ஆதரவு திரட்டி வருகிறார்.


    மேலும் தி.மு.க.வில் உள்ள மு.க. ஸ்டாலின் அதிருப்தியாளர்களையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் மு.க. அழகிரி ஈடுபட்டுள்ளார்.

    அமைதி பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மு.க. அழகிரி மதுரை சத்தியசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், வருகிற 5-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள அமைதி பேரணிக்கு அனைவரும் திரண்டு வரவேண்டும். இதில் பங்கேற்பவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரவேண்டும், மேலும் கருணாநிதி உருவப்படத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி வரவேண்டும். அமைதி பேரணி மிக அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

    பின்னர் நிர்வாகிகளிடம் ஒவ்வொருவரும் எத்தனை பேரை அமைதி பேரணிக்கு அழைத்து வருகிறீர்கள் என்ற விவரங்களை மு.க. அழகிரி கேட்டறிந்தார்.

    இந்த ஆலோசனையில் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்ஷா, முன்னாள் துணை மேயர் மன்னன், நிர்வாகிகள் சின்னான், முபாரக் மந்திரி, உதயகுமார், கோபிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.

    அமைதி பேரணி நடந்து முடிந்ததும் அடுத்த கட்டமாக முக்கிய நடவடிக்கையிலும் மு.க. அழகிரி ஈடுபடுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    மு.க.அழகிரி தனது வீட்டு முன்பு போடப்பட்ட பந்தலில் அமர்ந்து தொண்டர்களை சந்தித்தார்.

    அப்போது ‘‘அஞ்சா நெஞ்சன் வாழ்க, கலைஞரின் வாரிசே வாழ்க’’ என்று தொண்டர்கள் கோ‌ஷம் எழுப்பினர். #MKAzhagiri #Karunanidhi #MKStalin #DMK
    ராசிபுரத்தில் திருமண விழாவிற்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியிடம் தனிக்கட்சி தொடங்க திட்டமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். #DMK #MKAzhagiri #MKStalin #Karunanidhi
    ராசிபுரம்:

    ராசிபுரத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. விவசாய அணி செயலாளருமான கே.பி.ராமலிங்கத்தின் இல்லத் திருமண விழாவிற்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    கேள்வி:- சென்னையில் நடைபெறும் பேரணி எந்த அளவிற்கு வெற்றி தரும்?

    பதில்:- இந்த பேரணி வருங்காலத்தில் நிச்சயமாக எங்களுக்கு வெற்றியை தரும்.

    கே:- தி.மு.க தலைவராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?

    ப:- தி.மு.க.வை பற்றி தன்னிடம் கேட்காதீர்கள், தற்போது தி.மு.க.வில் நான் இல்லை.

    கே.:- உங்களின் அடுத்தக் கட்ட முயற்சி என்ன?

    ப:- நான் ஏற்கனவே சொன்னதை போல எனது ஆதரவாளர்கள் மற்றும் கருணாநிதியின் உண்மை விசுவாசிகளிடம் கலந்து பேசி மேற்கொண்டு என்ன செய்வது என முடிவு எடுப்போம்.

    கே.:- தனிக்கட்சி தொடங்குவீர்களா?

    ப:- அது பற்றி இப்போது சொல்ல முடியாது.

    கே:- உங்களின் ஆதங்கத்தை எப்போது சொல்வீர்கள்?

    ப:- அதற்கெல்லாம் காலம் வரும். அப்போது பதில் சொல்வேன்.


    கே:- கருணாநிதி தலைவராக இருந்த இடத்தில் மற்றொருவரை நீங்கள் ஏற்று கொள்வீர்களா?

    ப:- பிறகு பேசி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKAzhagiri #MKStalin #Karunanidhi
    தி.மு.க.வில் தொலைத்த முகவரியை மு.க. அழகிரி தேடுகிறார் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். #TNMinister #Udhayakumar #DMK #MKAzhagiri
    மதுரை:

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மு.க.அழகிரி தி.மு.க.வில் முகவரி இல்லாமல் இருக்கிறார். தி.மு.க.வில் அடைக்கப்பட்ட ததவுகளை திறக்கவே அழகிரி தொண்டர்களை சந்திக்கிறார்.

    2011-க்கு பிறகு அ.தி.மு.க. இருக்காது என்று கூறிய அழகிரி தி.மு.க.விலேயே காணாமல் போய்விட்டார். அவர் உருவாக்கிய திருமங்கலம் பார்முலாவும் காணாமல் போய் விட்டது.


    ரஜினிகாந்த் மேடைக்கு தகுந்தாற்போல் ஆட்டம் ஆடுபவர். அதனால் தான் கலைஞர் இரங்கல் கூட்டத்தில் முதல்வரை விமர்சித்தும், எம்.ஜிஆர். மற்றும் கலைஞர் படங்களை ஒரே மேடையில் வைக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

    தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதி.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #TNMinister #Udhayakumar #DMK #MKAzhagiri
    சென்னையில் 5-ந்தேதி நடைபெறும் அமைதி பேரணிக்கு தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை எனவும் தி.மு.க.வில் தொண்டர்கள்தான் தலைவர்கள் என்றும் மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAzhagiri #Karunanidhi
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மரணத்திற்கு பிறகு தி.மு.க.வில் மு.க.அழகிரி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது மு.க.அழகிரி, உண்மையான தி.மு.க. தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் தி.மு.க.வில் முக்கிய பதவியை கேட்ட மு.க.அழகிரியின் விருப்பம் மேலிட தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தி.மு.க.வில் உள்ள மு.க.ஸ்டாலினின் அதிருப்தியாளர்கள் மற்றும் தனது ஆதரவாளர்கள் துணையோடு சென்னையில் வருகிற 5-ந்தேதி கருணாநிதி நினைவு அமைதி பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக தமிழகம் முழுவதும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், தொண்டர்களை திரட்டும் வகையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மு.க.அழகிரி நடத்தும் பேரணியில் தி.மு.க.வினர் யாரும் பங்கேற்ககூடாது என்பதில் தி.மு.க. தலைமையும் உறுதியாக இருப்பதால் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகளிடம் மு.க.அழகிரியின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக சென்னையில் தங்கி இருந்த மு.க.அழகிரி நேற்று இரவு மதுரை வந்தார். அவரை விமான நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணை மேயர் மன்னன், நிர்வாகிகள் சின்னான், முபாரக்மந்திரி, கோபிநாதன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

    தலைவர் கலைஞரின் நினைவைபோற்றும் வகையில் சென்னையில் வருகிற 5-ந்தேதி அமைதி பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணிக்காக அண்ணா சாலையில் இருந்து அனுமதி கேட்டோம். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக போலீசார் திருவல்லிக்கேணியில் இருந்து பேரணி நடத்த கூறி உள்ளனர்.

    இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். என்னை தி.மு.க.வில் இணைப்பதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.


    தலைவர் கலைஞர் என்னிடம் எப்போது கூறுகிறாரோ? அப்போது எனது மனக்குமுறலை மக்களிடம் கூறுவேன். சென்னையில் நடைபெறும் அமைதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மு.க.ஸ்டாலின் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது பேரணி பற்றி பேசி கொண்டு இருக்கும்போது ஊரணி பற்றி கேள்வி கேட்கக்கூடாது என்று மு.க.அழகிரி கூறினார்.

    மதுரையில் இன்று மு.க.அழகிரி அமைதி பேரணி தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்களிடம் செல்போன் மூலம் பேசி பேரணியில் பங்கேற்கும்படி மு.க.அழகிரி அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    ஆலோசனை கூட்டம் முடிந்ததும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உடையனம்பட்டியில் உள்ள முத்துஇருளப்பன் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மு.க.அழகிரி புறப்பட்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, சென்னையில் 5-ந்தேதி நடைபெறும் பேரணியில் கலைஞரின் உண்மையான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். அமைதி பேரணிக்கு தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. தி.மு.க.வில் தொண்டர்கள்தான் தலைவர்கள் என்றார். #DMK #MKAzhagiri #Karunanidhi
    மு.க.அழகிரியின் திறமை தனக்கு தெரியும் என்றும் ரஜினிகாந்த் அரசியல் முதிர்ச்சியற்றவர் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #TNMinister #SellurRaju #DMK #MKAzhagiri
    மதுரை:

    தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசியலில் புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு யார், யாரெல்லாமோ அரசியல் பேசுகிறார்கள். கருத்து தெரிவிக்கிறார்கள்.

    அதில் முக்கியமான நபர் நடிகர் ரஜினிகாந்த். அவர் அ.தி.மு.க.வுடன், தி.மு.க.வை ஒப்பிட்டு தெரிவித்து வரும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.

    சினிமாவில் அவரது வசனம் எடுபடும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவரது வசனம் காமெடியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. தொண்டர்களும், தி.மு.க. தொண்டர்களும் எப்போதுமே மாறுபட்ட கருத்துக்களை கொண்டவர்கள். இரு கட்சிகளுக்கும் வெவ்வேறு கொள்கைகள் உள்ளன.

    தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சந்திரன்-சூரியன் போன்றது. எம்.ஜி.ஆர். மீது தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் கருணாநிதி ஈடுபட்டதின் காரணமாகவே அ.தி.மு.க. உருவானது.


    இந்த வரலாறு தெரியாமல் தி.மு.க.வால், அ.தி.மு.க. உருவானதாக ரஜினிகாந்த் கூறி வருவது ஏற்புடைய கருத்து அல்ல.

    ஸ்டெர்லைட் பிரச்சனையில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று இறங்கினால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்று ரஜினி கூறினார். ஆனால் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்திருக்காவிட்டால் நானே போராடி இருப்பேன் என்கிறார்.

    நேரத்துக்கு நேரம் மாறுபட்டு பேசி வரும் ரஜினி அரசியலில் ஒரு முதிர்ச்சியற்ற நபராகவே பார்க்கப்படுகிறார். அவரது பேச்சுக்கள் அரசியலுக்கு உகந்ததாக தெரியவில்லை. இதை மக்களும் ஏற்க மாட்டார்கள்.

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி மறைந்தபோது அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தி.மு.க. கோரிக்கை வைத்தது. ஆனால் சட்ட சிக்கல்கள் இருந்ததால் இடம் ஒதுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து தொடரப்பட்ட 2 வழக்குகள் உள்பட 5 வழக்குகள் நிலுவையில் இருந்தன.

    ஆனால் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இரவோடு இரவாக 5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது.

    இதில் இருந்தே உள்நோக்கத்தோடு வழக்குகளை தி.மு.க.வினர் தாக்கல் செய்திருப்பது தெரிந்துவிட்டது.

    கருணாநிதிக்கு ஒரு நியாயம், ஜெயலலிதாவுக்கு ஒரு நியாயம் என்று தி.மு.க.வினர் அளவுகோல் வைத்து செயல்படுகிறார்கள்.

    தி.மு.க. போட்ட பொய் வழக்குகளில் சட்ட போராட்டம் நடத்தி நிரபராதி என்று நிரூபித்து காட்டியவர் ஜெயலலிதா. அவரது துணிச்சல், திறமை, வழிகாட்டுதலோடு அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ஆனால் எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற மு.க.ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியலை நடத்தி வருகிறார்.

    கருணாநிதியின் மறைவை வைத்து மக்களிடம் அ.தி.மு.க. அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

    கருணாநிதியின் இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தை ஒதுக்கித்தந்தது அ.தி.மு.க. அரசு. 7 நாட்கள் துக்கம் கடைப்பிடித்ததுடன் உரிய அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு இந்த அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளது. இதை மக்கள் நன்கு அறிவார்கள்.

    கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வில் சகோதர யுத்தம் தொடங்கி உள்ளது. இந்த யுத்தம் தி.மு.க.வில் நிச்சயம் பிளவை ஏற்படுத்தும்.

    மு.க.அழகிரியின் அரசியல் பணி குறித்து எனக்கு நன்றாக தெரியும். அவரது திறமை, ஆற்றல், தேர்தலில் பணியாற்றும் வியூகம் ஆகியவற்றை மதுரையில் இருந்து நான் பார்த்து இருக்கிறேன்.

    எனவே தி.மு.க.வில் என்னென்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #TNMinister #SellurRaju #DMK #MKAzhagiri
    தேர்தல்களை திசை திருப்பும் வல்லமை மிக்கவர் மு.க.அழகிரி என்று திருவண்ணாமலை சுற்றுலா மாளிகையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan #MKAzhagiri #DMK
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார்.

    இதையடுத்து இன்று காலை திருவண்ணாமலை சுற்றுலா மாளிகையில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி அரசு நாட்டில் மிகப்பெரிய மாற்றம், வளர்ச்சிக்கான உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக வளர்ச்சியில் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் செயல்படுத்தியதை விட அதிக திட்டங்களை தமிழகத்துக்கு தந்து கொண்டே இருக்கிறார்.

    பாலாறு-தென் பெண்ணை ஆறு இணைப்பு திட்டத்துக்கு மோடி அரசு ரூ.648 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்காக தமிழக மக்களாகிய நாம் பிரதமர் மோடிக்கு நன்றிக்கடன் செலுத்த கடமை பட்டிருக்கிறோம். நரேந்திர மோடிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.


    மு.க.அழகிரி தி.மு.க. தலைவர் கருணாதியின் மூத்த மகன். தி.மு.க. வளர்ச்சியில் அதிகம் பங்காற்றியவர். பல இடைத்தேர்தல், பொதுத் தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றி பெற செய்தவர். தேர்தலை திசை திருப்பும் வல்லமை மிக்கவர் மு.க.அழகிரி. தி.மு.க.வினர் இதனை கவனிப்பார்கள்.

    மு.க.ஸ்டாலின் மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக இருந்தவர். கனிமொழி எம்.பி.யாக திறம்பட செயல்படுகிறார். ஆகவே தி.மு.க.வில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு எடுப்பார்கள். எந்த கட்சியையும் உடைக்கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு கிடையாது.

    ஜனநாயக முறையில் பா.ஜனதா வளர்ச்சி நோக்கி அடியெடுத்து வைக்கும். தமிழகத்தில் முதல் நிலைக்கு வரும். வருகிற தேர்தலில் பா.ஜ.க. அமைப்பது முதன்மையான வெற்றிக் கூட்டணியாக அமையும்.

    பதக்கம், விருது தருவதால், சிலை வைப்பதால் தலைவர்கள் கவுரவபடுத்தப்படுவார்கள் என்றில்லை. தலைவர்கள் செய்த நன்மைகளை எடுத்து கொண்டு அதன் வழி நடக்க வேண்டும்.

    கருணாநிதி இறுதி சடங்கில் பங்கேற்ற அமைச்சரின் கார் கண்ணாடி சேதபடுத்தப்பட்டது. அது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கவே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருணாநிதி இறுதி சடங்கில் பங்கேற்காமல் இருந்திருக்கலாம்.

    அ.தி.மு.க., தி.மு.க. பகைமைதான் அவர்களுக்கு பலமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #MKAzhagiri #DMK
    சூரியன் மறைந்ததும் வானில் பல நட்சத்திரங்கள் தோன்ற முயற்சிப்பதாகவும் அதில் ஜொலிக்கப் போகும் நட்சத்திரத்தை பொருத்திருந்து பார்ப்போம் என்றும் தமிழிசை கூறினார். #BJP #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க.வில் மு.க.அழகிரி போர்க்கொடி தூக்கி இருப்பது பற்றி பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நானும் செய்திகளில் படித்தேன். அது அவர்கள் உள்கட்சி பிரச்சனை. ஆனால் ஒரு சூரியன் மறைந்ததும் வானில் பல நட்சத்திரங்கள் தோன்ற முயற்சிக்கின்றன. அதில் ஜொலிக்கப் போகும் நட்சத்திரத்தை பொருத்திருந்து பார்ப்போம்.

    பொதுவாக மிகப்பெரிய தலைவர்கள் எல்லோருமே உள்கட்சி பூசலை வலுவிழக்க செய்யும் வலுவான தலைவர்களாக இருந்தார்கள்.


    கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரிய தலைவர்கள் இல்லாததால் தமிழக அரசியல் களம் மாறுபட்ட அரசியல் களமாக இதுவரை பார்த்திராத களமாகத்தான் இருக்கும்.

    ஒரு தலைவர் இல்லாததால் ஏற்படும் வெற்றிடத்தில் இருந்து வெற்றிடத்தை பெற வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை. வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை செய்து வருகிறோம்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக 20 தலைவர்கள் இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். நான் இன்று ராமநாதபுரம் மாவட்டம் செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #DMK #MKAzhagiri
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் தன் பக்கம் இருப்பதாக மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். #MKAzhagiri #Karunanidhi #DMK
    சென்னை:

    மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்தில் அவரது மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி இன்று காலை 11 மணியளவில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

    அவருடன் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    மு.க.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் மலர் வளையம் வைத்தும் வணங்கினார். பின்னர் சமாதியை சுற்றி வந்து வணங்கினார்.

    அதன்பிறகு மு.க.அழகிரி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் என் அப்பாவிடம் வந்து எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது தெரியாது. தலைவர் கலைஞருடைய உண்மையான விசுவாசம் உள்ள உடன்பிறப்புக்கள் எல்லோரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விசுவாசிகளும் என்னுடன் இருக்கிறார்கள். என்னை ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும்.

    கே:- உங்களது ஆதங்கம் கட்சி தொடர்பானதா? அல்லது குடும்பம் தொடர்பானதா?

    ப:- கட்சி தொடர்பானது தான்.



    கே:- நாளை நடைபெற உள்ள தி.மு.க. தலைமை செயற்குழு பற்றி உங்கள் கருத்து என்ன?

    ப:- அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. செயற்குழு பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நான் இப்போது தி.மு.க.வில் இல்லை. அதனால் செயற்குழு பற்றி கேட்காதீர்கள்.

    கே:- மீண்டும் நீங்கள் தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா?

    ப:- அதுபற்றி எனக்கு தெரியாது. எனது ஆதங்கத்தை கலைஞரிடம் சொல்லி இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டி முடிந்த போது, ‘அஞ்சா நெஞ்சன் அழகிரி’ என்று தொண்டர்கள் கோ‌ஷமிட்டனர்.

    அழகிரி அஞ்சலி செலுத்த வருவதை அறிந்து மதுரையில் இருந்து ஏராளமான அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்திற்கு வந்திருந்தனர்.

    அஞ்சலி செலுத்திய பிறகு அழகிரி நேராக கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு அப்போது மு.க.ஸ்டாலின் இருந்ததால் சிறிது நேரத்தில் அழகிரி அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.#MKAzhagiri #Karunanidhi #DMK
    மேலூர் அருகே தேர்தல் பிரசாரத்தின் போது அதிகாரியை தாக்கியதாக மு.க.அழகிரி மீதான வழக்கு விசாரணை ஆகஸ்டு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
    மேலூர்:

    கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள ஏழை காத்தஅம்மன் கோவில் அருகில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் தி.மு.க.வினர் ஓட்டு சேகரித்தனர்.

    அப்போது அங்கு தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய காளிமுத்து தன்னை மு.க.அழகிரி, முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட தி.மு.க.வினர் தாக்கியதாக கீழவளவு போலீசில் புகார் செய்தார்.

    இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று நீதிபதி பழனிகுமார் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

    இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 12 பேர் ஆஜரானார்கள். மு.க.அழகிரி, பி.எம்.மன்னன் உள்ளிட்ட 9 பேர் ஆஜராகவில்லை.

    இதைத் தொடர்ந்து நீதிபதி பழனிகுமார் வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    ×