search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வில் தொண்டர்கள் தான் தலைவர்கள்- முக அழகிரி
    X

    தி.மு.க.வில் தொண்டர்கள் தான் தலைவர்கள்- முக அழகிரி

    சென்னையில் 5-ந்தேதி நடைபெறும் அமைதி பேரணிக்கு தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை எனவும் தி.மு.க.வில் தொண்டர்கள்தான் தலைவர்கள் என்றும் மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAzhagiri #Karunanidhi
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மரணத்திற்கு பிறகு தி.மு.க.வில் மு.க.அழகிரி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது மு.க.அழகிரி, உண்மையான தி.மு.க. தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் தி.மு.க.வில் முக்கிய பதவியை கேட்ட மு.க.அழகிரியின் விருப்பம் மேலிட தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தி.மு.க.வில் உள்ள மு.க.ஸ்டாலினின் அதிருப்தியாளர்கள் மற்றும் தனது ஆதரவாளர்கள் துணையோடு சென்னையில் வருகிற 5-ந்தேதி கருணாநிதி நினைவு அமைதி பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக தமிழகம் முழுவதும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், தொண்டர்களை திரட்டும் வகையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மு.க.அழகிரி நடத்தும் பேரணியில் தி.மு.க.வினர் யாரும் பங்கேற்ககூடாது என்பதில் தி.மு.க. தலைமையும் உறுதியாக இருப்பதால் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகளிடம் மு.க.அழகிரியின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக சென்னையில் தங்கி இருந்த மு.க.அழகிரி நேற்று இரவு மதுரை வந்தார். அவரை விமான நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணை மேயர் மன்னன், நிர்வாகிகள் சின்னான், முபாரக்மந்திரி, கோபிநாதன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

    தலைவர் கலைஞரின் நினைவைபோற்றும் வகையில் சென்னையில் வருகிற 5-ந்தேதி அமைதி பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணிக்காக அண்ணா சாலையில் இருந்து அனுமதி கேட்டோம். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக போலீசார் திருவல்லிக்கேணியில் இருந்து பேரணி நடத்த கூறி உள்ளனர்.

    இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். என்னை தி.மு.க.வில் இணைப்பதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.


    தலைவர் கலைஞர் என்னிடம் எப்போது கூறுகிறாரோ? அப்போது எனது மனக்குமுறலை மக்களிடம் கூறுவேன். சென்னையில் நடைபெறும் அமைதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மு.க.ஸ்டாலின் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது பேரணி பற்றி பேசி கொண்டு இருக்கும்போது ஊரணி பற்றி கேள்வி கேட்கக்கூடாது என்று மு.க.அழகிரி கூறினார்.

    மதுரையில் இன்று மு.க.அழகிரி அமைதி பேரணி தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்களிடம் செல்போன் மூலம் பேசி பேரணியில் பங்கேற்கும்படி மு.க.அழகிரி அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    ஆலோசனை கூட்டம் முடிந்ததும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உடையனம்பட்டியில் உள்ள முத்துஇருளப்பன் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மு.க.அழகிரி புறப்பட்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, சென்னையில் 5-ந்தேதி நடைபெறும் பேரணியில் கலைஞரின் உண்மையான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். அமைதி பேரணிக்கு தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. தி.மு.க.வில் தொண்டர்கள்தான் தலைவர்கள் என்றார். #DMK #MKAzhagiri #Karunanidhi
    Next Story
    ×