search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கம்- மு.க.அழகிரி பேட்டி
    X

    கருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கம்- மு.க.அழகிரி பேட்டி

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் தன் பக்கம் இருப்பதாக மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். #MKAzhagiri #Karunanidhi #DMK
    சென்னை:

    மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்தில் அவரது மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி இன்று காலை 11 மணியளவில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

    அவருடன் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    மு.க.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் மலர் வளையம் வைத்தும் வணங்கினார். பின்னர் சமாதியை சுற்றி வந்து வணங்கினார்.

    அதன்பிறகு மு.க.அழகிரி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் என் அப்பாவிடம் வந்து எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது தெரியாது. தலைவர் கலைஞருடைய உண்மையான விசுவாசம் உள்ள உடன்பிறப்புக்கள் எல்லோரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விசுவாசிகளும் என்னுடன் இருக்கிறார்கள். என்னை ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும்.

    கே:- உங்களது ஆதங்கம் கட்சி தொடர்பானதா? அல்லது குடும்பம் தொடர்பானதா?

    ப:- கட்சி தொடர்பானது தான்.



    கே:- நாளை நடைபெற உள்ள தி.மு.க. தலைமை செயற்குழு பற்றி உங்கள் கருத்து என்ன?

    ப:- அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. செயற்குழு பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நான் இப்போது தி.மு.க.வில் இல்லை. அதனால் செயற்குழு பற்றி கேட்காதீர்கள்.

    கே:- மீண்டும் நீங்கள் தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா?

    ப:- அதுபற்றி எனக்கு தெரியாது. எனது ஆதங்கத்தை கலைஞரிடம் சொல்லி இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டி முடிந்த போது, ‘அஞ்சா நெஞ்சன் அழகிரி’ என்று தொண்டர்கள் கோ‌ஷமிட்டனர்.

    அழகிரி அஞ்சலி செலுத்த வருவதை அறிந்து மதுரையில் இருந்து ஏராளமான அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்திற்கு வந்திருந்தனர்.

    அஞ்சலி செலுத்திய பிறகு அழகிரி நேராக கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு அப்போது மு.க.ஸ்டாலின் இருந்ததால் சிறிது நேரத்தில் அழகிரி அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.#MKAzhagiri #Karunanidhi #DMK
    Next Story
    ×