search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mk alagiri"

    திருவாரூரில் செய்தியாளரகளை சந்தித்த முக அழகிரி, பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். #MKAlagiri
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் முக அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவுடன் தம்மை இணைத்து பேசுவது வெறும் வதந்தியே என்றும், கருணாநிதியின் கொள்கைகளை முழுமையாக தாம் கடைபிடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    தற்போதைய மத்திய மாநில அரசுகளை விமர்சித்த முக அழகிரி, தற்போது அரசியல் எங்கு நடக்கிறது? போராட்டங்கள் மட்டுமே நடக்கிறது என தெரிவித்துள்ளார். திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாகவும், தாம் தேர்தலில் போட்டியிட்டால் அனைவரும் ஆதரவு தருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், தனிக்கட்சி தொடங்குவீர்களா? என்ற நிரூபர்களின் கேள்விக்கு, தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். #MKAlagiri
    கருணாநிதி பெயரில் தனி அமைப்பு தொடங்கப் போவதாக வெளியான தகவலை மு.க. அழகிரி மறுத்துள்ளார். #MKAlagiri
    மதுரை:

    திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி மீண்டும் கட்சியில் இணைய விரும்பினார். கருணாநிதி மறைவுக்கு பின்னர் அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. அத்துடன் கட்சி தலைமை பதவியும் மு.க ஸ்டாலின் வசம் வந்தது. இதனை அடுத்து மு.க.அழகிரி சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினார்.



    இந்நிலையில், கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் இசக்கிமுத்து தெரிவித்தார். இதற்காக, மாவட்ட வாரியாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

    ஆனால் இந்த தகவலை மு.க. அழகிரி மறுத்துள்ளார். கருணாநிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்க நான் ஆலோசனை செய்து வருவதாக இசக்கிமுத்து தெரிவித்தது அவரது சொந்த கருத்து  என்கிறார் அழகிரி. #MKAlagiri
    முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டுக்கு சென்று அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். #SellurRaju #MKAlagiri
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வில் தன்னை இணைக்க வற்புறுத்தி வந்தார் மு.க. அழகிரி. ஆனால் கட்சி மேலிடம் மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க மறுத்து வந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ மு.க.அழகிரியை பாராட்டி பேசினார்.

    மதுரையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மு.க. அழகிரியின் தேர்தல் வியூகம் சிறப்பாக இருந்தது என்றும், அவர் தி.மு.க. தொண்டர்களை அரவணைத்து செல்பவர் என்றும் கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பை ஏற்படுத்தினார்.

    சமீபத்தில் சென்னையில் நடந்த அமைதி பேரணியை மு.க.அழகிரி சிறப்பாக நடத்தியதாகவும் செல்லூர் ராஜூ பாராட்டியது மு.க. அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் அமைச்சரை நேரில் சந்திக்க மு.க. அழகிரி முடிவு செய்தார். இந்த தகவல் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 10 மணி அளவில் மதுரை பாலம் ஸ்டே‌ஷன் ரோட்டில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்கு மு.க.அழகிரி சென்றார். வாசலில் நின்று அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினர் மு.க.அழகிரியை வரவேற்றனர்.

    பின்னர் வீட்டில் அருகருகே அமர்ந்து இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த மு.க.அழகிரி, செல்லூர் ராஜூவின் தாயார் மரணம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.


    வெளியே வந்த மு.க.அழகிரியிடம் நிருபர்கள் இந்த சந்திப்பு குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த மு.க.அழகிரி, தாயாரை இழந்த அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ஆறுதல் கூறுவதற்காகவே வந்தேன். மற்றபடி நீங்கள் எதிர்பார்ப்பது போல வேறு எதுவும் இல்லை என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    மு.க.அழகிரியுடன் அவரது ஆதரவாளர்கள் கவுஸ்பாட்சா, மன்னன், முபாரக்மந்திரி, சின்னான், கோபிநாதன், உதயகுமார். எம்.எல்.ராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். #SellurRaju #MKAlagiri
    அமைதி பேரணி முடிந்த நிலையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAlagiri
    அவனியாபுரம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் மு.க. அழகிரி இன்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஆவின் பால் பண்ணை சாலை சந்திப்பில் அவரது சிலை வைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளோம். சிலை விவரம் குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.


    அமைதி பேரணி தற்போது தான் நடந்து முடிந்துள்ளது. எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKAlagiri #KarunanidhiStatue
    தி.மு.க.வில் தான் வளர்ந்து விட கூடாது என்பதற்காக தந்தையிடம் பேசி மிரட்டும் தொனியில் ஈடுபட்டு பலரும் சேர்ந்து தன்னை நீக்கி விட்டதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். #DMK #MKAlagiri
    சென்னை:

    ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க. அழகிரி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு என்னை கட்சியில் இருந்து நீக்கியது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் எந்த தப்பும் பண்ணவில்லையே என்று வருந்தினேன். தொண்டர்களுக்காக பாடுபட்டேன். சில குறைகளை கூறினேன். சில ஆதாரங்களை எடுத்துக் கொண்டு காட்டினேன். அதனால் கலைஞருக்கு என்னை நீக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. பொதுச்செயலாளருக்கு கூட அந்த எண்ணம் கிடையாது.

    என்னை நீக்கியதில் பல சதிகள் இருக்கிறது. நான் வளர்ந்து விட போகிறேனோ என்ற எண்ணம் சிலருக்கு இருந்தது. ஜெயலலிதா இருக்கும் போதே நான் எதிர்த்து பல வெற்றிகளை பெற்றவன். என் மீதும், மனைவி, மகன் மீதும் பல வழக்குகளை தொடுத்தனர்.

    நான் வளர்ந்து விட போகிறேன் என பயந்து தந்தையிடம் பேசி மிரட்டும் தொனியில் ஈடுபட்டு பலரும் சேர்ந்து என்னை நீக்கச் செய்யுமாறு சதி செய்து விட்டனர்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது கலைஞரை நேரில் சந்தித்து கட்சியில் மீண்டும் இணைத்து கொள்ளுமாறு கேட்டேன். அவர் கொஞ்ச நாள் அமைதியா இருப்பா. மீண்டும் சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

    அதன் பின்னர் அவரது உடல் நிலை மோசமடைந்து விட்டது. அவரால் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில் கட்சியில் சேர்க்குமாறு கேட்டால் தொல்லையாக இருக்கும் என்று கருதி உடல் நிலை குணமடையட்டும் என காத்திருந்தேன். ஆனால் அவர் என்னை கட்சியில் சேர்க்க நினைத்து இருக்கலாம்.

    நான் கட்சிக்கு வந்தால் எனக்கு ஆதரவு பெருகும் என முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் பயந்து இருக்கலாம். அதனால் என்னை சேர்க்கவிடாமல் தடுத்து இருக்கலாம்.

    எனக்கு ஆதரவு குறைந்து விட்டதா? இல்லையா? என்பது போக போக தெரியும். நான் நடத்திய பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். பொதுக்குழு மட்டும் தி.மு.க. அல்ல. அவர்கள் கூறுவது தான் தி.மு.க.வா?

    அந்த பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையிலேயே ஜனநாயகம் இல்லை. அதை தான் நான் 2014-ல் குற்றம் சாட்டினேன்.

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. தோல்விக்கு குருட்டு போக்கான நம்பிக்கைதான் காரணம். ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் 57 ஆயிரம் ஓட்டுகள் வாங்கினார். அவரை மீண்டும் வேட்பாளராக்காமல் யாரையோ நிறுத்தினார்கள்.

    ஜெயலலிதாவை எதிர்த்து 57 ஆயிரம் ஓட்டுகள் வாங்கிய தி.மு.க. டி.டி.வி. தினகரனை எதிர்த்து 24 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியது தி.மு.க.வின் சரிவுதான்.


    ஸ்டாலின் நல்ல தலைவரே அல்ல. அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. டெபாசிட்டை இழந்து இருக்காது. தொண்டர்களே ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளவில்லை.

    பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் கலைஞருக்கு தெரியாமல் அவர்களாக வேட்பாளர்களை நிறுத்தினார்கள். வேட்பாளர்களை கலைஞர் நிறுத்தி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கலாம்.

    என்னை தி.மு.க.வில் சேர்க்கவில்லையென்றால் பின் விளைவுகள் ஏற்படும். தேர்தலில் தி.மு.க. தோல்வி அடையும். கட்சி இன்னும் பின்னடைவை சந்திக்கும் இனிமேல் தி.மு.க.வுக்கு மு.க. அழகிரிதான் சவால்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் மு.க. அழகிரி இல்லாமல் தி.மு.க.வால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது.

    2-வது இடத்துக்கு கூட வர முடியாது. 3-வது இடத்துக்குதான் வருவார்கள். 4-வது இடத்துக்கு சென்றாலும் ஆச்சரியம் இல்லை.

    என்னை கட்சியில் சேர்த்துக் கொண்டால் மட்டுமே மு.க. ஸ்டாலின் தலைமையை ஏற்பேன் என்று கூறினேன். என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் நான் எப்படி ஸ்டாலினை தலைவராக ஏற்க முடியும்.

    துணை முதல்வர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகள் ஸ்டாலினுக்கு எப்படி கிடைத்தது என்பதை அவரது மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். அதை நான் சொல்ல மாட்டேன், அவரது மனசாட்சிக்கு எல்லாம் தெரியும்.

    ரஜினி காந்துக்கு அடிமட்ட மக்களை கவரும் சக்தி இருக்கிறது.

    ரஜினி என் தந்தை மீது பிரியமுள்ளவர். அவரது ரசிகர்கள் தி.மு.க.விலும் நிறைய பேர் உள்ளனர். அதனால் அவர் கட்சி தொடங்கினால் அவர்கள் அங்கு செல்ல வாய்ப்புண்டு .

    கலைஞரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட அரசியல் பாடம், அவருடைய உழைப்பு, சுயமரியாதை. அவர் தூங்காமல் உழைக்க கூடியவர். அப்பாவின் அரசியலை பார்த்து நாங்கள் முழுநேர அரசியல்வாதியானோம்.

    நாங்கள் சிறுவயதில் கேரம் போர்டு, கிரிக்கெட் விளையாடுவோம். அதில் கலைஞரும் சிறுபிள்ளை போல் வந்து கலந்து கொள்வார்.

    ஒரு முறை என்னையும், எனது அண்ணனையும் (மு.க.முத்து) அழைத்துக் கொண்டு திரைப்படத்துக்கு சென்றார்.

    “கண் திறந்தது” என்ற படத்துக்கு சென்றோம். நான் அப்போது 8-ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன்.

    கண்ணாடி அணியும் பழக்கம் அப்போது எனக்கு இல்லை. அதனால் படம் பார்க்கும் போது கண்ணை சுருக்கி பார்த்துக் கொண்டு இருந்தேன். அதை எனது தந்தை கவனித்து விட்டார். அடுத்த நாளே கண் மருத்துவரிடம் அழைத்து சென்று எனது கண்ணை பரிசோதித்து கண்ணாடி பொருத்தி விட்டார்.

    அப்போது எனக்கு நாங்கள் சென்ற படத்தின் தலைப்பு தான் நினைவுக்கு வந்தது. சென்ற படமும் ‘கண் திறந்தது’ எனக்கும் கண் திறந்தது.

    எங்களுக்கு சிறு வயதாக இருக்கும் போது அண்ணாதுரை அவ்வப் போது எங்கள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது என்னையும் எனது அண்ணன் முத்துவையும் பாடல்களை பாடுமாறும், நடனம் ஆடுமாறும் கேட்பார்.

    காஞ்சீபுரத்துக்கு வருமாறும் அழைப்பு விடுப்பார். வாரத்தில் ஒரு நாள் எங்களை இரவு காட்சிக்காக சினிமாவுக்கு அழைத்து சென்றார். எங்கள் மீது மிகவும் பிரியமாக இருப்பார்.

    இவ்வாறு மு.க.அழகிரி கூறியுள்ளார்.  #DMK #MKAlagiri #MKStalin
    கருணாநிதி மறைந்து 30-வது நாளான நேற்று மு.க.அழகிரி தலைமையில் சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணிக்கு மு.க.முத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #MKMuthu #MKAlagiri
    சென்னை:

    கருணாநிதி மறைந்து 30-வது நாளான நேற்று அழகிரி தலைமையில் சென்னையில் அமைதி பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணிக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து நேற்று மு.க.அழகிரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ‘என் தம்பி, அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துகள்’ மு.க.முத்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதம் அழகிரி ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. #MKMuthu #MKAlagiri

    சென்னையில் மு.க.அழகிரி நடத்திய பேரணி தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்துள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #MKAlagiri
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே: தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சமீப காலமாக பா.ஜனதாவை அதிகம் அவர் விமர்சிக்கிறாரே?

    ப: தலைவர் என்ற முறையில் எதையாவது கூற வேண்டும் என நினைக்கிறார். ஆனால் பாசிச ஆட்சி என பா.ஜனதாவை விமர்சிப்பது தவறு. பாசிச கட்சி என்றால் அது தி.மு.க. தான்.

    கே: விமானத்தில் நடந்த பிரச்சனையில் சோபியாவை கைது செய்தது தவறு என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூறியிருக்கிறார்களே?

    ப: விமானத்தில் பயணம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வி‌ஷயங்களை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். நாங்கள் எங்களை விமர்சனம் செய்யக்கூடாது என கூறவில்லை. எங்களை தொந்தரவு செய்யாமல் விமர்சனம் செய்யுங்கள் என்று தான் கூறுகிறோம்.

    கே: மு.க.ஸ்டாலின் நானும் பா.ஜனதா ஒழிக என்று கூறுகிறேன் என்னை கைது செய்யுங்கள் என்று கூறியிருக்கிறாரே?

    ப: பா.ஜனதா ஒழிக என்று தி.மு.க. கூறுவதில் ஒன்றும் அதிசயம் இல்லை. முதலில் தி.மு.க. அழியாமல் காப்பாற்ற ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று சென்னையில் மு.க.அழகிரி நடத்திய பேரணி தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.


    கே: அழகிரியை பாஜனதா இயக்குவதாக கூறப்படுகிறதே?

    ப: நாங்கள் யாரையும் இயக்கவில்லை. யாரையும் வளர்க்க விரும்பவில்லை. நாங்கள் எங்கள் கட்சியை வளர்க்கத்தான் நினைக்கிறோம். அழகிரி தி.மு.க.வில் மூத்த தலைவர். தி.மு.க.வில் இருந்தவர் அவர் பேரணி நடத்தியுள்ளார். இது அவர்கள் பிரச்சனை. முதலில் ஸ்டாலின் இதை பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் சமீப காலமாக தி.மு.க.வை பா.ஜனதா இயக்குகிறது, அ.தி.மு.க.வை இயக்குகிறது என்று கூறுகிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். அவனின்றி எதுவும் அசையாது என்பது போல, பா.ஜனதா இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற வகையில் நாங்கள் வளர்ந்து வருகிறோம்.

    கே: தற்போது சி.பி.ஐ. சோதனை அடிக்கடி நடக்கிறது. ஆனால் சேகர்ரெட்டி, அன்புநாதன் போன்ற சி.பி.ஐ. சோதனையில் எந்த முடிவும் வரவில்லை. இந்தநிலையில் நேற்று 40 இடங்களில் நடந்த சோதனை முடிவு உடனே வருமா?

    ப: எந்த சோதனையிலும் முடிவை உடனே எதிர்பார்க்க முடியாது. முழுமையான வி‌ஷயத்தை ஆய்வு செய்து சரியான முறையில் உச்சகட்ட நிலையில் சென்று சோதனை நடந்துள்ளது. உடனே இதில் முடிவை எதிர்பார்க்க கூடாது.

    கே: பா.ஜனதா அரசு 8 வழிச்சாலைக்கு நிதி உடனே ஒதுக்குகிறது. ஆனால் நதிநீர் பாதையை சரி செய்ய நிதி ஒதுக்காததால் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு உள்ளதே?

    ப: மத்திய அரசு கடைமடைக்கு மட்டுமல்ல, கடைக்கோடி வயலுக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் 11 நதிகள் நீர் வழிப்பாதைக்காக தேர்வு செய்யப்பட்டன.

    இது தொடர்பாக ஆய்வு செய்த போது ஒரு சில நதிகள் தான் நீர் வழிப்பாதைக்கு பயன்படுத்தமுடியும் என்று தெரிய வந்துள்ளது. கோதாவரி நதியை தமிழகத்துடன் இணைத்தால் கடலில் கலக்கும் 2 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் நான் பங்கேற்ற கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசிய போது, இதை நிறைவேற்ற நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். நாமும் ஒரு சொட்டு நீரை கூட வீணாக்க கூடாது.

    கே: தமிழக அரசு இது தொடர்பாக மத்திய அரசிடம் ஏதாவது கேட்கிறதா?

    ப: நம்மால் முடியாததை தான் மற்றவர்களிடம் கேட்க வேண்டும்.

    கே: தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி நடக்கிறதா?

    ப: இதை நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா. உங்களுக்கு தெரியாதா?

    கே: பா.ஜனதா அரசு மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதே? ரபேல் விமானம் ஊழல் குறித்து சர்ச்சை எழுந்துள்ளதே?

    ப: இந்த பிரச்சனையில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசி முடித்த சில நிமிடங்களிலேயே பிரான்ஸ் நாட்டு அமைச்சகம் தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளது. 2016-ம் ஆண்டிலேயே விலை சம்பந்தமான வி‌ஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வியாபாரத்தில் எந்த வி‌ஷயத்தை வெளியில் கூற முடியுமோ அதை தான் நாம் கூறுவோம். அதேபோல் இது இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தம். அதில் எதை வெளியில் கூற முடியுமோ அதை தான் கூற முடியும். இதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை.

    கே: வெளிநாடுகளுக்கு பெட்ரோலை ரூ.34-க்கு ஏற்றுமதி செய்துவிட்டு, நமது நாட்டில் ரூ.82-க்கு மத்திய அரசு பெட்ரோலை விற்கிறது என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

    ப: இதில் முழுமையான விவரம் எனக்கு தெரியவில்லை. எனவே இது குறித்து பதிலளிக்க முடியாது.

    கே: மேகதாது அணை கட்ட தமிழக அரசிடம் எந்த அனுமதியும் பெற தேவையில்லை என்று கர்நாடகம் தெரிவித்துள்ளதே?

    ப: இது தவறு. ஒரு நதி ஒரு மாநிலத்திற்குள் மட்டும் ஓடினால் பிரச்சனை இல்லை. இப்போது தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டதே? அது ஏன். அங்கு அணை உடைந்துவிடும் என்பதால் தான் அவர்கள் தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட்டார்கள். தமிழ்நாட்டை வடிகாலாக மட்டும் கர்நாடகா நினைக்க கூடாது.

    கே: பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் தி.மு.க. அதி.மு.க.வில் எந்த கட்சி கூட்டணியில் இருக்கும்?

    ப: அது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திருச்சி மாவட்ட பா.ஜனதா தலைவர் தங்க.ராஜையன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #BJP #PonRadhakrishnan #MKAlagiri #MKStalin
    மு.க.அழகிரி அமைதிப் பேரணி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கைகளை உயர்த்தியபடி நோ கமெண்ட்ஸ் என பதிலளித்தார். #DMK #DuraiMurugan #MKAlagiri
    வேலூர்:

    முன்னாள் அமைச்சர் துரைமுருகன் திமுக பொருளாளராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக இன்று அவரது சொந்த ஊரான காட்பாடிக்கு வந்தார்.

    அவருக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்த பொதுக்குழு, செயற்குழு, தி.மு.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் ரூ. 1 கோடி தேர்தல் நிதி வழங்கியுள்ளனர். இதை போல மற்ற மாவட்டங்களிலும் நிதி வழங்க வேண்டும்.

    ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் குட்கா சம்பந்தமாக சோதனை நடத்த வேண்டும். இது தாமதமானது தான் என்றாலும் வரவேற்கதக்கது.


    கர்நாடக மாநிலம் மேகதாதுவில் எப்படியாவது அணை கட்ட வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா ஒற்றைகாலில் நிற்கிறார்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் அதனை தடுத்து நிறுத்தினோம். மேகதாதுவில் அணைகட்டினால் காவிரியில் வரும் கொஞ்ச தண்ணீரும் நின்று விடும். இது மிகப்பெரிய ஆபத்து. தமிழக அரசு இதனை முழு மூச்சோடு எதிர்க்க வேண்டும்.

    பாலாற்றில் தந்திர அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது. தற்போது ஆற்றுக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய்களிலும் அணை கட்ட ஆரம்பித்துவிட்டனர். தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தோடு தான் இது நடக்கிறதா. பொதுப் பணித்துறை அமைச்சர் விஜயவாடாவுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அணைகட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மு.க.அழகிரி அமைதிப் பேரணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது துரைமுருகன் கைகளை உயர்த்தியபடி நோ கமெண்ட்ஸ் என பதிலளித்தார். #DMK #DuraiMurugan #MKAlagiri
    சென்னையில் இன்று தான் நடத்திய அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவார்களா? என மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். #MKAlagiri #PeaceRally #DMK
    சென்னை:

    தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். கட்சி மேலிடம் அவரைக் கண்டுகொள்ளாத நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினார்.

    திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து கடற்கரை சாலை வரை பேரணி நடைபெற்றது. பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



    பின்னர் மு.க. அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும், பேரணிக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    தனது பேரணியில் சுமார் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் வந்திருப்பதாக கூறிய அவர், இந்த பேரணியில் பங்கேற்றதற்காக அனைவரையும் நீக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த பேரணிக்கான காரணம் குறித்து கேட்டபோது, மறைந்த தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மட்டுமே இந்த பேரணி நடத்தப்பட்டதாகவும், வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றும் அழகிரி கூறினார். #MKAlagiri #PeaceRally #DMK
    கருணாநிதியின் நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி அமைதி பேரணியை தொடங்கினார். இந்த பேரணி வாலாஜா சாலை வழியாக கடற்கரை சாலை சென்றடைகிறது. #MKAlagiri #AlagiriPeaceRally #DMK
    சென்னை:

    தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தி.மு.க.வில் சேர அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன.

    கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அமைதியாக இருந்து வந்த மு.க.அழகிரி, கடந்த மாதம் 13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, ‘எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன். அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்’ என்று அதிரடியாக கூறினார்.



    அதன்பின்னர் மதுரை சென்று தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி, சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ம் தேதி அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார்.

    அதன்படி பேரணிக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக நேற்று முன்தினமே மு.க.அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்தார். அவரது சார்பில், அமைதி பேரணிக்கு போலீசாரிடம் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டது. போலீசாரும் பேரணி நடத்த அனுமதி அளித்தனர்.

    அதன்படி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து இன்று காலை 11.25 மணிக்கு மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.



    இந்தப் பேரணி வாலாஜா சாலை வழியாக, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைகிறது. அங்கு, மு.க.அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். மேலும், தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. மு.க.அழகிரியின் அமைதி பேரணியை தொடர்ந்து, வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கருணாநிதியின் நினைவிடத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #MKAlagiri #AlagiriPeaceRally #DMK
    அழகிரியை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து, அவ்வாறு சேர்த்துக் கொண்டால் தி.மு.க. வலிவும், பொலிவும் பெறும் என்பதும் எனது எண்ணம் என்று நாஞ்சில் சம்பத் கூறினார். #NanjilSampath #MKAlagiri #DMK
    நாகர்கோவில்:

    கட்சி அரசியலில் இருந்து விலகி இருக்கும் நாஞ்சில் சம்பத், அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

    தி.மு.க. தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதையடுத்து சென்னையில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர், இன்று மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. என்ற இயக்கத்தில் அரை நூற்றாண்டு காலம் தலைவராக இருந்து வழி நடத்திய கருணாநிதி மறைவுக்கு பின் அந்த இயக்கத்தின் புதிய தலைவராக மு.க. ஸ்டாலின் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிளை கழக நிர்வாகி முதல் உயர்மட்ட நிர்வாகி வரை அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை தலைவர் பதவியில் அமர்த்தி உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் வரலாற்று பாதையில் கால வெள்ளத்தால் கரைந்து போகாத கட்சி தி.மு.க.

    அதன் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பது சாலச் சிறந்தது. தலைமை பொறுப்புக்கு தகுதியானவர் மு.க. ஸ்டாலின். திராவிட இயக்கம் நிலைத்து நிற்க வேண்டும் என்று கருதியும், திராவிட இயக்கத்தின் பிரசாரகன் என்ற முறையிலும் சென்னையில் நேற்று மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.



    மு.க. ஸ்டாலினும், மு.க. அழகிரியும் ஒரு தாய் பெற்ற புதல்வர்கள். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

    மு.க. அழகிரியை பொறுத்தமட்டில் அவர், தி.மு.க.வில் இருந்தபோது தென்மண்டல அமைப்புச் செயலாளராக பணியாற்றினார். மத்திய மந்திரியாக பொறுப்பு வகித்தார். கட்சி தொண்டர்களுடன் நெருங்கி பழகியவர். இப்போது தி.மு.க.வில் அவர் இல்லை. அவரை தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவ்வாறு சேர்த்துக் கொண்டால் தி.மு.க. வலிவும், பொலிவும் பெறும் என்பதும் எனது எண்ணம். ஆனால் முடிவு எடுக்க வேண்டியது மு.க. ஸ்டாலின் கையில் உள்ளது.

    திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடந்தபோது கருணாநிதி அங்கு முழுமையாக பிரசாரத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தார். அதன் பிறகும் அங்குள்ள மக்கள் அவரை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தனர். இப்போதும் தேர்தல் நடந்தால் அங்கு தி.மு.க.தான் வெற்றி பெறும்.

    அழகிரி போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா? என்பதை விட தி.மு.க. சார்பில் யார் போட்டியிட்டா லும் அவர்தான் வெற்றி பெறுவார் என்பது உறுதி.

    திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வுக்கு கை கொடுக்கும் தொகுதி. ஆனால் இப்போது அங்கு தேர்தல் நடந்தால் அதன் வெற்றி திருத்தணி மலையில் எதிரொலிக்கும் வகையில் அமையும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியானால் அது ஆளும் அரசுக்கு எதிராக இருக்கும் என்பதுதான் எனது எண்ணம். அவ்வாறு நடந்தால் இந்த ஆட்சி நீடிக்குமா? என்பதை தினகரன்தான் முடிவு செய்ய வேண்டும்.

    முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்தபோது முதல்-அமைச்சர் தெரிவித்த கருத்து சரியல்ல. ஒரு மனிதனுக்கு காய்ச்சல் ஏற்படுவதுபோல மதகு உடைந்ததை ஒப்பிட்டு கூறி உள்ளார். இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

    நேற்று நான், திருவாரூர் சென்றிருந்தேன். அங்கு நாகப்பட்டினம் முத்தமிழ் மன்றத்தில் நடந்த கலைஞருக்கான இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று பேசினேன். நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் நான், பயணம் செய்தபோது பயிர் நிலங்கள் பாளம், பாளமாக வெடித்து கிடப்பதை கண்டேன்.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் தண்ணீர் இல்லை. கால்வாய்களும் வறண்டு கிடந்தன. ஆனால் கொள்ளிடத்தில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலுக்கு வீணாகச் சென்றது. வெள்ளத்தை சேமிக்க தெரியாத ஆட்சி நடக்கிறது. இதனால் மக்கள் கோபத்தில் உள்ளனர். இது மட்டுமல்ல, இந்த ஆட்சிக்காலத்தில் நடந்த நீட் பிரச்சினை, ஸ்டெர்லைட் விவகாரம் போன்றவற்றில் அரசின் அணுகுமுறையும், நடவடிக்கையும் சரியில்லை.

    அ.தி.மு.க. ஒருங்கிணைந்த பிறகும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், மதுசூதனனுக்கும் ஒருங்கிணைப்பு இல்லை. இவர்கள் இருவரும் ஜெயலலிதா இருந்தபோதே ஏழாம் பொருத்தமாக இருந்தனர். இப்போதும் அப்படியே இருக்கிறார்கள்.

    மதுசூதனை ஒரு பெரிய மனிதர் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார். அ.தி.மு.க.வில் இப்போது கட்டுப்பாடு இல்லை. தடி எடுத்தவர்கள் அனைவரும் தண்டல்காரர்களாக இருக்கிறார்கள். இதனால் மக்களின் கோபம் அவர்கள் மேல் திரும்பி உள்ளது.

    இப்போது நான், கட்சி அரசியலில் இல்லை. இதனால் எனக்கு வருவாய் வரத்து குறைந்துள்ளது. என்றாலும் நான், நிம்மதியாக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #NanjilSampath #MKAlagiri #DMK
    திமுகவில் சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAlagiri #MKStalin
    மதுரை:

    முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி வருகிற 5-ந்தேதி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பல்வேறு மாவட்ட ஆதரவாளர்களுடன் அவர் தினந்தோறும் மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இன்று 7-வது நாளாக ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பின்னர் மு.க. அழகிரி, நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.



    அவ்வாறு சேர்த்துக் கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையையொட்டி பிறகு முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுவரை மு.க.அழகிரி தி.மு.க. தலைமைக்கு எதிராக கருத்துக்கள் கூறி வந்த நிலையில் இன்று மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக கூறி இருப்பது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #DMK #MKAlagiri #MKStalin
    ×