என் மலர்
நீங்கள் தேடியது "madurai airport"
- விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
- விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை:
சென்னை, திருச்சி, கோவைக்கு அடுத்தபடியாக மதுரை விமான நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இங்கிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளும், உள்நாட்டில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை விமான நிலைய இயக்குனருக்கு வந்திருந்த இ-மெயிலில் மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது.
இதனையடுத்து விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மதுரை விமான நிலைய உள் வளாகம் மற்றும் வெளி வளாக பகுதிகளில் மதுரை விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மூலம் தீவிர சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டது. மேலும் வாகன நிறுத்தும் இடங்கள், பயணிகள் வரும் இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மூலம் தீவிர சோதனை செய்யப்பட்டது. இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் செய்தியில் உண்மையில்லை என தெரியவந்தது. இருப்பினும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 28-ந் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலைய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரம் மதுரை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
- அனைத்துக் கட்சிகளும் காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறக் கூடாது.
- மக்கள் அதிகாரத்தில் கைவைத்து, திட்டத்தில் கை வைத்து, மக்களுக்கு சேர வேண்டியதை அம்பானி, அதானியிடம் கொடுப்பார்கள்.
மதுரை:
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
தியாகி இமானுவேல் சேகரன் இந்த சமூகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தமிழ் சமூகம் ஒற்றுமையாக வேறுபாடு இன்றி வாழ வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கிறார். நாட்டுப்பற்று உள்ள ராணுவ வீரராக இருந்திருக்கிறார். அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதில் காங்கிரஸ் பேரியக்கம் பெருமை அடைகிறது.
சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்பதால் நாட்டுக்கு என்ன பெருமை இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவர் பதவி ஏற்பதில் பெருமைப்பட எதுவும் இல்லை. முன்னாள் துணை ஜனாதிபதி தன்கரை வெளியில் கொண்டு வர வேண்டும்.
தேசம் முன்னேறுவதற்கு நேரு முதல் சோனியா காந்தி வரை கொண்டு வந்த திட்டங்கள் பின்னடைவை நோக்கி செல்கிறது. ராகுல் காந்தி பீகாரில் வாக்குத் திருட்டை பற்றி பேசியதை போல், குடியரசு துணைத்தலைவர் தேர்தலிலும் இங்கு எதுவும் வாக்கு திருட்டு நடந்திருக்கிறதா என பிரதமர் தான் சொல்ல வேண்டும்.
அனைத்துக் கட்சிகளும் காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறக் கூடாது. விஜய்க்கு இருக்கும் அளவுகோல் தான் இ.பி.எஸ்.க்கும் இருக்கும் அது தான் எங்களின் வேண்டுகோள்.
உறவாடி கெடுப்பது பா.ஜ.க.வின் மாடல். ஆமை புகுவதைப் போல பாஜக புகு மாநிலம் சிதைந்து போகும். அதன் பின்பு அதில் மக்கள் அதிகாரத்தில் கைவைத்து, திட்டத்தில் கை வைத்து, மக்களுக்கு சேர வேண்டியதை அம்பானி, அதானியிடம் கொடுப்பார்கள்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை இ.பி.எஸ். தான் ஆட்சியில் இருந்த போது வைக்காமல் அமைதியாக இருந்தார். அப்போதே அதை செய்திருக்கலாம். அரசியலுக்காக தானே பேசுகிறார். உண்மையிலேயே பற்று இருந்திருந்தால் தேர்தல் வரும் போது ஏன் பேச வேண்டும் முன்பே ஏன் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள்.
- எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள். ஒரு சமூகத்தினர் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்றும், ஒரு சமூகத்தினர் இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் என்பார்கள்.
* எங்கள் நிலைப்பாடு எந்த தாத்தா பெயரும் வேண்டாம். எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பெயர் வைக்க வேண்டும். யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
* சாதாரண குடிமகளான கண்ணகி கால் சிலம்பை உடைத்தபோது, அரசவையில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நினைத்தானே அவன் பெயர் வைக்க வேண்டும். அதுதான் எங்களுக்கு பெருமை, நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் இதுதான்.
* நீங்கள் வைப்பதாக இருந்தால் நான் போராடி பாண்டிய நெடுஞ்செழியனின் பெயரை வைக்க வேண்டும் என்று சண்டை போடுவேன். இல்லையென்றால் நான் வந்தால் வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துபாய்க்குப் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் விமானம் சென்று கொண்டிருந்தது.
- பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து மதியம் 12.20 மணிக்கு துபாய்க்குப் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் விமானம் சென்று கொண்டிருந்தது.
மதுரையில் இருந்து துபாய் செல்ல தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
130 பயணிகளுடன் ஓடுபாதைக்கு சென்றபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
நீண்ட நேரமாக விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்.
- நிர்வாகிகள் மீது பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை:
கொடைக்கானலில் நடந்த ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 1-ந்தேதி மதுரைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்.
இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்தில் அனுமதியின்றி கூடுதல், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் த.வெ.க. மதுரை மாவட்ட செயலாளர் தங்கபாண்டி (தெற்கு), கல்லணை(வடக்கு) மற்றும் நிர்வாகிகள் மீது பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பாம்பனில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா நாளை நடக்கிறது
- பிரதமர் மோடியை சந்திக்க 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, மதியம் 3.50 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அதன்பின்னர், மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இந்தநிலையில், பிரதமரின் வருகையையொட்டி, அவரது தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம், மதுரை விமான நிலையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மத்திய பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மதுரையில் விமான நிலையத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பிரதமர் டெல்லி செல்லும் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அன்றைய தினம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்குப் பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படும்.
இதுபோல், மதுரை விமான நிலையத்தில் யார்? யார்? பிரதமரை சந்திக்க உள்ளார்களோ அவர்களை வரிசைப்படுத்தி உரிய அனுமதி சீட்டுடன் அவரை சந்திக்க வைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில், பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை சந்தித்து விட்டு பிரதமர் தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை தனியாக கொண்டு சென்று சோதனையிட்டனர்.
- கடத்தி வரப்பட்ட அரிய வகை உயரினங்களை கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
மதுரை:
தாய்லாந்து தலைநகர் பேங்க்காக்கில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. 100-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்த அந்த விமானத்தில் வழக்கம்போல் சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் கொண்டு வந்த உடமைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
அப்போது வேலூரை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை தனியாக கொண்டு சென்று சோதனையிட்டனர். இதில் அவர் கொண்டு வந்த ஒரு சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரியவகை ஆமைகள் 52, பல்லிகள் 4, குட்டி பாம்புகள் 8 என மொத்தம் 64 உயிரினங்கள் கொண்டு வரப்பட்டதை அறிந்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து சுங்க அதிகாரிகள் வேலூர் பயணியிடம் விசாரித்த போது, இலங்கையில் இருந்து புறப்படும் சமயத்தில் ஒரு நபர் என்னிடம் வந்து இந்த பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும், அதை மதுரை விமான நிலைய வாயிலில் இருக்கும் நபரிடம் கொடுக்குமாறும் கூறியதாக தெரிவித்துள்ளார். யார் அந்த நபர் என்றும், எதற்காக, யாருக்காக இந்த வன உயிரினங்கள் கடத்தி வரப்பட்டன என்றும் அதிகாரிகள் தரப்பில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து மதுரை விமானநிலைய சுங்க இலாகாவினர் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயரினங்களை கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் மதுரை வருகிறார்.
அவர் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மதியம் 2 மணி அளவில் வருகிறார். அங்கு அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஸ் சேகர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள்.
பின்பு பிரதமர் மோடி அங்கிருந்து திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை வழியாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வளாகத்திற்கு சாலை மார்க்கமாக காரில் சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, விழா முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் ஹெலிபேட் தளத்திற்கு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையத்திற்கு மாலை 5 மணிக்கு பிறகு வருகிறார்.
அங்கு அவரை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வழி அனுப்பி வைக்கிறார்கள். பின்பு மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அதுமட்டுமின்றி மதுரை மாநகர் முழுவதும் முக்கியமான இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி மதுரையிலிருந்து காந்தி கிராமத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லும் வகையில் பயண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்தபடி இருந்ததால் மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்லும் வகையில் பிரதமரின் பயணம் மாற்றப்பட்டது.
இதனால் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டின் நடுவில் கட்டைகளை வைத்து கட்டப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சாலை நெடுகிலும் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அம்பாத்துறை வழியாக காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செல்ல அனைத்துவித வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி காந்தி கிராமம் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு செல்லும் சாலையில் ரெயில்வே கடவுப்பாதை உள்ளது. இதனால் பிரதமர் செல்லும் நேரத்தில் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
மதுரை-திண்டுக்கல் இடையேயான ரெயில்வே போக்குவரத்தில் இன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை மாற்றம் செய்யுமாறு திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து குருவாயூர் செல்லக்கூடிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களின் இயக்கத்தில் பயண நேரம் இன்று மாற்றம் செய்யப்படுகிறது.
பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார். அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சாலை மார்க்கமாக மதுரை வருகிறார்.
- மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது.
- பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.
மதுரை:
மதுரை விமான நிலையத்திலும் கொரோனா கட்டுபாடுகள் இன்று அமலுக்கு வந்தன. சிங்கப்பூர், இலங்கை, துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு விமானங்கள் வருகின்றன. இந்த நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.
துபாய் விமானத்தில் மொத்தம் 187 பயணிகள் வந்தனர். அவர்களில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- தற்போது இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவை உள்ளது.
- இரவு நேரங்களில் விமான சேவை இல்லாமல் இருந்தது.
மதுரை :
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடைபெற்று வருகிறது. தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவை உள்ளது.
வெளிநாட்டு விமான சேவை நடைபெறும் நாட்களில் கூடுதலாக 2 மணி நேரம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் விமான சேவை இல்லாமல் இருந்தது. தென் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க வழிவகை செய்ய வேண்டும் என பல கட்டங்களாக வலியுறுத்தி வந்தனர்.
இதற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தற்போது அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி மதுரை விமான நிலையம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் 24 மணி நேர சேவை நடைபெற அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- துபாய் போன்ற வளைகுடா நகரங்களில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை அதிகளவில் கடத்துகின்றனர்.
- மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மதுரை:
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துபாய் போன்ற வளைகுடா நகரங்களில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை அதிகளவில் கடத்துகின்றனர்.
இதன் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது விமான நிலைய அறை எண்.7-ல் உள்ள கழிவறைக்கு சென்று பார்த்த போது அங்கு சிறிய அளவிலான பார்சல் இருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 2 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்தது.
இதன் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சமாகும். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் நேற்று காலை துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சிலர் மாலை மதுரையில் இருந்து இலங்கைக்கு புறப்படும் விமானத்தில் பயணம் செய்தனர்.
அதில் வந்த சிலர் தான் அதிகாரிகளின் கெடு பிடியால் கடத்தி வந்த தங்கத்தை கழிவறையில் போட்டு விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யார்? என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதமர் மோடி மதுரை வந்து தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது இது 2-வது முறையாகும்.
- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28-ந்தேதி தொடங்கினார். இதை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை இன்று பல்லடத்தில் யாத்திரையை நிறைவு செய்கிறார். இதற்கான நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலை 4 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் மதுரை வந்தடைகிறார். மதுரையில் உள்ள வீரபாஞ்சான் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் மைதானத்தில் வந்து இறங்குகிறார்.
அதே பள்ளியில் மாலையில் நடைபெறும் சிறு, குறு தொழில் அதிபர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அங்கு மத்திய அரசின் தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்அப் திட்டம், மத்திய அரசின் மானியம், கடன் உதவி, சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தொழில் அதிபர்களுடன் பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சிவகங்கை ரோடு, ரிங் ரோடு, கப்பலூர் வழியாக திருநகர் அருகே உள்ள பசுமலையில் அமைந்திருக்கும் தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 8 மணிக்கு பசுமலை, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை, தெற்கு வெளிவீதி வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார்.
அங்கு சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு வழக்கமாக நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு மதுரை நகருக்குள் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அதே வழியில் மீண்டும் பசுமலை நட்சத்திர விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.

பிரதமர் மோடி மதுரை வந்து தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது இது 2-வது முறையாகும். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மதுரை வந்திருந்தார். அப்போது அவர் மதுரையில் இரவு தங்கினார். இந்த பயணத்தின்போது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்தார். அதேபோல் தற்போது 2-வது முறையாக மதுரையில் தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு இந்த பகுதிகளில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பயணம் செய்யும் சாலைகளில் மத்திய கமாண்டோ படை போலீசாருடன் மாநில போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன், போலீஸ் கமிஷனர் லோகநாதன், டி.ஐ.ஜி.க்கள் ரம்யா பாரதி, அபிநவ் குமார் மற்றும் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை சூப்பிரண்டுகள், 300 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், 8-க்கும் மேற்பட்ட வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை வருகை தரும் பிரதமர் மோடி இன்று இரவு தங்க இருக்கும் பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியின் நுழைவு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காட்சி.
மதுரை விமான நிலையம், பிரதமர் தங்கும் தனியார் விடுதி, திருப்பரங்குன்றம் சாலை, தொழில் அதிபர்கள் மாநாடு நடைபெறும் தனியார் பள்ளி, மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையையொட்டி பிரதமர் வந்து இறங்கும் தனியார் பள்ளி ஹெலிபேட் மைதானம், ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் வாகன ஒத்திகையில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம், ஓட்டல் போன்ற இடங்களுக்கு காரில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடியின் மீனாட்சி அம்மன் கோவில் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அங்கு பிரதமர் மோடி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் அவர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் விடுதியில் தங்கும் பிரதமர் மோடி நாளை அதிகாலை இயற்கை எழில் சூழ்ந்த மலை குன்றில் அமைந்துள்ள ஓட்டலில் தியானம், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்கிறார். காலை 8 மணி அளவில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு காரில் விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி செல்லும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.






