search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி வருகை: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

    • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் மதுரை வருகிறார்.

    அவர் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மதியம் 2 மணி அளவில் வருகிறார். அங்கு அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஸ் சேகர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள்.

    பின்பு பிரதமர் மோடி அங்கிருந்து திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை வழியாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வளாகத்திற்கு சாலை மார்க்கமாக காரில் சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, விழா முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் ஹெலிபேட் தளத்திற்கு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையத்திற்கு மாலை 5 மணிக்கு பிறகு வருகிறார்.

    அங்கு அவரை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வழி அனுப்பி வைக்கிறார்கள். பின்பு மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    அதுமட்டுமின்றி மதுரை மாநகர் முழுவதும் முக்கியமான இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதமர் மோடி மதுரையிலிருந்து காந்தி கிராமத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லும் வகையில் பயண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்தபடி இருந்ததால் மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்லும் வகையில் பிரதமரின் பயணம் மாற்றப்பட்டது.

    இதனால் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டின் நடுவில் கட்டைகளை வைத்து கட்டப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சாலை நெடுகிலும் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அம்பாத்துறை வழியாக காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செல்ல அனைத்துவித வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி காந்தி கிராமம் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு செல்லும் சாலையில் ரெயில்வே கடவுப்பாதை உள்ளது. இதனால் பிரதமர் செல்லும் நேரத்தில் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

    மதுரை-திண்டுக்கல் இடையேயான ரெயில்வே போக்குவரத்தில் இன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை மாற்றம் செய்யுமாறு திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து குருவாயூர் செல்லக்கூடிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களின் இயக்கத்தில் பயண நேரம் இன்று மாற்றம் செய்யப்படுகிறது.

    பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார். அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சாலை மார்க்கமாக மதுரை வருகிறார்.

    Next Story
    ×