search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழகிரியின் பேரணி தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    அழகிரியின் பேரணி தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்

    சென்னையில் மு.க.அழகிரி நடத்திய பேரணி தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்துள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #MKAlagiri
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே: தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சமீப காலமாக பா.ஜனதாவை அதிகம் அவர் விமர்சிக்கிறாரே?

    ப: தலைவர் என்ற முறையில் எதையாவது கூற வேண்டும் என நினைக்கிறார். ஆனால் பாசிச ஆட்சி என பா.ஜனதாவை விமர்சிப்பது தவறு. பாசிச கட்சி என்றால் அது தி.மு.க. தான்.

    கே: விமானத்தில் நடந்த பிரச்சனையில் சோபியாவை கைது செய்தது தவறு என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூறியிருக்கிறார்களே?

    ப: விமானத்தில் பயணம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வி‌ஷயங்களை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். நாங்கள் எங்களை விமர்சனம் செய்யக்கூடாது என கூறவில்லை. எங்களை தொந்தரவு செய்யாமல் விமர்சனம் செய்யுங்கள் என்று தான் கூறுகிறோம்.

    கே: மு.க.ஸ்டாலின் நானும் பா.ஜனதா ஒழிக என்று கூறுகிறேன் என்னை கைது செய்யுங்கள் என்று கூறியிருக்கிறாரே?

    ப: பா.ஜனதா ஒழிக என்று தி.மு.க. கூறுவதில் ஒன்றும் அதிசயம் இல்லை. முதலில் தி.மு.க. அழியாமல் காப்பாற்ற ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று சென்னையில் மு.க.அழகிரி நடத்திய பேரணி தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.


    கே: அழகிரியை பாஜனதா இயக்குவதாக கூறப்படுகிறதே?

    ப: நாங்கள் யாரையும் இயக்கவில்லை. யாரையும் வளர்க்க விரும்பவில்லை. நாங்கள் எங்கள் கட்சியை வளர்க்கத்தான் நினைக்கிறோம். அழகிரி தி.மு.க.வில் மூத்த தலைவர். தி.மு.க.வில் இருந்தவர் அவர் பேரணி நடத்தியுள்ளார். இது அவர்கள் பிரச்சனை. முதலில் ஸ்டாலின் இதை பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் சமீப காலமாக தி.மு.க.வை பா.ஜனதா இயக்குகிறது, அ.தி.மு.க.வை இயக்குகிறது என்று கூறுகிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். அவனின்றி எதுவும் அசையாது என்பது போல, பா.ஜனதா இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற வகையில் நாங்கள் வளர்ந்து வருகிறோம்.

    கே: தற்போது சி.பி.ஐ. சோதனை அடிக்கடி நடக்கிறது. ஆனால் சேகர்ரெட்டி, அன்புநாதன் போன்ற சி.பி.ஐ. சோதனையில் எந்த முடிவும் வரவில்லை. இந்தநிலையில் நேற்று 40 இடங்களில் நடந்த சோதனை முடிவு உடனே வருமா?

    ப: எந்த சோதனையிலும் முடிவை உடனே எதிர்பார்க்க முடியாது. முழுமையான வி‌ஷயத்தை ஆய்வு செய்து சரியான முறையில் உச்சகட்ட நிலையில் சென்று சோதனை நடந்துள்ளது. உடனே இதில் முடிவை எதிர்பார்க்க கூடாது.

    கே: பா.ஜனதா அரசு 8 வழிச்சாலைக்கு நிதி உடனே ஒதுக்குகிறது. ஆனால் நதிநீர் பாதையை சரி செய்ய நிதி ஒதுக்காததால் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு உள்ளதே?

    ப: மத்திய அரசு கடைமடைக்கு மட்டுமல்ல, கடைக்கோடி வயலுக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் 11 நதிகள் நீர் வழிப்பாதைக்காக தேர்வு செய்யப்பட்டன.

    இது தொடர்பாக ஆய்வு செய்த போது ஒரு சில நதிகள் தான் நீர் வழிப்பாதைக்கு பயன்படுத்தமுடியும் என்று தெரிய வந்துள்ளது. கோதாவரி நதியை தமிழகத்துடன் இணைத்தால் கடலில் கலக்கும் 2 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் நான் பங்கேற்ற கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசிய போது, இதை நிறைவேற்ற நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். நாமும் ஒரு சொட்டு நீரை கூட வீணாக்க கூடாது.

    கே: தமிழக அரசு இது தொடர்பாக மத்திய அரசிடம் ஏதாவது கேட்கிறதா?

    ப: நம்மால் முடியாததை தான் மற்றவர்களிடம் கேட்க வேண்டும்.

    கே: தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி நடக்கிறதா?

    ப: இதை நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா. உங்களுக்கு தெரியாதா?

    கே: பா.ஜனதா அரசு மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதே? ரபேல் விமானம் ஊழல் குறித்து சர்ச்சை எழுந்துள்ளதே?

    ப: இந்த பிரச்சனையில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசி முடித்த சில நிமிடங்களிலேயே பிரான்ஸ் நாட்டு அமைச்சகம் தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளது. 2016-ம் ஆண்டிலேயே விலை சம்பந்தமான வி‌ஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வியாபாரத்தில் எந்த வி‌ஷயத்தை வெளியில் கூற முடியுமோ அதை தான் நாம் கூறுவோம். அதேபோல் இது இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தம். அதில் எதை வெளியில் கூற முடியுமோ அதை தான் கூற முடியும். இதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை.

    கே: வெளிநாடுகளுக்கு பெட்ரோலை ரூ.34-க்கு ஏற்றுமதி செய்துவிட்டு, நமது நாட்டில் ரூ.82-க்கு மத்திய அரசு பெட்ரோலை விற்கிறது என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

    ப: இதில் முழுமையான விவரம் எனக்கு தெரியவில்லை. எனவே இது குறித்து பதிலளிக்க முடியாது.

    கே: மேகதாது அணை கட்ட தமிழக அரசிடம் எந்த அனுமதியும் பெற தேவையில்லை என்று கர்நாடகம் தெரிவித்துள்ளதே?

    ப: இது தவறு. ஒரு நதி ஒரு மாநிலத்திற்குள் மட்டும் ஓடினால் பிரச்சனை இல்லை. இப்போது தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டதே? அது ஏன். அங்கு அணை உடைந்துவிடும் என்பதால் தான் அவர்கள் தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட்டார்கள். தமிழ்நாட்டை வடிகாலாக மட்டும் கர்நாடகா நினைக்க கூடாது.

    கே: பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் தி.மு.க. அதி.மு.க.வில் எந்த கட்சி கூட்டணியில் இருக்கும்?

    ப: அது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திருச்சி மாவட்ட பா.ஜனதா தலைவர் தங்க.ராஜையன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #BJP #PonRadhakrishnan #MKAlagiri #MKStalin
    Next Story
    ×