search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kauvery hospital"

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்விழித்து பேசுவது போன்ற படம் வெளியானதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தொண்டர்களின் கூட்டம் குறைந்ததால் ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து சீரானது. #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 27-ந்தேதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் குழு 24 மணி நேரமும் கருணாநிதி உடல் நிலையை கண்காணித்து வருகிறது.

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட குடும்பத்தினர் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் கருணாநிதி உடல்நிலை குறித்து தெரிவித்து வருகிறார்கள். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று கருணாநிதி உடல்நிலை பற்றி கேட்டு அறிந்து வருகிறார்கள்.

    கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதில் இருந்தே தி.மு.க. தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கினார்கள். 5 நாட்களாக இரவு பகல் பாராமல் ஆஸ்பத்திரி அருகிலேயே காத்துக் கிடந்தனர். கருணாநிதியை பார்த்துவிட்டு வரும் முக்கிய பிரமுகர்கள் ‘கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது’ என்று கூறினார்கள்.

    என்றாலும், தொண்டர்கள் அந்த இடத்தில் இருந்து நகரவில்லை. வெளியூர் தொண்டர்களும் வரத் தொடங்கியதால் ஆஸ்பத்திரி பகுதியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமானது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாநிதி உடல்நிலையில் லேசான பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நிலைமையை சமாளிக்க ஆஸ்பத்திரி முன்பு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு வதந்திகள் பரவின. உண்மைநிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் தவித்தனர். ‘கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் சீராகி விட்டது. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

    இதை உறுதிபடுத்தும் விதத்தில் காவேரி ஆஸ்பத்திரியும் அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிப்பதால் கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று சென்னைக்கு வந்து கருணாநிதியை பார்த்தார்.


    இதையடுத்து ராகுல்காந்தி நேரில் கருணாநிதியை பார்த்தது போன்ற புகைப்படம் வெளியானது. இதில் கருணாநிதியின் காது அருகே மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அப்போது கருணாநிதி கண்விழித்து பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்று உள்ளது. இந்த படம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    ‘தலைவர் கலைஞர் மீண்டு வந்துவிட்டார்’ என்று குரல் எழுப்பி இருக்கிறார்கள். அதைதொடர்ந்து காவேரி ஆஸ்பத்திரி வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. இன்னும் சில தினங்கள் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் தொண்டர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே தொண்டர்கள் குவிந்ததால் அந்த ஆஸ்பத்திரி அமைந்துள்ள லஸ் சர்ச் சாலையில் தடுப்புவேலி அமைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

    நேற்று கருணாநிதி கண்விழிப்பது போன்ற படம் வெளியானதால் தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர். இதனால் அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் கலைந்து சென்றனர். கூட்டம் குறைந்ததை அடுத்து தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன. ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து சீரானது. தற்போது காவேரி ஆஸ்பத்திரி பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார். #Karunanidhi #KarunanidhiHealth #RajiniKanth
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு வருகை தந்து ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் கருணாநிதியின் உடல்நலம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். 

    வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த அவர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

    சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறுகையில், “இந்திய அரசியலில் முக்கிய தலைவர் கருணாநிதி. அவரது உடல்நிலை குறித்து ஸ்டாலின்,அழகிரி, கனிமொழி ஆகியோரிடம் விசாரித்து ஆறுதல் கூறினேன். அவர் விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என கூறினார்.

    முன்னதாக இன்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று கருணாநிதி மீண்டும் தொண்டர்கள் மத்தியில் பேசுவார் என்று குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். #DMKLeader #Karunanidhi #Khushboo
    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று காவேரி ஆஸ்பத்திரி சென்று கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தார்.

    பின்னர் குஷ்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கோடிக்கணக்கான தமிழக மக்களும், தி.மு.க.வினரும் கருணாநிதி மீண்டும் உடல் நலம் பெற்று திரும்புவார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது.

    அவர் பூரண நலம் பெற்று திரும்புவார். என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று அவர் மீண்டும் தொண்டர்கள் மத்தியில் பேசுவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMKLeader #Karunanidhi #Khushboo
    கருணாநிதி உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக சென்னை மற்றும் சுற்று மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்களும், நிர்வாகிகளும் வந்து ஆஸ்பத்திரி முன் குவிந்துள்ளனர். #Karunanidhi #KauveryHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 27-ந்தேதி நள்ளிரவு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 24 மணிநேரமும் டாக்டர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கருணாநிதி உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக சென்னை மற்றும் சுற்று மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்களும், நிர்வாகிகளும் வந்து ஆஸ்பத்திரி முன் குவிந்துள்ளனர்.

    கருணாநிதி புகழ் பரப்பும் கோ‌ஷங்கள் எழுப்பியும் அவர் உடல் நலம் தேறி வர வேண்டுதல்களும் செய்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் கருணாநிதி உடல் நலம் பற்றி விசாரித்து விட்டு வெளியே வரும் தலைவர்களை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு சிகிச்சை விவரங்களையும் கேட்டு தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    வெளியூர்களில் இருந்து வந்த தொண்டர்கள் காலை முதல் விடிய விடிய ஆஸ்பத்திரி முன் தவித்தபடி காத்து இருக்கிறார்கள். காலை 6 மணியளவில் ஆஸ்பத்திரியில் இருந்து தலைவர்கள் வீடுகளுக்கு சென்ற பின்புதான் அங்கிருந்து கலைந்து செல்கிறார்கள்.

    இடையில் சில மணிநேரம் மட்டுமே ஆஸ்பத்திரியில் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது. அதன்பிறகு மீண்டும் 6 மணிக்கெல்லாம் தொண்டர்கள் கூட்டம் வரத் தொடங்கி விடுகிறது.

    5-வது நாளான இன்று கூடி இருந்த தொண்டர்கள் கருணாநிதி நலம் பெறுவதற்காக ராகம் போட்டு கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    ‘‘சரித்திரமே ஓடிவா...சமத்துவமே ஓடிவா..., எங்கள் தலைவா ஓடிவா..., பகுத்தறிவே ஓடிவா..., திராவிடமே ஓடிவா..., எங்களை காக்க ஓடிவா..., காவேரியை விட்டு ஓடிவா... அறிவாலயத்தை நாடிவா..., என கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர். #Karunanidhi #KauveryHospital
    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்து, காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளார். #Karunanidhi #DMKLeader #DMK #RahulGandhi #Congress
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி (வயது 94) வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



    பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தவண்ணம் உள்ளனர்.

    கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெறும் வார்டுக்கு சென்று ராகுல் காந்தி பார்க்க உள்ளதாகவும், பின்னர் அவரது உடல்நலம் மற்றும் சிகிச்சை தொடர்பாக குடும்ப உறுப்பினர்களிடம் ராகுல்காந்தி கேட்டறிவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. #Karunanidhi #DMKLeader #DMK #RahulGandhi #Congress
    கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை அருகே திரண்டிருந்த தொண்டர்களிடம் செல்போன் மற்றும் பணம் கொள்ளையடித்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #KarunanidhiHealth #KauveryHospital
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிதகவல் அறிந்த தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். வெளியூர்களில் இருந்தும் தொண்டர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



    தொண்டர்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளும்படி காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. இதையும் மீறி சில திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.  கட்சி தொண்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பிக்பாக்கெட் அடித்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டைத் தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், தொண்டர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இருப்பினும் கருணாநிதி நலம் பெறும் வரை வெளியேற மாட்டோம் என ஏராளமான தொண்டர்கள் இரவு பகலாக அங்கே முகாமிட்டுள்ளனர். #KarunanidhiHealth #KauveryHospital 
    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க, நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KarunanidhiHealth
    சென்னை:

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. டார்ஜிலிங் மலைப் பகுதியில் முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். 

    அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மீண்டும் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அங்கு 2 வாரங்களாக படப்பிடிப்பு நடந்தது. ரஜினிகாந்தும், கதாநாயகியாக வரும் சிம்ரனும் நடிக்கும் காட்சிகளையும் படமாக்கினார்கள். சண்டை காட்சிகளையும் எடுத்தனர்.

    டேராடூனில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்று அல்லது நாளை ரஜினிகாந்த் சென்னை திரும்பி காவேரி மருத்துவமனைக்கு சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 



    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பணிகள் குறித்தும் ரஜினி ஆலோசிக்க இருக்கிறார். அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். #Karunanidhi #KarunanidhiHealth #KauveryHospital #Rajinikanth

    காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டு பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து காவிரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பதற்றம் குறைந்தது.

    இந்நிலையில், இன்று வழக்கம் போல் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மருத்துமனை சார்பில் எவ்வித அறிக்கையும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. தற்போது மருத்துவமனையில் இருந்த புறப்பட்ட தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருணாநிதி தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படியே கருணாநிதி தற்போதும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக தெரிகிறது.

    முக ஸ்டாலினை தொடர்ந்து துரை முருகனும் செய்தியாளர்களை சந்தித்தார். அவரும் கருணாநிதி தீவிர கண்காணிப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிய மருத்துவமனை வந்த இலங்கை அமைச்சர் மற்றும் எம்.பி, இலங்கை அதிபரின் வாழ்த்து கடிதத்தையும் ஸ்டாலினிடம் வழங்கினர். #Karunanidhi #KarunanidhiHealth #MaithripalaSirisena
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இன்று இலங்கை எம்.பி. ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

    கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் அவர்கள் கேட்டறிந்தனர். அப்போது, இலங்கை மைத்திரிபால சிறிசேனா எழுதிய வாழ்த்து கடிதத்தையும் அவர்கள் ஸ்டாலினிடம் கொடுத்தனர். “உலகத் தமிழர்களின் தலைவரான கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்” என அவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். #Karunanidhi #KauveryHospital #KarunanidhiHealth #Karunanidhisharadpawar
    சென்னை:

    உடல்நலக் குறைவால் சென்ன ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை பார்த்து நலம் விசாரிக்க கடந்த 5 நாட்களாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகப் பிரமுகர்களும் வந்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை பிரபல ஆன்மிகவாதி ஜக்கி வாசுதேவ், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சரத்குமார் ஆகியோர் இன்று காலை வந்து நலம் விசாரித்து சென்றனர்.

    மாலை 5 மணியளவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம்  நலம் விசாரித்தார். கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி அவர் கேட்டறிந்தார். #Karunanidhi #Karunanidhisharadpawar
    போராட்ட குணம் கொண்ட திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்றைவிட இன்று தேறி இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் தெரிவித்தார். #Karunanidhi #KauveryHospital #Mutharasan
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ரத்த அழுத்தம் சிறிது நேரத்தில் சீரடைந்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

    பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வந்து கருணாநிதி சிகிச்சை பெறும் அறைக்கு சென்று பார்த்தனர்.

    இந்நிலையில் காவேரி மருத்துவமனைக்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த பின்னர் நிருபர்களிடம் அவர்  கூறியதாவது:-


    நேற்றைவிட கருணாநிதி இன்று நன்றாக இருக்கிறார். நேற்று குடியரசு துணை தலைவர், கருணாநிதியை சந்தித்த புகைப்படம் வெளியானது. அதில்கூட செயற்கை சுவாச கருவி பொருத்தப்படவில்லை. அதிலிருந்தே அவர் நன்றாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடியும். போராட்ட குணம் கொண்ட கருணாநிதியை எதிர்த்து இயற்கை போராடி கொண்டிருக்கிறது. அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது. அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக காவேரி மருத்துவமனை அருகில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வெளியே போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து, ஒலிப்பெருக்கி மூலம் திமுக தொண்டர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். தொண்டர்கள் தங்களின் செல்போன்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும், மற்ற நோயாளிகளுக்கு சிரமமின்றி நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    திமுக தலைவர் கருணாநிதி நன்றாக இருப்பதாகவும், தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும்  கனிமொழி எம்.பி.  கூறியுள்ளார். #KarunanidhiHealth #KauveryHospital #DMKCadres #TNPolice
    தி.மு.க. தலைவர் கருணாநிதி மருத்துவ அதிசயம் என்றும் அவர் விரைவில் குணமடைவார் என்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Karunanidhi #KauveryHospital #Vaiko
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி (வயது 94), வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.

    அவ்வகையில், இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு மருத்துவ அதிசயம். வாழ்நாளெல்லாம் தமிழர் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் பல சக்திகளை எதிர்த்து போராடியிருக்கிறார். அடக்குமுறைகள் மற்றும் எதேச்சதிகாரத்தை எதிர்த்து போராடியிருக்கிறார். பலமுறை சிறைவாசம் கண்டிருக்கிறார். இப்போது எமனோடு போராடுகிறார். எமனையும் ஜெயித்து மீண்டு வருவார்’ என குறிப்பிட்டார்.


    இதேபோல் நாஞ்சில் சம்பத் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் கூறும்போது, தமிழகத்தின் கடைசி நம்பிக்கை கருணாநிதி, அவர் மீண்டு வர வேண்டும் என்றார். ஒரே நேரத்தில் கவி அரசனாகவும், புவியரசனாகவும் ஜொலித்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,  இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், திரைப்பட இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.  #DMKLeader #Karunanidhi #KauveryHospital #Vaiko
    ×