search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி படம் வெளியானதால் தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி
    X

    கருணாநிதி படம் வெளியானதால் தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்விழித்து பேசுவது போன்ற படம் வெளியானதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தொண்டர்களின் கூட்டம் குறைந்ததால் ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து சீரானது. #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 27-ந்தேதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் குழு 24 மணி நேரமும் கருணாநிதி உடல் நிலையை கண்காணித்து வருகிறது.

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட குடும்பத்தினர் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் கருணாநிதி உடல்நிலை குறித்து தெரிவித்து வருகிறார்கள். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று கருணாநிதி உடல்நிலை பற்றி கேட்டு அறிந்து வருகிறார்கள்.

    கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதில் இருந்தே தி.மு.க. தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கினார்கள். 5 நாட்களாக இரவு பகல் பாராமல் ஆஸ்பத்திரி அருகிலேயே காத்துக் கிடந்தனர். கருணாநிதியை பார்த்துவிட்டு வரும் முக்கிய பிரமுகர்கள் ‘கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது’ என்று கூறினார்கள்.

    என்றாலும், தொண்டர்கள் அந்த இடத்தில் இருந்து நகரவில்லை. வெளியூர் தொண்டர்களும் வரத் தொடங்கியதால் ஆஸ்பத்திரி பகுதியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமானது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாநிதி உடல்நிலையில் லேசான பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நிலைமையை சமாளிக்க ஆஸ்பத்திரி முன்பு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு வதந்திகள் பரவின. உண்மைநிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் தவித்தனர். ‘கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் சீராகி விட்டது. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

    இதை உறுதிபடுத்தும் விதத்தில் காவேரி ஆஸ்பத்திரியும் அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிப்பதால் கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று சென்னைக்கு வந்து கருணாநிதியை பார்த்தார்.


    இதையடுத்து ராகுல்காந்தி நேரில் கருணாநிதியை பார்த்தது போன்ற புகைப்படம் வெளியானது. இதில் கருணாநிதியின் காது அருகே மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அப்போது கருணாநிதி கண்விழித்து பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்று உள்ளது. இந்த படம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    ‘தலைவர் கலைஞர் மீண்டு வந்துவிட்டார்’ என்று குரல் எழுப்பி இருக்கிறார்கள். அதைதொடர்ந்து காவேரி ஆஸ்பத்திரி வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. இன்னும் சில தினங்கள் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் தொண்டர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே தொண்டர்கள் குவிந்ததால் அந்த ஆஸ்பத்திரி அமைந்துள்ள லஸ் சர்ச் சாலையில் தடுப்புவேலி அமைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

    நேற்று கருணாநிதி கண்விழிப்பது போன்ற படம் வெளியானதால் தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர். இதனால் அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் கலைந்து சென்றனர். கூட்டம் குறைந்ததை அடுத்து தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன. ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து சீரானது. தற்போது காவேரி ஆஸ்பத்திரி பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    Next Story
    ×