search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "irrigation"

    • மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 1135 கன அடியாக உள்ளது.
    • 3 மாதத்திற்கும் மேலாக அணையிலிருந்து உபரி நீர் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளை நீராதாரங்களாக கொண்டு அமராவதி அணை கட்டப் பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 1135 கன அடியாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை விடப்பட்டது. ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.

    நடப்பு ஆண்டில் தென் மேற்கு பருவ மழை காலத்தில் ஜூலை 15-ந்தேதி அமராவதி அணை நிரம்பியது. தொடர்ந்து 3 மாதத்திற்கும் மேலாக அணையிலிருந்து உபரி நீர் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது. அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை துவங்கி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் தலையாறு, மூணாறு, மறையூர், கொடைக்கானல் மலையின் மேற்கு பகுதி மற்றும் வால்பாறை மலைத்தொடரின் கிழக்குப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது அணைக்கு நீர்வரத்து ஆறுகளான, பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் பிற ஓடைகளின் மூலம் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது . இதனால் கடந்த 7 நாட்களில் அணை நீர்மட்டம் 8 அடி வரை உயர்ந்தது.

    தற்போதைய நிலவரப்படி அணை நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88 அடியாகவும், மொத்த கொள்ளளவான 4.04 டிஎம்சி யில் 3.80 டிஎம்சியாக நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1135 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

    பருவ மழை காலங்களில் அணையின் மொத்த நீர்மட்டத்தில் 85 அடியை எட்டியதும் வழியோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்படும். அதன் அடிப்படையில் கடந்த ஞாயிறு அன்று மாலை அணை நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்ததும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது .தற்போது அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், அணையின் பாதுகாப்பு கருதி பாசனத்திற்காக வாய்க்காலில் கூடுதலாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    • சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மூன்று பாசனவாய்க்கால் செல்கிறது.
    • பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மேலபனையூர் தெற்கு தெரு கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது.

    இந்த சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மூன்று பாசனவாய்க்கால் செல்கிறது.

    இந்த மூன்று வாய்க்காலிலும் பாலம் இல்லை. வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.

    இதனால் தெற்கு தெருவில் இறந்தவரின் உடலை சேறு- சகதியும் நிறைந்த வயல் வழியாக சுடுகாட்டிற்கு தகனம் செய்ய எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே சுடுகாட்டிற்கு செல்லும்.வழியில் உள்ள பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து சாலையை தார் சாலையாக சீரமைக்க வேண்டும். சுடுகாட்டில் தெருவிளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தி லுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்று பாசனத்திற்காக தண்ணீரை மலர் தூவி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையின் மூலம் நேற்று முதல் 9 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதமும், நேரடி கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 3 கனஅடி வீதம் 28.2.2023 வரையிலும் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

    பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திறப்பினால் மீதமுள்ள கண்மா ய்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து பாசனத்திற்காகவும், பெரியாறு பிரதான கால்வாய் மூலம் நேரடி பாசனத்திற்காகவும் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

    இந்த தண்ணீர் திறப்பினால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதான கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடைய உள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, வத்திரா யிருப்பு, கூமாபட்டி, சுந்தர பாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், செம்மாண்டி கரிசல்குளம், பாட்டக்குளம் சல்லிபட்டி, விழுப்பனூர், தச்சகுடி, கிருஷ்ணபேரி, நெடுங்குளம், குன்னூர் ஆகிய 17 வருவாய் கிராமங்கள் பயன்பெறும்.

    இதேபோல் அணை நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பாசன பருவ காலம் வரை தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விவசாய நிலங்கள் மழை காலங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வந்தது.
    • தண்ணீர் செல்ல தடையாக இருந்த செடி, கொடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள ஜெம்பு காவேரி வாய்க்காலில் ஏராளமாக செடிகள் மற்றும் ஆகாய தாமரை செடிகள் மண்டியிருந்தது. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது.

    அதனால் ஜெம்புகாவேரி வாய்க்கால் மூலம் வடிகால் மற்றும் பாசன வசதிபெறக்கூடிய நெய்தலூர், குண்டூர், அன்னப்பன்பேட்டை மற்றும் பொந்தையா குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மழை காலங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வந்தது. இது குறித்த செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியாகி இருந்தது

    இதன் எதிரொலியாக அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள ஜெம்பு காவேரி வாய்க்காலில் தண்ணீர் செல்ல தடையாக இருந்த செடிகள், கொடிகளை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    இதையடுத்து தண்ணீர் தற்போது தங்கு தடையின்றி பாசனத்திற்கு விரைந்து செல்கிறது.

    ஜெம்பு காவேரி வாய்க்காலில் தண்ணீர் செல்ல தடையாக இருந்த செடி, கொடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாலைமலர் நாளிதழுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

    • நடவு பணிகளை முடித்து விட விவசாயிகள் கூடுதல் வேகம் காட்டி வருகின்றனர்.
    • விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    குறுவை சாகுபடி முடிந்து, சம்பா நெல் சாகுபடி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மேலும் தாளடி நெல் சாகுபடியினையும் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

    தற்போது பருவ மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதற்குள் நடவுப் பணிகளை முடித்து விட விவசாயிகள் கூடுதல் வேகம் காட்டி வருகின்றனர்.

    மழை பெய்ய தொடங்கி விட்டால் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும்.

    இதனை கருத்தில் கொண்டு பருவமழை தீவிரமடைவதற்குள் நடவு பணிகளை முடித்து விட வேண்டும் என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ள சம்பா நெல் வயல்களில் நடவுப் பணிகள் வேகம் எடுத்துள்ளது.

    கூடுதல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி நடவுப் பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

    இதுபோல் தாளடி நெல் விவசாயத்திற்கு வயல்களை தயார் செய்யும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து வயல்வெளிகளில் தண்ணீர் பாசனம் நடைபெற்று வருகிறது.

    இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆறுகளில் தண்ணீர் வருவதோடு பருவமழையும் சரிவர பெய்யும் என்பதால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டு நெல் சாகுபடியினை, இயற்கையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த நெல் சாகுபடி பணிகள் தடையின்றி நடைபெற தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் இருப்பில் வைத்து வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நுண்ணீர் பாசனத்தினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
    • சம்பா பயிர் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன அலகுகளில் செயல்பாடு மற்றும் பராமரிப்பு பற்றிய பயிற்சி நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார்.

    நுண்ணீர் பாசன கம்பெனியின் மண்டல மேலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு நுண்ணீர் பாசனத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் வட்டாரத்தில் நடைமுறை படுத்தப்படும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் சம்பா பயிர் காப்பீடு செய்வதன் முக்கி யத்துவம் பற்றியும் விவசாயி களுக்கு எடுத்து ரைத்தார்.

    துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் நடப்பு சம்பா சாகுபடியில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை கள் மேற்கொள்வது பற்றி எடுத்து ரைத்தார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சிந்து மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்தி ருந்தனர்.

    • ஒருபோக பாசனத்துக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கள்ளிராதினிப்பட்டி, கட்டாணிப்பட்டி ஆகிய பகுதிகள் வழியாக பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்தடைந்ததையொட்டி, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    2022-23-ம் ஆண்டிற்கான பெரியாறு வைகை பாசனத்திற்காக, பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும். திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப்பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும், கடந்த 7-ந் தேதி முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8,461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையில் இருந்து திறந்து விட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது, தண்ணீர்திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே பெரியாறு பாசன திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் வந்தடைந்தது. மாவட்டத்திலுள்ள கண்மாய்களுக்கு கட்டாணிப்பட்டி கால்வாய் 1 மற்றும் 2 மற்றும் 48-வது மடைகால்வாய் ஆகிய கால்வாய்கள் திறக்கப்பட்டு முருகினி, புதுக்கண்மாய், பெரியகோட்டை மற்றும் சின்னகுண்ணங்குடி ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மதுரையில் உள்ள குறிச்சி கண்மாய் பெருகி சிவகங்கை மாவட்டத்திற்கு செல்லும் சீல்டு கால்வாய் மூலம் ஆதினிக்கண்மாய்க்கு தண்ணீர்வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 129 கண்மாய்களுக்கு தண்ணீர்வழங்கப்பட்டு, சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் தாசியூஸ், உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும்.
    • கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு போர்க்கால அடிப்படையில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய தண்ணீரால் சூழப்பட்டுள்ள திட்டு கிராமங்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. 64 டிஎம்சி தண்ணீரை தேக்கி பயன்படுத்தும் அளவுக்கு ராசிமணலில் அணை கட்டினால் விவசாயத்திற்கு பயன்படும்.

    எனவே மத்திய அரசு கர்நாடக அரசின் உதவியை பெற்று அதற்கான பணியை தொடங்கிட வேண்டும். காவிரியில் 93 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பாசனத்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு மேட்டூர் அணை உள்ளது. அதற்கு மேல் வரும் தண்ணீர் அனைத்தும் கடலுக்குத் தான் செல்ல வேண்டும். அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும். கரூர் முதல் பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் எத்தனை ஏரிகள் கொள்ளிடம் கரைப்பகுதியில் இருக்கின்றதோ, அத்தனை ஏரிகளிலும் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றின் பாலத்திலிருந்து ஆறு கடலில் கலக்கும் கடல் முகத்துவாரம் வரை இரு கரைகளிலும் கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும். இந்த முறை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் வெளியேற்றப்படுகிறது.ஆனால் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் 5 லட்சம் கன அடி தண்ணீர் செல்லும் ஆற்றில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலை மேட்டுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் முற்றிலும் அழிந்து இருக்கிறது. குடிசை வீட்டிற்கு ரூ25 ஆயிரம், ஓட்டு வீட்டிற்கு ரூ50,000 வீதம் நிவாரணம் வழங்கி மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொடர்ந்து மேடான பகுதிகளில் மனைபட்டா வழங்கி ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ளவர்களை குடிமாற்றம் செய்து வீடு கட்டி கொடுக்க வேண்டும். அடுத்த ஆண்டிற்குள் அதனை செய்ய வேண்டும். கொள்ளிடம் பகுதியில் 3வது முறையாக தோட்டப்பயிர்கள் பருத்தி, கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக 50 ஆயிரம் உற்பத்தி செலவை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு முதல் அமைச்சர் முழு முயற்சி செய்து விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டும்.

    வெள்ளமணல் கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு போர்க்கால அடிப்படையில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் விஸ்வநாதன், ஆச்சாள்புரம் விவசாய சங்கத் தலைவர் அருண், நிர்வாகிகள் சீனிவாசன் ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • 2 ஆயிரம் கன அடி வரை கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்று வருகிறது.
    • தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    வெள்ளகோவில்

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் தென்புறம் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது.அணையில் இருந்து கீழ்பவானி பாசன பிரதான கால்வாயில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் தண்ணீர் தற்போது வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி வரை கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்று வருகிறது.

    இந்த நிலையில் வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் இப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள நகர, கிராம பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், வடமாநில தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நேரில் வந்து கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மேலும் இப்பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் குளிப்பதற்கு தடை என போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர்.மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • அணைக்கு நாள் ஒன்றுக்கு 2 அடி விகிதம் படிப்படியாக உயர்ந்து 42 அடியை கடந்து உள்ளது.

    உடுமலை :

    உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள நீரை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன வசதிக்கு ஏதுவாக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.மேலும் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, மடத்துக்குளம் பூலாங்கிணறு, குடிமங்கலம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரவில்லை. அதன் பின்னர் பணிகள் முடிந்த நிலையில் கடந்த வாரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணைக்கு நாள் ஒன்றுக்கு 2 அடி விகிதம் படிப்படியாக உயர்ந்து 42 அடியை கடந்து உள்ளது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் கொடுத்த கோரிக்கையின் பேரில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசிடமிருந்து உத்தரவு வந்த பின்பு தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருவதாலும் இந்த மாத இறுதிக்குள் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலத்தை உழுது சாகுபடி பணிகளுக்கு தயாராகி வருகின்றனர். 60 அடி உயரம் கொண்ட அணையில் தற்போதைய நிலவரப்படி 42.06 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 893 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 26 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • பருவமழையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
    • காங்கயம் பகுதிகளில் வறட்சி நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி பி.ஏ.பி., அலுவலகத்தில் நடந்தது.

    இதில் பாசன சபை தலைவர்கள் பேசுகையில், பருவமழையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. வரும் 26ந் தேதி முதல் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நீர் வழங்க வேண்டும்.வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் வறட்சி நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும். சுற்று எண்ணிக்கையை குறைத்தால் நாட்கள் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதல் தண்ணீர் வழங்க சாத்தியம் உள்ளதா என ஆலோசிக்க வேண்டும்.இரண்டாம் மண்டல பாசனத்துக்கு சுற்று எண்ணிக்கை குறைக்க காண்டூர் கால்வாய் பணிகள் தான் காரணமா அல்லது உபரியாக நீர் வீணாக சென்றதால் குறைத்து வழங்கப்படுகிறதா என விளக்கமளிக்க வேண்டும்.கடந்தாண்டை போன்று எத்தனை சுற்று தண்ணீர் வழங்கலாம். இவ்வளவு எடுக்கிறோம், எத்தனை நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் உள்ளிட்ட விபரங்கள் முறையாக தெரிவிக்க வேண்டும். சமமான நீர் பங்கீடு வழங்க வேண்டும். நீர் வழங்குவது குறித்து அட்டவணை அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் கூறுகையில்,காண்டூர் கால்வாய் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் 5 சுற்றுக்கு பதிலாக 4 சுற்று தண்ணீர் வழங்கலாம். அதன் பின் உரிய இடைவெளி கிடைப்பதால் பணிகள் தாமதமின்றி மேற்கொள்ள முடியும்.திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயிகள் கோரிக்கையின் படி, வரும் 26ந் தேதி தண்ணீர் திறப்பது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.காண்டூர் கால்வாய் பணிகள் தாமதமின்றி முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுற்று எண்ணிக்கை குறைக்க கேட்டோம். வாட்டர் பட்ஜெட் போட்டதும் எவ்வளவு மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படும்.

    திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறுகையில், வரும் 26ந் தேதி தண்ணீர் திறக்க பாசன சபை தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனங்களுக்கு ஒரு சுற்று குறைத்து தலா 4 சுற்று வீதம் தண்ணீர் வழங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதிகாரிகள் பேசுகையில், மொத்தம் 72 கோடி ரூபாய் செலவில் காண்டூர் கால்வாய் பணிகளை முடிக்க, 2 ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.அதற்கு பாசன சபை தலைவர்கள், நல்லாறு பகுதியில் மேற்கொண்ட பணிகள் முடிவடைந்த நிலையில், மீதம் உள்ள பணிகளை, ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டால் பாசனம் பாதிக்காது. இது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

    • 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் பாசன வசதி பெற்று வருகிறது.
    • முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது கடந்த மே மாதம் நிறைவடைந்தது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு (பி.ஏ.பி) பாசனத்திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பாசன பகுதிகளுக்கான தண்ணீர் தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கால்வாய்கள் மூலமாக பாசனபகுதிகளுக்கு திறந்து விடப்படுகிறது. முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது கடந்த மே மாதம் நிறைவடைந்தது.

    இந்தநிலையில் தற்போது பிரதான கால்வாய்கள் மற்றும் கிளை (பகிர்மான) கால்வாய் கரைகளில் செடிகள் வளர்ந்துள்ளன. கால்வாயின் உள்பகுதியிலும் செடிகள் வளர்ந்துள்ளன. 2-ம் மண்டல பாசனத்திற்கு வருகிற 28-ந்தேதி தண்ணீர் திறந்து விட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உடுமலை கால்வாய் பிரிவு1-ல் திருமூர்த்தி அணையில் இருந்து தளி ஜல்லிபட்டி, பள்ளபாளையம், எஸ்.வி.புரம் வழியாக 23 கி.மீ.தூரத்தில் உள்ள தாந்தோணி வரை கால்வாய் கரையின் 2 பக்கங்களிலும் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் கால்வாயின் உள்புறம் வளர்ந்துள்ள செடிகள் வெட்டி அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது.

    அத்துடன் உடுமலை கால்வாயில் இருந்து 2-ம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் கிளை (பகிர்மான கால்வாய்) கால்வாய்கள் மற்றும் கரைப்பகுதிகளில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது ஜல்லிபட்டியில் உடுமலை (பிரதான) கால்வாய், சின்னவீரன்பட்டி, எஸ்.வி.புரம் ஆகிய பகுதிகளில் கிளை கால்வாய் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    ×