search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளத்தால் பாதித்த தோட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்
    X

    தண்ணீர் சூழ்ந்துள்ள நாதல்படுகை கிராமத்தை பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார்.

    வெள்ளத்தால் பாதித்த தோட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்

    • அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும்.
    • கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு போர்க்கால அடிப்படையில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய தண்ணீரால் சூழப்பட்டுள்ள திட்டு கிராமங்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. 64 டிஎம்சி தண்ணீரை தேக்கி பயன்படுத்தும் அளவுக்கு ராசிமணலில் அணை கட்டினால் விவசாயத்திற்கு பயன்படும்.

    எனவே மத்திய அரசு கர்நாடக அரசின் உதவியை பெற்று அதற்கான பணியை தொடங்கிட வேண்டும். காவிரியில் 93 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பாசனத்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு மேட்டூர் அணை உள்ளது. அதற்கு மேல் வரும் தண்ணீர் அனைத்தும் கடலுக்குத் தான் செல்ல வேண்டும். அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும். கரூர் முதல் பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் எத்தனை ஏரிகள் கொள்ளிடம் கரைப்பகுதியில் இருக்கின்றதோ, அத்தனை ஏரிகளிலும் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றின் பாலத்திலிருந்து ஆறு கடலில் கலக்கும் கடல் முகத்துவாரம் வரை இரு கரைகளிலும் கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும். இந்த முறை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் வெளியேற்றப்படுகிறது.ஆனால் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் 5 லட்சம் கன அடி தண்ணீர் செல்லும் ஆற்றில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலை மேட்டுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் முற்றிலும் அழிந்து இருக்கிறது. குடிசை வீட்டிற்கு ரூ25 ஆயிரம், ஓட்டு வீட்டிற்கு ரூ50,000 வீதம் நிவாரணம் வழங்கி மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொடர்ந்து மேடான பகுதிகளில் மனைபட்டா வழங்கி ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ளவர்களை குடிமாற்றம் செய்து வீடு கட்டி கொடுக்க வேண்டும். அடுத்த ஆண்டிற்குள் அதனை செய்ய வேண்டும். கொள்ளிடம் பகுதியில் 3வது முறையாக தோட்டப்பயிர்கள் பருத்தி, கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக 50 ஆயிரம் உற்பத்தி செலவை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு முதல் அமைச்சர் முழு முயற்சி செய்து விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டும்.

    வெள்ளமணல் கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு போர்க்கால அடிப்படையில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் விஸ்வநாதன், ஆச்சாள்புரம் விவசாய சங்கத் தலைவர் அருண், நிர்வாகிகள் சீனிவாசன் ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×