search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமூர்த்தி அணையில் இருந்து 2-ம் மண்டல பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறப்பு
    X

    திருமூர்த்தி அணை.

    திருமூர்த்தி அணையில் இருந்து 2-ம் மண்டல பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறப்பு

    • 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • அணைக்கு நாள் ஒன்றுக்கு 2 அடி விகிதம் படிப்படியாக உயர்ந்து 42 அடியை கடந்து உள்ளது.

    உடுமலை :

    உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள நீரை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன வசதிக்கு ஏதுவாக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.மேலும் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, மடத்துக்குளம் பூலாங்கிணறு, குடிமங்கலம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரவில்லை. அதன் பின்னர் பணிகள் முடிந்த நிலையில் கடந்த வாரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணைக்கு நாள் ஒன்றுக்கு 2 அடி விகிதம் படிப்படியாக உயர்ந்து 42 அடியை கடந்து உள்ளது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் கொடுத்த கோரிக்கையின் பேரில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசிடமிருந்து உத்தரவு வந்த பின்பு தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருவதாலும் இந்த மாத இறுதிக்குள் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலத்தை உழுது சாகுபடி பணிகளுக்கு தயாராகி வருகின்றனர். 60 அடி உயரம் கொண்ட அணையில் தற்போதைய நிலவரப்படி 42.06 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 893 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 26 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×