search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒருபோக பாசனத்துக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறப்பு
    X

    பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சிவகங்கை மாவட்டம், கட்டாணிப்பட்டி பகுதி வழியாக வந்தடைந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி அந்த பகுதியில் பார்வையிட்டு ஆய்வு ெசய்தார்.

    ஒருபோக பாசனத்துக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறப்பு

    • ஒருபோக பாசனத்துக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கள்ளிராதினிப்பட்டி, கட்டாணிப்பட்டி ஆகிய பகுதிகள் வழியாக பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்தடைந்ததையொட்டி, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    2022-23-ம் ஆண்டிற்கான பெரியாறு வைகை பாசனத்திற்காக, பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும். திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப்பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும், கடந்த 7-ந் தேதி முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8,461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையில் இருந்து திறந்து விட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது, தண்ணீர்திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே பெரியாறு பாசன திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் வந்தடைந்தது. மாவட்டத்திலுள்ள கண்மாய்களுக்கு கட்டாணிப்பட்டி கால்வாய் 1 மற்றும் 2 மற்றும் 48-வது மடைகால்வாய் ஆகிய கால்வாய்கள் திறக்கப்பட்டு முருகினி, புதுக்கண்மாய், பெரியகோட்டை மற்றும் சின்னகுண்ணங்குடி ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மதுரையில் உள்ள குறிச்சி கண்மாய் பெருகி சிவகங்கை மாவட்டத்திற்கு செல்லும் சீல்டு கால்வாய் மூலம் ஆதினிக்கண்மாய்க்கு தண்ணீர்வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 129 கண்மாய்களுக்கு தண்ணீர்வழங்கப்பட்டு, சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் தாசியூஸ், உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×