search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illicit liquor"

    • விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடந்த உயிரிழப்புகள், மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க இந்த அரசு தவறி விட்டதையே காட்டுகிறது.
    • மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் முதன்மைப் பொறுப்பு மாநிலத்தில் கள்ளச்சாராயத்தை தடுப்பதாகும்.

    சென்னை:

    தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம், செங்கல்பட்டு அருகே உள்ள சித்தாமூர் ஆகிய 2 இடங்களிலும் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அ.தி.மு.க., பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. அரசின் அலட்சிய போக்கு காரணமாகவே கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று இந்த 2 கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.

    கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கவர்னரை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    இதன்படி பாரதிய ஜனதா கட்சியினர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தமிழக சட்டமன்ற பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி, முன்னாள் எம.எல்.ஏ. காயத்ரிதேவி, மாநில செயலாளர் பிரமிளா சம்பத் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கவர்னரிடம் மனு அளித்தனர்.

    அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய மரண விவகாரத்தில் கவர்னர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக தனித்தனியாக 2 மனுக்களை அண்ணாமலை கவர்னரிடம் வழங்கினார்.

    கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறி இருப்பதாவது:-

    கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தது மற்றும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளரிடம் விரிவான அறிக்கை கேட்டிருப்பதற்கு தமிழக பா.ஜனதா சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடந்த உயிரிழப்புகள், மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க இந்த அரசு தவறி விட்டதையே காட்டுகிறது.

    மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் முதன்மைப் பொறுப்பு மாநிலத்தில் கள்ளச்சாராயத்தை தடுப்பதாகும். இந்த விஷயத்தில் நீங்கள் (கவர்னர்) தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் குடித்தனர்.
    • கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்து வருவதால் எக்கியார் குப்பம் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.

    மரக்காணம்:

    மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் பலியானார்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் குடித்தனர்.

    அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுவை ஜிப்மர், புதுவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மரக்காணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதுவரை 13 பேர் பலியாகி இருந்தனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எக்கியார் குப்பத்தை சேர்ந்த கன்னியப்பன் (50) பலியானார். இதனால் பலி ண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

    கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்து வருவதால் எக்கியார் குப்பம் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.

    • சாராய வியாபாரிகளான அமரன், ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி,முத்து, குணசீலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில கடந்த 13-ந் தேதி கள்ளச்சாராயம் குடித்த 60 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உள்பட 13 பேர் பலியானார்கள்.12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும். ஒரு பெண் உள்பட 35 பேர் பொது மருத்துவ பிரிவிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த செந்தமிழ் (35), ராமலிங்கம் (55), கோவிந்தன் (39), தென்னரசன் (33), ரமேஷ் (31), வேல் முருகன் (51), மற்றொரு ரமேஷ் (52), ஆகிய 7 பேர் பூரண குணமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்கள் வேன் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழுப்புரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், தனி தாசில்தார் ஜோதிவேல், மருத்துவக்கல்லூரி டீன் கீதாஞ்சலி, உண்டு உறைவிட மருத்துவர் ரவக்குமார் மற்றும் டாக்டர்கள் குழுவினர் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தனர்.

    எக்கியார் குப்பம் கள்ளச்சாராய விற்பனை வழக்கில் சாராய வியாபாரிகளான அமரன், ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி,முத்து, குணசீலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    சாராயம் தயாரிக்க மெத்தனால் சப்ளை செய்ததாக புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா என்ற ராஜா, ஏழுமலை, சென்னை ரசாயன ஆலை உரிமையாளர் இளைய நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் மெத்தனால் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்கிற பிரேம் குமார் (54), வானூர் அடுத்த பெரம்பை நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு என்கிற வெங்கடாஜலபதி (40) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் 2 பேரும் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் மூலம் மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    • மக்கள் மத்தியில் தனது இருப்பை காட்டிக்கொள்ள கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்.
    • குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.

    இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் எழுதி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்த வேதனையில் அரசியல் நடத்திட சில அரசியல் ஆத்திரக்காரர்கள் முற்பட்டுள்ள நிலையில் நமது கவர்னர் ஆர்.என்.ரவியும் தன் பங்குக்கு அந்த துயர சம்பவத்தில் விளம்பர வெளிச்சம் தேட முற்பட்டுள்ளார்.

    கவர்னர் விரிவான விளக்க அறிக்கை கேட்பதில் என்ன தவறு? என்று சிலர் கேட்கட்டும். கவர்னர் கேட்பதில் தவறு இல்லை. கேட்டவிதம் தான், அவர் எத்தகைய விஷமத்தனத்தோடு விஷம் கக்கி உள்ளார் என்பதை வெளிப்படையாக்குகிறது.

    நடந்தவை குறித்து முழு விவரங்களை அரசின் மூத்த அதிகாரியை தொலைபேசியிலோ, நேரிலோ அழைத்து அறிந்துகொள்ள கவர்னரால் முடியும் என்றாலும் அப்படி செய்யாது அதனை ஒரு அறிக்கையாக வெளியிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி தான் ஏதோ பெரிய செயலை செய்துவிட்டதாக எண்ணும் சிறுபிள்ளைத்தனம் தான், கவர்னரின் நெஞ்சம் எல்லாம் எவ்வளவு வஞ்சம் உள்ளது என்பதை உணர்த்துகிறது.

    கவர்னர் ரவி விளக்கம் கேட்டு அனுப்பியுள்ள அறிக்கையின் ஒவ்வொரு வரியிலும் விளக்கம் என்ற பேரில் கேட்டுள்ள சில கேள்விகள் அவரது அரசியல் தெளிவற்ற தன்மையின் மொத்த வெளிப்பாடு மட்டுமல்ல, அவர் கழக அரசை நோக்கி பாய்ந்து எழுப்பியுள்ள ஒவ்வொரு கேள்வியும், அவரது எஜமானர்கள் மேற்பார்வையில் நடக்கின்ற குஜராத் அரசையும் தாக்கி கடித்து குதறும் என்பதை அறியாமல் அசட்டு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

    இந்த கேள்விகளை அரசிடம் எழுப்பும் முன் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் விஷ சாராயம் குடித்து பலியானார்களே, அப்போது அங்குள்ள கவர்னர்கள் இப்படி விஷமத்தனத்தோடு ஆளும் பா.ஜ.க. அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டனரா? என்பதையாவது கேட்டறிந்திருக்க வேண்டாமா?

    நடந்துவிட்ட விஷ சாராய சாவுகள் குறித்தும் அதன் காரணமாக அரசு எடுத்திடும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்கள், ஏடுகளில் செய்திகள் தெளிவாக வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெற்றுவிடக்கூடாதே என்று மிகுந்த எச்சரிக்கையோடு அரசின் எல்லாவித சக்திகளும் முடுக்கப்படுகின்றன.

    இதற்கு தேவையான அரசு எந்திரங்கள் விரைவாக செயல்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உடனடி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முழு வீச்சுடன் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் தனது இருப்பை காட்டிக்கொள்ள கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். விபரம் தெரியாத அரசியல்வாதிபோல கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறார்.

    கவர்னர் ரவிக்கு ஒரே நாளில் தமிழ்நாட்டில் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதும், கள்ளச்சாராயம் இல்லை என்றால் அவ்வளவு பேரை கைது செய்ய அவசியம் ஏன் ஏற்பட்டது என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்த சந்தேகத்தை தமிழ்நாடு தலைமை செயலாளரிடம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யக்கோருவதை விடுத்து இதுபோன்று 2 ஆயிரம் பேரை ஏன் கைது செய்ய வேண்டும் என குஜராத் கவர்னருக்கு ஒரு தொலைபேசி போட்டு கேட்டிருந்தால் அவர் விளக்கி இருப்பார்.

    குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளது. காந்தி பிறந்த அந்த மாநிலத்தில் காந்தியார் பிறந்த இல்லத்துக்கு அருகில் எல்லாம் கள்ளச்சாராயம் மலிவு சரக்காக விற்பனையாவதாக பல நேரங்களில் புகைப்பட ஆதாரங்களுடன் ஏடுகளில் செய்திகள் வந்தன.

    அந்த குஜராத் மாநிலத்தில் கவர்னர் ரவிக்கு இஷ்டமான பா.ஜனதா கட்சியின் ஆன்மீக அரசியல் தான் பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. எல்லாம் அறிந்ததாக அதிமேதாவியாக தன்னை கருதிக்கொண்டு அவ்வப்போது செயல்பட்டு வரும் கவர்னர் ரவிக்கு இது தெரியாதிருக்க நியாயமில்லை.

    கவர்னர் ரவி விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால் தனது பதவியை துறந்து அண்ணாமலைபோல ஏதாவது ஒரு மாநிலத்தின் பா.ஜனதா தலைவராக ஆகிவிடலாம். அதைவிடுத்து தாறுமாறாக செயல்பட்டு கவர்னர் பதவிக்குரிய தகுதியை சீரழிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொம்மையார்பாளையம் பகுதியில் முகம்மத்ஆஷிப் என்பவரிடம் 5 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • புதுவையில் இருந்து சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவது குறைந்து வருகிறது.

    புதுச்சேரி:

    மரக்காணம் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் புதுச்சேரி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் புதுவை பகுதியில் இருந்து மரக்காணம், செங்கல்பட்டு காஞ்சிபுரம் பகுதிகளுக்கு மெத்தனால் மற்றும் சாராயம் கடத்தப்படுவதை தடுக்க புதுவை-தமிழக எல்லையான ஆரோவில் கோட்டக்குப்பம் வானூர், மரக்காணம், கிளியனூர் ஆகிய பகுதிகளில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான போலீசார் ஈ.சி.ஆர். சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது புதுவையில் இருந்து 100 மில்லி சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த மரக்காணம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த வெள்ளிகண்ணு (வயது 35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் மரக்காணம் பகுதியில் புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லிட்டர் சாராயத்தை பழனி (64) என்பவரிடம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து பழனியை கைது செய்தனர்.

    இதேபோல் கோட்டக்குப்பம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விபின் (25) என்பவரிடம் 4 பிராந்தி பாட்டில், 6 பீர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த விமல்ராஜ் என்பவரிடம் 17 பீர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

    பொம்மையார்பாளையம் பகுதியில் முகம்மத்ஆஷிப் என்பவரிடம் 5 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆரோவில் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த வினோத் பிரபு (40), என்பவரிடம் 4 பீர்பாட்டில் ஒரு பிராந்தி பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. வானூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது திண்டிவனப் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரிடம் 48 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மொத்தம் சாராயம் கடத்தியதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை எல்லையில் தமிழக மதுவிலக்கு போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி வருவதால் புதுவையில் இருந்து சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவது குறைந்து வருகிறது.

    • பனங்கள்ளை, நம் முன்னோர் பனம்பால் என்றும் சொல்லிவைத்து இருக்கிறார்கள்.
    • பனை மரத்தில் இருந்து, சுண்ணாம்பு உள்ளிட்ட எதுவும் சேர்க்காமல் 100 சதவீதம் இயற்கையாகக் கிடைப்பதுதான் பனங்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சில தினங்களுக்கு முன்பு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒரே தீர்வு, பனங்கள் இறக்கவும், அதை விற்பனை செய்யவும் அனுமதிப்பது தான். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது போல தமிழகத்திலும் கள் இறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

    பனங்கள்ளை, நம் முன்னோர் பனம்பால் என்றும் சொல்லிவைத்து இருக்கிறார்கள். பனை மரத்தில் இருந்து, சுண்ணாம்பு உள்ளிட்ட எதுவும் சேர்க்காமல் 100 சதவீதம் இயற்கையாகக் கிடைப்பதுதான் இந்த பனங்கள்.

    இதைக் குடித்தால் சிறிது நேரத்துக்குத்தான் போதை இருக்கும். இந்த பனங்கள் அருந்தும் பழக்கம், நம் தமிழர் வாழ்வில் இணைந்திருந்த ஒன்றுதான். இப்போது டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகள், உடலுக்கு தீங்கை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால், பனங்கள் அப்படி கிடையாது. விலை மலிவாகக் கிடைக்கும் அந்த பனங்கள்ளை ஒரு ஏழை தொழிலாளி குடிப்பதால், அவருக்கு உடல் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆரோக்கியமாக இருப்பார். கள்ளுக்கான செலவும் குறைவாகவே இருக்கும்.

    ஒரு பனை தொழிலாளி பனங்கள் இறக்கி விற்பனை செய்யும்போது, அந்த பனை மரங்கள் வைத்துள்ள அனைவருக்கும் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். கிராமப்புறங்களில் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

    பனை மரங்களை வளர்க்கும் ஆர்வமும் பெருகும். அதனால், நம் தமிழ்நாட்டின் மரமான பனை மரத்தின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

    ஆக, பனங்கள் இறக்க வழங்கப்படும் அனுமதியால், கிராமப்புறங்களில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி உண்டாகும். டாஸ்மாக் மதுவைக் குடித்து, உடல் பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளுக்குச் செல்லும் குடி நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து விடும். விலை மலிவான பனங்கள் பயன்பாட்டில் இருந்தால், கள்ளச்சாராயம் யாருக்கும் தேவைப்படாது. பனம்பால் என்கிற இந்த பனங்கள் டாஸ்மாக் கடைகளிலேயே விற்பனை செய்ய அரசாங்கமும் முன் வரவேண்டும். இதை நான் சட்டமன்றத்திலும் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறேன். நமது முதல்வர் அவர்கள், பனங்கள் இறக்க அனுமதி தந்து, அந்த பனங்கள்ளை டாஸ்மாக் கடைகளிலும் விற்பனைக்குக் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • புதுச்சேரி சாராயத்திற்கு தனி மவுசு உண்டு என்பதால் பாண்டி ஐஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
    • சிதம்பரம், சீர்காழி பகுதியில் பாண்டி ஐஸ் பெயரிட்ட பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை களை கட்டுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கும், கரைக்கால் பகுதியில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளுக்கு சாராயம் கடத்தி செல்லப்படுகிறது.

    புதுச்சேரி மற்றும் அதன் பிராந்தியமான காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மற்றும் கடலூர், விழுப்புரம் பகுதிகளுக்கு விளைநிலங்கள், ஆற்றோரம் வழியாக மூட்டை கட்டி தலை சுமையாகவும் சாராயம் கடத்தப்படுகிறது.

    புதுவையில் இருந்து கடத்தப்படும் சாராயத்தில் கூடுதலாக போதை ஏறவும், சரக்கின் அளவை அதிகரிக்கவும், மெத்தனால் மற்றும் வேதிப் பொருட்களை கலக்கின்றனர். மேலும் ஆர்.எஸ். பவுடர் வாங்கி வந்தும் சாராயம் தயாரிக்கின்றனர்.

    பின்னர் அந்த சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து அதற்கு 'பாண்டி ஐஸ்' என்று அடைமொழி வைத்து விற்பனை செய்கிறார்கள்.

    புதுச்சேரி சாராயத்திற்கு தனி மவுசு உண்டு என்பதால் பாண்டி ஐஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

    கேனில் விற்கப்படும் சாராயத்திற்கு கோனிமுட்டி என்றும், மதுபாட்டிலில் விற்கப்படும் சாராயத்திற்கு ஷீல்டு என்றும் பெயர் வைத்துள்ளனர்.

    சிதம்பரம், சீர்காழி பகுதியில் பாண்டி ஐஸ் பெயரிட்ட பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை களை கட்டுகிறது. ரூ.30 மற்றும் ரூ.60-க்கு சாராயம் கிடைப்பதால் குடிமகன்கள் இதனை ஆர்வமுடன் வாங்கி குடிக்கின்றனர்.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடை 12 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. அதற்கு முன்பே கள்ளச்சாராயம் விற்பனை மும்முரமாக நடக்கிறது.

    மதுபானங்களை விட விலையும் குறைவாக இருப்பதால் குடிமகன்கள் கள்ளச்சாராயத்தை நாடி செல்கின்றனர். வயல் வெளிகளிலும், சுடுகாட்டு பகுதிகளிலும் வைத்து விற்பனை செய்கின்றனர்.

    இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கவர்னர் மாளிகைக்கு வருகிற திங்கட்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இருந்து ஊர்வலமாக சென்று அதிமுகவினர் மனு கொடுக்கிறார்கள்.
    • கவர்னர் மாளிகையிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க உள்ளார்.

    அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொன்விழா மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

    அதன்பிறகு தி.மு.க. ஆட்சியின் 2 ஆண்டு கால அவல நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தி.மு.க.வின் அத்துமீறல்கள், முறைகேடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    குறிப்பாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ரூ.30 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு ஆடியோ பற்றி மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியை தி.மு.க. அரசு மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். விஷ சாராய பலி குறித்து அவர் பேசியதாவது:-

    விஷ சாராயம் குடித்தவர்களில் 62 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுதான் காரணம். ஆளும் கட்சி துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது.

    இந்த விஷயத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நான் இதுபற்றி பேசியதற்கு கூட முதலமைச்சரிடம் இருந்து விளக்கமான பதில் வரவில்லை.

    எதிர்க்கட்சி தலைவர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லக் கூடாது என்பதற்காக பல்வேறு தகவல்களை முதலமைச்சர் மறைத்து விட்டார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வியாபாரிகள் பயந்தார்கள். தி.மு.க. ஆட்சியில் அந்த பயம் யாருக்குமே இல்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இப்போது இந்த வழக்கை திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறது.

    எனவே நாம் இந்த விஷயத்தை விடக்கூடாது. கவர்னரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம். தி.மு.க.வின் ஊழல்களையும் பட்டியலிடுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அ.தி.மு.க. சார்பில் வருகிற 22-ந்தேதி காலை 10.25 மணிக்கு சென்னை, சின்னமலை தாலுகா அலுவலக சாலை, ஏசு கிறிஸ்து சபை அருகில் இருந்து கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகையை சென்றடைந்து முக்கிய நிர்வாகிகள் கவர்னரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வருகிற 22-ந்தேதி தி.மு.க. ஆட்சி மீது புகார் தெரிவித்து கவர்னரிடம் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டு அருகில் இருந்து ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளேன்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர் குலைந்துள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. அமளிக்காடாக மாறி உள்ளது. இதுபற்றி விரிவாக கவர்னரிடம் மனு கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர் கெமிக்கல் என்ஜினீயர் இளைய நம்பியும், ஏழுமலையும் நண்பர்கள்.
    • சென்னையில் இருந்து புதுவைக்கு வாகனத்தில் மெத்தனால் கொண்டு வரும்போது சோதனை சாவடிகளில் காட்டுவதற்கு மொத்தனால் சோப்பு கம்பெனிக்கு வாங்கி வருவது போல ரசீது தயார் செய்து மெத்தனாலை கடத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    மரக்காணம், செங்கல்பட்டு பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஏழுமலை சென்னை ரசாயன தொழிற்சாலையில் மெத்தனால் வாங்கி புதுச்சேரியில் பதுக்கி வைத்து சப்ளை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம், செல்லன் தெரு, நகரான் தெரு, சம்புவெளி பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயம் குடித்ததில் 14 பேர் பலியாகினர்.

    மற்றவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி, விழுப்புரம் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் பலியான இந்த சம்பவம் தமிழகம், புதுவையை உலுக்கியுள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மரக்காணம் சாராய வியாபாரிகள் அமரன் முத்து, ஆறுமுகம், மண்ணாங்கட்டி, ரவி உள்ளிட்டவர்களையும் செங்கல்பட்டு பகுதியில் வேலு, சந்திரன், ராஜேஷ், விஜி உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரியில் இருந்து மெத்தனால் வாங்கி வந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரில் வசித்து வரும் பர்கத்துல்லா, வில்லியனூர் தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வரும் ஏழுமலை ஆகிய 2 பேரையும் புதுச்சேரி போலீஸ் உதவியுடன் விழுப்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில், கள்ளச்சாராயம் தயாரிக்க சென்னை வானரகம் அடுத்த மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் மெத்தனால் வேதிப்பொருள் வாங்கி புதுச்சேரியில் பதுக்கி வைத்தும், புதுச்சேரியில் இருந்து மரக்காணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள சாராய வியாபாரிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்ததும் தெரியவந்தது.

    சென்னை மதுரவாயல் பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வரும் கடலூரை சேர்ந்த கெமிக்கல் என்ஜினீயர் இளையநம்பி தொழிற்சாலைக்கு வாங்கும் மெத்தனாலை ஏழுமலைக்கு விற்பனை செய்துள்ளார். இளையநம்பி கெமிக்கல் என்ஜினீயர் என்பதால் எவ்வளவு தண்ணீரில் மெத்தனால் மற்றும் மூலப்பொருள் சேர்த்து சாராயம் தயாரிக்க வேண்டும் என அவர் பயிற்சி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இளையநம்பி தொழிற்சாலையில் ஏழுமலை மற்றும் பர்கத்துல்லா கடந்த 11-ந்தேதி 3 பேரல்களில் 600 லிட்டர் மெத்தனால் வாங்கி வந்து புதுச்சேரியில் பதுக்கி வைத்துள்ளனர்.

    பின்னர் அதனை மரக்காணம், செங்கல்பட்டு சாராய வியாபாரிகளுக்கு கொடுத்துள்ளனர். அதிக விஷத்தன்மை வாய்ந்த மெத்தனாலை சாராய வியாபாரிகள் கலப்படம் செய்து விற்பனை செய்ததால் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர்.

    இதனை கேள்விப்பட்ட ஏழுமலை பதுக்கி வைத்திருந்த மெத்தனாலை கீழே ஊற்றி அழித்துள்ளார்.

    கடலூர் கெமிக்கல் என்ஜினீயர் இளைய நம்பியும், ஏழுமலையும் நண்பர்கள். புதுவை வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியில் சோப்பு கம்பெனி வைத்திருப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நம்புவதற்காக ஏழுமலை கொட்டகை அமைத்துள்ளார்.

    மெத்தனால் வாங்கி வந்து இங்கு தான் ஏழுமலை பதுக்கி வைத்துள்ளார். சென்னையில் இருந்து புதுவைக்கு வாகனத்தில் மெத்தனால் கொண்டு வரும்போது சோதனை சாவடிகளில் காட்டுவதற்கு மொத்தனால் சோப்பு கம்பெனிக்கு வாங்கி வருவது போல ரசீது தயார் செய்து மெத்தனாலை கடத்தியுள்ளார்.

    புதுச்சேரி என்றாலே மது என்பது எல்லோருடைய மனதிலும் எழக்கூடிய உளவியல் கலந்த உணர்வாக உள்ளது. இந்நிலையில் சென்னை மதுரவாயல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வாங்கி வரப்பட்ட மெத்தனாலை ஏழுமலை வரும் வழியிலேயே சாராய வியாபாரிகளுக்கு கொடுப்பதில்லை.

    தன்னுடைய சோப்பு கம்பெனிக்கு மூலப்பொருள் வாங்கி வருவதாக கணக்கு காட்டிவிட்டு புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மெத்தனாலை அனுப்பி வந்துள்ளார். புதுவையில் இருந்து மெத்தனால் கொண்டு வருவதால் 'இது பாண்டிச்சேரி சரக்கு' என சாராய வியாபாரிகளுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    புதுவையில் இருந்து பர்க்கத்துல்லா வாகனம் மூலம் கொண்டுவரும் மெத்தனால் என்பதால் சாராய வியாபாரிகளுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டு வாங்கி உள்ளனர். இதுவே விஷசாராயமாக மாறி 22 பேர் உயிரை பறித்துள்ளது.

    • விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • உயிர் பிழைத்த 65 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிர் பிழைத்த 65 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த வழக்கு உள்ளூர் போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வழக்கின் கோப்புகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் இருக்கக்கூடிய சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளையும் விசாரணை குழுவில் அதிகாரிகள் சேர்த்து உள்ளனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் இருந்து டி.எஸ்.பி. சசிதர் மற்றும் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு நேரில் விசாரணை நடத்த விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று சென்றுள்ளனர்.

    • மரக்காணம் மது விலக்கு போலீஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மரக்காணத்தில் இயங்கி வந்தது.
    • கீழ்புத்துப்பட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு புதுவையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுப்பப்படும்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மரக்காணம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், மரக்காணம் மது விலக்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 4 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு மெத்தனால் அளித்த தொழிற்சாலை உரிமையாளர் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மரக்காணம் மது விலக்கு போலீஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மரக்காணத்தில் இயங்கி வந்தது. அதே போல கீழ்புத்துப்பட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு புதுவையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுப்பப்படும்.

    இந்நிலையில் செஞ்சியை பூர்வீகமாக கொண்ட மரியே சோபி மஞ்சுளா சில ஆண்டுகளுக்கு முன்பாக மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற உடனேயே மரக்காணத்தில் இயங்கி வந்த மது விலக்கு போலீஸ் நிலையம் கோட்டக்குப்பத்திற்கு மாற்றப்பட்டது.

    கீழ்புத்துப்பட்டு சோதனை சாவடியும் சரிவர இயங்கவில்லை. இதனால் மரக்காணம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக புதுவையில் இருந்து கடத்தி வரப்படும் சாராய விற்பனை படுஜோராக நடந்தது. இதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் மது விலக்கு போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முடியாத வியாபாரிகள், மெத்தனாலை வாங்கி அதில் டிகிரி பார்த்து நீர் ஊற்றி, புதுவை சாராயம் போலவே பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

    மரக்காணம் பகுதியில் உள்ள மது பிரியர்கள், இது புதுவையில் இருந்து கொண்டு வரப்பட்ட சாராயம் என்று நினைத்து வாங்கி குடித்தனர். இதில் மயங்கி விழுந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இதுவரை எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    எனவே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மது விலக்கு இன்ஸ்பெக்டர் மரியே சோபி மஞ்சுளாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர் வாய் திறந்தால் மட்டுமே நடந்தது என்ன? இதில் யார்? யார்? தொடர்பில் இருக்கிறார்கள்? என்பன போன்ற பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தெரியவருகிறது.

    • புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும், மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும் என மொத்தம் 62 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சிகிச்சையில் இருப்பவர்களில் பலருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட விஷச்சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

    மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 51 பேரும், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 6 பேரும், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும், மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும் என மொத்தம் 62 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 15 பேருக்கு கண்பார்வை பாதிப்பு மற்றும் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை முறைகள் 2 முறை அளிக்கப்பட்டபோதிலும் அவர்களது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மற்ற அனைவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிகிச்சையில் இருப்பவர்களில் பலருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர்கள் உயிரிழக்கக்கூடுமோ? என்ற அச்சத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் உறைந்து போயுள்ளனர். எனவே உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதற்கேற்ப உரிய சிகிச்சைகளை அளிக்குமாறும், அல்லது மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், எங்கள் பகுதியில் சாராயம் விற்பனை செய்தது பற்றி பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். அப்போதே போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற இறப்புகள் ஏற்பட்டிருக்காது.

    காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் சாராயம் விற்றனர். அவர்களை போலீசார் கண்டுகொள்ளவே இல்லை என்றனர்.

    ×