search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. ஆட்சி முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னர் மாளிகைக்கு 22-ந்தேதி அ.தி.மு.க. ஊர்வலம்
    X

    தி.மு.க. ஆட்சி முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னர் மாளிகைக்கு 22-ந்தேதி அ.தி.மு.க. ஊர்வலம்

    • கவர்னர் மாளிகைக்கு வருகிற திங்கட்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இருந்து ஊர்வலமாக சென்று அதிமுகவினர் மனு கொடுக்கிறார்கள்.
    • கவர்னர் மாளிகையிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க உள்ளார்.

    அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொன்விழா மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

    அதன்பிறகு தி.மு.க. ஆட்சியின் 2 ஆண்டு கால அவல நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தி.மு.க.வின் அத்துமீறல்கள், முறைகேடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    குறிப்பாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ரூ.30 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு ஆடியோ பற்றி மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியை தி.மு.க. அரசு மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். விஷ சாராய பலி குறித்து அவர் பேசியதாவது:-

    விஷ சாராயம் குடித்தவர்களில் 62 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுதான் காரணம். ஆளும் கட்சி துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது.

    இந்த விஷயத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நான் இதுபற்றி பேசியதற்கு கூட முதலமைச்சரிடம் இருந்து விளக்கமான பதில் வரவில்லை.

    எதிர்க்கட்சி தலைவர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லக் கூடாது என்பதற்காக பல்வேறு தகவல்களை முதலமைச்சர் மறைத்து விட்டார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வியாபாரிகள் பயந்தார்கள். தி.மு.க. ஆட்சியில் அந்த பயம் யாருக்குமே இல்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இப்போது இந்த வழக்கை திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறது.

    எனவே நாம் இந்த விஷயத்தை விடக்கூடாது. கவர்னரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம். தி.மு.க.வின் ஊழல்களையும் பட்டியலிடுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அ.தி.மு.க. சார்பில் வருகிற 22-ந்தேதி காலை 10.25 மணிக்கு சென்னை, சின்னமலை தாலுகா அலுவலக சாலை, ஏசு கிறிஸ்து சபை அருகில் இருந்து கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகையை சென்றடைந்து முக்கிய நிர்வாகிகள் கவர்னரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வருகிற 22-ந்தேதி தி.மு.க. ஆட்சி மீது புகார் தெரிவித்து கவர்னரிடம் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டு அருகில் இருந்து ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளேன்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர் குலைந்துள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. அமளிக்காடாக மாறி உள்ளது. இதுபற்றி விரிவாக கவர்னரிடம் மனு கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×