search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gautam Gambhir"

    • ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்வது இது 5-வது முறையாகும்.
    • சென்னை அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அகமதாபாத்:

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று முத்திரை பதித்தது. அகமதாபாத்தில் நள்ளிரவில் முடிந்த இறுதிப் போட்டியில் அந்த அணி கடைசி பந்தில் குஜராத் டைட்டன்சை தோற்கடித்தது.

    ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்வது இது 5-வது முறையாகும். இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது. ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை அணிக்கு முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துக்கள். ! 1 ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம். 5 கோப்பையை வெல்வது நம்பமுடியாதது. என தெரிவித்துள்ளார்.

    மேலும் மும்பை இந்தியன்ஸ் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தது. அதில் சென்னை அணி கோப்பையை வென்றது முற்றிலும் தகுதியானது என அந்த அணி கூறியுள்ளது.

    • அவர்கள் மீண்டும் அடுத்த முறை சந்திக்கும்போது இது மாதிரி வார்த்தகைளால் மோதிவிடக்கூடாது.
    • இருவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை சிறந்த விஷயமாக நான் கருதுகிறேன்.

    புதுடெல்லி:

    கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு என்று சொல்வார்கள். ஆனால் ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலியும், காம்பீரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

    லக்னோவில் நேற்று முன்தினம் ராயல் சேலஞ்சர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடந்தது. இதில் பெங்களூர் அணி 18 ரன்னில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    இந்தப் போட்டி முடிந்த பிறகு பெங்களூர் அணி வீரர் விராட்கோலியும், லக்னோ அணியின் ஆலோசகருமான காம்பீரும் மோதிக் கொண்டனர். இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    லக்னோ அணி வீரர்கள் கெய்ல்மேயர்ஸ், நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா ஆகியோருடனும் கோலி ஆக்ரோஷத்துடன் நடந்துக் கொண்டார். ஏற்கனவே பெங்களூருவில் நடந்த போட்டியில் காம்பீர் நடந்து கொண்டதற்கு விராட்கோலி பதிலடியாக அப்படி ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. விராட்கோலி லக்னோ அணி வீரர்களையும், காம்பீர் குடும்பத்தினரையும் கெட்ட வார்த்தைகளால் திட்டியதால் காம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காம்பீர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்கு இருவருக்கும் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விராட் கோலிக்கும், காம்பீருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தயார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், டெலிவிசன் வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இருவரும் டெல்லிக்காக ஆடியவர்கள். போதுமான கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். காம்பீர் 2 உலக கோப்பையை வென்றுள்ளார். விராட் கோலி நட்சத்திர வீரர் ஆவார். இருவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை சிறந்த விஷயமாக நான் கருதுகிறேன்.

    யார் அதை செய்தாலும் விரைவில் செய்வது நல்லது. அவர்கள் மீண்டும் அடுத்த முறை சந்திக்கும்போது இது மாதிரி வார்த்தகைளால் மோதிவிடக்கூடாது. இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்க நான் தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

    • விராட் மற்றும் கம்பீருக்கு இடையேயான வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.
    • ஸ்ரீ சாந்தை அறைந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன் எனவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    லக்னோ:

    லக்னோ-பெங்களூர் இடையே போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டபோது விராட்கோலிக்கும், காம்பீருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    விராட்கோலியிடம் லக்னோ வீரர் கெய்ல் மேயர்ஸ் பேசிக்கொண்டு இருந்தார். அந்த பக்கம் வந்த காம்பீர், கெய்ல் மேயர்சை அவரிடம் என்ன பேச்சு என்று கூறி அழைத்து சென்றார். இதனால் கோலி ஆத்திரம் அடைந்தார். இதேபோல லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக்குடன் கைகுலுக்கும் போதும் கோலி வம்புக்கு இழுத்து ஆத்திரப்படுத்தினார்.

    அதைத்தொடர்ந்து காம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரையும் மற்ற வீரர்கள் தடுத்தப்போது வாக்குவாதம் நிற்கவில்லை. காம்பீர் முன்னோக்கி சென்று கடுமையாக வாக்குவாதம் செய்தார். அவரை கோலி வம்புக்கு இழுத்ததால் ஆத்திரம் அடைந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இந்த வாக்குவாதத்தால் சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது. பரிசளிப்பு நிகழ்வின்போது விராட் கோலி கோபத்துடன் காணப்பட்டார். இந்த மோதல் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

    காம்பீரும், விராட்கோலியும் இது மாதிரி மோதிக் கொள்வது இது முதல்முறையில்லை. டெல்லியை சேர்ந்த இருவரும் பலமுறை இது மாதிரி ஆக்ரோஷமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

     

    இந்த நிலையில் விராட் கோலி, கம்பீர் வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி ஒரு ஜாம்பவான், இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது. விராட் மற்றும் கம்பீருக்கு இடையேயான வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

    2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீ சாந்தை கன்னத்தில் அறைந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்.

    என கூறியுள்ளார்.

    • லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கும், பெங்களூரு வீரர் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கு 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    லக்னோ:

    நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மையிஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.

    போட்டிக்கு பின் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கோலி - கம்பீரின் வார்த்தை மோதலை கண்ட லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றார். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் தவிர்க்கப்பட்டது. மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கும், பெங்களூரு வீரர் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில், லக்னோ - பெங்களூரு இடையேயான போட்டியில் மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட லக்னோ அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காகவும் ஐபிஎல் நடத்தை விதிகளின்படி லெவல் 2 குற்றங்களை ஒப்புக்கொண்டதால் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதைபோல விராட் கோலியுடன் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கு 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • என்னை கேட்டால் விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக இந்தியாவை அபாரமாக வழி நடத்தினார்.
    • வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 - 0 (4) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி உருவாக்கிய அணியை வைத்து விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டை பயன்படுத்தி தான் வெற்றிகரமாக செயல்படுவதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை உறுதியாக நம்புகிறேன். இருப்பினும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடைய கேப்டன்ஷிப் இடையே குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய வித்தியாசமில்லை. ஏனெனில் விராட் கோலி தான் இந்த டெம்ப்ளேட்டை உருவாக்கினார்.

    என்னை கேட்டால் விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக இந்தியாவை அபாரமாக வழி நடத்தினார். ரோகித் சர்மா அவருடைய டெம்ப்ளேட்டை மட்டுமே பின்பற்றி வருகிறார். அந்த வகையில் உண்மையை சொல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா தனது ஸ்டைலில் தனக்காக எந்த ஒரு புதிய டெம்ப்ளேட்டையும் உருவாக்கவில்லை. குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவை விராட் கோலி எப்படி பயன்படுத்தினாரோ அதே நிலைமை தான் தற்போதும் நீடிக்கிறது.

    எனவே ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஆனால் அங்கே விராட் கோலி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். முகமது ஷமி, சிராஜ், பும்ரா, அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அடங்கிய இந்த அணியை விராட் கோலி தான் உருவாக்கினார்.

    என்று கவுதம் கம்பீர் கூறினார்.

    • நீங்கள் நோ-பால் வீசுவதை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது.
    • சில வேரியேஷன்களில் முன்னேற்றம் காண வேண்டும்.

    நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 - 0 என்ற கணக்கில் வென்ற நிலையில் அடுத்ததாக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் கடுமையாக போராடி வென்று சமன் செய்துள்ளது.

    இந்நிலையில் உம்ரான் மாலிக், சிராஜ் போல் அர்ஷ்தீப்சிங் வேகமும் இல்லை என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார். அதனால் சில வேரியேஷன்களை கற்றுக் கொள்வதுடன் அடிப்படையை பின்பற்றினாலே நோ-பால் வீசுவதை தவிர்த்து விடலாம் என்று விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவருடைய புள்ளி விவரங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் நீங்கள் நோ-பால் வீசுவதை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. அது முக்கிய நேரத்தில் உங்களது வெற்றியை எதிரணிக்கு தாரை வார்க்கலாம். முந்தைய போட்டியிலும் அதுதான் நடந்தது. இதை தவிர்க்க அடிப்படையை சரியாக பின்பற்றுங்கள்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையும் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளும் முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகியன புதிய பந்தில் நன்றாக வேலை செய்யும். ஆனால் இந்திய துணை கண்டத்தில் பெரும்பாலும் பிளாட்டான பிட்ச்கள் தான் இருக்கும். அதில் நீங்கள் மெதுவான பந்துகள் அல்லது ஸ்லோயர் பவுன்சர்கள் போன்றவற்றை வீச வேண்டும். மேலும் சில வேரியேஷன் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவரிடம் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் அளவுக்கு வேகமில்லை.

    எனவே அவர் சில வேரியேஷன்களில் முன்னேற்றம் காண வேண்டும். ஏனெனில் அவர் முகமது சிராஜ் அல்லது உம்ரான் மாலிக் கிடையாது. எனவே அடிப்படையை எளிமையாக பின்பற்ற வேண்டிய அர்ஷ்தீப்சிங் நோ-பால் வீசுவதை தவிர்க்க வேண்டும்.

    என்று கம்பீர் கூறினார்.

    • வலைப் பயிற்சியின் போது சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி சிக்சர் அடிக்கலாம் என்று மட்டுமே பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
    • ஆடுகளத்தை பொறுத்தவரை இது மோசமாக இருந்தாலும், கிரிக்கெட் வீரராக நீங்கள் அதை சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 19.5-வது ஓவரில் இந்திய அணி 101 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வென்றது. சூர்ய குமார் யாதவ் 26 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்த போட்டியில் எந்த பேட்ஸ்மேனும் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இது டி20 போட்டிக்கு தயார் செய்யப்பட்ட பிட்ச் இல்லை என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

    இந்நிலையில் ஒரு ரன் எடுக்க இளம் வீரர்கள் ரொம்ப கஷ்படுகிறார்கள் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது தரக்குறைவான ஆடுகளம் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளரான சாகலை இரண்டு ஓவர் மட்டுமே ஹர்திக் பாண்டியா பயன்படுத்தியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது ஹர்திக் பாண்டியா செய்த தவறாக பார்க்கிறேன். காரணம் இரண்டு ஓவரில் அவர் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருக்கிறார்.

    ஆடுகளத்தை பொறுத்தவரை இது மோசமாக இருந்தாலும், கிரிக்கெட் வீரராக நீங்கள் அதை சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும். இப்போது உள்ள தலைமுறை வீரர்கள் வலைப் பயிற்சியின் போது சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி சிக்சர் அடிக்கலாம் என்று மட்டுமே பயிற்சி எடுத்து வருகிறார்கள். அதுதான் திறமை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

    ஆனால் சுழற் பந்துவீச்சை எப்படி சமாளித்து ஆட்டம் இழக்காமல் விளையாட வேண்டும் என்பது குறித்து யாரும் யோசிப்பதில்லை. என்னைக் கேட்டால் அதுதான் உண்மையான திறமை. வலைப்பயிற்சியில் சுழற்பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு சிங்கிள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இளம் வீரர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். பந்துகளை வீணடிக்காமல் சிங்கிள்ஸ் அடித்து விளையாடியிருந்தால் இந்திய அணி முன்கூட்டியே வெற்றி பெற்று இருக்கலாம்.

    என்று கம்பீர் கூறியுள்ளார்.

    • அப்போதைய காலத்தை இப்போதுடன் ஒப்பிட முடியாது.
    • நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை விட அதிக சதங்கள் அடிப்பார்.

    இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது.

    அதை தொடர்ந்து 374 ரன்களை துரத்திய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ஆட்டநாயகன் விருதை விராட் கோலி வென்றார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் 45 சதங்களையும் ஒட்டுமொத்தமாக 73 சதங்களையும் அடித்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனையை விரைவில் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் எவ்வளவு சதங்கள் அடித்தாலும் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிட முடியாது என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது சாதனையை பொறுத்ததல்ல. நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை விட அதிக சதங்கள் அடிப்பார். ஏனெனில் இப்போது விதிமுறைகள் மாறிவிட்டன.

    அப்போதைய காலத்தை இப்போதுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அப்போது ஒரு இன்னிங்ஸில் 1 புதிய பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் இப்போது 2 புதிய பந்து பயன்படுத்தப்படுவதுடன் உள்வட்டத்திற்குள் 5 பீல்டர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.

    இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்து விளங்குவதால் இந்த சாதனையை நிச்சயம் முறியடிப்பார்.

    என்று அவர் கூறினார்.

    • ஐ.பி.எல்.லை விட ஒரு நாள் போட்டிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்- இந்திய வீரர்களுக்கு காம்பீர் அறிவுரை
    • ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் உலக கோப்பை போட்டியில் இருவரும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (ஒரு நாள் போட்டி) இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. சொந்த மண்ணில் நடப்பதால் இந்திய அணி இதில் வெற்றி பெற்று 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல்.லை விட உலக கோப்பை தான் மிகவும் முக்கியமானது. இதனால் உலக கோப்பையை மனதில் வைத்து 50 ஓவர் போட்டிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் அறிவுரை வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் சுழற்பந்தில் அபாரமாக ஆடுவார்கள். இந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இருவரும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

    ஒரு நாள் போட்டியில் நிலைத்து நின்று ஆடுவது முக்கியமானது. பயமின்றி விளையாடும் வீரர்களை அடையாளம் காண வேண்டும். அதோடு ஒரு நாள் போட்டிக்கு ஏற்றவராக இருக்க வேண்டும்.

    உலக கோப்பையை வெல்ல புதிய அணுகு முறையை கையாள வேண்டும். தேவைப்படும் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஒரு நாள் போட்டியில் கவனம் செலுத்தும் வகையில் 20 ஓவரில் ஓய்வு கொடுக்க வேண்டும்.

    கடந்த இரண்டு உலக கோப்பையிலும் அணியாக விளையாடவில்லை. இது மிகப்பெரிய தவறாக அமைந்தது. இந்திய வீரர்கள் தேவைப்பட்டால் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

    உலக கோப்பையை மனதில் வைத்து 50 ஓவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஐ.பி.எல். போட்டியை விட உலக கோப்பை மிக முக்கியமான தாகும்.

    இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.

    டோனி தலைமையில் 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் காம்பீர் முக்கிய பங்கு வகித்தார். இறுதி போட்டியில் அவர் 97 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பயிற்சியாளர்கள் இந்திய அணியில் எதற்கு உள்ளார்கள்? தேர்வுக்குழுவினர் எதற்கு உள்ளார்கள்?
    • குறிப்பாக பிரித்வி ஷா போன்றவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள தலைமையில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் பிரிதிவி ஷா இத்தொடரில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஒரு சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. பயிற்சியாளர் என்ன பண்றிங்க: 2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்து சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதனால் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார்.

    அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழுவிடம் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

    பயிற்சியாளர்கள் இந்திய அணியில் எதற்கு உள்ளார்கள்? தேர்வுக்குழுவினர் எதற்கு உள்ளார்கள்? அவர்கள் அணியை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்ல தரமான வீரர்களை கண்டறிந்து அவர்களை போட்டிக்கு தயார்படுத்துவதற்கும் உள்ளனர். தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் இவர்களைப் போன்ற இளம் வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

    குறிப்பாக பிரித்வி ஷா போன்றவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். அது அணி நிர்வாகத்தின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும். அணியினரை தயார்படுத்தி பயிற்சிக்கு உதவுவது மட்டும் அவர்களது வேலையல்ல. அந்த வகையில் ராகுல் டிராவிட் அல்லது தேசிய தேர்வுக்குழுவினர் அவரிடம் (பிரிதிவி) பேச்சுவார்த்தை நடத்தி தேர்வு பற்றி தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

    சொல்லப்போனால் அவர் இந்திய அணியை சுற்றியிருக்க வேண்டும். எப்போதும் சரியான பாதையில் இல்லாதவர்களை நீங்கள் அணியை சுற்றியிருக்க வைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னர் நீங்கள் அவரைப் போன்ற தரமான வீரரை தேடி அனைத்து இடங்களிலும் அலைய நேரிடும்.

    நாட்டுக்காக விளையாட நீங்கள் போதுமான அர்ப்பணிப்பு ஆர்வத்துடன் அனைத்து அளவுருக்களையும் சரியாக செய்ய வேண்டும். அது உடற்பயிற்சியாக இருந்தாலும் சரி ஒழுக்கமாக இருந்தாலும் சரி. அதை பிரிதிவி ஷா செய்வதற்கு பயிற்சியாளர்கள் தான் தூண்ட வேண்டும். மேலும் அவரைப் போன்ற ஒரு இளம் வீரருக்கு குறைந்தபட்சம் ஓரிரு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒருவேளை அதிலும் அவர் எதுவுமே செய்யவில்லை என்றால் பின்னர் அவர் நாட்டிற்காக ஆர்வத்துடன் விளையாடுவதற்கு தயாராக இல்லை என்று முடிவெடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீங்கள் சரியாக ஆடவில்லை என்றால் வேறு ஒருவர் வரத்தான் செய்வார்.
    • கே.எல்.ராகுலுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கும் இதே விதிமுறைதான்.

    மும்பை:

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் மட்டும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன.

    இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் டி20 அணி தனியாகவும், ரோகித் சர்மா தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கான ஒரு அணியும் உருவாக்கப்பட்டுள்ளன. உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த விஷயம் கே.எல்.ராகுல் மீது நடவடிக்கை எடுத்திருப்பது தான். தொடர்ச்சியாக சொதப்பி வரும் கே.எல்.ராகுல் சமீபத்தில் நடந்த வங்கதேச டெஸ்ட் தொடரிலும் 22, 23, 10, 2 என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் இந்தியாவின் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் கே.எல்.ராகுலிடம் இருந்த துணைக்கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு, ஹர்திக்கிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கே.எல்.ராகுலுடன் லக்னோ அணியில் பணிபுரியும் கவுதம் கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.

    நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தேர்வுக்குழுவை கட்டுப்படுத்த முடியாது. அடுத்த தொடரில் என்ன நடக்கும் என்பதை முடிவு செய்ய முடியாது. எனவே இந்த முறை 3 ஒருநாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி விளையாட வேண்டும்.

    நம்மால் மாற்ற முடியாத விஷயத்தை நினைத்து நம்மை நாமே அழுத்தத்தில் போட்டுக்கொள்ள கூடாது. நீங்கள் சரியாக ஆடவில்லை என்றால் வேறு ஒருவர் வரத்தான் செய்வார். கே.எல்.ராகுலுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கும் இதே விதிமுறைதான். அவர்கள் குறித்தும் நீங்கள் கேள்வி எழுப்பலாம். யாருமே இங்கு நிரந்தரமானவர்கள் கிடையாது. சிறப்பாக விளையாடி இடத்தை தக்கவையுங்கள்.

    இவ்வாறு கம்பீர் கூறியுள்ளார்.

    • பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
    • டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என வியாபாரிகள் உறுதி,

    டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் பள்ளிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த இருவர் ஆசிட்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். வலி பொறுக்க முடியாமல் கதறியபடி அந்த மாணவி சாலையில் கீழே விழுந்தார். இந்த கொடூர தாக்குதலில் அவரது முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆசிட் வீசிய சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் நைட்ரிக் அமிலத்தை வாங்கி அந்த குற்றவாளிகள் மாணவி மீது வீசியிருக்கலாம் என்றும், தடயவியல் பரிசோதனையின் பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 


    இந்நிலையில் மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு டெல்லி வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.ஆசிட் விற்பனையைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும், ஆசிட் வாங்க வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பள்ளி மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெறும் வார்த்தைகளால் எந்த நீதியையும் நம்மால் வழங்க முடியாது, இந்த மிருகங்களுக்கு அளவிட முடியாத வலியைப் பற்றிய பயத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×