என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல்.லை விட ஒருநாள் போட்டிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்- இந்திய வீரர்களுக்கு காம்பீர் அறிவுரை
- ஐ.பி.எல்.லை விட ஒரு நாள் போட்டிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்- இந்திய வீரர்களுக்கு காம்பீர் அறிவுரை
- ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் உலக கோப்பை போட்டியில் இருவரும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (ஒரு நாள் போட்டி) இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. சொந்த மண்ணில் நடப்பதால் இந்திய அணி இதில் வெற்றி பெற்று 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல்.லை விட உலக கோப்பை தான் மிகவும் முக்கியமானது. இதனால் உலக கோப்பையை மனதில் வைத்து 50 ஓவர் போட்டிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் அறிவுரை வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் சுழற்பந்தில் அபாரமாக ஆடுவார்கள். இந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இருவரும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
ஒரு நாள் போட்டியில் நிலைத்து நின்று ஆடுவது முக்கியமானது. பயமின்றி விளையாடும் வீரர்களை அடையாளம் காண வேண்டும். அதோடு ஒரு நாள் போட்டிக்கு ஏற்றவராக இருக்க வேண்டும்.
உலக கோப்பையை வெல்ல புதிய அணுகு முறையை கையாள வேண்டும். தேவைப்படும் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஒரு நாள் போட்டியில் கவனம் செலுத்தும் வகையில் 20 ஓவரில் ஓய்வு கொடுக்க வேண்டும்.
கடந்த இரண்டு உலக கோப்பையிலும் அணியாக விளையாடவில்லை. இது மிகப்பெரிய தவறாக அமைந்தது. இந்திய வீரர்கள் தேவைப்பட்டால் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
உலக கோப்பையை மனதில் வைத்து 50 ஓவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஐ.பி.எல். போட்டியை விட உலக கோப்பை மிக முக்கியமான தாகும்.
இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.
டோனி தலைமையில் 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் காம்பீர் முக்கிய பங்கு வகித்தார். இறுதி போட்டியில் அவர் 97 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






