search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    விராட்கோலி-காம்பீர் இடையே சமாதானம் செய்து வைக்க தயார்: ரவிசாஸ்திரி
    X

    விராட்கோலி-காம்பீர் இடையே சமாதானம் செய்து வைக்க தயார்: ரவிசாஸ்திரி

    • அவர்கள் மீண்டும் அடுத்த முறை சந்திக்கும்போது இது மாதிரி வார்த்தகைளால் மோதிவிடக்கூடாது.
    • இருவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை சிறந்த விஷயமாக நான் கருதுகிறேன்.

    புதுடெல்லி:

    கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு என்று சொல்வார்கள். ஆனால் ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலியும், காம்பீரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

    லக்னோவில் நேற்று முன்தினம் ராயல் சேலஞ்சர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடந்தது. இதில் பெங்களூர் அணி 18 ரன்னில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    இந்தப் போட்டி முடிந்த பிறகு பெங்களூர் அணி வீரர் விராட்கோலியும், லக்னோ அணியின் ஆலோசகருமான காம்பீரும் மோதிக் கொண்டனர். இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    லக்னோ அணி வீரர்கள் கெய்ல்மேயர்ஸ், நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா ஆகியோருடனும் கோலி ஆக்ரோஷத்துடன் நடந்துக் கொண்டார். ஏற்கனவே பெங்களூருவில் நடந்த போட்டியில் காம்பீர் நடந்து கொண்டதற்கு விராட்கோலி பதிலடியாக அப்படி ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. விராட்கோலி லக்னோ அணி வீரர்களையும், காம்பீர் குடும்பத்தினரையும் கெட்ட வார்த்தைகளால் திட்டியதால் காம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காம்பீர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்கு இருவருக்கும் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விராட் கோலிக்கும், காம்பீருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தயார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், டெலிவிசன் வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இருவரும் டெல்லிக்காக ஆடியவர்கள். போதுமான கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். காம்பீர் 2 உலக கோப்பையை வென்றுள்ளார். விராட் கோலி நட்சத்திர வீரர் ஆவார். இருவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை சிறந்த விஷயமாக நான் கருதுகிறேன்.

    யார் அதை செய்தாலும் விரைவில் செய்வது நல்லது. அவர்கள் மீண்டும் அடுத்த முறை சந்திக்கும்போது இது மாதிரி வார்த்தகைளால் மோதிவிடக்கூடாது. இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்க நான் தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

    Next Story
    ×