search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durai Murugan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும்.
    • சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும்.

    சென்னை:

    இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பதில் கடிதம் எழுதி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    பாரதிய ஜனதா கட்சியின் "ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு" என்ற கொள்கையின் விளைவாக 'பொது சிவில் சட்டத்தை' அறிமுகப்படுத்தும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.

    இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச் சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும்.

    21-வது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விரிவான கேள்விகளை முன்வைத்தும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டும், அதனடிப்படையில் பொது சிவில் சட்டம் அவசியமானது அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல என்று முடிவெடுத்தது.

    பொது சிவில் சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக எதிர்க்கிறது. காரணம், இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள உரிமைகளை பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.

    அரசமைப்புச் சட்டப் பிரிவு 44 குறிப்பிடும் பொது சிவில் சட்டம், பொதுவான மதம் சாராத பல்வேறு சமூகச் செயல்களுக்கு, குறிப்பாக இரு நபரிடையே ஒப்பந்தங்கள், சொத்துப் பரிமாற்றத்துக்கான சட்டங்கள், பணப் பரிமாற்ற ஆவணங்கள், கருவிகள் குறித்த சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறதே தவிர, மத வழக்கங்களுக்கானதல்ல.

    இந்திய அரசியல் நிர்ணய சபை, இந்தப் பிரிவு 44 குறித்த விவாதத்தை மேற்கொண்டபோது, சென்னை மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் போக்கர் பகதூர் கூறும்போது, "இந்தியாவில் பல்வேறு மக்கள் குழுக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடைபிடித்து வந்த பல்வேறு பழக்க வழக்கங்களை ஒரே அடியில் வீழ்த்திவிட முயற்சிக்கிறீர்கள். இதனால் நீங்கள் அடையவிருக்கும் நன்மை என்ன? அவர்கள் காலங்காலமாகப் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களைக் கொன்று அவர்களது மனசாட்சியையும் கொல்வதைத் தவிர வேறு என்ன பயன் ஏற்படும்? இத்தகை கொடுங்கோன்மை மிக்க ஒரு பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறக் கூடாது. இந்து மதத்திலேயே உள்ள பல்வேறு குழுவினர், இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் நிலையில், நான் பேசுவதை காட்டிலும் கடுமையாக அவர்கள் பேசும் நிலையில் இந்தப் பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறக் கூடாது. பெரும்பான்மை மக்கள் இச்சட்டப் பிரிவிவை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னாலும், அதுவும் தவறான வாதம்தான்.

    பெரும்பான்மை மக்களின் கடமை, சிறுபான்மை மக்களின் புனிதப் பழக்க வழக்கங்களைப் பாதுகாப்பதுதான். சிறுபான்மை மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவது ஜனநாயகம் என்று கூற முடியாது. அது மிகப்பெரிய கொடுங்கோன்மை" என்று பேசினார்.

    அந்த எதிர்ப்பு இன்றைக்கும் பொருத்தமானது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையதல்ல. சிறுபான்மை மக்களை பாதிக்கும் ஒன்றாக மட்டும் நான் பார்க்கவில்லை. பெரும்பான்மை இந்து மதத்தைச் சார்ந்த பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், திருமணம் தொடர்பான சடங்கு சம்பிரதாயங்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும்.

    எங்களுடைய இன்னொரு ஆலோசனை என்னவெனில், மதங்களுக்கிடையேயான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன், ஒன்றிய அரசு இந்துமத சாதிகளுக்கிடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி சாதீய ஏற்றத்தாழ்வை சமன் செய்ய வேண்டும் என்பது.

    ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையை பாதிக்கும் எந்த சட்டத்தையும் ஒன்றிய அரசு நிறைவேற்றக் கூடாது என்பதுதான். இந்த பொது சிவில் சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 29 ஆகியவற்றை மீறிய சட்டமாக தி.மு.க. பார்க்கிறது.

    பொது சிவில் சட்டம், ஏற்கனவே இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, பிரிவு-2(2)-ன்படி பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள் ஏனைய இந்துமத மக்களின் பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டது எனினும், அவற்றைத் தடை செய்யக்கூடாது என்று கூறுகிறது.

    மேலும், இந்து மதத்தில் மட்டும்தான் கூட்டுக் குடும்ப முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையின் மூலம் வருமானவரித் துறை கூட்டுக் குடும்பத்தையே மொத்தமாக ஒரு வரி செலுத்துபவராக ஏற்றுக் கொண்டுள்ளது.

    அரசமைப்புச் சட்ட அட்டவணை VI-ல் உள்ள படி, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிஜோரம் ஆகிய மாநிலங்களுக்கு திருமணம், மணவிலக்கு, சமூகப் பழக்க வழக்கங்கள் ஆகியவை மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டவை.

    தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 87 சதவிகிதம், இஸ்லாமியர்கள் 6 சதவிகிதம், கிருத்தவர்கள் 7 சதவிகிதம். இந்த மக்கள் அனைவரும் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது சிவில் சட்டம் இத்தகைய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வாய்ப்பு உள்ளது.

    வேற்றுமையில் ஒற்றுமை என்பது உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு, நமது இந்திய நாடு என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடக்கூடாது.

    எனவே, 22-வது சட்ட ஆணையம் 21-வது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தி.மு.க. கூறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இயற்கையாக வரும் இடத்தில் அணையை கட்டுவது என்பது உகந்தது அல்ல.
    • அ.தி.மு.க ஆட்சியில் கனிம வளத்தில் சுமார் ரூ.1300 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தினார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்டுவோம். என்பது கர்நாடகா அரசின் ஆசை, ஆனால் அவர்களுக்கு உரிமை கிடையாது. அணையை கட்டக்கூடாது என சொல்வதற்கான உரிமை நமக்கு உண்டு.

    காரணம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கபினிக்கு கீழே 80 டிஎம்சி தண்ணீர் இயற்கையாக நமக்கு வருகிறது. இயற்கையாக வரும் இடத்தில் அணையை கட்டுவது என்பது உகந்தது அல்ல.

    2-வது அவர்கள் அணையை கட்டிட முடியாது, காரணம் மத்திய நீர் மேலாண்மை வாரியம் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்க வேண்டும், பிறகு வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும், இதற்குப் பிறகும் கட்ட வேண்டியிருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும். இப்படி பல விஷயங்கள் உள்ளது.

    அரசியலுக்காக அவர்கள் கட்டியே தீருவோம் என்பார்கள் நாங்கள் கட்ட விட மாட்டோம் என்போம். அவ்வளவுதான். அணை கட்ட முடியாது. அதனை கட்ட நாங்கள் விட மாட்டோம்.

    அ.தி.மு.க ஆட்சியில் கனிம வளத்தில் சுமார் ரூ.1300 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தினார்கள். நாங்கள் அதை நிரப்பி தற்போது 1600 கோடி ரூபாய் லாபத்தை காட்டியிருக்கிறோம்.

    ரூ.1000 உரிமைத் தொகை யாருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என எழுதி கொடுக்க சொல்லுங்கள். அதை நான் கவனிக்கிறேன், எதிர்க்கட்சிகள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

    வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் குகையநல்லூர், அரும்பருதி, பொய்கை கோவிந்தம்பாடி, பரமசாத்து உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பணை கட்டப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார்.
    • காவிரி ஆணைய உத்தரவுப்படி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் சந்தித்து முறையிட்டனர்.

    அப்போது, சுப்ரீம் கோர்ட்டு காவிரி ஆணைய உத்தரவுப்படி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும். அங்கு அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.

    இதுதொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

    இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

    தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 9 டி.எம்.சி. தண்ணீரை வழங்கவில்லை. மாத வாரியாக தமிழ்நாட்டிற்கான தண்ணீரை வழங்க, கர்நாடக அரசை அறிவுறுத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.

    காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், டெல்டாவில் உள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம்.

    தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது என தெரிவித்தார்.

    • ஜூன், ஜூலை மாதத்துக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறைப்படி தரவில்லை.
    • கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை, தென்பெண்ணை ஆறு பிரச்சினை, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என தமிழகத்தின் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வே எட்டப்படாமல் சென்று கொண்டிருக்கின்றன.

    காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்திருந்தாலும், மாதந்தோறும் வழங்கும் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை.

    அது மட்டுமின்றி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை தடுக்கும் நோக்கில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில் கர்நாடகா துணை முதல்-மந்திரி சிவக்குமார் அண்மையில் கூறுகையில் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கும் நேற்று முன்தினம் ஒருகடிதம் எழுதி இருந்தார்.

    அதில் ஜூன், ஜூலை மாதத்துக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறைப்படி தரவில்லை. ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்திற்கு 34 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். இதை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனும், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து முறையிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு காவிரி ஆணைய உத்தரவுபடி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்கள்.

    கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.

    இது தொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

    • நமக்கு கடந்த ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் கொடுத்திருக்க வேண்டும்.
    • மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சென்று உள்ளது.

    சென்னை:

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை டெல்லி செல்ல உள்ள நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை திறந்துவிடவில்லை. ஆகையால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் அவர்களுக்கு வலியுறுத்த சொல்ல, டெல்லி செல்கிறேன்.

    காவிரி நீரை ஒவ்வொரு மாதம் எவ்வளவு வழங்க வேண்டுமோ அதனை கர்நாடகம் வழங்க வேண்டும் என அம்மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன். பருவமழை குறைவால் தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியது பற்றி கேட்கிறீர்கள். தண்ணீர் கொடுக்க முடியாத காரணத்தை அவர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் வேண்டும் என்று நமது காரணத்தை தெரிவிக்கிறோம்.

    நமக்கு கடந்த ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2.833 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியது. 6.357 டி.எம்.சி தண்ணீர் நமக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசுடன் கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். ஏன் அங்கு அணைகட்டக் கூடாது என்பதை காரணத்தோடு விளக்கம் கொடுப்போம்.

    மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சென்று உள்ளது. ஆனால் அது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு குறித்து கேட்டபோது, அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்க மறுத்து ஆள விடுங்க... என்று பேட்டியை முடித்துக் கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • அமைச்சர் துரைமுருகன் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன.

    தமிழக அமைச்சர்கள் சிலரது இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், புதுமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் அமைச்சர்களாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் புதிதாக யார்-யாரை அமைச்சர்களாக நியமிக்கலாம்? அமைச்சர்களாக இருப்பவர்களில் யாருடைய இலாகாக்களை மாற்றலாம் என்பது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதையடுத்து இன்று மதியம் தி.மு.க. மூத்த அமைச்சரான துரைமுருகன், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பட்டியலை கவர்னரிடம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • உலகின் எந்த நாட்டு அதிபரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும்..
    • நரி வலம் போனால் என்ன.. இடம் போனால் என்ன.. எங்களை கடிக்காமல் இருந்தால் சரி..

    தமிழக சட்டசபையில் கவர்னருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அமைச்சர் துரைமுருகன் 'ஏதோ கவர்னர் எதிர்ப்பு தீர்மானம் என்று தகவல் வந்ததும் எதிர்கட்சிகள் துள்ளி குதித்து இது பஞ்சமா பாதகம் என்பதுபோல சொன்னார்கள். பேசுகிறபோது, 'நீங்கள் சட்டமன்ற விதிகளை எல்லாம் தளர்த்தி அல்லவா கொண்டு வருகிறீர்கள்?' என்று கேட்டனர்.

    அவர்கள் மாநாடு நடத்திக் கொள்ளட்டும். யாரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும். அமெரிக்க அதிபரை கூப்பிடட்டும். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை கூப்பிடட்டும். உலகின் எந்த நாட்டு அதிபரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும்.. நரி வலம் போனால் என்ன.. இடம் போனால் என்ன.. எங்களை கடிக்காமல் இருந்தால் சரி..

    சட்டமன்ற விதிகளை தளர்த்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்ததே அவர்கள்தான். இதே சட்டமன்ற விதிகளை தளர்த்திதான் சென்னா ரெட்டி மீது பாய்ந்தார்கள். அதே சட்டமன்ற விதிகளை நாம் தளர்த்தும் போது பத்தினிகள் ஆகிவிட்டார்கள். சரி அவர்கள் போகட்டும்" என்று குறிப்பிட்டார் துரைமுருகன்.

    இவர்கள் இப்படி அவர்கள் மீது குறை சொல்வதும், அவர்கள் இவர்கள் மீது குறை சொல்வதும் தமிழக அரசியலில் வாடிக்கையாகிவிட்டது. அதனால்தான் படிக்காத மேதை காமராஜர் வேடிக்கையாக 'இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று சொல்லி சென்றாரோ?

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், சிம்பு, விக்ரம்பிரபு, ரகுமான், துருவ் விக்ரம், நடிகைகள் ஐஸ்வர்யாராய், திரிஷா, குஷ்பு, சுகாசினி, ஜெயசித்ரா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்ய லட்சுமி, இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அம்ரேஷ், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


    இதில், அமைச்சர் துரைமுருகன் பேசியபோது, " ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் படிக்கின்ற காலத்தில் 5 முறை படித்திருக்கிறேன். இக்கதையை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். நான் கதையை படித்தீர்களா என்று கேட்டதற்கு அவர் இல்லை என்றார். அப்போது, இப்படத்தை நீங்கள் எடுக்க வேண்டாம் என்றேன். அவர் எடுத்தே தீருவேன் என்றார். கதைகளை படமாக்குவது எளிது, காவியங்களை படமாக்குவது கடினம் என்று கூறினேன். 

    யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். அரைமனதாக ஒப்புக்கொண்டேன். இயக்குனர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்றார். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் இக்கதைக்கு ஒத்துவரமாட்டார் வேண்டாம் என்றேன். ஆனால், படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். வீட்டில் இருந்தே சல்யூட் வைத்தேன். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர். அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி.


    கமல்ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இல்லை. எனது பேச்சைக் கேட்காமல் இப்படத்தை எடுத்து வெற்றி கண்ட சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள். ஒரு படத்தின் மூலம் ஒரு தமிழ் மன்னனை அறிமுகப்படுத்திய பெருமை சுபாஷ்கரனை சேரும். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இரண்டு மடங்கு ஓடும். வாழ்த்துக்கள்" என்றார்.

    மேலும், இயக்குனர் பாரதிராஜா பேசியபோது, "9-ஆம் வகுப்பு படிக்கும்போது பொன்னியின் செல்வன் படித்தேன். எந்த படம் வேண்டுமானலும் எடுக்கலாம். ஆனால், சரித்திர கதையை பிசகாமல் எடுக்கணும். மணிரத்னம் ஜீனியஸ். இப்படத்தை எம்.ஜி.ஆர் எடுக்க ஆசைப்பட்டார். கமல், ஸ்ரீ தேவி, என்னை வைத்து எம்.ஜி.ஆர் பேசினார். வந்தியத்தேவனாக கமலை வைத்து எடுக்க நினைத்தார். ஆனால், அதன் பிறகு எம்.ஜி.ஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நான் சொதப்பிவிடுவேன் என்று கடவுள் மணிரத்னத்தை எடுக்க வைத்துவிட்டார்.

    நாம் கொடுத்துவைத்தவர்கள். நம்மிடம் நிறைய கலைஞர்கள் உள்ளனர். காதல் இல்லாமல் நாம் கலைஞர்கள் கிடையாது. காதல் ஒன்றுதான் கலைஞனை வளர்க்கிறது. மணிரத்னம் ரொமான்டிக் என்று வெளியே சொல்வது இல்லை. கமல் சொல்லி விடுவார். இப்படத்தில் கதாநாயகிகளை லட்டு லட்டாக தேர்வு செய்துள்ளார். எல்லோரையும் காதலிக்கலாம் போல. நந்தினியை, குந்தவையை, பூங்குழலியை காதலிக்கலாம். உலகம் முழுவதும் இன்று பொன்னியின் செல்வன் பற்றி விவாதிக்கின்றனர். இந்தியாவை தமிழ்நாடு பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் மணிரத்னம். நான் கடைசிவரை கடவுளிடம் போராடி மணிரத்னம் செய்வதை பார்த்துவிட்டுதான் போவேன்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் ஆண்டில் ஒதுக்கிய ரூ.5 கோடியில் ரூ.4 கோடிதான் செலவழித்து இருக்கிறார்கள். ரூ.1 கோடி பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
    • ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம். நீங்கள் செய்தால் சரி. நாங்கள் செய்தால் தவறா?

    சென்னை:

    சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (அ.தி.மு.க.) பேசினார். அப்போது மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு திட்டத்தை கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.

    இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம்தான் அ.தி.மு.க. ஆட்சியின் போது மாணவ-மாணவிகளுக்கு உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

    தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினமும் பல பகுதிகளில் இலவசமாக சாப்பாடு கொடுக்கிறார்கள். அந்த வகையில்தான் அ.தி.மு.க. ஆட்சியில் உணவு கொடுக்கப்பட்டு இருக்கிறதே தவிர அதை அரசு சார்பில் கொடுத்ததாக கூற முடியாது" என்றார்.

    அப்போது மா.சுப்பிரமணியன் ஆட்சேபகரமான ஒரு வார்த்தையை தெரிவித்ததற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

    மேலும் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அரசு சார்பில் காலை உணவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கி அதை செயல்படுத்தினார்" என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, "2018-19-ம் ஆண்டு கவர்னருக்கு ரூ.50 லட்சம் ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    2019-20-ம் ஆண்டில் ரூ.50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி கவர்னருக்கு வழங்கி இருக்கிறார்கள். அந்த பணத்தில் இருந்துதான் தன்னார்வ தொண்டு நிறுவனமான அட்சய நிறுவனத்துக்கு காலை உணவு வழங்கியதற்காக பணம் கொடுத்து இருக்கிறார்கள்.

    அதுவும் முதல் ஆண்டில் ஒதுக்கிய ரூ.5 கோடியில் ரூ.4 கோடிதான் செலவழித்து இருக்கிறார்கள். ரூ.1 கோடி பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு கவர்னர் ரூ.1 கோடி தான் உணவு வழங்க செலவழித்துள்ளார்.மீதி ரூ.4 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை. அதற்கான கணக்கும் இதுவரை இல்லை", என்றார்.

    இதற்கு மீண்டும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "இது ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம். நீங்கள் செய்தால் சரி. நாங்கள் செய்தால் தவறா?" என்று விளக்கம் கொடுத்தார்.

    இதனால் காரசார விவாதம் நடந்தது.

    அப்போது அமைச்சர் துரைமுருகன் எழுந்து,"கவர்னருக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி பணம் பற்றி கவர்னர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.

    • மகாபாரத கதையில் கண்ணனை வெறும் தேரோட்டியாக சொல்ல முடியாது.
    • சூத்திரதாரியாக இருந்து கவுரவர்களுக்கு எதிராக பஞ்சபாண்டவர்களை வழிநடத்தியதே கண்ணன்தான்.

    தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 'கவர்னர் உரை' விவாதத்துக்கு உரியதாக மாறி இருக்கிறது.

    பொதுவாக சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்தினாலும் அந்த உரையை தயார் செய்வது ஆட்சி செய்யும் அரசுதான். அரசாங்கம் சார்பில் என்ன தயாரித்து கொடுக்கப்படுகிறதோ அதை கவர்னர் பொறுப்பில் இருப்பவர்கள் வாசித்துவிட்டு சென்று விடுவார்கள். இது மரபு.

    ஆனால் இந்த மரபை முதல் முறையாக உடைத்திருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. கடந்த 5-ந்தேதி அவரிடம் தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை வழங்கப்பட்டது. அதை படித்துப் பார்த்த கவர்னர் 6 இடங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அப்படி எந்த ஒரு பரிந்துரையையும் கவர்னர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்று தமிழக அரசு சொல்கிறது. ஆனால் திருத்தம் செய்ய சொன்னதற்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சர்ச்சைக்கு இடையில்தான் கவர்னர் உரையில் திருத்தம் செய்யப்படவில்லை என்பதை அறிந்த கவர்னர் 6 இடங்களில் சில பத்திகளை வாசிப்பதை தவிர்த்தார். அதற்கு உடனடியாக அரசு தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

    கவர்னருக்கு அவர் முன்னிலையிலேயே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் எப்படி பதிலடி உடனடியாக கொடுக்க முடிந்தது? என்று அரசியல் நிபுணர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். கவர்னர் இப்படித்தான் நடந்து கொள்வார் என்று தி.மு.க. தலைவர்கள் எதிர்பார்த்தார்களா? அதை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே தீர்மானத்தை தயாரித்து வைத்திருந்தார்களா? என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எதிரொலித்தது.

    ஆனால் இதன் பின்னணியில் என்னென்ன நடந்தது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. கவர்னருக்கு உடனடியாக பதிலடி கொடுத்த விவகாரத்தில் சூத்திரதாரியாக செயல்பட்டது அமைச்சர் துரைமுருகன் ஆவார்.

    மகாபாரத கதையில் கண்ணனை வெறும் தேரோட்டியாக சொல்ல முடியாது. சூத்திரதாரியாக இருந்து கவுரவர்களுக்கு எதிராக பஞ்சபாண்டவர்களை வழிநடத்தியதே அவர்தான்.

    மற்றவர்கள் அறியாத வகையில் பின்புலத்தில் இருந்து சூத்திரதாரியாக கண்ணன் செயல்பட்டது போன்றுதான் நேற்று சட்டசபையிலும் அமைச்சர் துரைமுருகன் சூத்திரதாரியாக திகழ்ந்தார். கவர்னர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து அவர் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார்.

    தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிவிப்புகளை அவர் சரியாக சொல்கிறாரா? என்று வரிக்கு வரி பார்த்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் திராவிட மாடல், சட்டம் ஒழுங்கு போன்றவைகளை கவர்னர் தவிர்த்துவிட்டு செல்வதை அவை முன்னவரான துரைமுருகன் கண்டுபிடித்தார்.

    அடுத்த வினாடி அவர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. உடனடியாக எழுந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்று ஏதோ பேசினார். பிறகு சபையில் இருந்து எழுந்து வெளியில் சென்றார். சட்டசபை அதிகாரிகளை சந்தித்து பேசிவிட்டு மீண்டும் இருக்கைக்கு திரும்பினார்.

    இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் கவர்னருக்கு பதிலடி கொடுக்கும் தீர்மானம் மின்னல் வேகத்தில் தயாரானது. சபை விதி 17ஐ தளர்த்தி தீர்மானம் கொண்டுவர தீர்மானித்து அதற்கேற்ப 2 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த நிகழ்வுகள் எதையும் அறியாத கவர்னர் ஆர்.என். ரவி தனது உரையை 10.48 மணிக்கு முடித்தார். அடுத்து எழுந்து சபாநாயகர் கவர்னர் உரையை தமிழில் வாசிக்கத் தொடங்கினார். 11.31 மணிக்கு சபாநாயகர் வாசித்து முடித்தார்.

    இதற்கிடையே சூத்திரதாரி துரைமுருகனால் தயாரிக்கப்பட்ட தீர்மானம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வசம் கொடுக்கப்பட்டு இருந்தது. சபாநாயகர் வாசித்து முடித்ததும், இருக்கையில் இருந்து எழுந்து மு.க.ஸ்டாலின் அந்த 2 பக்க தீர்மானத்தை படித்து தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரையை முழுமையாக சபை குறிப்பில் இடம்பெற செய்தார்.

    வழக்கமாக கவர்னர் உரை முடிந்ததும், தேசிய கீதம் பாடப்பட்டு கவர்னர் வழியனுப்பி வைக்கப்படுவார். வழக்கத்துக்கு மாறாக முதல்-அமைச்சர் பேசியதும், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி உஷாரானார்.

    அவர் இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு தான் கவர்னருக்கு ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார். தனது உதவியாளர்களிடம் கேட்டு தனக்கு எதிராக தீர்மானம் வருவதை அறிந்தார்.

    அதன் பிறகு தேசியகீதம் பாடுவதற்குகூட காத்திருக்காமல் சபையில் இருந்து வெளியேறினார்.

    • தி.மு.க. பொதுச்செயலாளராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்.
    • கரகாட்டம், புலியாட்டம், பூரணகும்ப மரியாதை என வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக இருந்ததால் காட்பாடி நகரமே களைகட்டியது.

    தி.மு.க. பொதுச்செயலாளராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார் அமைச்சர் துரைமுருகன். அதன்பிறகு முதல் முறையாக தனது சொந்த ஊரான காட்பாடிக்கு சென்றுள்ளார்.

    அவரது மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் வாணவேடிக்கையுடன் கூடிய வரவேற்பை கொடுத்து துரைமுருகனை திக்குமுக்காட வைத்துவிட்டார். கரகாட்டம், புலியாட்டம், பூரணகும்ப மரியாதை என வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக இருந்ததால் காட்பாடி நகரமே களைகட்டியது.

    • ஆழியாறு அணையிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்திட தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் உத்தேசித்துள்ளது.
    • ஆழியாறு அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு பி.ஏ.பி பாசனதார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள ஆழியாறு அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக, கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்திட தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் உத்தேசித்துள்ளது.

    இத்திட்டத்திற்காக ஆழியாறு அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு பி.ஏ.பி பாசனதார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இப்பிரச்சினை குறித்து அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து, சுமூகத் தீர்வு காண்பதற்காக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் நேரு ஆகியோர் தலைமையில் வருகிற 1-ந்தேதி அன்று, சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×