search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug"

    மும்பையில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் ரூ.39 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த உள்ளதாக வந்த தகவலின் பேரில் வெளிநாட்டை சேர்ந்த 4 பேர் போலீசார் கைது செய்தனர். #Mumbai #DrugSmuggling
    மும்பை:

    மும்பை அந்தேரி பகுதியில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் போதைப்பொருள் கடத்த உள்ளதாக வந்த தகவலின் பேரில் போலீசார், அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பெரிய பார்சலுடன் நடந்து சென்ற வெளிநாட்டை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதை பிரித்து சோதனையிட்டபோது, ஜன்னலுக்கு பயன்படுத்தும் திரைச்சீலைகள் இருந்தன. அவற்றில் பெரிய வளையங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த வளையங்களை உடைத்து பார்த்தபோது அதில் 6 கிலோ 492 கிராம் எடையுள்ள ‘கோகைன்’ போதைப்பொருள் மறைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கூரியர் மூலம் வெளிநாட்டுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் கார்ல பிண்டே (வயது 35), நைஜீரியாவை சேர்ந்த நீரஸ் ஒகோவா (35), சைமன் (32), மைக்கேல் ஓவ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.38 கோடியே 95 லட்சம் என அவர்கள் தெரிவித்தனர்.
    லாலாப்பேட்டையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற சென்ற கணவரும் கருகினார்.
    லாலாப்பேட்டை:

    லாலாப்பேட்டை  அருகே உள்ள கொம்பாடிபட்டியை சேர்ந்தவர் அருள்சக்தி. இவரது மனைவி மைதிலி (வயது 37). இவர்களுக்கு 3  குழந்தைகள் உள்ளனர். அருள்சக்தி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவி மைதிலியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் நேற்று இரவும் அருள்சக்தி மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவர் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த மைதிலி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திவேல் மைதிலியை காப்பாற்றி முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பரவியது. இதனால் தீயின் வெப்பம் தாங்காமல் அலறினர்.

    இருவரதும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று  2 பேரையும் மீட்டு  சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைதிலி பரிதாபமாக இறந்தார். சக்திவேல் தீவிர சிகிச்சை பெற்று  வருகிறார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    கொச்சியில் சென்னை வியாபாரியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர். #Drugsseized

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போதை பொருட்களை விற்பனை செய்ய ஒரு கும்பல் முயற்சிப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கொச்சி உள்பட மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு வருவோரும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர்.

    இதுபோல வியாபார நிமித்தம் கேரளா வருவோரையும், அவர்களின் வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    கொச்சி போதை பொருள் தடுப்புப்பிரிவு உதவி கமி‌ஷனர் விஜி ஜோர்ஜ், சப்-இன்ஸ்பெக்டர் விபின் தலைமையிலான போலீசார் கொச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து சோதனை நடத்தினர்.

    அந்த காரில் ஹாசிஸ் ஆயில் மற்றும் போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.

    போதை பொருள் கடத்தி வந்த காரில் இருந்த இப்ராகிம் ஷெரீப் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கைதான இப்ராகிம் ஷெரீப், சென்னை அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் தெரிய வந்தது.

    அங்கு துணி வியாபாரம் செய்து வருகிறார். துணிகளை வெளிமாநிலங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதுபோல் போதை பொருட்களை மறைத்து எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இப்ராகிம் ஷெரிப்பிடம் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்டுள்ளது.

    சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வந்து சேரும் போதை பொருட்களை ஏஜெண்டுகள் மூலம் வாங்கி அதனை பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கார்களில் கடத்திச் சென்று இக்கும்பல் விற்பனை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்தியாவுக்கு போதை பொருட்களை அனுப்பி வைக்கும் வெளிநாட்டு கும்பல் யார்? இவர்களுக்கு உதவி செய்யும் உள்ளூர் நபர்கள் யார்? யார்? என்பதை கண்டுபிடிக்க கொச்சி தனிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    வெளிநாட்டு கும்பல் பற்றிய விவரம் தெரிய வரும் போது மேலும் பல முக்கிய புள்ளிகள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று கேரள போலீசார் தெரிவித்தனர்.  #Drugsseized

    மதுரை அருகே போதை பொருள் விற்றதாக 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    மதுரை:

    தமிழகத்தில் போதை பொருட்களான கஞ்சா, புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனை திருட்டுத்தனமாக விற்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை வைகை தென்கரை சர்வீஸ் ரோட்டில் சிலர் கஞ்சா விற்பதாக கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையாவுக்கு தகவல் கிடைத்தது. அவர் போலீசாருடன் சென்று சோதனை நடத்தியபோது கஞ்சா விற்றதாக 2 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கைதானவர்கள் சின்னராஜ் (வயது 30) அய்யனார்குளம், உசிலம்பட்டி, காவேரி (35) என தெரிய வந்தது.

    இதேபோல் தல்லாகுளம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக திருப்பதி, பாலா, மாணிக்கம், பெரியவீரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 583 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. #tamilnews
    ஓமலூரில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, தொளசம்பட்டி,  ஜலகண்டாபுரம், நங்கவள்ளி என ஆறு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய எல்லையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாக ஓமலூர் டி.எஸ்.பி பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து அனைவரையும் கைது செய்யுமாறு அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த பச்சியப்பன், கருத்தானூர் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம், விருதாசம்பட்டியை சேர்ந்த முத்துமாணிக்கம், தாரமங்கலத்தை சேர்ந்த முருகன், எம்.செட்டியப் பட்டியை சேர்ந்த ஆறுமுகம், பண்ணப்பட்டி சரோஜா, பண்ணப்பட்டி தாபா ஹோட்டலில் விற்பனை செய்த ராபின், ஆரூர்பட்டி மாரியப்பன், சின்னப்பம்பட்டி  தங்கவேல், துட்டம்பட்டி சுரேந்திரன், காமலாபுரம் பெருமாள்,  சங்கீதப்பட்டி  செங்குட்டுவன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். 

    இவர்களிடம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மது பானங்களை பரிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக ஓமலூர் உட்கோட்டத்தில் வேறு யாராவது மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஓமலூர் டி.எஸ்.பி பாஸ்கர்  எச்சரித்துள்ளார்.
    பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் குற்றங்களை தடுக்கும் வகையில் இலங்கையில், 19 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
    கொழும்பு:

    குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது. இதற்காக வெளிக்கடை சிறையிலும், கண்டி போகம்பறை சிறையிலும் தூக்கு மேடைகள் அமைக்கப்பட்டன. கடந்த 1976-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி பப்புவா என்பவருக்கு இலங்கையில் கடைசியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் மரண தண்டனையை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இலங்கை சிறைகளில் 500-க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை கைதிகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இலங்கையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கொலைகள், போதைப் பொருள் விற்பனை போன்ற சமூக விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றால் மீண்டும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கை குறித்து இலங்கை பாரளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விவாதம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேருக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இலங்கை மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

    மந்திரிசபையின் ஒப்புதலைத் தொடர்ந்து தூக்கு தண்டனை குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்ட ரீதியான பணிகள் 42 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கியுள்ளது.

    இதில் முதற்கட்டமாக, தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இது தொடர்பாக பவுத்த சாசன மந்திரி காமினி ஜெயவிக்ரம பெரேரா, நிருபர்களிடம் கூறும்போது, போதைப்பொருள் குற்றத்துக்காக தண்டனை பெற்றவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரின் தண்டனையை நிறைவேற்ற மந்திரி சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார். 
    அமெரிக்காவில் போதை மருந்துக்காக பெற்ற மகனை ரூ.1½ லட்சத்துக்கு விற்ற தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    டெக்சாஸ்:

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கார்பல்கிறிஸ்டி நகரை சேர்ந்த பெண் எஸ்மெரால்டாசார்ஜா (29). இவருக்கு போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.

    இவர் தனது காதலருடன் இணைந்து போதை மருந்து பயன்படுத்தி வந்தார். ஒரு கால கட்டத்தில் போதை மருந்து வாங்கியவரிடம் பணம் செலுத்த முடியவில்லை. அதனால் போதை மருந்து கிடைக்கவில்லை.

    போதை மருந்து கிடைக்காமல் தவித்த அவர் தனது 7 வயது மகனை நியூசெஸ் கவுண்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்றார்.

    இதுபற்றிய தகவல் தெரிந்ததும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். நியூசெஸ் கவுண்டியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்த 7 வயது சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

    போதை மருந்துக்காக பெற்ற மகனை விற்ற எஸ்மெரால்டாசார்ஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருட்களை கடத்தும், விற்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற பஞ்சாப் மந்திரிசபை இன்று தீர்மானித்துள்ளது. #PunjabCabinet #deathpenalty #drugpeddlers
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநில அரசின் மந்திரிசபை கூட்டம் முதல் மந்திரி கேப்டன் அம்ரிந்தர் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமரிந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தை போதைப்பொருள் நடமாட்டமற்ற மாநிலமாக மாற்ற இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    போதைப் பொருட்களை கடத்தும், விற்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பஞ்சாப் அரசின் சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். #PunjabCabinet #deathpenalty #drugpeddlers
    போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் மற்றும் பேரணி குமரி மாவட்டத்தில் 14 இடங்களில் நடந்தது. இதில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில்:

    உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோட்டார் மறைமாவட்ட போதைநோய் நலப்பணிகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மாவட்டம் முழுவதிலும் இருந்து, அதாவது கன்னியாகுமரி, தென்தாமரைக்குளம், பள்ளம், கேசவன்புத்தன்துறை, முட்டம், குளச்சல், ரீத்தாபுரம், குறும்பனை, இனயம், சுங்கான்கடை, நாகர்கோவில் கார்மல்நகர், எட்டாமடை, ராஜாவூர், ஆரல்வாய்மொழி ஆகிய 14 இடங்களில் இருந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடந்தது.



    இந்த ஜோதி ஓட்டம் நாகர்கோவில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. ஜோதி ஓட்டத்தில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவிலில், இளைஞர்கள் கொண்டு வந்த ஜோதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பின்னர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.கருப்பையா விழிப்புணர்வு குறும்பட சி.டி.யை வெளியிட்டு பேசினார். தலைமை குற்றவியல் நீதிபதி வி.பாண்டியராஜ் மதுபோதையில் இருந்து மீண்டோரை கவுரவித்து, வாழ்த்தி பேசினார். சார்பு நீதிபதி ஏ.பசும்பொன் சண்முகையா நினைவு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார். கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை விழா சிறப்பு மலரை வெளியிட்டு தலைமை உரையாற்றினார். ஓய்வுபெற்ற ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ‘சமூக சவால்கள்‘ என்ற ஒலித்தகட்டை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார்.



    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலா பரிசு வழங்கி பேசினார். கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியார் கிலேரியஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கரை வெளியிட்டார். மாவட்ட அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர் வாழ்த்தி பேசினார். இதில் அருட்பணியாளர்கள் நெல்சன், ஆன்றனி அல்காந்தர் மற்றும் சகாய பிராங்கோ, அருள்குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் குமரி மாவட்ட நிர்வாகம், பொது சுகாதாரத்துறை, மண்டைக்காடு ஏ.எம்.கே. மதுபோதை மறுவாழ்வு மையம் ஆகியவற்றின் சார்பில் நாகர்கோவில் பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு தின பேரணி நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து நேற்று தொடங்கியது. பேரணியை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் முன்னிலை வகித்தார். மண்டைக்காடு ஏ.எம்.கே. மதுபோதை மறுவாழ்வு மைய இயக்குனர் அருள்ஜோதி வரவேற்று பேசினார். ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் டாக்டர் லியாகத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி எஸ்.எல்.பி. பள்ளியை சென்றடைந்தது. அங்கு நடந்த விழாவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் நடராஜன், சில்வெஸ்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியிலும் மனநல மருத்துவத்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை டீன் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் லியோடேவிட், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், மனநல மருத்துவ துறை பேராசிரியர் டாக்டர் அருள்பிரகாஷ், டாக்டர் கலைக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பேரணியில் மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள், பயிற்சி டாக்டர்கள், நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் போதை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் பிடித்திருந்தனர். 
    விழுப்புரத்தில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
    விழுப்புரம்:

    உலக போதை பொருள் ஒழிப்பு தினமான நேற்று, விழுப்புரத்தில் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் மாவட்ட காவல்துறை ஆகியன இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

    விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணி விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆயுதப்படை போலீசார், பயிற்சி காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோர் கலந்துகொண்டு போதை பொருள் ஒழிப்பு குறித்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, ஊர்காவல் படை மண்டல தளபதி ஸ்ரீதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    டெல்லியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் வைத்திருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த கைக்கூலியை கைது செய்த போலீசார், அவனுக்கு சப்ளை செய்த நபரை தேடி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    டெல்லி கஷ்மேரே கேட் பகுதியில் கைப்பையில் 3 கிலோ ஹெராயின் வைத்திருந்த நைஜீரியா நாட்டினரான எக்கேனே கென்னத் ஓன்யெட்டோபே(33) என்பவனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவனிடம் இருந்த 15 கோடி ரூபாய் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில். ஆப்கானிஸ்தானில் இருந்து நைஜீரியாவை சேர்ந்த வேறொருவர் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் வழியாக அனுப்பிவைக்கும் போதைப்பொருட்களை டெல்லி, பஞ்சாப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் கைக்கூலியாக அவர் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

    இவர்கள் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுக்கும் இடைத்தரகர்கள் மூலமாக போதைப்பொருட்களை அனுப்பி வந்ததாக தெரிவித்துள்ள போலீசார், இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் ஒரு நைஜீரியா நாட்டவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.  #NigerianArrest #heroin
    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள போதை பவுடரை கடத்தி வந்த சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து கேரளா வழியாக மாலத்தீவுக்கு போதை பொருள் கடத்த இருப்பதாக டெல்லியில் உள்ள தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த தகவல் உடனடியாக கேரள போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கண் காணிப்பை பலப்படுத்தினர். பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

    அப்போது மாலத்தீவுக்கு செல்ல இருந்த 3 பயணிகளை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மாலத்தீவைச் சேர்ந்த ஜாமன் அகமது(வயது24), சாபிங்(29), சானித்மாகின்(27) என்பது தெரிய வந்தது. அவர்களின் உடமைகளை பரிசோதித்த போது 17 கிலோ போதை பவுடர் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    சர்வதேச சந்தையில் இந்த போதை பொருளின் மதிப்பு ரூ.5 கோடியாகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    கைதானவர்களில் சானித் மாகின் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஆவார். இந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வந்து கைதானவர்களிடம் விசாரணை நடத்தினர். திருவனந்தபுரத்தில் மிகப் பெரிய அளவில் போதை பொருள் சிக்கியதும், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைதாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×