search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death Sentence"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இக்குற்றம் புரிந்தவர்கள் அங்கு பொதுவெளியில் நிற்க வைத்து அடிக்கப்பட்டனர்
    • மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவரின் தந்தை மேல்முறையீடு செய்ய உள்ளார்

    பாகிஸ்தானில், இறை நம்பிக்கைகளையும், இறை வழிபாட்டையும் நிந்தனை செய்வதும், பழித்து பேசுவதும், கடும் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படுகிறது.

    ஆனால், இதுவரை அந்நாட்டில், இக்குற்றத்திற்கு பொதுவெளியில் நிற்க வைத்து அடிப்பது போன்ற தண்டனைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில், கடந்த 2022ல், இறை நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக "வாட்ஸ் அப்" செயலியில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டதாக குற்றம் சாட்டி ஒரு 22-வயது மாணவர் மற்றும் 17-வயது மாணவர் ஒருவர் மீது பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு முகமையின் (Federal Investigation Agency) சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்தது.

    இவ்வழக்கு விசாரணை பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது.


    இரு மாணவர்களும் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என கூறி வந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை குஜ்ரன்வாலா (Gujranwala) நகர நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தற்போது இதனை விசாரித்த நீதிபதிகள் 22-வயது மாணவருக்கு மரண தண்டனை விதித்தும் 17-வயது மாணவருக்கு - அவர் சிறார் என்பதால் - ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தனர்.

    இரண்டு மாணவர்களும் பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவரின் தந்தை, லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

    1980களில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடைபெற்ற காலகட்டங்களில் "இறை நிந்தனை" குற்றத்திற்கு கடும் தண்டனை வழங்கும் விதமாக சட்டங்கள் மாற்றப்பட்டன.

    அந்த இரு மாணவர்களை குறித்து தற்போது வரை வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    • உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், பூட்டோவிற்கு மரண தண்டனை விதித்தது
    • தவறுகளை ஒப்பு கொள்ளா விட்டால் நாம் முன்னேற முடியாது என்றார் தலைமை நீதிபதி

    பாகிஸ்தானில், 1971லிருந்து 1973 வரை அதிபராகவும், 1973லிருந்து 1977 வரை பிரதமராகவும் இருந்தவர் சுல்ஃபிகர் அலி பூட்டோ (Zulfikar Ali Bhutto).

    1977ல் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை பதவியில் இருந்து ராணுவ புரட்சி மூலம் தூக்கி எறிந்து பதவிக்கு வந்தார் ஜெனரல் ஜியா-உல் ஹக் (General Zia-ul-Haq).

    1979ல் ஜியாவின் ஆட்சியின் போது, அகமது ரெசா கசூரி (Ahmed Reza Kasuri) என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சுல்ஃபிகர் அலி பூட்டோவிற்கு மரண தண்டனை விதித்தது.

    ராவல்பிண்டியில் சுல்ஃபிகர் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

    இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என வழக்கு தொடரப்பட்டு பல வருடங்களாக நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இன்று, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், "சுல்பிகர் அலி பூட்டோவின் வழக்கு நியாயமான முறையில் நடக்கவில்லை" என தீர்ப்பளித்தது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காசி ஃபேஸ் இசா (Qazi Faez Isa) தலைமையிலான 9-நபர் பெஞ்ச் அளித்துள்ள இந்த தீர்ப்பில், "லாகூர் உயர் நீதிமன்றமும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமும் முறையான விசாரணை பெற ஒவ்வொரு தனி நபருக்கும் உள்ள மனித உரிமையை பூட்டோவிற்கு வழங்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நமது முந்தைய தவறுகளை ஒப்பு கொள்ளா விட்டால் நம்மை திருத்தி கொண்டு நாம் முன்னேற முடியாது" என கூறியுள்ளது.

    இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள சுல்ஃபிகர் அலி பூட்டோவின் பேரனும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (Pakistan People's Party) தலைவருமான பிலாவல் பூட்டோ ஜர்தாரி (Bilawal Bhutto-Zardari), "3 தலைமுறைகளாக இந்த தீர்ப்பிற்காக காத்திருந்தோம்" என கூறினார்.

    • எலிசபெத் 8 முறை மார்பிலும், 1 முறை கழுத்திலும் குத்தி கொல்லப்பட்டார்
    • 2022ல் ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த நரம்பு கிடைக்கவில்லை

    அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 27 மாநிலங்களில் கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டமாக உள்ளது.

    மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டில் விஷ ஊசி, மின்சாரம் பாய்ச்சுதல், விஷ வாயு, தூக்கு மற்றும் துப்பாக்கியால் சுடப்படுதல் ஆகியவை அனுமதிக்கப்பட்ட முறைகளாகும்.

    1988 மார்ச் 18ல் அமெரிக்க தென்கிழக்கு மாநிலமான அலபாமாவின் கோல்பர்ட் கவுன்டி (Colbert county) பகுதியில் 45 வயதான எலிசபெத் சென்னட் (Elizabeth Sennett) சுமார் 8 முறை மார்பிலும், ஒரு முறை கழுத்திலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அவரது கணவர் சார்ல்ஸ் சென்னட், ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்.

    இக்கொலையை செய்ததாக கென்னத் யூஜின் ஸ்மித் (Kenneth Eugene Smith) மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் எனும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் சார்ல்ஸ், கடும் நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருந்ததாகவும், அதனை சமாளிக்க மனைவியின் காப்பீடு தொகையை பெற விரும்பியதாகவும், அதற்கு இருவருக்கும் தலா $1000 கொடுத்து தனது மனைவியை கொல்ல சொல்லி அமர்த்தியிருந்ததும் தெரிய வந்தது.

    விசாரணையின் போது சார்ல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

    1996ல் ஸ்மித்திற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

    2010ல் ஜான் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    2022ல் அலபாமாவில், தண்டனையை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள், ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகளை தேட முடியாமல் போனதால் அந்த முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அவருக்கு "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த தண்டனை ஜனவரி 25 நிறைவேற்றப்பட இருந்தது.

    ஆனால், இம்முறையில் தன்னை கொல்ல கூடாது என தற்போது 58 வயதாகும் ஸ்மித் தரப்பில் வாதிடப்பட்டது.

    நேற்று, இவ்வழக்கில் நீதிபதி ஆர். ஆஸ்டின் ஹஃபேகர் (Judge R. Austin Huffaker), "நைட்ரஜன் ஹைபாக்சியா முறையில் ஸ்மித்திற்கு தண்டனை நிறைவேற்றலாம்" என தீர்ப்பளித்தார்.

    இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை உள்ளே செலுத்துவார்கள்.

    அலபாமா, மிசிசிபி மற்றும் ஓக்லஹாமா ஆகிய மாநிலங்கள் இந்த முறைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும் இதுவரை எந்த குற்றவாளிக்கும் இது பயன்படுத்தப்பட்டதில்லை.

    மரண தண்டனையை இந்த முறையில் நிறைவேற்றுவது மனிதத்தன்மையற்ற செயல் என ஸ்மித்தின் வழக்கறிஞர்கள் கூறினர். புதிய முறையை எதிர்த்து ஸ்மித் தரப்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்படலாம் என தெரிகிறது.

    • நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார்.
    • தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது33). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ம்ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார். ஏமனுக்கு செல்ல தனக்கு அனுமதி வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அதனை பரிசீலித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது. இதனால் நர்சு நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • இருபது ஆண்டுகளுக்கு பிறகு முதல் முதலாக ஒரு பெண்ணுக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை நிறைவேறப் போகிறது.
    • உலகின் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் சிங்கப்பூரில் உள்ளது.

    போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிங்கப்பூர் இவ்வாரம் 2 குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது. அதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படாத நிலையில் தற்போது முதல் முதலாக ஒரு பெண்ணுக்கும் சிங்கப்பூரில் தண்டனை நிறைவேறப் போகிறது.

    50 கிராம் ஹெராயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயது நபர் ஒருவர் சிங்கப்பூரின் சாங்கி சிறையில் நாளை தூக்கிலிடப்பட உள்ளார் என்றும் அதே போன்று 30 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக 2018ல் மரண தண்டனை வழங்கப்பட்ட சாரிதேவி ஜமானி எனும் 45 வயது பெண் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது என மனித உரிமைகள் அமைப்பான டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் (TJC) தெரிவித்துள்ளது.

    2004ல் சிங்கப்பூரில் 36 வயதான சிகையலங்கார நிபுணர் யென் மே வோன், போதை பொருள் கடத்தல் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டதற்குப் பிறகு, அந்நாட்டில் தூக்கிலிடப்பட்ட முதல் பெண்மணியாக சாரிதேவி இருப்பார் என்று TJC அமைப்பை சேர்ந்த கோகிலா அண்ணாமலை கூறினார்.

    கொலை மற்றும் சில வகையான கடத்தல் உள்ளிட்ட சில குற்றங்களுக்கு சிங்கப்பூர் மரண தண்டனை விதிக்கிறது.

    உலகின் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் சிங்கப்பூரில் உள்ளது. 500 கிராமுக்கு மேல் கஞ்சா மற்றும் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தினால் அது கடுங்குற்றமாக கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

    கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வழிமுறையை, 2-வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 13 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

    மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், நாளை நடைபெறவிருக்கும் மரணதண்டனையை நிறுத்துமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தை கோரியுள்ளது.

    "உலகெங்கிலும் உள்ள நாடுகள் மரண தண்டனையை நீக்கி, போதை பொருள் கடத்தல் குற்றங்களில் கொள்கை சீர்திருத்தங்களை கொண்டு வந்திருந்தாலும், சிங்கப்பூர் எதையும் செய்யவில்லை," என்று அம்னெஸ்டி அமைப்பின் மரணதண்டனைக்கான வல்லுனர் சியாரா சாங்கியோர்ஜியோ தெரிவித்தார்.

    மரண தண்டனை என்பது குற்றத்தைத் தடுக்கும் பயனுள்ள வழிமுறை என்று வலியுறுத்தும் சிங்கப்பூர் இவ்விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மறுக்கிறது.

    • தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது.
    • மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில் கொலை, பயங்கரவாத செயல் உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த மரண தண்டனை சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, கட்டாய மரண தண்டனையை ஒழிப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதா உருவாக்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு இந்த புதிய மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது.

    இதற்கு முன்பு கொலை, போதைப்பொருள் கடத்தல், தேசத்துரோகம், கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தின்படி, கடத்தல், பயங்கரவாதம் மற்றும் சில ஆயுத வழக்குகளில், மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யலாம். 

    இந்த சட்டம் தொடர்பாக சட்டத்துறை இணை மந்திரி ராம்கர்பால் சிங் கூறுகையில், 'இந்த சீர்திருத்தங்கள் மலேசியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மரண தண்டனை நடைமுறையில் இருக்கும். அதேசமயம், சில குற்றங்களுக்கு தண்டனையை மறுஆய்வு செய்து 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வாய்ப்பு நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், குற்றவாளிகள் தங்கள் தண்டனையை மறுஆய்வு செய்யும்படி 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்' என்றார்.

    மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு முதல் தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய கடந்த ஆண்டு சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. ஆனால் பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்த கொடூர சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி நடந்தது.
    • சிறுவனை கொன்றதாக தான் தேவி மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த ஜமுக்கா கிராமத்தை சேர்ந்தவர் தான் தேவி (வயது 33). தான் தேவிக்கு குழந்தை இல்லை. எனவே அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மந்திரவாதியை சந்தித்து தனது குறையை கூறினார்.

    அந்த மந்திரவாதி, தான் தேவிக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் சிறுவன் ஒருவனின் ரத்தத்தை முகத்தில் பூசி கொள்வதோடு, அதனை குடிக்கவும் வேண்டும் எனக் கூறினார்.

    மந்திரவாதி கூறியதை அப்படியே நம்பிய தான்தேவி, தான் குழந்தை பெற சிறுவன் ஒருவனை கொன்று ரத்தம் குடிக்க முடிவு செய்தார்.

    இதையடுத்து தனது பக்கத்து வீட்டில் வசித்தவரின் 10 வயது சிறுவனை கடத்தி அவனை கொன்றார். பின்னர் அந்த சிறுவனின் ரத்தத்தை உடலிலும், முகத்திலும் பூசியதோடு, அதனை குடிக்கவும் செய்தார்.

    இந்த கொடூர சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி நடந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பரேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் சிறுவனை கொன்றதாக தான் தேவி மற்றும் அவரது உறவினர்கள் 2  பேரை கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு பரேலி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை கொன்று ரத்தம் குடித்த பெண் தான் தேவிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    இத்தீர்ப்பு பற்றி சிறுவனின் பெற்றோர் கூறும்போது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி இருக்க வேண்டும். கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு போதுமானதாக இல்லை, என்றனர்.

    சவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ரியாத்:

    சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அங்கு பெரும் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த மாதம் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    2 பேர் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்தநிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஷேக் சல்மான் அல்-அவ்தாக், அவாத் அல்-குயார்னி மற்றும் அலி அல்-ஒமாரி ஆகிய 3 பேரும் பிரபல அறிஞர்கள் ஆவர். இவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு ஐ.நா சபையும் மனித உரிமைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருந்தும் அங்கு இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
    தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி, இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. #Thailandlovers

    பாங்காக்:

    அமெரிக்காவை சேர்ந்தவர் சாட் எல்வர்டோஸ்கி. இவர் பிட்காயின் முதலீட்டாளர். இவரது தாய்லாந்து காதலி சுப்ரானே தெப்பெட். இவரும் பிட்காயின் முதலீட்டாளர் ஆவார்.

    கோடீஸ்வரர்களான இருவரும் தாய்லாந்தில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர். கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் இதன் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து புகெட் போலீசில் புகார் செய்தனர். அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த வீடு கடற்கரையில் இருந்து 13 நாட்டிகல் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. தாய்லாந்து கடல் எல்லைக்கு அப்பால் இது உள்ளது. எனவே தாய்லாந்தின் இறையான்மையை மீறவில்லை. என சாட் எல்வார்டோஸ் கி தெரிவித்தார்.

    எனது காதலி சுப்ரானே எங்காவது சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பினார். அவருக்காக வித்தியாசமாக கடலுக்குள் வீடு கட்டினேன் என்றும் அவர் கூறினார். தாய்லாந்தின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

    துபாயில் கொலை வழக்கில் கைதாகி மரண தண்டனை விதிக்கப்பட்ட கணவரை தஞ்சாவூரை சேர்ந்த பெண் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் மாலதி. ஏழை குடும்பத்தை சேர்ந்த இவரது கணவர் அர்ஜுண் ஆத்திமுத்து துபாயில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் துபாயில் வசித்துவந்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த அப்துல்வாஜித் என்பவரை கொலை செய்த வழக்கில் அர்ஜுண் ஆத்திமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்றது. முடிவில் அர்ஜுண் ஆத்திமுத்துவுக்கு கோர்ட்டு மரணதண்டனை விதித்தது. இது அவரது மனைவிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    துபாய் நாட்டு சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் கொலையாளியை தாங்கள் மன்னித்துவிட்டதாக கூறினால் அவரால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும்.

    இதுபற்றி தெரிய வந்ததும் மாலதி மலப்புரத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு தனது கணவரை மரணதண்டனையில் இருந்து காப்பாற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர்களும் மாலதியின் கணவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்கள்.

    அதன்படி துபாயில் கொலையுண்ட அப்துல் வாஜித் குடும்பத்தினருடன் பேச்சு நடத்தினார்கள். அப்போது அவரது குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.30 லட்சம் கொடுத்தால் மன்னிப்பு வழங்குவதாக சமரசம் ஏற்பட்டது.

    ஆனால் ரூ.30 லட்சத்தை கொடுக்கும் அளவுக்கு மாலதிக்கு வசதி இல்லாததால் அவருக்கு உதவிகள் குவிந்தது. மலப்புரம் பகுதி மக்களும், வெளிநாடு வாழ் இந்திய மக்களும் இந்த பணத்தை வழங்கினார்கள். அந்த பணம் துபாயில் கொலையுண்டவர் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தனர். அந்த கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது அர்ஜுண் ஆத்திமுத்துவின் மரணதண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அவர் போன் மூலம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசவும் அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலதி தனது கணவரை மரணத்தில் இருந்து காப்பாற்ற உதவிய கேரள மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து உள்ளார். தனது உருக்கமான பேச்சை வீடியோவாக பதிவு செய்து கேரள முஸ்லிம் அமைப்பினருக்கு அவர் அனுப்பி உள்ளார்.
    பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் கிறிஸ்தவ குடியுருப்பு பகுதிக்குள் கொலைவெறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் மரண தண்டனையை ராணுவ தளபதி உறுதிப்படுத்தியுள்ளார். #PakistanArmy #hardcoreterrorists #deathsentence
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் கடந்த 2016-ம் ஆண்டில் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகள், பள்ளிகளை சூறையாடியதுடன் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 34 பேரை ஈவிரக்கமின்றி கொன்றனர்.

    இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜமாத் உர் அஹ்ரார் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இப்ரார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட சில வழக்குகளில் தொடர்புடைய 15 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அந்நாட்டின் சட்டப்படி மேற்கண்ட பயங்கரவாதிகள் 15 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தி ராணுவ தளபதி காமர் ஜாவெத் பாஜ்வா இன்று உத்தரவிட்டார். #PakistanArmy #hardcoreterrorists #deathsentence #ChristianColony #suicideattacks 
    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. #antiSikhriotscase
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.



    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்புக்கு டெல்லியில் உள்ள பல்வேறு சீக்கிய அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முன்னர் முடித்து வைக்கப்பட்டன.

    இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

    இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை இன்று ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #antiSikhriotscase #Delhicourt #firstdeathsentence #deathsentence
    ×