search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diabetes"

    • இது இயற்கையாக கிடைக்கக்கூடிய பானம்.
    • ஒரு டம்ளர் இளநீரில் வெறும் 10 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது.

    நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா? இதனால் பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்படும். இதோ மருத்துவர் என்ன சொல்கிறார்கள் என இங்கு அறிந்துக் கொள்வோம்.

    இளநீரில் சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் குறைவான அளவு கொழுப்புகள், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

    இளநீரை எல்லோரும் 'நேட்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிவரேஜ்' என்று சொல்கிறார்கள். ஏனென்றால் இதில் அதிகமான அளவு சோடியம், பொட்டாசியம், சிங்க், மெக்னீசியம், இரும்புச்சத்து இருக்கிறது. இது இயற்கையாக கிடைக்கக்கூடிய பானம். ஒரு டம்ளர் இளநீர் நமக்கு 45 கலோரிகள் கொடுக்கிறது. பாட்டிலில் அல்லது டின்களில் வரும் குளிர்பானங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு டம்ளர் இளநீரில் வெறும் 10 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது. ஆனால் பாட்டில் குளிர்பானங்களில் ஒரு டம்ளரில் 30 கிராம் சர்க்கரை இருக்கிறது.

    இதில் நார்ச்சத்து இல்லாதது ஒரு சிறிய குறையாக கருதப்படுகிறது. இளநீரில் உள்ள எல்-ஆர்ஜினின், வைட்டமின்-சி, இன்சுலின் செயல் திறனை அதிகப்படுத்துகிறது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாக சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இளநீரில் உள்ள லாரிக் ஆசிட் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது. இளநீரை காலையில் குடிப்பது உங்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும்.

    இளநீரில் நிறைய நன்மைகள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை, அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் இளநீர் பருகலாம். அதற்கு மேல் குடித்தால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்களுக்கு இளநீர் குடிக்கலாமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பகால நீரிழிவு நோயாளிகளும் இதை உட்கொள்ளலாம். ஆனாலும் மகப்பேறு மருத்துவரின் பரிந்துரையின் படி, சரியான அளவு இளநீரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நமது உடல் கடிகாரம் தினசரி தாளத்திற்கு ஏற்ப செயல்படுகிறது.
    • இரவில் செயற்கை வெளிப்புற ஒளி விளக்குகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

    நீரிழிவு நோயால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதன் காரணமாக சிறுநீரகம், இதயம் போன்ற அத்தியாவசிய உறுப்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக பல பிரச்சினைகள் தொடங்குகின்றன.

    சீனாவின் ஷாங்காயில் உள்ள ஜியாடாங் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வில் இரவில் செயற்கை வெளிப்புற ஒளிக்கும், நீரிழிவு நோய் அபாயத்திற்கும் இடையேயான உறவை அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர். செயற்கையாக வானத்தை பிரகாசமாக்கும் லைட்டுகள் சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டு உள்ளதாம்..

    விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படும் நபரின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுகின்றன. இதனால் தூக்கம் வரவும், காலையில் விழித்துக்கொள்ள உதவும் மெலடோனின் மற்றும் கார்டிகோஸ்டிரோன் ஆற்றல் வித்தியாசமாக செயல்படுகின்றன. இதன் விளைவாக, உடலில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது. இரவில் நியான் அல்லது எல்.இ.டி. ஒளியால், குளுக்கோசின் வளர்சிதை மாற்றம் குறைவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, இரவில் செயற்கை வெளிப்புற ஒளி விளக்குகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக அலுவலகம், மால் போன்ற இடங்களில் சற்று கூடுதலாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் வசிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகமாக இருக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    அதாவது உடலானது, எல்.இ.டி. விளக்குகளால் இரவு, பகலுக்கு வித்தியாசம் தெரியாமல் இருப்பதால் பகலில் சுரக்கும் கார்டிசோல் இரவிலும் சுரக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது.

    உண்மையில், நமது உடல் கடிகாரம் தினசரி தாளத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. அதன்படி, இருட்டாக இருக்கும்போது, மெலடோனின் உற்பத்தி அதிகரிக்கிறது, இதன் காரணமாக நமக்கு தூக்கம் வரும். காலையில், ஒளியுடன், சுரப்பியின் செயல்பாடு நம்மை எழுப்புகிறது. ஆனால் இரவில் நாம் பிரகாசமான வெளிச்சத்தில் இருக்கும்போது, மெலடோனின் ஹார்மோன் அடக்கப்பட்டு, அதிக சர்க்கரை உருவாவதை ஊக்குவிப்பதாகவும் அந்த ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வு.
    • உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    சாதாரண நபர்களை காட்டிலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக இருக்குமாம். பெருமாலான நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதி வேக முடி உதிர்வு. நீரிழிவு நோயினால் ஏற்படும் முடி உதிர்தலுக்கு சீரான இரத்த ஓட்டம் இல்லாததே என்று சொல்லலாம்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்க காரணம், நீரிழிவு நோயினால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஊட்டச்சத்துக்கள் மயிர்கால்களை அடைய முடிவதில்லை. இதனால் உச்சந்தலை நுண்ணறைகள் பலவீனமடைந்து முடி உதிர்தல் ஏற்படுகிறது.

    நாள்பட்ட சர்க்கரை நோய் ஆக்ஸீஜன் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்தை குறைக்கலாம். இதன் விளைவாக வாஸ்குலர் குறைபாடு இது முடி உதிர்தல், கூந்தல் உடைவு, முடி உதிர்தல் உண்டாக்கும்.

    ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, பாலிகுலைட்டிஸ் எனப்படும் பாக்டீரியா தோல்தொற்று ஏற்பட்டு முடி உதிர்வை ஊக்குவிக்கிறது. முடி உதிர்தல் தலையில் மட்டுமின்றி கை, கால்கள் மற்றும் உடம்பின் வேறு பகுதிகளிலும் ஏற்படலாம்.

    நீரிழிவு நோய் உடலில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும், முடியின் வேர்களை சேதப்படுத்தும் மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும்.

    மோசமான இரத்த ஓட்டம் முடி உதிர்தலுக்கு பங்களித்தால், நீரிழிவு நோயை நிர்வகித்தல் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி மீண்டும் வளரவும் உதவும்.

    மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தத்தினாலும் கூடுதலாக தைராய்டு நோய் இருக்கும் நிலையிலும் முடி உதிரும். டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு செல்கள் மயிர்க்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தி அலோபீசியா ஏரியேட்டா (திட்டு திட்டாக முடி விழுதல்) என்ற நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

    நீரிழிவு நோயாளிகள் முடி உதிர்தலுக்கு சிகிச்சை

    உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. உடலில் இரத்த சர்க்கரை அளவு அளவாக இருந்தால் மயிர்க்கால்கள் மற்றும் முடியின் முனைகளில் ஆக்ஸிஜன் விநியோகம் தடையில்லாமல் பெற முடிகிறது.

    உணவு முறையில் சர்க்கரை அளவை குறைத்து மெலிந்த புரதங்களை சேர்க்க வேண்டும். இது முடியின் வலிமையை மேம்படுத்தவும், உச்சந்தலையை வலுவாக வைக்கவும் உதவும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இன்சுலின் தாவரத்தின் 2 இலைகள் தின்றால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும்.
    • ஒரு நாளைக்கு 2 இலைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம்.

    திருப்பதி:

    சர்க்கரை நோய் இன்று வேகமாக பரவி வருகிறது ஒரு காலத்தில் 45 வயதுக்கு மேல் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை பணக்கார நோய் என்று கூறி வந்தார்கள்.

    ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. சிறு குழந்தை முதல் சக்கரை நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். ஆனாலும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியவில்லை என ஒரு சிலர் புலம்புவதையும் காணமுடிகிறது.

    இந்த நிலையில் சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை தேவை இல்லை. இன்சுலின் தாவரத்தின் 2 இலைகள் தின்றால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும் என ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மென்பொருள் நிபுணர் மொட்டமறி சந்தீப் கூறியுள்ளார்.

    இவர் அவரது வீட்டு மாடியில் சிறிய தோட்டம் அமைத்து அதில் இன்சுலின் செடிகளை வளர்த்து வருகிறார்.

    இதன் மூலம் தனது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இன்சுலின் செடியின் இலைகளை உட்கொண்டதன் மூலம், கடந்த 7 ஆண்டுகளாக நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கிறேன்.

    "நான் மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டு கடந்த 7 வருடங்களாக இன்சுலின் செடியின் இலைகளை உட்கொண்டு வருகிறேன். மேலும், இந்த 7 ஆண்டுகளில் நான் எந்த டாக்டரையும் பார்க்கவில்லை.

    இன்சுலின் தாவரங்களை நான் வழங்கி வருகிறேன். "இலைகளை தவறாமல் எடுத்துக்கொண்ட பிறகு, அவர்களின் ரத்த சர்க்கரை அளவு குறைவதைக் கண்டேன்.

    ஒரு நாளைக்கு 2 இலைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம். மேலும் காலையில் ஒரு இலையையும் மாலையில் மற்றொரு இலையையும் சாப்பிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீரிழிவு நோய் இருப்பவர்கள் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் அதிகமாக மெலிவது கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படலாம்

    இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்ட பலருக்கும், 40 வயதுக்கு கீழே உள்ளவர்களில் சிலருக்கும் பொதுவான நோயாக நீரிழிவு பிரச்சினை இருக்கிறது.

    ரத்த சர்க்கரை குறித்து அவ்வபோது மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதும், அதை கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் அவசியமானது. அதே சமயம், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்கடங்காத வகையில் செல்லும்போது உடல் உள் உறுப்புகளை அது கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கத் தொடங்கும். இந்த பாதிப்புகளை நீங்கள் மீண்டும் சரி செய்ய இயலாது.

    நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மாவுச்சத்தில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. மனிதனின் உடலில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுக்கோசை செல்களுக்கு உள்ளே எடுத்துச் சென்று நமக்கு சக்தியைக் கொடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் குறைவாக சுரப்பதால் இந்த குளுக்கோசால் செல்களுக்கு செல்ல முடிவதில்லை அதனால் தசை மற்றும் கொழுப்பில் உள்ள குளுக்கோஸ் பயன்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் மெலிகிறது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் அதிகமாக மெலிவது கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படலாம்:

    1) ரத்தத்தில் அதிகமான சர்க்கரை அளவு.

    2) நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் மெட்பார்மின் போன்ற மாத்திரைகளால் உடல் மெலியலாம்,

    3) ஹைபர் தைராய்டிசம் அல்லது புற்றுநோய் அல்லது செலியாக் நோய் போன்று வேறு சில நோய்களின் பாதிப்பாக இருக்கலாம்.

    ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயபடிக் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
    • கர்ப்ப காலத்தின் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு பரிசோதனை அவசியம்.

    தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.

    *Gestational Diabetes Mellitus (GDM)

    குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.

    *Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes

    ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.

    கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்றால் 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.

    இதற்கு முக்கியமான காரணிகள்...

    * குடும்பப் பின்னணியில் நீரிழிவு

    * 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்

    * திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை

    * சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்

    * பருமன், அதிக எடை

    * முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்

    * நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை

    * அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு

    * பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்

    * முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.

    இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும்.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்...

    கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம்.பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.

    இதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.

    பிரசவத்தின் போது ஏற்படும் விளைவுகள்

    *கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.

    *நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.

    *குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு

    *சிசேரியன் செய்ய வேண்டிய நிலை

    *எடை கூடுதல்

    *உயர் ரத்த அழுத்தம்

    *கரு கலைதல்

    *மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்

    *டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்

    *வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்

    *ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்

    *நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்

    *கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்

    *கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

    கருவில் ஏற்படும் பிரச்னைகள்

    *பிறப்புநிலைக் கோளாறுகள்

    *பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு

    *மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

    *மஞ்சள் காமாலை

    *ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)

    *பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்

    *குறைப் பிரசவம்

    *Hyaline membrane எனும் நுரையீரல் நோய்

    *மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).

    கட்டுப்படுத்துவது எப்படி?

    மேலே கண்ட பிரச்னைகள் மிரட்டுவதாகத் தோன்றினாலும், குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், கர்ப்ப கால நீரிழிவையும் அதன் கோளாறு களையும் நிச்சயம் சமாளிக்க முடியும்... வெற்றிகரமாக ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும்.

    ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகக் குறைந்தாலும் பிரச்னைதான். ஹைப்போகிளைசமிக் என்கிற தாழ்நிலை சர்க்கரையானது, அதீத சர்க்கரை அளவைப் போலவே தாயையும் சேயையும் பாதிக்கும்.

    தயக்கம் வேண்டாம்!

    குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.

    * மகப்பேறு மருத்துவரே முதல் கட்ட ஆலோசனைகளை அளித்தாலும், பின்னர் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் இணைந்து உதவுவார்கள்.

    * குடும்ப நீரிழிவு பின்னணி உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன்பே இது பற்றி தெளிவாக

    அறிவுறுத்தப்படும்.

    * கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும்

    விளக்கப்படும்.

    *வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்தப்படும்.

    * அல்ட்ரா சவுண்ட் மூலம் கரு வளர்ச்சி சோதிக்கப்படும்.

    * பிரசவ குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்படும்.

    * எதிர்காலக் குழப்பங்கள் குறித்தும் அவற்றைப் போக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.

    • நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது.
    • நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவுகளையும் சாப்பிட முடியாது.

    நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது. சிலவகை நீரிழிவு நோயானது குழந்தை பருவத்தில் இருந்தே காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் உண்ணுவதென்பது இயலாத காரியம். நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

    பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, பி2, ஈ, கே, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை இருக்கின்றன. மேலும், பிளாவினாய்ட்ஸ், பாலிபினால் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கின்றது.

    பாகற்காயில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரிகள் போன்றவை குறைந்த அளவே இருப்பதாலும், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதாலும், இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும் வேதிப்பொருட்கள் இருப்பதாலும், சர்க்கரை நோயாளிகள் உணவில் இதை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ரத்த சர்க்கரையை குறைக்கும் சரண்டி, விசைன், இன்சுலின் போல செயல்படும் பாலிபெப்டைட் - பி போன்றவை இருப்பதால் இதை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பொதுவாக பாகற்காயின் விதைகளால் கசப்பு தன்மை அதிகமாக இருந்தாலும், நாம் விதையையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. பாகற்காயை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் பாகற்காயை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அது கருப்பை சுருக்குதலை ஏற்படுத்தி கருக்கலைப்பு கூட நேரலாம். பாகற்காயில் உள்ள கசப்பை போக்குவதற்கு, அதை தயிரில் ஊறவைத்தோ அல்லது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம்.

    மேலும் பாகற்காயில் உள்ள லெக்டின், திசுக்களில் உள்ள செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல உதவி புரிகிறது. மேலும் இது பசியை குறைத்து, உணவை குறைவாக உட்கொள்ள செய்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைகிறது.

    நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் கல்லீரலை பாதிக்கலாம். இது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும்
    • நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    உடலில் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    நீரிழிவு நோயைத் தவிர்க்க உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், ஆரோக்கியமான உணவு தேவை. நார்ச்சத்து நிறைந்த உணவை நீங்கள் சேர்க்க வேண்டும். வெங்காயத்தையும் சேர்க்கலாம்.

    இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும், இது கிட்டத்தட்ட எல்லா உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

    ஒரு வெங்காயத்தில் கிட்டத்தட்ட 44 கலோரிகள் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, போலெட், பொட்டாசியம், சல்பர் போன்றவை அதிகமாக இருக்கிறது. வெங்காயத்தில் கிட்டத்தட்ட 17 வகையான பிளாவினாய்ட்ஸ், (ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ்) இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு 11 ஆகும். இது மிகக் குறைந்த அளவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    வெங்காயத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், குறிப்பாக ஆன்தோசயனின் மற்றும் கொர்சிட்டின், செல்களின் அழற்சியை குறைத்து நீரிழிவு நோய், இதய நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது. மேலும் கொர்சிட்டின், கணையம், கொழுப்பு, கல்லீரல் மற்றும் தசைகள் உள்ள செல்களுடன் ஒருங்கிணைந்து சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கிறது.

    கோடையில் வெங்காயம் சாப்பிடுவதோ அல்லது அதன் சாற்றைக் குடிப்பதோ வெப்பத்தை ஏற்படுத்தாது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை நிலையானதாக வைத்திருக்கும்.

    வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள அதிகமான வைட்டமின் சி நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக எஸ்சர்சியா, ஸ்டபைலோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களின் தொற்றுக்கள் வராமல் ஓரளவு தடுக்கிறது. வெங்காயத்தில் உள்ள 'ஆனயானின் ஏ' என்ற வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    வெங்காயத்தில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதாலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் பிளவினாய்ட்ஸ் அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு மிகவும் குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் அதை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    - நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் 13.6 கோடி பேர் இருக்கிறார்கள்.
    • தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது.

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிதியுதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வுக்காக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 20 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 13 ஆயிரத்து 43 பேரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 79 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமும், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் சர்வதேச ஆய்வு இதழான லான்செட் இதழில் வெளியிடப்பட்டது.

    இந்த ஆய்வு பற்றிய விவரங்கள் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் 13.6 கோடி பேர் இருக்கிறார்கள். நீரிழிவு நோய் பாதிப்பு 11.4 சதவீதம் பேருக்கும், ஆரம்ப நிலை பாதிப்பு 15.3 சதவீதம் பேருக்கும் உள்ளது. தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    குறிப்பாக கேரளா, புதுச்சேரி, கோவா, சிக்கிம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் குறைவான பாதிப்பே உள்ளது. நகர்ப்புறங்களில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

    நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் நகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்தவர்களிடையே அதிக வித்தியாசம் இல்லை.

    மேலும் உயர் ரத்த அழுத்தத்தால் 31.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 35.5 சதவீதம் ஆகும். உயர் ரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டோரில் 5 சதவீதம் பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள்.

    மேலும் பொதுவான உடல் பருமனால் 25.4 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் வயிற்று பருமனால் 35.1 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உடல் பருமனால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் பாதிப்பு புதுச்சேரியில்தான் அதிகமாக உள்ளது.

    21.3 கோடி பேர் அதிக கொழுப்பு சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18.5 கோடி பேர் அதிக கெட்ட கொழுப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கொழுப்பு சத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதுபோன்ற தொற்றா நோய்களின் பாதிப்பு கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிகமாக உள்ளன.

    • நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • 100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது.

    நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, பழங்கள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். பழங்கள் நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காத பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

    நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. வெயில் காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு நுங்கு ஒரு சிறந்த பழமாக திகழ்கிறது. நுங்கில் அதிக அளவு வைட்டமின் சி, ஈ, எ, பி1, பி2, பி7 இருக்கிறது. நுங்கில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு 35 என்ற மிகக் குறைந்த அளவு இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் நுங்கை பயமின்றி உண்ணலாம்.

    100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது. இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம், நீர்ச்சத்து சமநிலைக்கு பெரிதும் உதவி புரிகிறது. நுங்கில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை உட்கொள்ளும்போது வயிறு கனத்துப் போவதால் பசி குறைந்து, மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடாமல் தடுக்கப்படுகிறது. முற்றிய நுங்கை சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படலாம். அதனால் முற்றிய நுங்கை சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கலாம். இதனை நீரிழிவு நோயாளிகளும் அச்சம் இன்றி அளவாக எடுத்து கொள்ளலாம்.

    மேலும் நுங்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், வேர்க்குரு போன்ற பிரச்சினைகளும் குறைய வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    • சந்தையில் நீரிழிவு நோயாளிக்காகச் சிறப்புக் காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன.
    • நீரிழிவு நோயாளிகள் சிறப்பு காலணிகளை வாங்குவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    நீரிழிவு நோய் கால்களில் ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுவது உண்டு. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் உணர்வு இழப்புகள், குறிப்பாகப் பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களைக்கூட உணர முடியாமல் போகின்றன. இதன் காரணமாகப் பாதங்களில் புண்களும், தொற்றுகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியாமல் போகின்றன.

    இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும் போது பாதங்களுக்கு ஏற்றதாகவும், பாதங்கள் காயங்கள் ஏற்படுவதில் இருந்தும் காக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறப்பு காலணிகளைத் தேர்வு செய்வதற்கு முன்பு எந்த வகையான சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவருடன் அல்லது பாத நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும். தற்போது சந்தையில் நீரிழிவு நோயாளிக்காகச் சிறப்புக் காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன.

    சிறப்பு காலணிகளை வாங்குவதற்கும் இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகையான காலணிகளைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பாதங்களைப் பாதுகாக்கும் வகையிலும், நமது உயரத்துக்கு ஏற்பவும் உள்ளன.

    நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்கப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதங்களில் உணர்வுகள் குறைவது, பாத வடிவத்தில் மாற்றம், கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது ஆறாத புண்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    நீரழிவு தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ஒரு நோயாக உள்ளது. எனவே விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அதன் வீரியத்தைக் குறைத்து நம் கால்களில் ஊனம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். கால்களில் எந்தப் பிரச்சினை இல்லாவிட்டாலும்கூட மருத்துவரையோ அல்லது பாத நோய்களைக் குணப்படுத்தும் நிபுணரையோ சந்தித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

    • திடீரென்று பார்வை இழந்தால் உடனே உங்கள் டாக்டருடன் தொடர்பு கொள்ளவும்.
    • புகை பிடிக்கக்கூடாது, மதுபானம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

    நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் பராமரிக்க வேண்டியவை.

    பாத பராமரிப்பு

    * தினமும் உங்கள் பாதங்களை பரிசோதியுங்கள்.

    * பாதங்களை தினமும் வெதுவெதுப்பான நீரில் கழுவி மாய்ஸ்ர் ரைசிங் லோஷனைத்தடவுங்கள்.

    * பாதங்களில் உணர்ச்சி குறைவாக இருந்தால் அதிகப்ப டியான சூட்டையும், அதிகப்படியான குளிர்ச்சியையும் தவிர்க்கவும். கால்களில் கச்சிதமாக பொருந்தும் ஷூக்கள், சாண்டல்கள் அணியவும். கட்டி, ஆணி போன்றவர்களுக்கு நிபுணரிடம் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

    * கால் நகங்களை சரியாக வெட்டிக்கொள்ளுங்கள்.

    * காலணி இல்லாமல் நடக்காதீர்கள். நீங்களே அறியாமல் காயம்பட்டு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

    கவனிக்க வேண்டிய ஆபத்தான அறிகுறிகள்

    * உங்கள் பாதங்கள் அல்லது முன்னங்கால்களில் சிவப்பு, நீலம் அல்லது பழுப்பு புள்ளிகள் பாதத்தில் திடீர் வலி அல்லது கடுமையான வலி.

    * பாதத்தில் காயம் இல்லாத போதும் ஒரு விதமான நாற்றம்.

    * பாதம் அல்லது காலில் வீக்கம்.

    * புண் வெடிப்பு கொப்புளம்.

    கண் பராமரிப்பு

    * திடீரென்று பார்வை இழந்தால் உடனே உங்கள் டாக்டருடன் தொடர்பு கொள்ளவும்.

    * கண் நிபுணரை கலந்தா லோசிக்கவும். செயற்கை கண் மருத்துவரை அல்ல.

    * உங்கள் கண் டாக்டரிடம் உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதையும் கூறவும். கண் சொட்டு மருந்தினால் ஊக்குவிடப்பட்டு கண்மணிப்பாப்பா மீது சோதனை மேற்கொள்ளபட வேண்டும்.

    * கண் பரிசோதிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்கு வாகனம் ஓட்ட வேண்டாம்.

    * முறையாக ஆண்டுதோறும் கண்களைச் சோதித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் கருவுற்றிருந் தால் மற்றும் நீரிழிவு நோயும் இருந்தால் முதல் மூன்று மாத காலத்தில் கண் டாக்டரை கலந்தாலோசிக்கவும்.

    * புகை பிடிக்கக்கூடாது, மதுபானம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

    கவனிக்கவேண்டிய ஆபத்தான அறிகுறிகள்

    * மங்களான பார்வை.

    * கண்ணில் நிழல் போன்ற திரை.

    * இரட்டைப் பார்வை.

    * சிவந்த எரிச்சலுடன் கூடிய கண்கள்.

    * மேகமூட்டப் பார்வை கண்களில் வலியுடன் கூடிய அழுத்தம்.

    * பார்வை களத்தில் மிதக்கும் திட்டுகள்.

    * கண் புரை.

    * விழி அழுத்தமிகைப்பு (க்ளைகோமா)

    * விழித்திரை சிதைவு.

    டாக்டர் பி.செல்வம் நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்

    ×