search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கர்ப்ப கால நீரிழிவு பிரசவத்தின் போது ஏற்படுத்தும் விளைவுகள்...
    X

    கர்ப்ப கால நீரிழிவு பிரசவத்தின் போது ஏற்படுத்தும் விளைவுகள்...

    • குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
    • கர்ப்ப காலத்தின் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு பரிசோதனை அவசியம்.

    தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.

    *Gestational Diabetes Mellitus (GDM)

    குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.

    *Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes

    ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.

    கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்றால் 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.

    இதற்கு முக்கியமான காரணிகள்...

    * குடும்பப் பின்னணியில் நீரிழிவு

    * 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்

    * திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை

    * சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்

    * பருமன், அதிக எடை

    * முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்

    * நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை

    * அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு

    * பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்

    * முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.

    இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும்.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்...

    கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம்.பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.

    இதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.

    பிரசவத்தின் போது ஏற்படும் விளைவுகள்

    *கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.

    *நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.

    *குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு

    *சிசேரியன் செய்ய வேண்டிய நிலை

    *எடை கூடுதல்

    *உயர் ரத்த அழுத்தம்

    *கரு கலைதல்

    *மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்

    *டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்

    *வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்

    *ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்

    *நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்

    *கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்

    *கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

    கருவில் ஏற்படும் பிரச்னைகள்

    *பிறப்புநிலைக் கோளாறுகள்

    *பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு

    *மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

    *மஞ்சள் காமாலை

    *ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)

    *பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்

    *குறைப் பிரசவம்

    *Hyaline membrane எனும் நுரையீரல் நோய்

    *மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).

    கட்டுப்படுத்துவது எப்படி?

    மேலே கண்ட பிரச்னைகள் மிரட்டுவதாகத் தோன்றினாலும், குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், கர்ப்ப கால நீரிழிவையும் அதன் கோளாறு களையும் நிச்சயம் சமாளிக்க முடியும்... வெற்றிகரமாக ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும்.

    ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகக் குறைந்தாலும் பிரச்னைதான். ஹைப்போகிளைசமிக் என்கிற தாழ்நிலை சர்க்கரையானது, அதீத சர்க்கரை அளவைப் போலவே தாயையும் சேயையும் பாதிக்கும்.

    தயக்கம் வேண்டாம்!

    குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.

    * மகப்பேறு மருத்துவரே முதல் கட்ட ஆலோசனைகளை அளித்தாலும், பின்னர் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் இணைந்து உதவுவார்கள்.

    * குடும்ப நீரிழிவு பின்னணி உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன்பே இது பற்றி தெளிவாக

    அறிவுறுத்தப்படும்.

    * கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும்

    விளக்கப்படும்.

    *வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்தப்படும்.

    * அல்ட்ரா சவுண்ட் மூலம் கரு வளர்ச்சி சோதிக்கப்படும்.

    * பிரசவ குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்படும்.

    * எதிர்காலக் குழப்பங்கள் குறித்தும் அவற்றைப் போக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.

    Next Story
    ×