search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bribe"

    • லெனின் தர்மராஜ், சண்முகவேல் ஆகியோர் ராட்டினம் இயக்குவதற்கு அரசு துறைகளில் அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது
    • சுமார் ரூ.40 லட்சம் தங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளனர்.

    தென்காசி:

    சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை சேர்ந்த லெனின் தர்மராஜ் மற்றும் ஆய்க்குடியை சேர்ந்த சண்முகவேல் ஆகியோர் கோவில் விழா காலங்களில் பொழுது போக்கிற்காக ராட்டினம் அமைத்து அதன் மூலம் தொழில் செய்து வந்தனர்.

    இந்நிலையில் வாசுதேவ நல்லூரில் உள்ள சிந்தாமணிநாதர் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்கு ராட்டினம் இயக்குவதற்கு அரசு துறைகளில் அனுமதி பெற்று, முன்கட்டணம் உள்ளிட்டவை செலுத்தி அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் பொதுப்பணி துறையை சேர்ந்த சில அதிகாரிகள் தங்களுக்கு பணம் மட்டுமே ராட்டினத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்ததாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    இதுதொடர்பாக ராட்டின உரிமையாளர் சண்முகவேல் கலெக்டர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்துள்ளார். அதில், ராட்டினம் அமைக்க அனுமதி வழங்குகிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் அலைக்கழித்ததாகவும், இதனால் சுமார் ரூ.40 லட்சம் தங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • ஒரு கட்டத்தில் டிரைவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் நீ கொடுத்த 100 ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று கூறி டிரைவரிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
    • சஸ்பெண்டான ஜேம்சுக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும்.

    செங்கோட்டை:

    தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் காய்கறி, வைக்கோல், கனிமவளங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்கின்றன. இதனை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தென்காசி மாவட்டம் ஆய்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ்(வயது 55) என்பவர் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக வைக்கோல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அந்த லாரி டிரைவர் ரூ.100 லஞ்சமாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆனாலும் ஜேம்ஸ் கூடுதலாக லஞ்சம் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் டிரைவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் நீ கொடுத்த 100 ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று கூறி டிரைவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் போலீஸ்காரர் ஒருவருக்கு போன் செய்து, வைக்கோல் லாரியின் பதிவெண்ணை சொல்லி, அந்த லாரிக்கு அதிக பாரம் ஏற்றியதாக வழக்கு போட்டு அபராதம் விதிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவங்களை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனை அறிந்த தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்சை நேற்று இரவு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தார். இந்நிலையில் இன்று ஜேம்சை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கூறுகையில், வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் அவர் லஞ்சம் கேட்பது தொடர்பாக வீடியோ வந்துள்ளது. அதில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சஸ்பெண்டு செய்துள்ளேன். இனி அவரிடம் விசாரணை நடத்தப்படும். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

    சஸ்பெண்டான ஜேம்சுக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும். இவர் தற்போது ஆய்குடி போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    • கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்பாப்பா பாண்டி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் பொன்பாப்பா பாண்டி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்ட திட்டமிட்டார். இதற்காக கட்டிட வரைப்பட அனுமதி பெற ஊராட்சிமன்ற அலுவலகத்தை நாடினார்.

    அப்போது கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்பாப்பா பாண்டி இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய பணத்துடன் இன்று காலை கீழராஜகுலராமன் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பொன்பாப்பா பாண்டி சென்றார். அங்கு ஊராட்சி மன்ற தலைவர் காளி முத்துவை சந்தித்து லஞ்ச பணத்தை கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ராஜாராம் தடையில்லா சான்று கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
    • கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகில் உள்ள விமான் நகரை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 64). இவர் தன்னுடைய மனைவி சந்திராவதிக்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்காக, தடையில்லா சான்று கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

    அப்போது தாசில்தார் வசந்த மல்லிகா மற்றும் அவருடைய கார் டிரைவர் கிருஷ்ணன் ஆகியோர் ராஜாராமிடம் தடையில்லா சான்று வழங்குவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளனர். இது தொடர்பாக ராஜாராம் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால்துரையிடம் புகார் செய்தார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயன மை தடவிய ரூ.30 ஆயிரத்தை ராஜாராம் நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் வசந்த மல்லிகாவிடம் வழங்கினார். அப்போது தாலுகா அலுவலக வளாகத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால்துரை, இன்ஸ்பெக்டர்கள் சுதா, அனிதா மற்றும் போலீசார் விரைந்து சென்று, தாசில்தார் வசந்த மல்லிகாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் கிருஷ்ணனையும் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் தாசில்தார் வசந்த மல்லிகா நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையிலும், டிரைவர் கிருஷ்ணன் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • பணியை முறையாக செய்யாததாலும், லஞ்சம் கேட்ட புகாரிலும் சிக்கிய ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புகார் எழுந்தது.
    • நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையராக பணியாற்றிவர் குமரிமன்னன். இவர் சரிவர தனது பணிகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி வாடகை பாக்கி கேட்டு ஜே.சி.பி. டிரைவர் விஜயராகவன் என்பவர் நகராட்சி அலுவலகத்தில் குடும்பத்துடன் வந்து போராட்டம் நடத்தினார். அப்போது அவர் வாடகை தொகை தர ஆணையர் குமரிமன்னன் லஞ்சம் கேட்பதாக கூறினார். இதையடுத்து அவரை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென தன் உடல் மீது டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தனது பணியை முறையாக செய்யாததாலும், லஞ்சம் கேட்ட புகாரிலும் சிக்கிய ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புகார் எழுந்தது.

    அதனை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காரைக்குடி அருகே லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகரில் வசிப்பவர் கண்ணன். இவர் ராமநாதபுரத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அரசு வாகனத்தில் சென்ற போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து, நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகரில் உள்ள கண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. அவைகளை எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தச் சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கிணறு தோண்ட லஞ்சம் கேட்டதால் விவசாயி ஆத்திரமடைந்தார்.
    • இதனால் அவர் ரூ.2 லட்சம் பணத்தை அரசு அலுவலகம் முன் வீசி எறிந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதற்கு அந்த அரசு அதிகாரி ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி 2 லட்சம் ரூபாய் பணத்தை மாலையாகக் கட்டி தனது கழுத்தில் அணிந்து கொண்டு அரசு அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து கோஷமிட்டபடி தன்னிடம் இருந்த பணத்தை அந்த அலுவலக வளாகத்தின் முன்பு அவர் வீசி எறிந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புகார் கொடுக்க வந்த ஷோபியாவிடம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஷோபியா. இவருக்கும், தேனியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் ஷோபியா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி இதுதொடர்பாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் புகார் கொடுக்க வந்த ஷோபியாவிடம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கரூண் காரட் விசாரணை நடத்தினார். அப்போது புகார் கொடுக்க வந்தவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ரூ.1500 வாங்கியது தெரியவந்தது. இதன் அறிக்கையை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னியிடம் சமர்ப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமியை டி.ஐ.ஜி. சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

    • ஜெயிலில் அடைப்பதற்காக சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் புரோக்கர் கண்ணன் ஆகியோரை வேனில் அழைத்துக் கொண்டு போலீசார் சேலம் மத்திய ஜெயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
    • ஜெயில் அருகில் சென்றபோது செல்வபாண்டியன் தனக்கு உடல் நிலை சரியில்லை, தனக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். வீரபாண்டி அடுத்த கொழிஞ்சிப்பாடி பகுதியில் தனது தாயார் பெயரில் உள்ள 17 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்வதற்கு முடிவு செய்தார். இதற்காக அவர் சேலம் உடையாப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கிழக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

    அதன்பேரில் தாதகாப்பட்டி சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் கொண்டலாம்பட்டியை சேர்ந்த புரோக்கர் கண்ணன் ஆகியோர் பழனிவேலின் தாயாருக்கு சொந்தமான நிலத்தை நேரில் பார்வையிட்டனர். ஆனால் அந்த நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பழனிவேலை, புரோக்கர் கண்ணன் தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று பேரம் பேசி உள்ளார். ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத பழனிவேல், இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பழனிவேலிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அதை சார்பதிவாளரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் நேற்று மதியம் உடையாப்பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது புரோக்கர் கண்ணனிடம், பழனிவேல் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார்.

    பிறகு அவர் அந்த பணத்தை சார்பதிவாளர் செல்வபாண்டியனிடம் கொடுக்க முயன்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    இதையடுத்து 2 பேரையும் ஜெயிலில் அடைப்பதற்காக நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, 2 பேரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஜெயிலில் அடைப்பதற்காக சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் புரோக்கர் கண்ணன் ஆகியோரை வேனில் அழைத்துக் கொண்டு போலீசார் சேலம் மத்திய ஜெயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். ஜெயில் அருகில் சென்றபோது செல்வபாண்டியன் தனக்கு உடல் நிலை சரியில்லை, தனக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து போலீசார், புரோக்கர் கண்ணனை ஜெயிலில் அடைத்தனர். சார்பதிவாளர் செல்வபாண்டியனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள், அவரை பரிசோதித்து வார்டு அறையில் அனுமதித்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பாதுகாப்புக்காக அறை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இது பற்றி போலீசார் கூறுகையில், சார்பதிவாளர் செல்வபாண்டியனுக்கு சிகிச்சை முடிந்ததும், உடல் நிலை சீராகி விட்டது என டாக்டர்கள் அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில் அவர் ஜெயிலில் அடைக்கப்படுவார் என தெரிவித்தனர்.

    • சபரிமலை சீசன் தொடங்கியநிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களில் வந்தனர்.
    • வாகனங்களை சோதனை செய்யும் கலால்துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையான குமுளியில் கேரள கலால்துறை சோதனைச்சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் இங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு கேரளாவிற்குள் அனுமதிக்கப்படும்.

    சபரிமலை சீசன் தொடங்கியநிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களில் வந்தனர். இங்கு வாகனங்களை சோதனை செய்யும் கலால்துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இதனைதொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.

    இதில் கணக்கில் வராத ரூ.14,120 பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து அப்போது பணியில் இருந்த கலால்துறை இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்ஜோசப், தடுப்புஅலுவலர்கள் ரவி, ரஞ்சித், ஜேம்ஸ்மேத்யூ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் கலால்துறை ஆணையர் அவர்கள் 4 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதே சோதனைச்சாவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐயப்ப பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • வாகனத்துக்கு ஆன்லைன் பதிவு இருந்தும் அவர்களிடம் ரூ.1000 லஞ்சம் கேட்டனர்.
    • ஐயப்ப பக்தர் கொடுத்த பணத்தை வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரையும் மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    சபரிமலையில் தற்போது மண்டல பூஜைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சென்று வருகின்றனர். இவர்கள் தமிழக-கேரள எல்லையில் குமுளி வழியாக செல்கின்றனர். இதனால் இந்த சாலையில் வாகனங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

    கேரளாவிற்குள் நுழையும் இந்த வாகனங்களுக்கு தற்போது ஆன்லைனில் பெர்மிட் பதிவு செய்யப்படுகிறது. எல்லைப்பகுதியான குமுளியில் இந்த ஆன்லைன் பதிவை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும். இதற்காக ஐயப்ப பக்தர்களிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் ரூ.1000 லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஷாஜி ஜோஸ் தலைமையிலான போலீசார் தமிழக பகுதிக்கு வந்து ஐயப்ப பக்தர்களுடன் பக்தர்கள் போல் சென்றனர். அப்போது எல்லையில் உள்ள கேரள சோதனைச்சாவடியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், அலுவலக உதவியாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பணியில் இருந்தனர்.

    வாகனத்துக்கு ஆன்லைன் பதிவு இருந்தும் அவர்களிடம் ரூ.1000 லஞ்சம் கேட்டனர். அப்போது ஐயப்ப பக்தர் கொடுத்த பணத்தை வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரையும் மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் ஏற்கனவே பக்தர்களிடம் வசூல் செய்து வைத்திருந்த ரூ.5000 ஆயிரம் லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ஐயப்ப சீசன் களைகட்டி வரும் நிலையில் பக்தர்களிடம் போலீசார் லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் வரை பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தொடர்ந்து போலீசார் இது போன்ற சோதனையில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • மாடு திருட்டு வழக்கை விசாரிக்க சப்-இன்ஸ்பெக்டர் 10000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • அதிகாரிகளில் ஒருவர் பணத்தை மீட்க சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் விரல்களை வைத்து அழுத்தியும் முடியவில்லை.

    பரிதாபாத்:

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில், மாடு திருட்டு வழக்கில் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். ஆனால், அடுத்து நடந்த சம்பவம் விசாரணை அதிகாரிகளை திக்குமுக்காட வைத்தது.

    பரிதாபாத்தைச் சேர்ந்த ஷுப்நாத் என்பவரின் எருமை மாட்டை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். மாட்டை கண்டுபிடிக்க வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என அவரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கூறியிருக்கிறார். முதலில் 6000 ரூபாய் கொடுத்த ஷுப்நாத், மீதமுள்ள தொகையை கொடுப்பதற்கு முன்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார்.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக ஷுப்நாத்தை அனுப்பி பணத்தை கொடுக்க செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பணத்தை வாங்கும்போது சுற்றி வளைத்து பிடித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சப்-இன்ஸ்பெக்டர், லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்தார். வாயில் இருந்த அந்த பணத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இறுதியில் அவரை காரில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து பணத்தை கைப்பற்ற முயற்சிப்பதும், சப்-இன்ஸ்பெக்டர் அவசரம் அவசரமாக பணத்தை விழுங்குவதும் பதிவாகி உள்ளது. பணத்தை மீட்க அதிகாரிகள் போராடுகின்றனர். அதிகாரிகளில் ஒருவர் பணத்தை மீட்க சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் விரல்களை வைக்கிறார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டரோ வாயை திறக்காமல் பணத்தை அப்படியே விழுங்குகிறார். இந்த போராட்டத்தில் தலையிட்ட மற்றொரு நபரை அதிகாரிகள் தடுத்து வெளியே தள்ளிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×