என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சென்னையில் நாளை அதிகாலை 4.45 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
- அதிகாலை 3 மணி முதல் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை:
இந்திய கடற்படையை போற்றும் விதமாக கடற்படை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் அருகே முதன்முறையாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாளை அதிகாலை 4.45 மணி தொடங்கி 6.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், மாரத்தானில் பங்கேற்பவர்களின் வசதிக்காக நாளைய தினம் அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதே வேளையில், எம்.ஜி.ஆர். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை (கோயம்பேடு வழியாக) நேரடி ரெயில் சேவை காலை 3 மணி முதல் 5 மணி வரை இயக்கப்படாது என்றும், இந்த நேரங்களில் பயணிகள் எம்.ஜி.ஆர். சென்டிரல் (கிண்டி வழியாக செல்லும் ரெயில்களில்), ஆலந்தூர் அறிஞர் அண்ணா மெட்ரோ நிலையங்களில் வழித்தடங்களை மாற்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி விளையாடுகிறார்.
- நாளை மறுதினம் மெஸ்ஸி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
கொல்கத்தா:
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொல்கத்தாவில் லியோனல் மெஸ்ஸி சிலை திறப்பு விழா நடக்கிறது. அங்குள்ள யுவ பாரதி மைதானத்துக்கு செல்லும் மெஸ்ஸி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி, நடிகர் ஷாருக் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஆகியோரை சந்திக்கின்றார்.
அதன்பின், நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, ஐதராபாத் செல்லும் மெஸ்ஸி அங்குள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடுகிறார். இதில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியும் விளையாடுகிறார். மெஸ்ஸியை கொண்டாடும் விதமாக இசை கச்சேரி நடக்கிறது.
தொடர்ந்து, மும்பை செல்லும் மெஸ்ஸி இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரபலங்களுடன் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அவர், வான்கடே மைதானத்தில் நடக்கும் பேஷன் ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
நாளை மறுதினம் மெஸ்ஸி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அருண் ஜெட்லி மைதானத்தில் மினர்வா அகாடமி வீரர்களைப் பாராட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
- கம்போடியா உடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக தாய்லாந்து அறிவித்தது.
- புதிய எல்லை மோதல்கள் இருநாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
பாங்காங்:
ஆசிய நாடுகளான கம்போடியா-தாய்லாந்து இடையே 1907-ம் ஆண்டில் சர்வதேச எல்லை வகுக்கப்பட்டது. இருப்பினும் எல்லையில் அமைந்துள்ள 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்து கோவில் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன
இந்த மோதல், கடந்த ஜூலையில் முற்றியது. இருதரப்பு வீரர்கள் மோதிக்கொண்டதில் 48 பேர் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் அகதிளாகினர். 5 நாட்கள் நீடித்த இந்த போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்தார். அக்டோபரில் மலேசியா சென்றபோது டிரம்ப் முன்னிலையில் இருநாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
கம்போடியா புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரர் காயமடைந்ததாகக்கூறி அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தாய்லாந்து நவம்பரில் அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி இருநாட்டு வீரர்களிடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதில் இருதரப்பை சேர்ந்த 8 வீரர்கள் பலியாகினர்.
புதிய எல்லை மோதல்கள் இருநாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தாய்லாந்து நாடாளுமன்றத்தை அந்நாட்டு அரசு கலைத்துள்ளது. இதையடுத்து, சுமார் 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதுவரை பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தலைமையில் இடைக்கால அரசு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சமீப காலமாக சசி தரூர் பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார்.
- இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
புதுடெல்லி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து கட்சி குழு கூட்டத்தில் சசி தரூர் இடம்பெற்றார்.
இதற்கிடையே, மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ள சசி தரூர், காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளார். சசி தரூர் 3வது முறையாக ஆலோசனைக் கூட்டத்தை தவிர்த்திருப்பது காங்கிரஸ் கட்சி மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மற்றும் கடந்த மாதம் எஸ்.ஐ.ஆர். குறித்த விவாதத்தையும் அவர் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அந்தமானில் வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார்.
- சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவிஜயபுரம்:
சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு நிறைவை ஒட்டி, உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அந்தமான் நிகோபர் தீவுக்குச் சென்றார்.
தெற்கு அந்தமானில் உள்ள பியோத்னாபாத் என்ற இடத்தில் நிறுவப்பட்ட வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார். அதன்பின், சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:
அந்தமான் நிகோபர் தீவுகள் ஒரு தீவுக்கூட்டம் அல்ல. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தவம், தியாகம், அர்ப்பணிப்பு, தேசபக்தியால் உருவான ஒரு புனித பூமி.
நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, வீர சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
அவர் தமது காலத்தில் ஹிந்து சமூகத்தில் இருந்த தீமைகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடினார். சமூகத்தின் எதிர்ப்பு அவருக்கு இருந்தாலும் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார்.
வீர சாவர்க்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. பிறப்பிலே ஒரு உண்மையான தேசபக்தர்.
சுதந்திரத்துக்கு முன், அந்தமான் நிகோபர் சிறைக்கு கொண்டு வரப்பட்ட நபர், அங்கிருந்து திரும்பி வந்தாலும் அவர்களின் மனம், ஆன்மா அழிக்கப்பட்டு, ஒருபோதும் அசல் வடிவத்திற்கு திரும்ப முடியாது.
ஆனாலும், வீர சாவர்க்கர் தமது வாழ்க்கையின் கடினமான நாட்களை இங்கே கழித்ததால் இந்தியருக்கு ஒரு தீர்த்த ஸ்தலமாக மாறிவிட்டது. இந்த இடம், மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான நேதாஜியின் நினைவுடனும் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சாவர்க்கர் 1911-ம் ஆண்டு ஸ்ரீ விஜயபுரம் என அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவா மாநில முன்னாள் முதல்வரான ரவி நாயக் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மரணமடைந்தார்.
- காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகேந்திர மக்வானா மரணமடைந்தார்.
இந்தியாவில் 2025ம் ஆண்டில் மரணமடைந்த முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
* மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் கடந்த மே மாதம் 10ம் தேதி அன்று மரணமடைந்தார்.
* கோவா மாநில முன்னாள் முதல்வரான ரவி நாயக் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மரணமடைந்தார்.
* அதே நாளில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகேந்திர மக்வானா மரணமடைந்தார்.
* பாஜக மூத்த தலைவரும், குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான ரவி விஜய் ரூபானி மரணமடைந்தார்.
*மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவை சபாநாயகருமான சிவராஜ் பாட்டீல் டிசம்பர் 12 (இன்று) மரணமடைந்தார்.
இந்த ஆண்டில் மரணமடைந்த இந்த 5 முக்கிய தலைவர்கள் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்..
கிரிஜா வியாஸ்:
கிரிஜா வியாஸ் இந்திய அரசியலில், குறிப்பாகப் பெண்கள் அதிகாரம் மற்றும் சமூக மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றியவர். அவர் அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும் கூட.
1946ம் ஆண்டில் ராஜஸ்தானில் பிறந்த இவர் 1991 முதல் 1993 வரை பி.வி.நரசிம்ம ராவ் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைத் துணை அமைச்சராக இருந்தார்.

ஜூன் 2013 முதல் மே 2014 வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சராக பதவி வகித்தார்.
முன்னதாக, 2005 முதல் 2011 வரை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இரண்டு முறை இந்தப் பொறுப்பை வகித்துள்ளார். பெண்கள் உரிமைகளுக்கான கொள்கை சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
கிரிஜா வியாஸ் அவர்கள் மே 1, 2025 அன்று, தனது ஜெய்ப்பூர் இல்லத்தில் பூஜையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்து, சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
ரவி நாயக்
கோவா மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமானவர் ரவி எஸ். நாயக். 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி முதல் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வரை அவர் கோவா மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
அவர் பதவியில் இருந்த காலத்தில், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தினார். ரவி நாயக் அவர்கள் முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் பலமுறை கோவாவின் துணை முதலமைச்சராகப் (Deputy Chief Minister) பணியாற்றியுள்ளார். கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் (Speaker) இருந்துள்ளார்.

கோவாவின் போண்டா சட்டமன்றத் தொகுதியில் இருந்து பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்தாலும், அரசியல் சூழல் காரணமாகக் கட்சி மாறுதல்களையும் சந்தித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ரவி எஸ். நாயக் அவர்கள் அக்டோபர் 29, 2025 அன்று தனது 79வது வயதில் காலமானார்.
யோகேந்திர மக்வானா
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யோகேந்திர மக்வானா, நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அமைச்சரவைகளில் பல்வேறு முக்கிய மத்திய அமைச்சகங்களில் பணியாற்றி உள்ளார்.
1980கள் மற்றும் 1990களின் முற்பகுதியில் இவர் நிதித் துறை, உள்துறை, வேளாண்மைத் துறை, சுகாதாரத் துறைகளில் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இருந்து பலமுறை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீண்ட காலம் மத்திய அரசில் பணியாற்றி, முக்கியக் கொள்கை முடிவுகளில் பங்களித்துள்ளார்.சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் உரிமை மற்றும் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகேந்திர மக்வானா அவர்கள் அக்டோபர் 29, 2025 அன்று, தனது 92வது வயதில் காலமானார்.
விஜய் ரூபானி
பாஜக மூத்த தலைவரும், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆனவர் விஜய் ரூபானி. ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை குஜராத் முதலமைச்சராக இருந்தார். குஜராத் பாஜகவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.2014 முதல் 2016 வரை குஜராத் மாநில அரசில் போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். அவர் ராஜ்கோட் மாநகராட்சியின் மேயராகவும் (Mayor) நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அவர்கள் ஜூன் 27, 2025 அன்று, தனது 68வது வயதில் அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சிவராஜ் பாட்டீல்
முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சிவராஜ் விஷ்வநாத் பாட்டீல், தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் ஆவார்.தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகர். 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார்.

மும்பையில் நவம்பர் 26, 2008 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, அவர் தார்மீகப் பொறுப்பேற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவைகளில் இவர், பாதுகாப்பு, மக்களவை சபாநாயகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறைகளில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
2010 முதல் 2015 வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும் மற்றும் சண்டிகரின் நிர்வாகியாகவும் பணியாற்றினார். சிவராஜ் பாட்டீல் தனது 90-வது வயதில் டிசம்பர் 12, 2025 (இன்று ) அன்று காலமானார்.
- தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- இந்தப் பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்படும்.
புதுடெல்லி:
காய்கறி வாங்க மார்க்கெட் சென்று கொண்டிருந்தாள் சுமதி. அப்போது எதிரில் வந்த தோழி ரமாவைப் பார்த்தாள். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, யார் இந்த சார் என கேள்விப்பட்டிருக்கேன். இது என்னடி வேற SIR -புதிதாக இருக்கிறதே என ரமாவிடம் ஆச்சரியமாகக் கேட்டாள் சுமதி.
அதுவா ஒண்ணுமில்ல. தேர்தலுக்கான முதல் கட்ட பணி தான் இது. இதனால் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நிறைய போலி வாக்காளர்களை நீக்க முடியும் எனறாள் ரமா.
ஆனா பல அரசியல் கட்சிகள் இதுக்கு ஏன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களே ஏன்? என்றாள் சுமதி.
இவ்வளவு நாள் தங்களது வாக்கு வங்கியை மெயிண்டெய்ன் பண்ணினவங்களுக்கு இந்த நடவடிக்கையினால அது
குறைஞ்சுடுமோ என்ற பயம்தான் காரணம் என்றாள் ரமா.
ஓ அதுதான் காரணமா? SIR அப்படின்னா என்ன, அதுபத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றாள் சுமதி.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ரமா சொன்னதன் சுருக்கம் இதுதான்:
வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமை, ஒரு குடும்பம் இடம் பெயர்ந்தும் பழைய முகவரி நீங்காமை, ஒரே நபருக்கு இரட்டை பதிவுகள் இருப்பது போன்ற பொதுவான பிழைகள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்தன.
இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சாதாரண பட்டியல் புதுப்பிப்பால் சரிசெய்ய முடியாத பல பிரச்சனைகள் இருப்பதால், இந்த ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை பெரும் அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பொருத்தமாக உள்ளனவா, இடம் மாற்றியவர்கள் மாற்றமடைந்து உள்ளனரா, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனவா, ஒரே நபரின் பெயர் பல இடங்களில் இடம் பெறுகிறதா போன்ற தவறுகளை சரிசெய்வதே இந்தப் பணிகளின் முக்கிய நோக்கமாகும்.

அடுத்த ஆண்டு பல மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல்களை முன்னிட்டு, துல்லியமான வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படுவது மிகவும் அவசியமான சூழ்நிலையாக மாறியுள்ளது.
முதலில் பீகாரில் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் அதன்பின் தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
வரைவுப் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது. அதன்பின் ஜனவரி 15 வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் சமர்ப்பிக்க முடியும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்படும்.

சிறப்பு தீவிர திருத்த பணிகள் பணிச்சுமையை அதிகரித்துள்ளது எனக்கூறி பல ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டது பேசுபொருளானது என கூறினாள் ரமா.
ஓகே நானும் SIR விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துட்டேன், நன்றி என கூறியபடி மார்க்கெட் சென்றாள் சுமதி.
- திட்டம் வாயிலாக இந்தியாவின் ஊரக பொருளாதாரம் மேம்பட்டதுடன் லட்சக்கணக்கான மக்கள் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
- மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான கோடிகள் வழங்கப்படாததால் , கிராமப்புற மேம்பாட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு நிலுவை தொகையினை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்காமல் தடுத்து வைத்துள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் நிதிகளை உடனே வழங்க வேண்டும் என இன்று மக்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின்போது 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்டது.
இந்த திட்டம் வாயிலாக இந்தியாவின் ஊரக பொருளாதாரம் மேம்பட்டதுடன் லட்சக்கணக்கான மக்கள் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பாஜக அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதியினை படிப்படியாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மக்களவையில் இது குறித்து விவாதிக்க ஒத்துவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளார்.
மத்திய அரசின் தாமதமான நிதி வெளியீடு காரணமாக ஏராளமான கிராமப்புற குடும்பங்களும் ஊராட்சிகளும் கடுமையான நெருக்கடியை எதிர் கொள்கின்றன. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான கோடிகள் வழங்கப்படாததால் , கிராமப்புற மேம்பாட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் பல மாதங்களாக கூலி பெறாமல் தவிக்கின்றனர். ஊராட்சிகள் செயலிழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. மாநிலங்களுடன் ஒத்துழைக்கும் நிலைக்கு பதிலாக மத்திய அரசின் அழுத்தங்கள் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுதலாக அமைந்துள்ளது.

மேலும் கிராமப்புற தொழிலாளர்கள் சுயமரியாதை இழந்து நிற்கின்றனர். இதன் காரணமாக பல மாநிலங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலைமையை கருத்தில் கொண்டு, வழக்கமான அவைச் செயல்பாடுகளை நிறுத்தி உடனடியாக விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், மத்திய அரசு உடனடியாக நிலுவையில் உள்ள நிதிகளை முழுமையாக வழங்க வேண்டும், வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தடையின்றி அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குரங்கணி மலைப்பகுதியில் யாழி கிராம மக்களுக்கும் அடிவார பகுதி மக்களுக்கும் 3000 ஆண்டுகால பகை இருந்து வருகிறது. குறிப்பாக யாழி கிராமத்தில் இருக்கும் சாமி சிலையை அடிவார பகுதி மக்கள் அபகரிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள். யாழி கிராமத்தைச் சேர்ந்த நாயகன் விமல் கிராம மக்களுக்கும் சாமி சிலைக்கும் பாதுகாவலனாக இருந்து வருகிறார்.
யாழி கிராமத்தில் சித்ரா பௌர்ணமி அன்று கோவில் திருவிழா நடத்த முயற்சி செய்கிறார்கள். அன்றைய தினத்தில் அடிவார பகுதி மக்கள், சாமி சிலையை திருட நினைக்கிறார்கள். அதே சமயம் மற்றொரு கும்பல் சாமி சிலையை வனப்பகுதி காவல் அதிகாரி ஜான் விஜய் மூலம் திருட திட்டம் போடுகிறார்கள்.
இறுதியில் யாழி கிராமத்தில் திருவிழா நடைபெற்றதா? சாமி சிலை என்ன ஆனது? சாமி சிலையை விமல் பாதுகாத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விமல் மிகவும் சாதாரணமாக நடித்திருக்கிறார். பல இடங்களில் நடிக்காமல் பொம்மை போல் நிற்கிறார். செங்குட்டுவன் என்ற பெயரில் இருக்கும் கம்பீரம் நடிப்பில் இல்லை. நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பொம்மி என்ற கதாபாத்திரத்தில் சாதாரண பெண்ணாகவும் ஆக்ரோஷமான பெண்ணாகவும் நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இவரது நடிப்பு மட்டுமே படத்திற்கு பெரிய பலம்.
வனத்துறை அதிகாரியாக வரும் ஜான்விஜய் படம் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கிறார். யோகி பாபுவின் காமெடி பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. வில்லனாக நடித்திருக்கும் கபீர் சிங் கடைசி பத்து நிமிடமே மட்டுமே வந்து கவனத்தை பெற்று இருக்கிறார். அடிவார பகுதி மக்கள் தலைவியாக வரும் மகிமா குப்தா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இயக்கம்
கோவில் சிலையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன். தெளிவான திரைக்கதை இல்லாமல் படத்தை நகர்த்திருக்கிறார் இயக்குனர். காட்சிகளின் தொடர்ச்சி இல்லாதது வருத்தம். கதாபாத்திரங்களிடையே வேலை வாங்காமல் விட்டிருக்கிறார். நிறைய லாஜிக் மீறல்கள், சம்மந்தம் இல்லாத காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.
இசை
பிரவீன் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஒரு சில இடங்களில் மட்டுமே ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
மனாஸ் பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இவரது கேமரா மலைப்பகுதிகளை அழகாக படம் பிடித்து இருக்கிறது.
ரேட்டிங்- 1.5/5
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர்," தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் 43 சதவீதம் பெண்கள் பணியாற்றுகின்றன், விளையாட்டிலும் சாதிக்கின்றனர்" என்றார்.
இதுகுறித்து மேலும் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்," இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பெண்களுக்கு உரிமை கொடுத்தது, ஆனால் தமிழ்நாடு அதிகாரத்தை கொடுத்தது. பெண்ணுரிமையில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடி.
திராவிட மாடல் அரசு என்றாலே அது பெண்களுக்கான அரசு என்று இந்திய ஒன்றியமே சொல்கிறது.
உத்தியோகம் புருஷனுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் அழகு என மாற்றிக் காட்டியுள்ளது நம் அரசு" என கூறினார்.
- நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
- புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட 2ம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் பேசிய பெண்களின் பேச்சை கேட்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.
வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் உள்ளத்தில் இருந்து பேசிய அனைவருக்கும் நன்றி.
தனது 100 வயதில் பொது வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் கிருஷ்ணம்மாள்.
2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் முன்னோடி திட்டங்களை செயல்படுத்த தொடங்கினேன்.
நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்று உள்ளது. வரலாற்றை திருத்தி எழுதக் கூடிய திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது.
திராவிட மாடல் அரசின் பல்வேறு அரசுத்திட்டங்களால் பலர் பயன் அடைந்து வெற்றி பெற்றுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வெற்றியின் உச்சம் அண்டை மாநிலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தான்.
மகாராஷ்டிரா, சத்தீர்கர், கர்நாடகா உள்பட 10 மாநிலங்களில் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது
- மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துமுடிப்பேன்
நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த 2024-ல் விலகிய காளியம்மாள், புதிய கட்சியை ஆரம்பிப்பதா? அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் பெருங்கவி பாரதியின் 144-வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
"எனது அரசியல் பயணம் மக்களை சேர்ந்து இருக்கும். சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துமுடிப்பேன். அவர்களுடைய பிரதிநிதியாக நிற்பேன். அதற்கான சூழல் விரைவில் வரும். வேறு கட்சிகளில் இணைவேணா என்பதற்கான முடிவை விரைவில் கூறுவேன்." என தெரிவித்தார்.
காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.






