என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது
    • மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துமுடிப்பேன்

    நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த 2024-ல் விலகிய காளியம்மாள், புதிய கட்சியை ஆரம்பிப்பதா? அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

    மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் பெருங்கவி பாரதியின் 144-வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,  

    "எனது அரசியல் பயணம் மக்களை சேர்ந்து இருக்கும். சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துமுடிப்பேன். அவர்களுடைய பிரதிநிதியாக நிற்பேன். அதற்கான சூழல் விரைவில் வரும். வேறு கட்சிகளில் இணைவேணா என்பதற்கான முடிவை விரைவில் கூறுவேன்." என தெரிவித்தார். 

    காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்டம்.
    • விடுபட்ட மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்டம் 2ம் கட்ட விரிவாக்கம்.

    தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் தற்போது ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை பெறுகின்றனர்.

    இதில், விடுபட்ட மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்டம் 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தால் மேலும் 17 லட்சம் பேர் உரிமைத்தொகையை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • போட் கிளப் நிலையம் நோக்கி அதன் இரண்டாவது சுரங்கம் அமைக்கும் பணியை இன்று தொடங்கியது.

    மயில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்கா நிலையம்- போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    "மயில்" சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் UG-01 மற்றும் UG-02 என இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 4 கி.மீ. இரட்டை சுரங்கப்பாதைகளைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இரு திசைகளிலும் தோராயமாக 16 கி.மீ. நீளத்தில் மொத்த சுரங்கப்பாதையை முடிக்க, 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    வழித்தடம் 4-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில் பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரையிலான (downline) 1898 மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை இன்று 12.12.2025 தொடங்கியுள்ளது.

    இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன் (கட்டுமானம்), பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் குழுத் தலைவர் திரு.சி.முருகமூர்த்தி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம், பொது ஆலோசகர்கள், AEON கன்சோர்டியம் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.

    இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் "மயில்", முதலில் வழித்தடம்-4-ல் மே 02, 2024 அன்று பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நிலையம் நோக்கி சுரங்கம் தோண்டும் பணியயை தொடங்கி, 2 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஆற்காடு சாலையில் மீனாட்சி கல்லூரிக்கு அருகில் கோடம்பாக்கம் நிலையத்தை 23.07.2025 அன்று வந்தடைந்தது.

    அந்த துளையிடும் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அது பயன்பாட்டில் உள்ள இரயில் பாதைக்கு இணையாக சுரங்கப்பாதையை துளையிட வேண்டியிருந்தது.

    இதனை தொடர்ந்து, சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில், கோடம்பாக்கம் நிலையத்தில் பிரித்தெடுக்கப்பட்டு, மீண்டும் பனகல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பனகல் பூங்கா நிலையத்தில் மறுசீரமைக்கப்பட்டது. பின்னர் இது போட் கிளப் நிலையம் நோக்கி அதன் இரண்டாவது சுரங்கம் அமைக்கும் பணியை இன்று தொடங்கியது.

    இந்தப் பிரிவில் இரட்டை சுரங்கப்பாதைகளில் ஒரு சுரங்கப்பாதையை அமைப்பதற்காக தொடங்கப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் இதுவாகும். இந்தச் சுரங்கப்பணியில் குறிப்பிடத்தக்க பொறியியல் சவால்கள் அடங்கும். குறிப்பாக, நந்தனம் மெட்ரோ நிலையம் அருகே ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் முதல் கட்ட மெட்ரோ சுரங்கப்பாதைகளுக்கு அடியில் சுரங்கம் தோண்ட வேண்டியுள்ளது. இந்த சுரங்கப் பாதை, தரை மட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 30.2 மீட்டர் (100 அடி) ஆழம் வரை செல்கிறது.

    சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில் வழித்தடம்-4-ல் (Down Line) பனகல் பூங்காவிலிருந்து நந்தனத்தை நோக்கி நகர்ந்து, இறுதியாக போட் கிளப் நிலையத்தை வந்தடையும். இந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணியானது நவம்பர் 2026-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதல் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் ஆதிக்கம்
    • மலேசியாவை 297 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

    2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இன்று துபாயில் தொடங்கியது. இத்தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

    இந்த நிலையில் இன்று ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள் போட்டியைத் தொடங்கின. அதன்படி இந்திய அணி, யுஏஇயையும், பாகிஸ்தான் மலேசிய அணியையும் எதிர்கொண்டன. முதல் போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 433 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 434 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய யுஏஇ அணி தொடக்கம் முதலே சரிவைச் சந்தித்தது. இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 234 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    மறுபுறம், தொடரின் இரண்டாவது போட்டியில் மலேசிய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மலேசியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 346 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மலேசியா, 19.4 ஓவர்களிலேயே 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் 297 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானும் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • உட்டா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

    2025-ஆம் ஆண்டு உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படுகொலைகளால் நிரம்பி உள்ளது.

    சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவிய இந்தக் கொலைகள் குறித்த செய்திகள், உலகில் அரசியல் வன்முறையின் ஒரு புதிய, ஆபத்தான சகாப்தத்தை உணர்த்துகின்றன. அவ்வாறாக இந்தாண்டு நடந்த 5 அரசியல் படுகொலைகளை இங்கு காண்போம். 

    அமெரிக்கா: 

    குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்காவில் நிகழ்ந்த இரு முக்கிய கொலைகள், நாட்டில் உச்சக்கட்டத்தை அடைந்த சித்தாந்தப் பிளவை அம்பலப்படுத்தின.

    சார்லி கிர்க் கொலை: செப்டம்பர் மாதம், டிரம்ப் உடைய தீவிர ஆதரவாளரான பிரபல பழமைவாத அரசியல் ஆர்வலரும் 'டேர்னிங் பாயின்ட் USA' அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.


    31 வயதே ஆன இவரது மரணம், வலதுசாரி மற்றும் இடதுசாரி சித்தாந்தங்களுக்கிடையில் வளர்ந்து வரும் வெறுப்பைக் குறிக்கும் ஒரு அரசியல் நிகழ்வாக மாறியது.

    மெலிசா ஹார்ட்மேன் படுகொலை: மினசோட்டா மாநிலத்தின் ஹவுஸ் சபாநாயகர் எமரிடா மெலிசா ஹார்ட்மேன், ஜூன் மாதம் தனது கணவருடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.


    ஜனநாயக கட்சி வட்டாரங்களில் செல்வாக்கு மிக்க நபராக இருந்த இவரது மரணம், உள்ளூர் அரசியலை உலுக்கியதுடன், அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக் குறித்து தேசிய அளவில் விவாதத்தை எழுப்பியது.

    கொலம்பியா:

    கொலம்பியா நாட்டில், 2026 அதிபர் தேர்தல் வேட்பாளரும் செனட்டருமான மிகைல் உரைபே டர்பே-இன் மரணம் வளர்ந்து வரும் வன்முறை அரசியலின் மற்றொரு சான்று.


    ஜூன் மாதம் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சுடப்பட்ட மிகைல், ஆகஸ்ட் மாதத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு, கொலம்பியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் களத்தையே அடியோடு மாற்றி அமைத்தது.

    ஈரான்:

    ஜனவரி மாதம், ஈரானின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அலி ரஸினி மற்றும் முகமது மோகிசே ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.


    அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வந்த இவர்களின் படுகொலை அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    உக்ரைன்:

    உக்ரைனிய பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபிய், ஆகஸ்ட் மாதம் லிவிவ் நகரில் கூரியர் வேடமிட்ட ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏற்கனவே ரஷியாவுடன் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இந்த அரசியல் கொலை மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.


    2025-இல் நிகழ்ந்த இந்த ஆறு படுகொலைகளும் சில நாடுகளின் சம்பவங்கள் என்ற எல்லைகளைத் தாண்டி, சித்தாந்தங்களுக்கிடையே வளர்த்து வரும் வெறுப்பு மற்றும் மோதலை எடுத்துக் காட்டுகிறது.

    இவை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு தீவிர எச்சரிக்கை மணியை ஒலிப்பதாக அமைந்துள்ளது.  

    • 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
    • "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு கர்நாடகா அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு, இன்றைய தினம் அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

    தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பொம்மை முதல்வர் மு.க.ஸடாலின்-ன் தலைமையிலான விடியா திமுக அரசு தமிழகத்தின் சார்பில் வலிமையான வாதங்களை வழக்கறிஞர்கள் மூலம் எடுத்து வைக்காமல், "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

    திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது. திமுக தலைமை தங்களுடைய சுயநலத்திற்காக, தங்களின் குடும்பத் தொழிலை பாதுகாக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுக-வின் இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

    இனியாவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீதிபதிகள் அரசியலமைப்பிற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், "கட்சிசார்ந்த அரசியல் அழுத்தங்கள் அல்லது கருத்தியல் மிரட்டல்களுக்கு" அல்ல
    • எம்.பி.க்கள் மேற்கோள் காட்டிய காரணங்கள் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவை போதுமானவை அல்ல

    உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு, 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பல உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட முன்னாள் நீதிபதிகள் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தீர்ப்பின் பேரில் அவரை பதவி நீக்கம் செய்யும் முயற்சி "நமது ஜனநாயகத்தின் வேரையும், நீதித்துறையின் சுதந்திரத்தையும் வெட்டிவிடும்" என்று தெரிவித்துள்ளனர். 

    மேலும், எம்.பி.க்கள் மேற்கோள் காட்டிய காரணங்கள் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவை போதுமானவை அல்ல எனவும், இது "கொள்கை ரீதியான, நியாயமான விமர்சனம் அல்ல" என்றும் தெரிவித்துள்ளனர். இம்பீச்மெண்ட் நடைமுறையின் நோக்கம் நீதித்துறை நேர்மையை நிலைநிறுத்துவதாகும். அதை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தக்கூடாது. இன்று, ஒரு நீதிபதியாக இருக்கலாம்; நாளை, அது ஒட்டுமொத்த நிறுவனமாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். 

    கட்சியின் நிலைப்பாட்டை கடந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை மற்றும் குடிமக்கள் அனைவரும் "இந்த நடவடிக்கையை அதன் தொடக்கத்திலேயே முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் அரசியலமைப்பிற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், "கட்சிசார்ந்த அரசியல் அழுத்தங்கள் அல்லது கருத்தியல் மிரட்டல்களுக்கு" அல்ல எனவும் தெரிவித்துள்ளனர். 




    • அஞ்சா இதயத்துடன், ஒருபோதும் தலை குனியா மன உறுதியுடன் திரும்புகிறேன்
    • ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே இந்திய பெண்

    பாரிஸ் ஒலிம்பிக் 2024 இறுதிப் போட்டியில் 50 கிலோ பிரிவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடைப் பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

    இந்த திடீர் ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஹரியானாவின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார் வினேஷ் போகத். அதில் வெற்றியும் பெற்றார். இந்நிலையில் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக "லாஸ் ஏஞ்சல்ஸ் 2028-ஐ நோக்கி அஞ்சா இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் திரும்புகிறேன்" என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், முன்னாள் ஆசிய சாம்பியன் ஆவார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். மூன்று முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் ஆவார். 

    • நீரஜ் சோப்ரா டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை திருமணம் செய்து கொண்டார்.
    • ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானின் 2-வது திருமணம் நவம்பர் மாதம் நடந்தது.

    2025-ம் ஆண்டில், உலகம் முழுவதும் பல விளையாட்டு வீரர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதில், பல திருமணங்கள் தனிப்பட்டவை அல்லது பொது அறிவுக்கு வராதவை. ஆனால் பிரபலமான மற்றும் ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், 23 விளையாட்டு வீரர்கள் (அல்லது வீராங்கனைகள்) திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை திருமணங்களில் இருவரும் விளையாட்டு வீரர்களாக இருந்தால் இருவரையும் தனித்தனியாக குறிக்கும்.

    அமெரிக்க கால்பந்து (NFL) வீரர்கள்: ஜோஷ் ஆலன் (பஃபலோ பில்ஸ் குவார்ட்டர்பேக்): நடிகை ஹெய்லி ஸ்டெயின்ஃபெல்ட்டை மே 31, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.


    ஜாலென் ஹர்ட்ஸ் (பிலடெல்பியா ஈகிள்ஸ் குவார்ட்டர்பேக்): பிரயோனா "பிரை" பர்ரோஸை (மார்ச்/ஏப்ரல் 2025) திருமணம் செய்து கொண்டார்.


    டிராவிஸ் ஹன்டர் (NFL வீரர்): லீனா லெனீயை மே 24, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.


    ஐயன் தாமஸ் (லாஸ் வேகாஸ் ரெய்டர்ஸ் வீரர்): அசாரியா அல்காரினை மே 25, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.


    லியோனார்ட் வில்லியம்ஸ் (சீஹாக்ஸ் டிபென்சிவ் எண்ட்): ஹெய்லி லூயிஸ் வில்லியம்ஸை 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.


    கால்பந்து (சாக்கர்) வீரர்கள்:பெதானி இங்கிலாந்து (இங்கிலாந்து & டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஸ்ட்ரைக்கர்): ஸ்டெஃப் வில்லியம்ஸை (முன்னாள் வேல்ஸ் மிட்பீல்டர்) ஜூன் 7, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    எல்லி கார்பென்டர் (ஆஸ்திரேலியா & லியோன் வீரர்): டேனியல் வான் டி டாங்கை (நெதர்லாந்து & லியோன் வீரர்) ஜூன் 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

    கத்ரினா கோரி (ஆஸ்திரேலியா வீரர்): கிளாரா மார்க்ஸ்டெட் (ஸ்வீடன் வீரர்) ஜூன் 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

    அல்பா ரெடோண்டோ (ஸ்பெயின் & ரியல் மாட்ரிட் ஃபார்வர்ட்): கிறிஸ்டினா மோன்லியோனை 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

    இந்திய விளையாட்டு வீரர்கள்:

    நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல், ஒலிம்பிக் பதக்க வென்றவர்): டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை ஜனவரி 19, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார். இது இமாச்சல பிரதேசத்தில் தனிப்பட்ட விழாவாக நடைபெற்றது.


    ஹிமானி மோர் (டென்னிஸ் வீராங்கனை): நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொண்டார்.

    லலித் யாதவ், இந்திய கிரிக்கெட் வீரர் (ஐபிஎல்-இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்), பிப்ரவரி 9, 2025-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.


    பிற விளையாட்டுகள்:

    ஹாரி சார்லஸ் (ஈக்வெஸ்ட்ரியன்/குதிரை ஓட்டம்): ஈவ் ஜாப்ஸை ஜூலை 26, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    டியா பிளான்கோ (சர்ஃபிங் வீராங்கனை): ப்ரோடி ஜென்னரை ஜூலை 12, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    பென் கிரிஃபின் (கோல்ஃப், PGA டூர் வீரர்): டானா மயெராஃபை டிசம்பர் 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

    லோகன் பால் (பாக்ஸிங்/ரெஸ்லிங் வீரர்): நினா அக்டாலை ஆகஸ்ட் 15, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானின் 2-வது திருமணம் நவம்பர் 2025-இல் இன்ஸ்டாகிராம் தான் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். முதல் திருமணத்திற்கு 10 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்றது. 

    • திமுக ஆட்சி இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இரண்டாம் கட்ட உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்.
    • எஞ்சிய மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை தருவது மக்கள் மீதான அக்களையால் இல்லை தேர்தல் நாடகம்.

    சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே எஞ்சிய மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை தரப்படுவதாக அதிமுக விமர்சித்துள்ளது.

    இதுகுறித்து அதிமுக சார்பில் வௌியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம் என அடிக்கடி முழங்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!

    எப்போது கொடுத்தீர்கள்.?

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்துதான் உரிமைத்தொகை கொடுத்தீர்கள்.

    இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு என அறிவித்துவிட்டு அதிலும் 13 லட்சம் பேரை தவிர்த்துவிட்டு 17 லட்சம் பேருக்கு மட்டும் விதிகளைத் தளர்த்தி உரிமைத்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளீர்கள்.

    இது இன்னும் எவ்வளவு மாதம் கொடுக்க முடியும்? வெறும் நான்கு மாதங்கள் மட்டும்தான், அப்படியென்றால் மீதமுள்ள 56 மாதங்களுக்கான உரிமைத்தொகை?

    தற்போதும் விடியா திமுக அரசு குடும்பத்தலைவிகளின் கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் விதியைத் தளர்த்தி ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.

    அனைத்தும் தேர்தலை மனதில் வைத்து தான்,மக்கள் மீதுள்ள அக்கறையினால் அல்ல. உங்கள் நாடகம் மக்கள் அறியாமல் இல்லை. உங்களுக்கான முடிவுரையை மக்கள் எழுதாமல் இருக்கப் போவதும் இல்லை.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ரிவாபா ஜடேஜா பாஜக ஆளும் குஜராத்தின் கல்வி அமைச்சராக உள்ளார்.
    • என் கணவர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டுக்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக ரவீந்திர ஜடேஜா உள்ளார். அவரின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக ஆளும் குஜராத்தின் கல்வி அமைச்சராக உள்ளார்.

    இந்நிலையில் துவாரகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிவாபா, "என் கணவர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டுக்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கிறார். ஆனாலும், இன்றுவரை அவர் எந்தவொரு போதைப் பழக்கத்தையோ அல்லது வேறு எந்த தீய பழக்கத்தையோ தொட்டது கூட கிடையாது.

    அவருக்குத் தனது பொறுப்பு என்னவென்று தெரியும். ஆனால், அணியில் உள்ள மற்ற வீரர்கள் சிலர் இது போன்ற பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை" என்று தெரிவித்தார்.

    தனது கணவனை புகழும் அதே வேளையில் ரிவாபா மற்ற வீரர்களை அவமதித்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • இந்தியாவில் நடத்தப்படும் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
    • பனிப்பொழிவு பகுதிகளில் அடுத்தாண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ .11,718 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ், 2027 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு ரூ.11,718.24 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

    இது இந்தியாவில் நடத்தப்படும் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது முறையாக எடுக்கப்படுகிறது. முதல் கட்டமான, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு  ஏப்ரல் மற்றும் செப்டம்பர்க்கு இடையில் நடத்தப்படும். இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பு , பிப்ரவரி 2027 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பனிப்பொழிவு பகுதிகளான லடாக், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் அடுத்தாண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும் அடுத்தாண்டு தொடங்கவுள்ள கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பு ஆகும். மொபைல் போன்கள் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் முழு செயல்முறையையும் நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் வெப் போர்டல் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. 

    ×