என் மலர்
நைஜீரியா
- நைஜீரியாவில் 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டனர்.
- பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பள்ளிகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டது.
அபுஜா:
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர் துப்பாக்கிமுனையில் 100-க்கும் மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தற்போது 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே கடந்த 17-ந்தேதி கெபி மாகாணத்தில் பள்ளிக்குள் நுழைந்து 25 மாணவிகள் கடத்தப்பட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பள்ளிகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டு இருந்தது. அதனை மீறி பள்ளி செயல்பட்டதே இந்த கடத்தலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
முன்னதாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இந்த சூழலில் அடுத்தடுத்து மாணவர்கள் கடத்தப்படுவது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கடத்தப்பட்ட 303 மாணவர்களில் சுமார் 50 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டனர் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- நைஜீரியாவில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் 100 பேர் கடத்தப்பட்டனர்.
- ஒரே வாரத்தில் மாணவர்கள் கடத்தப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அபுஜா:
நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்து 2 மாணவிகள் தப்பி ஓடி போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் உதவியுடன் மற்ற மாணவிகளை மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரமாக இறங்கியது.
இந்த மீட்பு பணிக்கு உதவுவதற்காக நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி அல்–ஹாஜ்ஜி பெல்லோவை கெபி மாகாணத்துக்குச் செல்ல அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021-ல் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 279 மாணவர்களை மீட்பதில் இவர் முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில், நைஜர் மாகாணம் பாபிரி நகரில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி செயல்படுகிறது. இதன் அருகே மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது.
அந்த விடுதிக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் நுழைந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் 100 மாணவர்களை அந்த கும்பல் கடத்திச் சென்றது.
ஒரே வாரத்தில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தனது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் ஒத்தி வைப்பதாக அதிபர் போலா டினுபு அறிவித்துள்ளார்.
- மேய்ச்சல்காரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான மோதல்களால் 500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்
- இன மற்றும் மத வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட மோதல்களாகும்.
மத்திய நைஜீரியாவின் பென்யூ மாநிலத்தில் உள்ள யெலேவாடா கிராமத்தில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிசூடு தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை நீடித்த இந்த தாக்குதலில் பலரைக் காணவில்லை, மேலும் டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நைஜீரியா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் விவசாயிகளை குறிவைத்ததாகத் தெரிகிறது. இதனால் விவசாய சமூகங்கள் இடம்பெயர்ந்து அப்பகுதியின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படலாம்.
பென்யூ மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் மேய்ச்சல்காரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான மோதல்களால் 500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 2.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவை பெரும்பாலும் இன மற்றும் மத வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட மோதல்களாகும்.
கடந்த மாதம், பென்யூவில் 42 பேர் மேய்ச்சல்காரர்களால் கொல்லப்பட்டனர். இந்த மோதல்களால் நைஜீரியாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
- பயங்கரவாத குழுக்கள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
- படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அபுஜா:
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய போகோ ஹரம் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்தும் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு அட்டூழியம் செய்து வரும் இந்த பயங்கரவாத அமைப்பினர் இதுவரை ஏராளமானோரை கொன்று குவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோரை அவர்களது வீடுகளில் இருந்து விரட்டியடித்து உள்ளனர்.
எனவே பயங்கரவாத குழுக்கள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இதனை கட்டுப்படுத்த ராணுவம் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் தொடர்ந்து தாக்குதல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் போர்னோ மாகாணம் மைராரி பஸ் நிலையத்தில் பலர் நின்று கொண்டிருந்தனர். அங்கு பஸ் வந்ததும் பயணிகள் பலர் அதில் ஏற முயன்றனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கனமழையால் மோக்வா நகர் தத்தளித்த நிலையில் அணை உடைந்து நீர் புகுந்தது.
- ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்தனர்.
அபுஜா:
நைஜீரியா நாட்டின் மார்க்கெட் நகரான மோக்வா, மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால் நகருக்குள் வெள்ளம் புகுந்து நிலைமையை மேலும் மோசமாக்கியது. பல மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் மோக்வா நகர் வெள்ளத்தில் தத்தளித்த நேரத்தில், அணை உடைந்து தண்ணீர் நகருக்குள் புகுந்ததால் உயிரிழப்பு அதிகமானது.
பல வீடுகள் நீரில் மூழ்கின. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்தனர் என நைஜர் அவசரகால அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
- கனமழையால் மோக்வா நகர் தத்தளித்த நிலையில், அணை உடைந்து நீர் புகுந்தது.
- ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர்.
நைஜீரியா நாட்டின் மார்க்கெட் நகரான மோக்வா, மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால், நகருக்குள் வெள்ளம் புகுந்து நிலைமையை மேலும் மோசமாக்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று பலமணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் மோக்வா நகர் வெள்ளத்தில் தத்தளித்த நேரத்தில், அணை உடைந்து தண்ணீர் நகருக்குள் புகுந்ததால் உயிரிழப்பு அதிகமாகியுள்ளது. கனமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- நைஜீரியாவில் பயங்கரவாதிகள் சிலர் கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
- இந்த தாக்குதலில் அப்பாவி விவசாயிகள் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அபுஜா:
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் ஐ.எஸ், அல்–கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. மேலும், ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்களும் ஊடுருவி உள்ளனர்.
போகோ ஹாரம் எனும் கொடூர கடத்தல் கும்பல்களும் நைஜீரியாவில் செயல்படுகின்றன. இதனால் பயங்கரவாதிகளின் கூடாரமாக இருக்கும் நைஜீரியாவில் அவ்வப்போது பாதுகாப்புப் படையினர், அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போகோ ஹாரம் என்ற கும்பல் போர்னோ மாகாணம் மாளம் கராண்தி கிராமத்தை சூறையாட முடிவு செய்தனர். அதன்படி நள்ளிரவில் கிராம மக்கள் அசந்து தூங்கி கொண்டிருந்த சமயத்தில் கொள்ளை கும்பல் ஊடுருவியது. அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தியது.
கண்ணில் படுபவர்கள் மீது கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டும், வாளால் வெட்டி வீசியும் கொடூர தாக்குதல் நடத்தி அங்கிருந்த தானியங்கள், விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பெண்கள், சிறுமிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கொள்ளை கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த ராணுவத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை கும்பலிடம் பிணைய கைதிகளாகச் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
- பாஸ்சா பகுதியில் உள்ள ஜிக் சமூகத்தினரின் வீடுகளை அழித்து சூறையாடினர்.
- நைஜீரியா அதிபர் போலா டினுபு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் இரு குழுக்கள் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த கும்பல் ஒன்று ஜைகே (ZIKE) எனப்படும் கிறிஸ்தவ விவசாய சமூகத்தினரை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியது.
இதில் 40 பேர் பலியானார்கள். மேலும் பாஸ்சா பகுதியில் உள்ள ஜிக் சமூகத்தினரின் வீடுகளை அழித்து சூறையாடினர்.
இதுதொடர்பாக நைஜீரியா அதிபர் போலா டினுபு கூறும்போது, இந்த நெருக்கடியை முழுமையாக விசாரித்து, வன்முறைச் செயல்களைத் திட்டமிட்டதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணுமாறு பாதுகாப்பு நிறு வனங்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.
கிறிஸ்தவ சமூகத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மேய்ப்பர்கள் என நம்பப்படும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆயுதமேந்தியவர்கள் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி இவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நைஜீரியாவில் முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது பஸ் மோதியது.
- இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கின்ஷாசா:
நைஜீரிய நாட்டின் நைஜர் மாகாண நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
குசோபோகி என்ற பகுதி அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை அந்த பஸ் முந்த முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நைஜீரியாவில் உள்ள பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அபுஜா:
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
நேற்று இரவு இப்பள்ளி அருகில் இருந்த வீட்டில் தீப்பிடித்தது. இது அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி பள்ளிக்கூடத்தையும் தாக்கியது.
இரவு நேரமானதால், குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்ததால் தீப்பிடித்தது தெரியவில்லை. இதனால் தீயில் கருகி 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
- நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்தில் சிக்கியது.
- இந்த கோர விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அபுஜா:
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னே சென்ற வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைஜீரியாவின் நிஜர் மாகாணத்தில் இம்மாத தொடக்கத்தில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்து சிதறி 98 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 56 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளனர்
- ஜெனரேட்டரைப் பயன்படுத்தி பெட்ரோலை மாற்ற முயன்றபோது வெடி விபத்து ஏற்பட்டது.
ஆப்பிரிக்காவின் வடக்கு நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து எரிபொருளைக் கொட்டி வெடித்துச் சிதறியதில் 70 பேர் உயிரிழந்தனர். 56 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளனர்
நைஜர் மாநிலத்தின் சுலேஜா பகுதிக்கு அருகே நேற்று [சனிக்கிழமை] அதிகாலையில் டேங்கரில் இருந்து மற்றொரு டிரக்கிற்கு ஜெனரேட்டரைப் பயன்படுத்தி பெட்ரோலை மாற்ற முயன்றபோது வெடி விபத்து ஏற்பட்டது.
இது பெட்ரோலைக் கையாளுபவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மரணத்திற்கும் வழிவகுத்தது என தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனத்தின் (NEMA) பிரதிநிதி ஹுசைனி இசா தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று NEMA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






