என் மலர்
உலகம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களில் 50 பேர் பத்திரமாக மீட்பு
- நைஜீரியாவில் 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டனர்.
- பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பள்ளிகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டது.
அபுஜா:
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர் துப்பாக்கிமுனையில் 100-க்கும் மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தற்போது 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே கடந்த 17-ந்தேதி கெபி மாகாணத்தில் பள்ளிக்குள் நுழைந்து 25 மாணவிகள் கடத்தப்பட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பள்ளிகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டு இருந்தது. அதனை மீறி பள்ளி செயல்பட்டதே இந்த கடத்தலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
முன்னதாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இந்த சூழலில் அடுத்தடுத்து மாணவர்கள் கடத்தப்படுவது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கடத்தப்பட்ட 303 மாணவர்களில் சுமார் 50 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டனர் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.






